Thursday, January 21, 2016

கருத்துச் சுதந்திரம். நாம் எங்கே நிற்கின்றோம்?

20 ஜனவரி 2016 புதன்கிழமை தமிழ் மிரர் பத்திரிகையில் வெளியான கட்டுரை

கருத்துச் சுதந்திரம்.
நாம் எங்கே நிற்கின்றோம்?

-முஸ்டீன்-

(கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் சட்டத்தரணி காண்டீபன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற அறிவோர் அரங்கத்தில் சட்டத்தரணி மர்சூம் மௌலானா அவர்கள் ஆற்றிய உரையையும் அதன் பின்னர் இடம்பெற்ற கருத்தாடலையும் மையமாகக் கொண்டு தொகுக்கப்பட்டது)


கருத்துச் சுதந்திரம் என்ற அம்சம் மேற்கைரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் எப்போதோ ஒரு சட்டமூமாகப் பிரகடணப்படுத்தப்பட்டு அமுலாகிக் கொண்டிருக்கும் போது நாம் இப்போதுதான் அதனைச் சாத்தியப்படுத்துவது குறித்து எமது நாட்டில் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் இந்த வார்த்தைகள் சட்டத்தரணி காண்டீபன் அவர்களுக்குரியது. இந்த நாட்டில் பல்வேறு விடயங்களையும் சாத்தியப்படுத்துவதில் பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. அவற்றின் தாக்கம் சில சமயங்களில் அடிப்படைகளையே புரட்டிப் போடும் வல்லமைமிக்கவையாக மாறிவிடுவதும் உண்டு.

அடிமை இந்தியாவில் மகாத்மா காந்தியை நாங்கள் பல தசாப்தங்கள் உயிரோடு வைத்திருந்தோம். ஆனால் சுதந்திர இந்தியாவில் நீங்கள் அவரை ஒரு வருடமேனும் உயிரோடு வைத்திராது கொன்றுவிட்டீர்களே என்று ஒரு ஆங்கிலேய அதிகாரி கூறிய கருத்துக்களை இந்த இடத்தில் நினைத்துப் பார்ப்பது பொருத்தம். 

ஒரு தேசத்தின் மாற்றத்தை நோக்கி தேசத் தலைமைகளின் கருத்துக்கள் எத்தகைய வலிமையான தளத்தை நோக்கி நகர முடியும் என்பதற்கும் அதைத் தடுப்பதற்குச் சதிசெய்யம் தீவிரவாத சக்திகள் வன்முறையைக் கையிலெடுத்து பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடுவதாலும் எத்தகைய விபரீதங்கள் நிகழும் என்பதற்கு இக்கூற்று ஒரு சிறந்த படிப்பினையைப் போதிக்கின்றது. 

சட்டத்தரணி மர்சூம் மௌலானா தனது உரையில் பின்வரும் அம்சங்களை வெளிப்படுத்தினார். அவற்றைச் சுருக்கமாகத் தொகுத்து நோக்குவோம். 

சர்வதேச வெளியில் கருத்துச் சுதந்திரம் என்பதை நாம் எந்தளவுக்குப் புரிந்து வைத்திருக்கின்றோம்? தேசிய ரீதியில் இடம்பெறுகின்ற சம்பவங்களின் அதிர்வுகள் சர்வதேசத்தினுடைய எதிரொலியாக எப்படித் தோற்றம் பெறுகின்றது? அவற்றைப் பொறுத்திப் பார்ப்பது எப்படி? என்கின்ற விடயங்களின் பால் நாம் கவனம் செலுத்த வேண்டிய வேளை இது.

வெறுப்பூட்டும் பேச்சுக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளையும் கவனத்திற் கொண்டவர்களாக சில சம்பவங்களையும் அதுசார் அடிப்படை விடயங்களையும் விளங்கிக் கொள்ள வேண்டிய தேவையும் எமக்கிருக்கின்றது. 

ஜனநாயம் பற்றிய எண்ணக்கரு எப்போது தோற்றம் பெற்றதோ அப்போதே அதற்குச் சமாந்திரமாகக் கருத்துச் சுதந்திரம் என்ற கோட்பாடும் தோற்றம் பெற்றது. அத்துடன் ஜனநாயக்ச் சூழலில் கருத்துச் சுதந்திரத்துக்கான களம் எத்தகையது அத்துடன் சோசலிச, கம்யுனிசச் சூழலில் கருத்துச் சுதந்திரத்தின் வகிபங்கு என்ன? ஒரு மன்னராட்சி நிலவுகின்ற தேசத்தில் கருத்துச் சுதந்திரத்துக்கான இடமென்ன? முதலாளித்துவப் பொருள்கோடலில் இதன் நிலையென்ன? செமித்திய மதங்களின் அரசியல் இடைவெளிகளில் கருத்துச் சுதந்திரம் எத்தகையது? கட்புலனாக ஆதிக்க சக்தியான சியோனிச ஊடக ஆளுகைக்குள் கருத்துச் சுதந்திரத்தின் எல்லை என்ன என்பதையும் பல்வேறு சித்தாந்த வெளிகளில் நின்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கிறித்துவுக்கு முந்திய காலத்தில் சோக்கிரடீஸ் நஞ்சூட்டப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்தே கருத்துச் சுதந்திரத்துக்கான களம் திறக்கப்பட்டது. அதனால்தான் கலீல் ஜிப்ரான் தனது கவிதையில் நீங்கள் சோக்ரடீசுக்கு நஞ்சூட்டும் போதும் நான் உங்களுக்கு அருகில்தான் இருந்தேன் நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபோதும் நான் உங்களுக்கு அருகில்தான் இருந்தேன். என்று கூறுகின்றார். கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்துக்கு எதிராக வன்முறையைக் கையிலெடுத்ததன் வாயிலாக நிகழ்ந்த நிகழ்வுகளின் அறுடைதான் அந்த இழப்புக்கள் என்பதை கலீல் ஜிப்ரான் சுட்டிக்காட்டுகின்றார். 

இந்த உலக வரலாற்றில் கருத்துச் சுதந்திரத்தின் வாயில்களை மூடுவதற்காக இப்படியான இறுக்கமான வதைகளை அந்தந்தக் காலத்துக் கருத்துக்களுக்கு எதிரான மக்கள் கைலெடுத்துத்தான் இருக்கின்றார்கள். பெரியாரிஸ்டுகள் சொல்வது போல எல்லாத் தீர்க்கதரிசிகளும் அந்தந்தக்காலத்தில் மிகப் பெரும் பகுத்தறிவுவாதிகளாகத்தான் இருந்திருக்கின்றார்கள். அதனால்தான் அவர்கள் தமது கருத்தை வெளியிடுவதில் வந்த எல்லாவிதமான தடங்களையும் எதிர்கொண்டு தமது சுதந்திரத்தை நிலைநாட்டப் பாடுபட்டார்கள்.

இலங்கைச் சூழலில் மிக அன்மையில் நடந்த இரண்டு விடயங்களை கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் இங்கு அலசுவது சாலப் பொருத்தம். 
ஞானசார தேரர்  இஸ்லாத்தின் புனித வேதமான அல்குர்ஆனத் தடைசெய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி இருப்பது. இரண்டாவதாகப் பாராளுமன்றத்தில் ஷரிஆ சட்டத்தை முன்வைத்துப் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் உரையாற்ற விளைந்த போது அவரைப் பேச விடாமல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டுக் குழப்பி இடையூறுவிளைவித்திருப்பது 

இந்த இரண்டு விடயங்களையும் பார்க்கும் போது ஒரு ஆட்சிமாற்றம்தான் புரட்சிகரமான மாற்றம் என்று கருதிவிட முடியாது. இனவாதத்திற்கெதிராகப் பேசி பேசியே ஆட்சி மாற்றத்திற்கான குரலினை வலுவாக எழுப்பியவர்கள், ஆட்சிபீடமேறியதும் அவ்வினவாதத்திற்கெதிராக எடுத்த நடவடிக்கைதான் என்ன? அல்லது இனவாதத்திற்கெதிரான அவர்களின் நிலைப்பாடுதான் என்ன? என்பதில் இன்னும் மயக்கம் இருக்கதான் செய்கின்றது. ஆட்சிமாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஆயுதமாகப் பயன்படுத்திய ஆக்ரோசமான பேச்சுக்கள் அல்லது ஆட்சிமாற்றத்திற்கான காரணங்களாய் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் ஆட்சிமாற்றத்தின் பின்னர் மௌனம் காப்பது என்பது அரசியல் தார்மீகமான விடயமாகாது. 

உதாரணமாகக் கெசினோவுக்கு எதிராகப் பேசப்பட்ட பேச்சுக்கள் எல்லாம் இப்போது எங்கே? கெசினோவுக்கு எதிராகப் பேசிப் பேசியே ஆட்சி மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்திய வாய்களெல்லாம் இப்போது எங்கே? கெசினோ தொடர்பான அவர்களின் நிலைப்பாடுதான் என்ன? ஆகவேதான் ஆட்சி மாற்றம்தான் புரட்சிகரமான மாற்றமாகாது என்று சொன்னேன். 

ஜனநாயகம் என்ற பார்வையில் பார்க்கின்ற போது செமித்திய மதங்களுக்கும் பௌத்த தர்மத்திற்கும் இடையில் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கின்றது. செமித்திய மதங்களின் வேதக் கருத்துக்கள் என்பது முற்றுப்பெற்றது, கேள்விக்குட்படுத்த முடியாதது. ஆனால் பௌத்த தர்மம் அப்படியானதல்ல. கௌதம புத்தர் ஒரு பெருஞ் ஜனநாயக வழியைத் தனது போதனைகளில் திறந்து வைத்துள்ளார். அவை முற்றுப் பெற்றதாக அவர் வலியுறுத்தவில்லை. இலங்கை அரசியலமைப்பு பௌத்த தர்மத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருந்தாலும் அதன் கருத்தியல் விழுமியங்களைத் தன்னகத்தே கொண்ட அரசியலமைப்பாக இல்லை. பௌத்த தர்மத்தின் அடிப்படையிலான அரசியலமைப்பல்ல இப்போது இலங்கை கொண்டிருக்கும் அரசியலமைப்புச்சட்டம்.

ஞானசார தேரர் அல்குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என்று கருத்துச் சொன்ன போது அதை தமக்கெதிரான கருத்தாகப் பார்க்காமல் பௌத்த தர்மத்தின் அடிப்படையில் அக்கருத்தை முஸ்லிம்கள் பார்க்க வேண்டும். அப்படி நோக்கும் போது ஞானசார தேரர் பௌத்த தர்மத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான ஒரு கருத்தைத்தான் ஞானசூனியமாக முன்வைக்கின்றார் என்பதைத் தெளிவு படுத்த வேண்டிய தேவையும் கடப்பாடும் எமக்கு இருக்கின்றது.

பௌத்தத்தைப் பாதுகாக்கின்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் சரத்துகளடங்கிய அரசியலமைப்புச் சட்டத்தினைக் கொண்டிருக்கும் இந்நாட்டிலே ஞான சாரர் போன்ற மேதவிகளின் கருத்துக்களுக்குப் பதில் அளிக்கின்ற போது மிக நுட்பமான பலவிடயங்களைக் கருத்திற்கொண்டு நேர்மையாகப் பதில் தருகின்ற சானக்கியத்தை முஸ்லிம் சமுகம் கவனத்திலெடுக்க வேண்டும். 

அதுபோலவே சுமந்திரன் அவர்கள் பாராளுமன்றில் உரையாற்ற வெளிக்கிட்டபோத இடம்பெற்ற விடயங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்களின் தேசிய மற்றும் சர்வதேசிய அரசியல் பின்புலம் அல்லது அது சார்ந்த அவரது அரசியல் கருத்துக்கள் என்பது குறித்துப் பேச வேறு ஒரு களத்தைத் திறக்க வேண்டும். அது வேறு விடயம் ஆனால் பாராளுமன்றில் இடம்பெற்ற நிகழ்வு குறித்துச் சொல்வதாயின் ஷரிஆ தொடர்பான அவரின் கருத்துக்கள் அனைத்தையும் முழுமையாகப் பேச வைத்து விட்டு அதற்கு பதில் அளித்திருக்கலாம். அப்படிப்பட்ட பொன்னான சந்தர்ப்பத்தை முஸ்லிம் தரப்பு நழுவ விட்டிருக்கின்றது என்பதுதான் கவனிக்க வேண்டிய விடயம். ஷரிஆ தொடர்பில் அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதைச் சொல்லச் சந்தர்ப்பமளித்திருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரின் கருத்துச் சுதந்திரத்துக்கு ஊறுவிளைவித்துத் தடுத்திருக்கின்றார்கள். அதன் மூலம் ஒரு பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டிருக்கின்றார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரியது. ஷரிஆ தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் அவசியம் என்றுதான் சுமந்திரன் அவர்கள் தனது உரையைத் தொடங்கினார் ஆனாலும் அவர் அதன் பிற்பாடு என்ன சொல்ல வந்தார் என்பது தெரியாது. அதற்கிடையில் முஸ்லிம் பாராளுமனற் உறுப்பினர் இடையூறுவிளைவித்தார்கள் என்பதுதான் ஊடகங்களின் செய்தி.

ஷரிஆ என்ற கருப்பொருளில் சுமந்திரன் ஏன் பாராளுமன்றில் உரையாற்றத் தொடங்க வேண்டும் என்பதன் உள்ளார்ந்த நோக்கம் என்ன அதன் அடிப்படை என்ன என்பது மிக ஆழமாக அலச வேண்டிய ஒரு விடயம். 

ரிஸானா நபீக் விடயமும் இப்போது தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்து சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்ற சகோதரியின் விடயமும் வித்தியாசமானவை. ரிசானா நபீக் விடயத்தில் அது இஸ்லாமிய சரியத்தின் அடிப்படைகளுக்கு உட்பட்ட தீர்ப்பு என்று இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிக்கை விட்டிருந்தது அவ்வறிக்கையின் 'இஸ்லாமிய சரியத்தின் அடிப்படைகளுக்கு உட்பட்ட' என்ற வார்த்தைகளை ஜம்இய்யதுல் உலமா வாபஸ் வாங்க வேண்டும் என்று ஒரு தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பில் கூறிய போதும் அதற்கு எவ்வித எதிர்வினையையும் ஆற்றாமல் மௌனம் சாதித்தது உலமா சபை. மன்னராட்சி என்பதற்கு சரிஆவின் அடிப்படையில் எந்த அனுமதியும் இல்லாத நிலையில் மன்னராட்சி நிலவுகின்ற ஒரு நாடு எப்படி சரியத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியும் என்பதுதான் கேள்வி. எனவேதான் ஷரிஆ தொடர்பான மிகத்தெளிவான விளக்கங்கள் இல்லாமல் அது குறித்துக் கருத்துரைப்பது என்பது பல்வேறு விதமான சங்கடங்களைத் தோற்றுவித்துவிடக்கூடிய விடயமாகும். 

ரிசானா நபீக் விவகாரத்தில் சவுதி அரேபியாவின் இப்போதைய மன்னராட்சி விதிமுறைகளில் இஸ்லாமிய ஷரிஆவின் பெயரில் வழங்கப்பட்ட மரண தண்டனை என்னுடைய பார்வையில் பொய்களால் அழங்கரிக்கப்பட்ட அப்பட்டமான கொலை. அதில் எனக்கு மாற்றுக் கருத்துக் கிடயாது. ஆனால் ஷரிஆவின் நிலைப்பாடு இத்தகைய அநீதிகளில் இருந்து வேறுபட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ரிசானாவிற்கு மரண தண்டனையளிப்பதற்கு இஸ்லாமிய ஷரிஆவின் அடிப்படையில் மன்னராட்சி அரசு நிலவுகின்ற சவுதி அரேபியாவிற்கு எவ்விதமான அதிகாரமுமில்லை. ஷரீஆ பற்றிய புரிதலை சவுதி அரேபியா போன்ற நாடுகளின் தன்மைகளோடு இணைத்துப் புரிந்து கொள்கின்ற போது அது நிச்சயம் தவறான புரிதலாகவே இருக்கும். சிரேஸ்ட சட்டத்தரணி சுமந்திரனும் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வெறுப்புக்குரிய பேச்சினைத் தடை செய்வதற்கான சட்டமூலத்தினை இப்போதைக்கு நிறைவேற்ற முடியாது என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்ற இவ்வேளையிலே தமிழ் முஸ்லிம் தரப்பு கருத்துச் சுதந்திரத்தைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டிய காலத்தருவாயில் இப்போது நாம் இருக்கின்றோம். என்றும் சட்டத்தரணி மர்சூம் மௌலானா கூறினார்.

No comments:

Post a Comment