Tuesday, March 29, 2016

மர்ஹூம் வை.அஹமத் அவர்களின் புரட்சிக் குழந்தை குறுநாவலுக்கு எழுதிய பதிப்புரை.

மர்ஹூம் வை.அஹமத் அவர்களின் புரட்சிக் குழந்தை குறுநாவலுக்கு நான் எழுதிய பதிப்புரை.
நினையாத ஒன்று
மர்ஹூம் வை.அஹமத் அவர்களின் 'புரட்சிக் குழந்தை' என்ற இக்குறுநாவலை எமது செய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்தப் பதிப்பகம் ஊடாகப் பதிப்பிப்போம் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்ட போது நான் ஒன்பது வயதுச் சிறுவன்தான். ஏதோ நடக்கின்றது என்று தெரியும் ஆனால் என்ன நடக்கின்றது என்று புரிந்து கொள்ள முடியவில்லை அப்போது. 

பின்னொரு காலத்தில் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் போது எல்லோரையும் போல என்னால் அமைதியாக ஒரு பார்வையாளனாக மட்டும் இருக்க முடியவில்லை. 

2004ஆம் ஆண்டு எமது SIM-Production வெளியிட்ட அக்கினிச் சுவாசம் பாடல் அல்பத்தில் உள்ள 'நாமங்கள் மறையா நமக்காக வாழ்ந்தோர் நினைவுகள் உயிர் கொள்ளுதே' என்ற பாடல் வை.அஹமத் அவர்களையும் அவர்போன்ற சமுகத்திற்காக உழைத்த நபர்களையும் மையப்படுத்தி  எழுதியதாகும். 

அதன் பின்னர் வை.அஹமத் அவர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றைச் செய்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் தகவல் சேகரிப்புடன் மட்டும் நின்று போனதற்கு பொருளாதாரச் சுமை மட்டுமல்ல வை. அஹமத் அவர்களை மட்டுமன்றி அவருடன் பயணித்து மரணமடைந்த ஏனையவர்களைப் பற்றியும் ஆவணமாக்க வேண்டி இருந்ததால் வேலை பெரிதாகிவிட்டமையும் பிரதான காரணமாகும். என்றாவது ஒரு நாள் அந்தப் பணி முழுமை பெறும் என்று இப்போதும் நம்புகின்றேன். 

வை அஹமத் மீதான தாக்குதல் குறித்து அவர் மறைந்து பதின்மூன்று வருடங்களின் பின்னர் ஒரு புலனாய்வுப் பணியை ஆரம்பித்தேன். அந்தப் பயணம்தான் என்னை பல்வேறு சமூகவிடயங்களின்பாலும் வெறிகொண்ட தேடலைச் செய்ய வைத்தது. பல நண்பர்கள் பயனற்ற வேலை இது என்றுதான் சொன்னார்கள். ஆனாலும் வாய்வழியாகவும் ஒவ்வொருவரினதும் கற்பனையிலும் இருந்த அந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் பெருதற்கரிய பல முக்கிய தகவல்கள் கிடைத்தன. இப்போது அதன் சில குறிப்புக்களை மட்டும் பகிர்ந்து கொள்கின்றேன்.

அந்தக் கண்ணிவெடியை வெடிக்க வைத்தவர் முத்து என்பராவார். வாகனேரிப் பகுதியில் இருந்து மீன் வியாபாரத்தில் கொஞ்சக் காலம் ஈடுபட்ட அவரைப் பலருக்கும் புலி என்று தெரியாது. அந்தக் கைங்கரியத்தைச் செய்தவர் அவர்தான் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை.  2002ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் ஏற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட கருணா-பிரபா பிளவின்ன பின்னர் எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கியிருந்த அவர் அல்லது 2003ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஓட்டமாவடிப் பகுதி முஸ்லிம் மக்களுடன் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களில் மிகச் சுதந்திரமாக ஈடுபட்டு வந்தார். 

இராணுவப் புலனாய்வு அதிகாரி கலீல் மீரா லெப்பை அவர்களின் உதவியோடுதான் இந்தத் தேடலை என்னால் செய்ய முடியுமாக இருந்தது. ஒரு நாள் ஓட்டமாவடியில் வைத்து மோட்டார் பைக்கில் வந்த அவரை அடையாளம் காட்டிய போதிலிருந்து அவரை நான் ஒர் அழகிய சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தபடி நிறையவே அவதானித்து வந்தேன். 

ஒரு நாள் அச்சந்தர்ப்பம் வாய்த்தது. அவருடைய பெயரைக் கேட்ட பின்னர் அவரிடம் முதலாவது கேட்ட கேள்வி மியான்குளச் சந்தியில் வைத்து 1992ஆம் ஆண்டு கண்ணிவெடி வைத்து கொஞ்சப் பேரைக் கொன்றீர்கள் ஞாபகமிருக்கா? என்பதுதான். அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட அடிப்படைத்தகவல்கள் மட்டும்தான் என்ன நடந்தது என்பதற்கான ஒற்றை ஆதாரம். அதன் பின்னர் அவர் குறிப்பிட்ட சில நபர்கள் தொடர்பில் பாரிய தேடல்களைச் செய்து பலரையும் இனங்காண புலிகள் இயக்கத்தில் இருந்த பிளவு மிகுந்த ஒத்தாசை நல்கியது. 

அந்தத் தாக்குதலுக்கான தயார்படுத்தல் எப்படி மேற்கொள்ளப்பட்டது? திட்டமிடல் மேற்கொள்ளப்பட்ட விதம் தகவல் பரிமாறப்பட்டவிதம், தாக்குதலின் நோக்கம் தாக்குதல் நடந்த விதம் பற்றி முழுமையாகப் பேசும் வகையில்தான் ஆவணப் படத்தின் ஸ்கிரிப்ட் அமைந்திருந்தது. மிகுந்த அபாயகரமான ஒரு பயணமாக அது அப்போது இருந்தது. இப்போது நினைத்துப் பார்க்கையில் வியப்பாக இருக்கின்றது. அந்தத் தாக்குதல் தொடர்பில் இப்போது சொல்லப்படும் பல வியாக்கியானங்களை எனது தேடல் தகர்த்துவிட்டிருந்தது. அதனாலும் நான் அமைதி காக்கின்றேன். அந்த அமைதி முடிவுக்கு வரும் காலம் நெருங்கிவிட்டது என்றே கருதுகின்றேன். அதை முழுமையாக ஒரு கட்டுரை வடிவில் மீளவும் எழுத வேண்டும் என்று நினைக்கின்றேன். நான் எழுதினால் மட்டும்தான் அந்த உண்மைகள் உலகுக்குத் தெரியவரும் என்ற நிலையில்தான் இப்போதைக்கு அது இருக்கின்றது. எனது பணியை சரியாகச் செய்வேன் என்று நம்புகின்றேன். இப்போதைக்கு இந்த விடயத்தை இத்தோடு நிறுத்திக் கொள்கின்றேன்.

வை.அஹமத்; அவர்களின் படைப்புக்கள் அனைத்தையும் தேடி எடுக்க வேண்டும் என்ற கருத்தைப் பகிர்ந்து கொண்ட போது எமது பிரதேசத்தின் அனுபவமிக்க எழுத்தாளரான அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள் புரட்சிக் குழந்தை என்ற குறுநாவல் பற்றிய தகவலைத் தந்தார். இது வரையில் அது பற்றிய தகவல் எங்கும் கிடைக்கவேயில்லை அது அப்போது அச்சிடப்பட்டும் இருக்கவில்லை என்றார். அத்துடன் மேலதிக தகவலாக வை சேரின் மூலப்பிரதியைப் பார்த்து மீண்டும் தானே எழுதிக் கொடுத்ததாகவும் சொன்னார். இருளின் நிழலில், தரிசனங்கள் ஆகிய இரு குறு நாவல்களும் ஏற்கனவே பதிப்பிக்கப் பட்டிருந்தன. அதன் பதிப்புரையிலும் புரட்சிக் குழந்தை கிடைக்கவில்லை என்ற தகவல்தான் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்துக் கொண்டு செல்லும் போதுதான் வை சேரின் அனைத்துப் படைப்புக்களும் என் கரம் சேர்ந்தன. அதற்காக அவரின் குடும்பத்தவர்களுக்கு என்றும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். 

 அச்சுச் செலவுகள் கூடுதல் நஷ்டத்தையே ஏற்படுத்துகின்ற இக்காலத்தில் அதையே காரணமாக வைத்து வை அஹமதின் படைப்புக்கள் மொத்தமாக மக்கள் கரம் சேர்வதைத் தாமதப்படுத்த நாம் விரும்பவில்லை. 

வை சேரின் எழுத்துக்களைத் தனியுரிமை கொண்டாட சிலர் எடுக்கும் பிரயத்தனங்கள் பற்றி அறிந்து மிகவும் கவலையுற்றேன். அக்கவலையைப் போக்கிக் கொள்ளவே எமது பதிப்பகத்தின் மின்னூல் திட்டத்தின் மூலம் முதலாவது மின்னூலாக காணாமல் போனதாகக் கருதப்பட்ட புரட்சிக் குழந்தை குறுநாவல் இப்போது உங்கள் பார்வைக்கு வந்துள்ளது. ஏனைய படைப்புக்களும் விரைவில் உங்கள் வாசிப்புக்குக் கிடைக்கும் காத்திருங்கள்.

யாசீன் பாவா - சுலைஹா உம்மா தம்பதிகளின் மகனாக 29.04.1945 அனறு வாழைச்சேனையில் பிறந்தார். வாழைச்சேனையிலும் ஓட்டமாவடியிலும் ஆரம்பக் கல்வியைக் கற்ற அவர் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் பெற்நார். பின்னர்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் படிப்பு கல்வி டிப்ளோமாவையும் பெற்றார்.

1964 முதல் ஆசிரியராய் நியமனம் பெற்று ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசப் பாடசாலைகளில் அதிபராக இருந்து மூதூர் கோட்டக்கல்வி அலுவலக அதிகாரியாகப் பணிபுரிந்து பின்னர் மூதூரில் இருந்து இடமாற்றம் பெற்று உதவிக் கல்விப் பணிப்பாளராக வாழைச்சேனைக்கு வந்த அவருக்கு கல்வி நிர்வாகத் தலைமைப் பதவி கிடைத்திருக்க வேண்டும். ஆயினும் அது இனவாத நோக்கில் மறுக்கப்பட்டது. ஒரு வாயில் மூடப்பட்டால் மறுவாயில் திறக்கும் என்பதற்கொப்ப 1991 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நிர்வாகத் துறையில் பதவியுயர்வு பெற்று பணிபுரியும்  வாய்ப்புக் கிடைத்தது. 

அதன்பின்னர் 1992 டிசம்பர் 26 அவர் கொல்லப்பட்டார்.
அவர் கொல்லப்பட்ட பின்னர் 1993 ஏப்ரல் 15ஆம் திகதி மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஒரு நீண்ட அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதைத் தவிர அவரது படுகொலையை யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஆனாலும் உண்மைகள் அவ்வளவு சீக்கிரம் ஓய்ந்து விடுவதில்லை
தனது எழுத்துக்கள் குறித்து 1988ஆம் ஆண்டு அவர் எழுதிய குறிப்பில் இந்த உலகத்தில் மனிதர்களாக நாம் வாழப் பழக வேண்டியது அவசியமாகின்றது. மனிதத்துவம், மனித நேயம் என்பனவற்றை வளர்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அநீதியை எதிர்த்துப் போராடி வெற்றி பெற வேண்டும்.
ஆதிக்க உணர்வை அழிக்க வேண்டும்.
வறுமையை ஒழிக்க வேண்டும்.
அறிவை மலரச் செய்ய வேண்டும்.
இவற்றிற்கெல்லாம் எழுத்துப் பயன்படுமானால் அந்தப் பங்களிப்பு எனக்குத் திருப்தியை ஏற்படுத்தும்.
எனது கதைகள் எங்கேயாவது ஏதாவதொரு உண்மையைத் தேடித்தான் செல்ல வேண்டும் என்பது எனது எண்ணம். அந்த உண்மைகள் உங்களுக்கும் தெரிகிறதா? என்று பாருங்கள்.
அப்படியானால் அதுவே நான் எழுதுகோலைப் பிடிப்பதற்கு தகுதியாக்கும். (வை.அஹமத் 1988.12.31)

வை அஹமத் அவர்களின் இக்குறுநாவலை செம்மைப்படுத்தி சீராக்கி எடுக்க சிறிது காலம் எடுத்தது. எனது பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய ஒத்துழைப்பு நல்கிய மனைவிக்கும், செல்லமாகத் தொந்தரவுகள் தந்தாலும் அவ்வப்போது அமைதியடைந்தும் உறங்கியும் ஒத்துழைத்த மகன் உமர் காலித்துக்கும் ஒரு சிறுகுறிப்பைத் தந்துதவிய எழுத்தாளரும் வை அஹமத்தின் மாணவருமான அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களுக்கும்  இதை ஓடியோவாகப் பதிவு செய்ய குரல் கொடுத்த எனது மனைவி ஷாமிலாவுக்கும், சூரியன் எப்எம் அறிவிப்பாளர் ரிம்சாத் அவர்கட்கும் ஒலிப்பதிவு செய்துதந்த இசையமைப்பாளர் பஸால் எம் ஜின்னாஹ் அவர்கட்கும் எனது  மனமார்ந்த நன்றிகள்.

முஸ்டீன்

Thursday, March 24, 2016

புரொய்லர்களால் ஆளப்படும் உலமா சபையும் உலக அரசியலின் பின்புலமும்.

கொஞ்சம் நீண்ட கட்டுரை நேரமிருந்தால் படியுங்கள் ஏதாவது புரியும்...

புரொய்லர்களால் ஆளப்படும் உலமா சபையும்
உலக அரசியலின் பின்புலமும்.
-முஸ்டீன்-

உலக மக்கள் மொழி, மதம், இனம், கொள்கை என்ற பிரதான பிரிகோடுகளால் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இந்த உலகம் நாடுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொருவர்க்கும் நிறமும் கொடியும் கொடுக்கப்பட்டு தத்தமது தேசிய எண்ணக்கருவுக்குள் அனைவரும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். மனிதர் என்ற பொது அடையாளத்தில் இருந்து வேறுபட்டதாக அத்தேசியம் திணிக்கப்பட்டபோதே யார் உயர்ந்தவர் யார் தாழ்ந்தவர் யாரை யார் ஆள்வது என்ற விடயம் முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று. எல்லோரையும் மிகைத்து தானே வெற்றியாளனாகவும் தானே அனைத்தையும் தீர்மானிப்பவனாகவும் இருக்கின்ற உலகிற்கான பொது எதிரி உருவாகிய தருனமும் இதுதான். அதிகாரத்தைக் கையிலெடுத்து உலக இயங்கியலின் போக்கை அது எத்தகையதாக இருக்க வேண்டுமென்பதை வடிவமைக்கும் பொறுப்பை தமதாக்கிய சக்திகள் இன்னும் முழுமையாக உலக மக்களின் பார்வைக்கு வரவில்லை. இந்தப் புள்ளியில் இருந்துதான் நம் நாட்டில் நடக்கின்ற சில விடயதானங்களையும் பார்க்க வேண்டியிருக்கின்றது. 

ஒருவரின் பலவீனங்களில்தான் எதிரி தன்னைக் கட்டமைக்கின்றான் என்பது எனது அபிப்ராயம். எப்போது பலவீனங்கள் வெளிப்படுகின்றதோ அப்போதே தோல்விக்கான கால எல்லை நிர்னயிக்கப்படுகின்றது. கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து, பௌத்தம், யூதம், என்று அனைவரும் சமயக் கூறுகளுக்குள் ஒருவரை யொருவர் தழுவிக் கொண்டாலும் எதிரிகளாகவே பார்க்கின்ற ஒரு அம்சம் இருக்கின்றது அதை யாராலும் மறுதலிக்க முடியாது. அரிதான பொதுமனிதர்கள் சிலர் எல்லாச் சமய வட்டங்களுக்குள்ளும் இருப்பார்கள் அத்தகைய ஒரு பார்வையில்தான் இக்கட்டுரையை எழுத வேண்டியிருக்கின்றது. அத்துடன் பாலர் வகுப்புச் செல்லப்பிள்ளைக்கு பாடல் சொல்லிக் கொடுப்பது போல இக்கட்டுரை இருக்காது. இதன் கருத்துகளைப் புரிந்துகொள்ள கொஞ்சமாவது புத்தி இருக்கவேண்டும் குறைந்தபட்சம் மூளையாவது இயங்கு நிலையில் இருக்க வேண்டும். அப்படியில்லாதுவிட்டால் எனது கருத்துகள் மடையனின் புலம்பல்கள் போல தென்படுவதையும் சிலர் என்மீது பாய்வதையும் தவிர்க்க இயலாது.

யாருடைய அதிகார எல்லைக்குள்ளும் சரணடையாத ஒர் உலக மகா சக்தி இருக்கின்றதென்றால் அது சியோனிசம் மட்டுமே. அதை விஞ்சிய இன்னுமொரு சக்தி இன்னும் உருவாகவில்லை. அப்படியொரு சக்தி உருவாக சியோனிசம் இடமளிக்கவுமாது. உலகின் பொதுப் பிரச்சினை என்பது எதுவாக இருக்க வேண்டும் என்பதை அதுவே தீர்மானிக்கின்றது. இந்த அடிப்படையில்தான் போராட்ட இயக்கங்கள் உருவாவதும் அசுர வேகத்தில் அவை தமது பலத்தை யாரும் நம்பவியலாத வடிவில் வெளிப்படுத்துவதும் நாடுகள் தேசங்கள் அமைவதும் என்று பல விடயங்கள் நிகழ்கின்றன. தலிபான்கள், அல்காயிதா, ஒசாமாபின்லேடன், ஐஎஸ்ஐஎஸ், பயங்கரவாதச் செயற்பாடுகளில் மத முத்திரையுடன் இயங்கும் உலக இயக்கங்கள் என்று அந்தப் பார்வை மிகவும் ஆழமாகப் பார்க்கப்படவேண்டியது. அமைதியாக இருக்கும் பல நாடுகள் சீரழிந்து சின்னாபின்னமாகிப் போகும் அவலத்தின் பின்னால் இந்த அதிகாரத்தின் செயற்பாடு நிச்சயம். இருக்கும். உதாரணமாக எமதுநாட்டையே எடுத்துக் கொள்வோம். யாராவது உயர் அதிகாரத்தில் இருந்து இந்த நாட்டில் சர்வதேசப் பயங்கரவாத இயக்கங்களின் தொடர்பு இருக்கின்றது என்று பட்டியல் பிரகடனம் செய்யும் போது மக்களே விழித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அத்தகைய பிரகடனங்களில் பின்னால் இரண்டு அல்லது மூன்று வருட கால அவகாசத்தை எடுத்துக் கொண்டு திடீரென்று பூதம் வெளிப்படும் அப்போது மக்களுக்கு சிந்திப்பதற்கு அவகாசம் இருக்காது. மரணயங்களைப் பற்றிய பிரஸ்தாபம் மேலெழும். சம்பந்தமேயில்லாத இரண்டு தளங்களில் விழுகின்ற அடிக்குப் பின்னால் எல்லாவிதச் செயற்பாட்டாளர்களும் குழம்பிப் போய் நிற்கும் போது நாங்கள் சொன்னோம் தானே இப்படி நக்கும் என்று சிலர் சான்று பகர்வார்கள். அப்போது மக்களின் அவலம் மிகவும் கொடூரமாதாக இருக்கும். சரியான தலைமைத்தும் இல்லாத சமயக்குழுமமும் சரியான புரிதல் இல்லாத அரசியல் தலைவனும் இருந்தால் தேசத்தின் சந்துபொந்துகளில் எல்லாம் மரண ஓலம் கேட்கும். அதுதான் மேலே நான் சொன்ன அதிகார மையம் ஏற்படுத்தும் சந்தர்ப்பம் அல்லது விரிக்கும் வலை. அப்போது இம்பெறுகின்ற இடைவெளியில் அவ்வதிகாரவர்க்கம் வந்தமர்வதற்கான எல்லாவிதமான ஏற்பாடுகளையும் ஏலவே செய்திருக்கும். அதை மக்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள் அதற்கான சூழ்நிலை அவர்களுக்கு இருக்காது. ஆனால் மக்களின் ஒற்றுமை ஒன்றுமட்டுமே அந்த அதிகாரத்தை அயைாளம் காண உதவும்.

ஒற்றுமையாக இருக்க முடியாது நாம் பிரிந்து போவது ஒன்றுதான் தீர்வு என்ற முடிவுக்கு இருவர் வருது என்பதே இன்னொருவரின் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டுவிட்டார்கள் என்பதற்கான வெளிப்பாடுதான். அது தனிநபர்களுக்கிடையானதாக அல்லது இனக்குழுக்களுக்கிடையேயானதான, மதக்குழுக்கள் நாடுகளுக்கு இடையேயானதாகக் கூட இருக்கலாம். அதனால்தான் தமிழில் அழகான முதுமொழியொன்றுள்ளது 'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்'. பிளவுறும் போதுதான் கூத்தாடியின் பிழைப்பு ஸ்திரமாகின்றது.

வடகொரியாவும் தென் கொரியாவும் தாம் ஒரே தேசமாக இணைந்து வாழ நினைத்தாலும் அது நடக்காது அங்குதான் சூத்திரதாரி இருக்கின்றான். அவன் இருபக்கமும் சமபங்கு வகிப்பான் யாராலும் புரிந்து கொள்ள முடியாதபடி. அப்படித்தான் செக் குடியரசும் ஸ்லோவாக்கியாவும் எக்காலத்திலும் இணைய முடியாது. யூதர்களை திட்டமிட்டு அழித்த பழைய வரலாறுகளையெல்லாம் இப்போதைக்கு இங்கு நோண்டிக் கொண்டிருக்க முடியாது. பிரித்தாளும் தந்திரம் ஒரு வகையில் உட்சபட்ச பழிவாங்கல்தான். 

உலகின் ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் உலக அரசியல் ஆதிக்க சக்தியின் ஏதோ ஒரு காரணம் தாக்கம் செலுத்துவதாக இருக்கும் அதை யாராலும் இனங்கண்டுகொள்ள முடியாது என்று கருதுவது முட்டாள்தனம். 

உலகில் நூற்றியறுபது  கோடி மக்கள் பின்பற்றுகின்ற இஸ்லாத்தில் சுன்னி - ஷீஆ என்று இரண்டு முக்கிய பிரிவுகள். ஒரு அரசியல் பிரிவாகத் தொடங்கிய ஷீஆ பிற்காலத்தில் ஸ்திரமான சமயப் பிரிவாக வலுப்பெற்றது. இப்போது தவிர்க்க வொனாத சக்தி. சுன்னிக்கள் பல்லாயிரம் இயக்கங்களாகவும், குழுக்களாகவும் பிரிந்து இப்போது கணக்கெடுக்கக் கடினமானகிளைகள் விட்டு அப்பிரிவு நிரந்தரமாயிற்று. அது போலவே ஷீயாக்களும் தமக்குள் பிரதான பன்னிரென்டு பிரிவுகளாகப் பிரிந்து அதிலும் பல்வேறு கொள்கையடிப்படையிலான குழுக்களாக மாறி வாழ்கின்றார்கள். நம் நாட்டையே எடுத்துக் கொள்ளுங்கள் இஹ்வான்களின் சிந்தனைப்புலத்தில் தோற்றம் பெற்ற தாருல் அர்க்கம் இரண்பட்டு இயங்கத் தொடங்கியதே அந்தப் பிரிவுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியில் எந்த சக்தி வந்தமரும் என்பது ஒருகட்டத்துக்குப் பின்னர் இரு தரப்புக்குமே விளங்காது. அதுபோலவே இந்நாட்டில் தௌஹீத் ஜமாத் பிரிவுகளுக்கு இடையே ஏற்படுகின்ற பிளவு. அது மிகவும் மோசமானது. முதலில் ஒரு தௌஹீத் ஜமாத் பின்னர் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பிளவுக்க ஏற்ப இங்கும் இரண்டு குழுக்கள் அதிலிருந்து மற்றுமொரு பிரிவு இப்படி அது மூன்றாக நான்காக உடைந்து செல்லும் போது வஹாபிசத்தை முன்னிறுத்தித் தயாரிக்கப்பட்ட மனித இனத்துக்கு எதிரான ஒரு சிந்தனையில் வெகு சொற்ப தொகையினர் வீழ்ந்து போவார்கள். அவர்கள் விட்ட இடைவெளியில் எல்லாம் வசதியாக எந்தெந்த அதிகாரத்தின் எச்சங்கள் வந்தமர்ந்தன என்று தெரியாமல் தங்களுக்குள் மோதிக்கொள்வார்கள். அப்போது வெளிப்படும் அச்சம் மிகவும் பயங்கரமானது. ஏனெனில் இத்தகைய பிரிவின் அந்தத்தில்தான் உலகபயங்கரவாதத்தின் தயாரிப்பாளன் கச்சிதமாக வந்து அமர்ந்து கொள்வான். அந்த அமர்வு மிகவும் பொல்லாதது. ஏனெனில் அச் சொற்ப தொகையினரின் மூளைகளை அவன் ஏலவே மொத்தமாகக் கொள்வனவு செய்திருப்பான். அவர்களுக்கு உயிர்பொருட்டாகவும் இருக்காது வெடித்துச் சிதறுவதில் சொர்க்கம் இருப்பதாக அப்போது அவன் நம்பியிருப்பான்.  அல்லாஹ் என்ற ஒருவனை ஏக கடவுளாகவும், முஹம்மது என்பவரை இறைவனின் இறுதி இறைத்தூதராவும் ஏற்றுக் கொண்ட அனைவரும் முஸ்லிம்களே. அது சுன்னி என்றாலும் சரி ஷீயா என்றாலும் சரி. என்ற பொதுத் தளத்தில் எல்லாவித முரண்பாடுகளுக்குமப்பால் முஸ்லிம் சமுகம் வராதுவிட்டால் எலக அளவில் ஏற்படப் போகும் கொந்தளிப்பில் நின்று தாக்குப் பிடிப்பது இலகுவாக இருக்காது. (ஜம்இய்யதுல் உலமாவில் அங்கம் வகிக்கும் ஆலிம்களை புரொய்லர் என்று சித்தரித்ததற்கும் இங்கு சொல்லப்பட்ட விடயங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா என்று யாராயினும் கேள்விகேட்பார்களாயின் அவர்களுக்கு நான் சொல்லும் ஒற்றைப் பதில் சிந்தித்துப்பாருங்கள் என்பது என்பதுதான். ஏனெனில் நெருக்கடி நேரத்தில்தான் பலவீனம் அதுவாகவே வெளிப்பட்டு நிற்கும்)

வரலாற்றைத் திரும்பிப் பார்க்கின்ற போது சுன்னி சீயா பிளவில் ஆட்சியதிகாரத்தை யார் தக்க வைப்பது என்பதில்தான் இவ்விரண்டு குழுக்களினதும் முரண்பாடும் போராட்டமும் போட்டியும் இருந்திருக்கின்றது. இந்தப் பிரிவினையை சரியாகப் பயன்படுத்திக் கொண்டது சியோனிசம் மட்டும்தான். ஏனெனில் கிலாபத் என்ற ஓர் அரசுக் கோட்பாடும், உம்மத் என்ற ஒரே மக்கள் என்ற கோட்பாடும் எப்போதும் தனது இருப்புக்குச் சவாலானது என்பதற்காக அதைச் சிதைப்பதில் சியோனிசம் எத்தகைய பாத்திரத்தை உலக அரங்கில் வகித்திருக்கின்றது என்பதை ஓர் ஆய்வாளன் மிக எளிதாகக் கண்டு கொள்வான். 

1700ஆம் ஆண்டுகளில் இமாம் முஹம்மதிப்னு அப்துல் வஹாப் அவர்களின் வருகைக்குப் பின்னர் தோற்றம் பெற்ற சுன்னிக்களின் இஸ்லாமிய எழுச்சியும் தூய்மைவாதமும் ஏகத்துவ வாதமும் 1950 களிலேயே வஹாபிசம் என்ற ஒரு Brand ஆக உற்பத்தி செய்யப்பட்டு உலகெலாம் விற்பனைக்கு வந்த போது அது முஸ்லிம்களில் உள்ள சகல குழுக்களோடும் முரண்பட்டே நின்றது. முஸ்லிம் என்ற ஒற்றுமை எங்கெல்லாம் சிதைக்கப்பட்டிருக்கின்றதோ அங்கெல்லாம் வஹாபிசம் விற்பனை செய்யப்பட்டிருக்கும். அது போலவே இவர்களோடு நேரடி முரண்பட்ட குழுவான ஷீஆக்களில்தூய்மையான இஸ்லாத்திலிருந்து அதிக தூரத்தில் இருந்த குழுக்களும் ஷீயாக்கள் என்ற பொதுப் பெயரோடு வஹாபிசத்துக்குப் போட்டியாக சந்தைக்கு வந்த போதுதான் பள்ளிவாயல்கள் தோறும் இரத்தம் ஓடத் தொடங்கிற்று. இதற்கான உலகின் பரீட்சார்த்த களமாக பாகிஸ்தானே பயன்படுத்தப்பட்டது. பின்னர் இந்தியா, இப்போது ஈராக் சிரியா யெமன் மேலே சொன்னது போல இந்த வஹாபிசம் இந்தியாவின் தமிழ்நாட்டையும் இலங்கையையும் எப்படி சிதைக்கும் என்பதை பொருத்திருந்து பாருங்கள். ஏனெனில் ஜம்இய்யதுல் உலமா என்ற பொறுப்புவாய்ந்த அமைப்பு இப்பிளவுகளைச்சரியாக இங்கு வழிநடாத்தி ஒருமுகப்படுத்தாவிட்டால் விட்டால் வருகின்ற இழப்புக்கு பின்னர் சமாதனம் சொல்ல வார்த்தைகள் கிடைக்காது. அதுபோலவே இந்தியாவின் தமிழ்நாட்டுக்கும். இதே செய்தியைத்தான் சொல்ல முடியும். பிளவுகளின் பின்னால் உள்ள பயங்கரம் அத்தகையது. 

இப்போது உலக அரங்கில் எடுத்துக் கொள்ளுங்கள் சுன்னிக்கள் எப்படி தமது பிடியை இன்னொருவருக்கு விட்டார்களோ அது போல ஷீயாக்களும் தமது பிடியை அதே நபரிடம் விட்டுவிட்டார்கள். இனி இந்த இரு திறத்தாரும் நினைத்தால்கூட ஒன்று சேர முடியாது. வடகொரியா தென்கொரியா போல. இனி எஞ்சியிருப்பதெல்லாம் போட்டி ஒன்றுதான். அதுவும் எதிரியாகக் கட்டமைத்துக் கொண்டு அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்ளும் பயங்கரப் போட்டியாக அது உருவெடுக்கும். அதற்காக என்ன விலை கொடுக்கவும் இரு திறத்தாரும் தயாராகவே இருப்பார்கள். அப்போது அவர்கள் தாம் வணங்கும் அல்லாஹ்வையும் தாம் பின்பற்றும் முஹம்மது நபியையும் வசதியாக மறந்து விட்டிருப்பார்கள். பாகிஸ்தானிய மக்கள் இன்றுவரையும் அதன் வலியை அனுபவிக்கின்றார்கள். ஆனால் இந்தியாவும் ஏனைய மேற்கு சக்திகளும் அர்த்தப்படுத்தும் பயங்கரவாதம் வெறுமனே தனது நலன்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டவை. 

1979 ஆம் ஆண்டு இமாம் குமைனி தலைமையில் ஏற்பட்ட ஈரானிய இஸ்லாமியப் புரட்சி என்பது உலக அளவில் சில மாற்றங்களைச் செய்தது.  ஷாஹ் ரிழா முஹம்மத் பஹ்லவியின் தோல்வி என்பது அமெரிக்காவினதும் சியோனிசத்தினதும் தோல்வியாக இருந்தது. அதன் பிற்பாடு அமரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் ஏற்றுக் கொண்ட வரைபுகள் எல்லாம் இப்போதைய நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள உதவி செய்பனவாகவே இருக்கின்றமை விஷேடமானது. சியோனிசத்தின் கோட்டையாகத் திகழ்ந்த ஈரானின் பிடி விடுபட்ட போது அடுத்த கட்டத்திற்குத் தயாரான சியோனிசம் ஈராக்கையும் சவுதி அரேபியாவையும் இலக்கு வைத்து வெற்றியும் பெற்றது. அதன் எதிரொலிதான் ஈரான் ஈராக் யுத்தம். அரபுகளுக்கும் பாரசீகர்களுக்கும் இடையேயான யுத்தமாக அது வடிவமைக்கப்பட்டது. சத்தாம் ஹூஸைன் அமெரிக்காவின் கயிற்றை முழுமையாக விழுங்கியிருந்தார். அந்தக் கயிறு சியோனிஸ்ட்டுகளின் தயாரிப்பு. அந்த யுத்தத்தைத் தொடக்கி வைத்த சத்தாம் 'அன பதலுல் காதிசிய்யா...' என்றுதான் தொடங்கினார். புரிந்து கொள்வதற்காக தமிழில் இப்படிச் சொல்லலாம். 'நான் காதிசிய்யப் போர் வீரன். மஜூசிகள் என்ற நெருப்பு வணங்கிகளுக்கு எதிராகப் போராடப் போகின்றேன்' அன்று தொடங்கிய யுத்தத்தில் அரபுகள் பாரசீகர்களுக்கு எதிராக அணி திரண்டார்கள். குவைத் வெளிவிவகார அமைச்சர் நேரடியாக ஈராக் சென்று சதாமின் கரங்களைப் பிடித்து உயர்திச் சொன்னார் 'நாம் எமது சகோதரனுடன் என்றும் இருப்போம்'  அந்தப் பிரதி முழுமையாக சியோனிசத்தின் தயாரிப்பு அமெரிக்காதான் விநியோகஸ்தர். நுகர்வோர்தான் பாவம். அரபிகள் தோற்ற முதலாவது சந்தர்ப்பமல்ல அது.  

அதன் பின்னர் நடந்தவைகளை உலகே அறியும். அந்த மாபெரும் அத்தியாயத்தின் திருத்திய புதிய பதிப்புதான் சுன்னிக்களுக்கும் ஷீஆக்களுக்கும் இடையேயான உலக அளவிலான பிரகடனப்படுத்தப்படாத போர். அந்தப் போரின் பிரதான படையனியாக புதிய வகையறா (Brand) ஒன்றை நிலைநிறுத்த விரும்பியதன் விளைவுதான் வஹாபிகள். வஹாபிகள் என்ற பொறிக்குள் சிக்குண்டிருக்கும் நபர்களுக்கு தமக்குப் பின்னால் இருக்கின்ற மகா பணபலம் பொருந்திய அனுசரனையாளர்கள் கொடைவள்ளல்களாக மட்டுமே தெரிவதுதான் இதன் அவதானிப்புக்குரிய விடயம். (உதாரணத்திற்கு நம் நாட்டில் தௌஹீத் என்ற ஏகத்துவக் கொள்கை பேசுபவர்கள் உண்மையிலேயே அப்பாவிகள். அவர்களுக்கு இன்னும் வஹாபிசம் என்ற படு பயங்கரமான பண்டத்தின் நீண்ட கயிற்றில் கட்டப்பட்டிருப்பது சத்தியமாகத் தெரியாது. அதை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு இன்னும் அறிவுப் பக்குவத்தை அவர்கள் அடையவில்லையென்பது துக்ககரமானது. எனவே இங்குள்ள ஏகத்துவக் கொள்கைச் சகோதரர்கள் முட்டாள்தனமாக என்மீது பாய வர வேண்டாம்)

இப்போது அமெரிக்கா மத்திய கிழக்கில் எத்தகைய பாத்திரத்தை வகிக்கின்றது என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. அது போன்று புரட்சிக்குப் பின்னரான ஈரான் சியோனிசத்தைக் கையால்வதிலும் அமெரிக்கா அதிகாரத்தையும் ரஸ்ய அதிகாரத்தையும் கையாள்வதிலும் எத்தகைய போக்கினைக்  கடைப்பிடிக்கின்றது என்பதையும் கொஞ்சம் ஆழமாகப் பார்க்க வேண்டும். எல்லாவற்றிற்குப் பின்னாலும் மறைந்திருக்கும் ராஜதந்திரம் அவிழ்க்கப்படாத மந்திர முடிச்சாக ஒரு போதும் இருக்கப் போவதில்லை.

இப்போது ஓடிக் கொண்டிருக்கும் அமெரிக்கத் தயாரிப்பான ஐஎஸ்ஐஎஸ் திரைப்படத்தின் இறுதி இலக்கு துருக்கியாகத்தான் இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள். ஏனெனில் துருக்கிவழி தனது உலக வளங்களைப் பயன்படுத்த ஒரு நெட்வேர்க் இருக்கின்றது. பத்துஹல்லா குலானின் கையாட்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அதுபோலவே ஐஎஸ் இறுதி இலக்காக ஏன் துருக்கியைக் கொள்ளும் என்பதிலும் அதன்வழி துருக்கிக்கு சர்வதேச அளவில் ஏற்படுத்தவிளையும் நெருக்கடி எத்தகையது என்பது தொடர்பிலும் நீண்ட கட்டுரை எழுத வேண்டும். 

ஆட்சியதிகாரத்தை இழக்கத் தயாரில்லாத மனிதர்கள் எத்தகைய பாத்திரங்களையெல்லாம் எடுப்பார்கள் என்பதற்கு நமது நாட்டில் நமது கண்முன்னே அழகிய உதாரணம் இருக்கின்றது. சவுதி அரேபியா அதற்கு விதிவிலக்காகுமா? அல்லது ஈரான்தான் விதிவிலக்காகுமா?

தற்போது இந்த இரு நாடுகளுக்கிடையேயும் இடம்பெறுகின்ற அதிகாரப் போட்டி என்பது இத்தனை நாளும் இப்போது போல வெளிப்படையானதாக இருக்கவில்லை. இனிவரும் காலங்களில் அதன் பிரதி பலிப்புக்களை உலகின் மூலை முடுக்கெங்கும் கண்டுகொள்ள முடியும் என்று என்னால் உறுதியாக ஆருடம்கூற முடியும்.

இலங்கை பல்லின சமய மற்றும் சமூகச் சூழலினைக் கொண்ட நாடு. இங்குள்ள சிறுபான்மை முஸ்லிம்களின் தவிர்க்கவொனாத ஒரு மையமாகத்திகழ்வது ஜம்இய்யதுல் உலமா. நடுநிலமையானதும் நிதானமானதுமான போக்கைக் கடைப்பிடித்து இந்நாட்டு முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டிய மாபெரும் பொறுப்பும் இந்த உலமா சபையிடம்தான் இருக்கின்றது. அறிஞர்கள் குழாமினால் வழிநடாத்தப்பட வேண்டிய இந்தச் சபை சில புரொய்லர் கோழிகளால் வழிநடாத்தப்படுவதுதான் துரதிஸ்டம். ஏனெனில் அமுல்படுத்தப்படுகின்ற முடிவுகளைப் பார்ககின்ற போது சானியடித்த சுவர் போலத்தான் அவர்களின் சானக்கியம் இருக்கின்றது.  இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற நபர்கள் தம்மை சரியான இஸ்லாமிய கோட்பாடுகளுக்குள் முன்னிறுத்திக் கொண்டு தமது சுற்றுச்சூழலைப் புரிந்து கொண்டுதான் செயற்படுகின்றார்களா? என்ற கேள்வி எனக்குள் எழுகின்றது. 

முரண்பாடுகளைக் கையால்வதில் இவர்கள் வரலாறு நெடுகிலும் தவறு விட்டே வந்திருக்கின்றார்கள். தூய இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட கோட்பாட்டளர்களான காதியானிகளையும், வஹ்ததுல் வுஜூத் மற்றம் இதர கொள்கையாளர்களுக்கு இலவச விளம்பரம் பெற்றுக் கொடுத்து அவர்களின் இருப்பை உறுதிப்படுத்தியதும் இதே உலமா சபைதான். சிறு செடியாக நின்ற அப்துர் ரவுப் அவர்களை அசைக்கமுடியாத விருட்சமாக மாற்றியதும் இவர்களேதான். எதிர்த்தல் எதிர்ப்பைப் பிரகடனப்படுத்தல் என்பதில் எடுக்கப்படும் சிறுபிள்ளைத்தனமான முடிவுகள்தான் பல வில்லங்கங்களை விதைக்கச் செய்கின்றது. சவுதி அரேபியாவை ஷரிஆ சட்டத்தின் பாற்பட்ட ஒரு இஸ்லாமிய நாடாகப் பிரகடனப்படுத்தும் அறியாமையும், ரிசானா நபீக் என்ற அபலைப் பெண்ணின் பட்டவர்த்தனமான கொலையை நியாயப்படுத்தி அது இஸ்லாமிய தண்டனைதான் என்று சப்பைக்கட்டுக்கட்டி அவர்கள் விட்ட அறிக்கையும்தான் இவர்களின் பலவீனங்களை வெளிப்படுத்திய அன்மைக்காலத் தருணங்கள். அத்துடன் சிங்கள பேரினவாத சக்திகள் ஹலால் என்ற ஒரு விடயத்தைத் தூக்கிப்பிடித்த போது தமது முட்டாள்தனத்தின் அதி உச்சத்தை தெளிவாகப் படம் போட்டுக் காட்டினார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மற்றுமோர் அதிகார மையம் தலையெடுத்ததும் வேறு கதை. அது அப்படியே இருக்க...

புர்கா நிகாப் பற்றிய பேச்சுகள் ”கோனிபில்லா” என்ற எள்ளளுடன் பொதுத்தளத்தில் ஊடகங்கள் மீது பிரயோகிக்கப்படும் வார்த்தைகள் ஒருகட்டத்தில் சட்ட வடிவம் பெறும்போது எல்லாவற்றையும் அவிழ்த்தெறியும் சந்தர்ப்பை ஏற்படுத்தும் அப்போது உலமா சபை கையைப் பிசைந்து கொண்டு நிற்கும். அத்தகைய நிலைக்கு மக்களைக் கொண்டுவந்து நிறுத்தி விடாதீர்கள்என்பதுதான் எனது எதிர்பார்ப்பு. வெறும் ஊகங்களால் பிதற்றுவதாகக் கருதி எளிதாகக் கடந்துபோக வேண்டாம். ஏனெனில் இது எச்சரிக்கையாளனின் குரல்.

இப்போது ஷீஆக்களுக்கு எதிரான போர்ப்பிரகடனம் ஒன்றைச் செய்யுமளவுக்கு சர்வதேச அரசியல் ஒழுங்கின் தாக்கம் உலமா சபையின் நிகழ்ச்சி நிரலிலும் பிரதிபலிக்கின்றமை நிச்சயமாக ஆரோக்கியமான அம்சமாக இருக்கப் போவதில்லை. மேலே சொல்லப்பட்ட செய்திகளில் வெளிப்படையாகச் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கின்ற செய்திகளை உலமாக்கள் அதாவது அறிஞர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் ஆனால் புரொய்லர்கள் புரிந்து கொள்ளுமா என்பதில்தான் சந்தேகம் இருக்கின்றது.

அன்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாப் பிராந்தியத்தின் உலமா சபை ஷீயாக்களுக்கு எதிராக விட்டிருக்கும் அறிக்கையின் பத்து அம்சங்களினதும் சுருக்கம் இதோ. 
01.ஷீஆக்கள் வழங்கும் உதவிகள்,தொழில் பயிற்சிகள்,கல்வி வழிகாட்டல்கள் முஸ்லிம்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்
02.மன்பஊல் ஹூதா அறபு கல்லூரி ஷீஆக்கொள்கையில் இருத்து சுத்தப்படுத்தப்பட்டு தூய்மையான இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் நிருவகிக்கப்பட வேண்டும் 
03.இப்பிரதேசத்தில் வாழும் ஷீஆக்கள் தமது கொள்கைகளை விட்டு தூய்மையான இஸ்லாமிய கொள்கையின் பால் வரவேண்டும் 
04.நமது பிரதேச முஸ்லிம் பாடசாலைகளில் கடமை புரியும் ஷீஆ கொள்கையை சார்ந்த ஆசிரியர்கள் பிற மதத்தவர்களின் பாடசாலைகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் 
05. சுன்னி முஸ்லிம்களாகிய நாம் ஷீஆக்களுடன் திருமன உறவுகளை முற்றாக தவிர்க்க வேண்டும் 
06. ஷீஆக் கொள்கையை போதிக்கும் அறபு கல்லூரியில் கற்கும் எமது பிரதேச மாணவ,மாணவிகளை உடனடியாக அங்கி இருத்து விலக்கி சுன்னி மத்ரசாக்களில் சேர்க்க வேண்டும்
07. ஷீஆக்கொள்கை இந்நாட்டு முஸ்லிம்களினது பிரச்சினையாகும். அதை ஒழிப்பதற்கு அனைத்து முஸ்லிம்களும் ஒத்தழைக்க வேண்டும்.
08. மீராவோடையில் உள்ள கொமைனி வீதியின் பெயர் மாற்ற கோ.ப.மே பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் 
09. உலமா சபை கல்குடா கிளை மற்றும் மீராவோடை பள்ளி வாயல் நிருவாகம் இனைத்து ஒரு குறிப்பிட்ட கால எல்லையை ஷீஆக்களுக்கு வழங்கும் அதற்குள் அவர்கள் தமது கொள்கையை பகிரங்மாக விட்டுவிட வேண்டும். ,ல்லாவிட்டால் அவர்களினதும் குடும்பத்தினரதும் பிரேதம் சுன்னி மையவாடியில் அடக்கப்படமாட்டாது. 
10.ஷீஆக்களின் விழாக்கள்,கூட்டங்கள் மாநாடுகளை அனைத்து முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் அங்கு கல்வி கற்பிக்கும் சுன்னிகளாக தம்மை அடையாளப்படுத்துகின்ற உலமாக்கள்,ஆசிரியர்கள் அங்கிருத்து உடனடியாக வெளியேறி ஷீஆக்களுக்கு எதிரான போராட்டத்தில் இணைதல்

 இதைப் பார்க்கின்றபோது அதில் குறிப்பிடப்பட்டுள்ள பத்துப் பிரகடனங்களும் சிறுபிள்ளைத்தனமானவை. இலங்கையின் அரசியல் அமைப்பு யாருக்கும் விருப்பமான மதத்தைக் கொள்கையைப் பின்பற்ற அதைப் போதிக்க உரித்துடையவர்களாகவே இலங்கைப் பிரஜைகளுக்குச் சுதந்திரமளித்துள்ளது. அல்லாஹ் அல்லாத கடவுளர்களை வணங்கும் மக்கள் தொகை அதிகம் இருக்கும் இந்நாட்டில் எந்தவொரு கொள்கையையும் யார்மீதும் திணிக்க அதிகாரம் இருக்கின்றதா என்பது கேள்விக்குரியது. அது சரியான கொள்கையா பிழையான கொள்கையா என்பதெல்லாம் அடுத்த பட்சம்தான். ஒருவரின் கொள்கைமீது அத்துமீறிச் தினிப்பைச் செய்கின்ற அதிகாரத்தை கல்குடா ஜம்இய்யதுல் உலமாவுக்கு யார் கொடுத்தது? இஸ்லாம் போதிக்கும் சகிப்புத் தன்மை என்பது எங்கே போனது? சவுதி எப்படி 'சலபி' சிந்தனை நாடோ அது போல ஈரான் ஷீஆ சிந்தனை நாடு இந்த நாட்டில் பெரும்பான்மை முஸ்லிம்கள் 'கலப்' சிந்தனையுள்ளவர்கள் இதில் என்ன இருக்கின்றது?

அல்குர்ஆன் தெளிவாக எதிரிகளாகப் பிரகடணப்படுத்திய யூதர்களுக்கு எதிராக ஒரு அறிக்கை விடாத உலமா சபை ஏன் அவசர அவசரமாக இப்படியொரு பிரகடனத்தைச் செய்ய வேண்டும்.
இஸ்லாத்திலிருந்து வெகுதூரத்திற்குச் சென்றுவிட்ட போராக்கள் விடயத்தில் காக்கப்படும் மௌனம் எதைச் சொல்கின்றது?

மொத்தத்தில் அனுராதபுர மாநாடு உட்பட பரவாலாக மேற்கொள்ளப்படும் இப்பிரச்சார நடவடிக்கையின்  அனுசரனையாளர்கள் பற்றி ஜம்இய்யதுல் உலமா வெளிப்படுத்துமா?

ஜம்இய்யதுல் உலமா இந்நாட்டின் சகவாழ்வுக்கு விடுக்கும் அச்சுருத்தலாக இதை எதிர்காலம் பதிவு செய்து அபாயகரமான செய்தியைக் கொடுத்துவிடுவதுடன்; உமர் அலியின் ஏத்தாலை போன்று இலங்கையில் விரைவில் ஒரு ஷீயாக் கிராமத்தின் உதயத்திற்கு மணியடித்திருக்கின்றார்கள்.

கல்லை வணங்குபவனின் சுதந்திரத்தைக் கூட பறிப்பதற்கு இஸ்லாம் ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கவில்லை அப்படியிருக்கும் போது இந்தப் போர்ப்பிரகடனம் இஸ்லாத்தின் பார்வையில் எத்தகையது அதுவும் இலங்கை போன்ற சிறுபான்மைச் சூழலில் விளக்கம் தருமா உலமா சபை.

இந்தக் கேள்விகள் கருத்துக்கள் அனைத்தையும் அப்படியே தொடர்பின்றி ஒரு முறை வாசித்துப் பார்த்தால் அந்த மாக்களுக்கு ஏதாவது புரியக் கூடும்.

கொள்கைகளும கோட்பாடுகளும் சிந்தனைகளும் செயற்பாடுகளும் இயங்கங்களும் அமைப்புக்களும் குழுக்களும் மனிதர் ஓரணியில் இணைப்பதற்கான மூலோபாயத்தில் இயங்குனவல்ல. மாறாக அவை மனிதர்களைப் பிரித்துக் கூறுபோட்டுவிடுதல் என்ற ஒற்றை அம்சத்தையே அடிப்படையாகக் கொண்டு இயங்கும்.

மிகுதி பகுதி இரண்டில் பாருங்கள்...


Saturday, March 5, 2016

மனதிற்பட்டது -20 மனத் திருப்தி

மனத் திருப்தி
இலங்கையில் வெளிவருகின்ற எல்லாப் பத்திரிகைகளிலும் இலக்கியம் என்று ஒரு பக்கம் இருக்கவே செய்யும். எழுத்தாளர்களும் இலக்கிய வாதிகளும் இலக்கிய ஆர்வலர்களும் சங்கமிக்கும் ஒரு முக்கிய புள்ளி அது. அவர்கள் எமது வீட்டுக்கு வரும் விருந்தாளிகளைப் போன்றவர்கள். அவர்களுக்கு என்ன விருப்பம் என்று கேட்டுத்தானே விருந்து வைக்க வேண்டும். ஏனெனில் விருந்தாளிகளின் திருப்திதான் மிகவும் முக்கியமானது. 

கடந்த வாரம் கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்ட அத்தனை சந்திப்புக்களும் எமக்கு மனத்திருப்தியை அள்ளிவழங்கின. அந்த விருந்தாளிகள் அனைவரும் தத்தமது எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் முன் வைத்தார்கள். அதனால் அகமகிழ்ந்து நாம் அளித்த வாக்குறுதிகள் மெல்லமெல்ல நிறைவேறும்.
இந்த இதழோடு எமது இலக்கியப் பக்கம் இருபது வாரங்களைப் பூர்த்தி செய்கின்றது. அடுத்த வாரத்தில் இருந்து இப்பக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய நாடுகின்றோம். நேர்மறை கேள்வி பதில் பகுதி கொஞ்சம் சீரியசான கேள்விகளால் தன்னை மேம்படுத்திக் கொள்கின்றது. 

பறவை போட்ட பழத்தோடு சேர்த்து இன்னுமொரு படைப்பாளிக்கு ஒரு தொடர் எழுதுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது. அந்த வாய்ப்பை நான் தெரிவு செய்த ஒரு நபருக்கு வழங்காமல் பொதுத் தளத்தில் விட்டுவிடுகின்றேன். ஆர்வமுள்ள ஒருவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மூத்த தலைமுறையாயினும் சரி இளைய தலைமுறையாயினும் சரி தரமான எழுத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்படி திறந்த வாய்ப்புக்கள் அதுவும் ஒரு தொடர் பத்தி எழுதும் வாய்ப்பு பத்திரிகை வாயிலாகக் கிடைப்பது எப்போதும் சாத்தியமானதல்ல என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. 

அந்தப் பத்திக்கு நாம் எந்தவிதமான விதிமுறைகளையும் விதிக்க விரும்பவில்லை. எழுத்தின் சுதந்திரத்துக்கு நாம் அளிக்கின்ற உயர்ந்தபட்ச மரியாதை இது. இருக்கின்ற இந்த ஐந்து நாட்களுககுள் எதை எழுதுவது என்ற  முடிவை நீங்கள் எடுத்தாக வேண்டும். ஏனெனில் வருகின்ற புதன் கிழமைதான் அதற்கான இறுதித் தருணம். இருபது பகுதிகளைக் கொண்டதாக நீங்கள் அதை அமைத்துக் கொள்ள வேண்டும். முதல் இரு பகுதிகளுக்கு மட்டும் ஒரு சின்ன கால அவகாசம் அளிக்கப்படுகின்றது. அதாவது முதல் பகுதியை இந்தப் புதன் கிழமைக்குள்ளும் இரண்டாவது பகுதியை அடுத்த புதன் கிழமைக்குள்ளும் அனுப்பி வைக்கலாம். ஆனால் எஞ்சிய பகுதிகளை அடுத்த ஒரு வாரத்திற்குள் மொத்தமாக அனுப்பி வைத்துவிட வேண்டும். சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இப்படியொரு இறுக்கமான முடிவை எடுக்க வேண்டியிருக்கின்றது. எவ்வாறாயினும் இவ்வறிவித்தல் எமது வெளிப்படைத் தண்மைக்கு ஒரு முக்கிய சான்றுதான்.

எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்ய முழுமையான முயற்சி எமது பக்கமிருந்து எடுக்கப்படும் அது போலவே வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் உங்களுக்கும் இருக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் கேட்டதைதான் நாங்கள் பகிரங்கமாக வழங்குகின்றோம். பின்னர் ஒரு நாளில் எமை நோக்கி விரல் நீட்டயாரும் எத்தனிக்கையில் அழகிய பதிலை இந்தக் குறிப்பு மட்டுமே வழங்கிடப் போதுமானது.

உங்கள் வளர்ச்சிக்கு தமிழ் மிரர் வழங்கும் வாய்ப்பு மிக முக்கியமானது. ஏனெனில் அதைப் பயன்படுத்துவதில் ஒரு போட்டி ஏற்படும் போது சுவாரஷ்யமான தேடலை நோக்கி நாம் பயணிக்க வேண்டிய நிலைதான் தோன்றும். அந்தத் தேடல் இன்னும் பல வழிகளை உங்களுக்காகத் திறந்துவிடும்  வல்லமைமிக்கது.

நூல் அறிமுகம், விமர்சனம் போன்ற புதிய வருகைகளும் விரைவில் இடம்பெறத்தான் போகின்றன. அதனால் உங்கள் நூல்களின் இரு பிரதிகளை அனுப்பி வையுங்கள் இரு வேறுபட்ட நபர்களின் குறிப்புக்களைப் பெற்றுக்கொள்ள அவை எமக்கு உதவ முடியும். ஒரு எழுத்தாளனுக்கு அவனது எழுத்தின் மீதாய் எழும் அலை மிக முக்கியமானது. ஆகவே பாரம்பரியமாக இதுவரைக் கண்டுவந்ததற்கப்பால் புதிதாய் ஒரு ரசனையை எற்படுத்த முனைகின்றோம்.

அதில்தான் எல்லோருக்கும் மனத் திருப்தி இருக்கும்.

மனதிற்பட்டது -19 - உயிர் காக்க உதவுதல்

உயிர் காக்க உதவுதல்

படைப்பாளிகள் கலைஞர்கள் இலக்கியவாதிகள் என்று அதுசார்ந்த எல்லாச் சொற்களையும் இங்கே சேர்த்துக் கொள்ளுங்கள். அத்தகைய மனிதர்கள் ஒரு துன்பத்தில் வீழுகின்ற போது அல்லது அவஸ்தை தரும் சுகயீனத்தால் கடுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு உயர் வாழப் போராடிக் கொண்டிருக்கும் போது பொதுவாகக் கண்டுகொள்ளப் படுவதில்லை. அவர்களின் மரணச் செய்தி வந்தால் ஓர் இரங்கல் கவிதை அல்லது ஒரு குறிப்பு அல்லது அவருடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றுவதுடன் சக இலக்கியவாதிகளின் கடமை முடிந்துவிடுகின்றது என்பதுதான் இன்றைய உண்மை.

மற்றவர்களின் துயர் போக்கும் அளவுக்கு ஓர் இலக்கியவாதி பொருதாரத்தில் தன்னிறைவு பெற்றவனில்லை என்பதும் மறுக்க முடியாத மறுபக்க உண்மை. அவனால் முடிந்த உச்ச உதவி எழுதுவது மட்டும்தான். ஆனாலும் அதையும் தாண்டி அவனுக்கிருக்கும் தொடர்புபுகள் எதையும் சாதிக்கவல்ல வல்லமை கொண்டவை. 

ஒரு படைப்பாளி அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றான் என்றால் அவனுக்கு உதவ இந்த இரச இயந்திரத்தில் வழிகள் பெரும்பாலும் பிரத்தியேகமாக இல்லை. அதற்காக இதைக் கண்டுகொள்ளமல் விட்டுவிடவும் முடியாது. அதற்காக என்ன செய்யலாம்? ஒரு கலைஞனின் வறுமையைத் தாண்டி அவனது உடல் நலன் சார்ந்தும் வதைத்த படி இருக்கும் லட்சங்களில் தேவைப்படும் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்ற உத்தரவாதத்தை எந்த வகையில் செய்வது.

ஒரு இலக்கிய நண்பனுக்கு உதவுதல் என்ற எண்ணக்கருவில் அர்ப்பணிப்போடும் விளம்பரங்கள் இன்றியும் செயற்படுகின்ற தோழமைகள் அறவே இல்லை என்று சொல்லமுடியாது. அத்தகைய சிலரை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றோம். தன்னால் ஒரு உதவியுமே செய்ய முடியாதே என்ற ஆற்றமையின் வெளிப்பாடுகள்தான் ஆறுதலாக நாலு வார்த்தை சொல்வது. அதை வெளிப்படுத்தப் பக்குவம் இருப்பது போல அத்தகைய தருனங்களில் அதை உள்வாங்கிக் கொள்ளவும் நாம் பக்குவப்பட்டிருக்க வேண்டும். 

எழுத்து இந்நாட்டில் யாரையும் சீமானாக்கவில்லை. அதற்காக எழுத்தைக் கைவிட்டவர்கள் அல்லது தனக்கு ஆறுதலாக இருக்கும் எழுத்தைக் கைவிட்டவர்கள் என்று யாரும் கிடையாது. எல்லாவற்றையும் பொறுத்தபடியும் தாங்கிக் கொண்டபடியும் நம'மையெல்லாம் தாண்டி இருக்கின்ற மாபெரும் சக்தியிடம் அனைத்தையும் பொறுப்புச் சாற்றிவிட்டுக் கடந்து செல்கின்ற பக்குவம் வாய்க்கப்பெற்றவர்கள் உண்மையில் கொடுத்துவைத்தவர்கள். 

ஒரு படைப்பாளி படுக்கையில் கிடக்கும் காட்சியைக் காண்பதுதான் மிகவும் மனவேதனை தரக்கூடிய அம்சம். அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. சுகயீனம் என்பது இயற்கையானது. அது யாரை எப்போது எந்தவடிவில் ஆக்கிரமித்து உறவாடும் என்று சொல்ல முடியாது. அந்த உறவை வெற்றிகொண்டு மீண்டு வருதல் என்பதுதான் சவால்மிக்க மகத்தான வெற்றி. ஏனெனில் மீள முடியாத வெற்றிகொள்ள முடியாத ஒன்று மரணம் மட்டுமே. அத்தகைய மரணத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்ற கடுஞ்சுகயீனத்திலிருந்து மீள்வது மகத்தான வெற்றிதானே.

இன்றைய காலகட்டத்தில் மிகவும் லாபம்தரும் தொழில்களில் மருத்துவமும் ஒன்று. அதனால்தான் சுகயீனமடைந்த பொருளாதாரப் பலமற்ற ஒரு சீவன் அதை எதிர்கொண்டு மீண்டெழுதல் என்பது சாத்தியமிக்கதல்ல என்ற உணர்வை வெகுசாதாரணமாக நமக்குள் விதைத்துவிடுகின்றது. 

எத்தனை இலக்கியவாதில் நம்மைவிட்டுப் போய்விட்டார்கள். அவர்களில் எத்தனை பேரை நாம் இன்றும் நினைவுகூர்கின்றோம் என்பதெல்லாம் ஓர் இலக்கியவாதியைப் பொறுத்தமட்டில் மிக முக்கியமான விடயமாகும். அதைத் தீர்மானிப்பது இவனது நடத்தைதான். மென்மையான போக்கு என்பது எப்போதுமே எல்லோரையும் ஈர்க்கவல்லது. ஒரு அழகான புன்னகை போல. அதிலும் ஆணின் புன்னகையைவிட ஒரு பெண்ணின் புன்னகை ஈர்ப்புக் கூடியது என்பதும் இயற்கைதானே.

எனவேதான் எழுத்தில் புரட்சி சொண்டிருக்கும் பலரையும் மென்மை ஆக்கிரமித்துக் கொள்ள அவரா இவர் என்று வியப்பு நெற்றி சுருங்க வைக்கின்றது. அந்த மென்மை தனது பிரச்சினையை மற்றவர்களிடம் சொல்லக் கூட தயங்க வைக்கும். 

நமது ஓர் இலக்கிய நண்பரின் துன்பத்தில் நாமும் பங்கெடுப்போம் குறைந்து நலன் விசாரித்து அவருக்கு ஆறுதலாய் நான்கு வார்த்தைகளேனும் சொல்வோம்.
கவிஞர் மஜீத் - 0775 009 463
மக்கள் வங்கி அக்கரைப்பற்றுக் கிளை – 063 2001 8002 2795

மனதிற்பட்டது - 18 கபூர் மௌலவி

மனதிற்பட்டது - 18
கபூர் மௌலவி

மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் அயராது பாடுபடுகின்ற நபர்கள் மிகவும் குறைவுதான். அப்படிப்பட்டவர்கள் அடுத்தவர்களின் பாராட்டையோ, புகழ்ச்சியையோ எதிர்பார்த்துக் காத்திருக்கவே மாட்டார்கள். தம் பாட்டில் தமது வேலைகளைச் செய்து அனைத்தையும் சலனமின்றித் தாண்டிச் சென்று கொண்டே இருப்பார்கள்.
கல்குடா பிராந்தியத்தில் தந்தையை இழந்த அநாதைக் குழந்தைகளின் வாழ்க்கையில் ஏதோவோர் விதத்தில் தன்னால் முடிந்தளவு ஒளியேற்றி வைக்கப் பாடுபட்ட ஒரு நல்ல உள்ளம் இருக்கின்றதென்றால் அது கபூர் மௌலவிதான்.

1956ஆம் ஆண்டு பிறந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த இவர் 1975ஆம் ஆண்டு அட்டாளைச் சேனை மத்ரதுஸ் ஷர்கிய்யாவில் மௌலவிப்பட்டம் பெற்றார். பின்னர் 1983ஆம் ஆண்டு கல்லிச்சை எனும் கிராமத்தில் ஆரிசியராகக் கடமையாற்றினார். அப்பிரதேசத்தில் கற்பித்தலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சமுகத்தால் சரியான முறையில் வழிகாட்டப்பட்டு பராமரிக்கப்படாத அனாதைகள் அவரது கவனத்தை ஈர்த்தனர். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் சிந்தித்தன் விளைவுதான் இலங்கையில் உள்ள பல்வேறு யதீம்கானாக்காளில் அப்பிள்ளைகளைச் சேர்த்துவிடுவதாகும் முதன் முதலில் அப்படி 16 பேருக்கு வாழ வழிகாட்டினார்.

பின்னர் மக்களின் வாழ்வியல் தளத்தின் அடிக்கோடு வரைச் சென்று தேவை உள்ளவர்களை அவராகவே தேடி, அப்பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு ஒளியேற்ற என்னென்ன விடயங்களைச் செய்யலாம் என்று அவர்களின் தாய்மாருக்கு தெளிவூட்டினார். தம் பிள்ளைகளை கண்காணாத பிரதேசம் ஒன்றிற்கு அனுப்புவதில் தாய்மார் கொண்டிருந்த பிடிவாதத்தை தனது அமைதியான வார்த்தைகளால் வென்றார். 

'அனாதி மடுவத்துக்கு புள்ளயக் குடுத்தல்' என்ற அடிப்படையில் பிழையாகக் கற்பிதம் செய்து அச்சுருத்தல் செய்யப்பட்டிருந்த கருத்தியல் தளத்தை அவர் உடைத்தெறிந்தார். ஆரம்பத்தில் இலகுவாக அது வசப்படவில்லைதான் ஆயினும் தொடர்ந்தேச்சையாக அதில் நேரிய சிந்தனையோடு செயற்பட்டு இக்கருத்தியலையே புரட்டிப் போட்டார். 

ஒரு சமுதாயத் தலைவன் செய்ய வேண்டிய பணிகளை அவர் ஒற்றையாக நின்று நிறைவேற்றினார். அதற்காக இந்த சமுதாயம் அவருக்கு கிரீடம் சூட்டிக் கொண்டாடவுமில்லை, தலையில் தூக்கி வைத்துக் கொள்ளவுமில்லை, அவரது சமுதாயப் பணியைப் பாராட்டவுமில்லை. அவற்றை அவர் எதிர் பார்க்கவுமில்லை.

60 வயதாகியும் தனது பணியை அவர் ஆரவாரமின்றி இன்னும் செய்து கொண்டுதான் இருக்கின்றார். தேவையுடையவர்களைத் தேடிப்பிடித்து உதவுவதுதானே அவரது ஸ்பெஷல்.

கபூர் மௌலவி போன்ற இத்தகைய மனிதர்கள் மிகவும் அபூர்வமாகத்தான் சமுதாயத்தில் இருப்பார்கள். அத்தகையவர்களுக்கு துணையாக நிற்க வேண்டிய சமுதாய ஒழுங்குகள் தமது பணியைச் செய்தனவா? என்று கேள்வி கேட்டால் அதற்குத் திருப்திகரமான பதில் நிச்சயம் கிடைக்காது. ஏனெனில் இந்த ஒழுங்குகளுக்குள் புகுந்திருக்கும் சுயநலவாத அரசியல் எச்சம் அப்படித்தான் பயணப்பட வைத்திருக்கின்றது. அதற்காக இந்த அசுத்தங்களுக்குள் சென்று மண்டியிட்டு நிற்கும் பணியையோ அல்லது தனது முயற்சிகளுக்காக அங்கிருந்து ஒத்தாசைகளைப் பெறும் எதிர்பார்ப்பையோ அவர் கொண்டிருக்கவில்லை. 

மிதிவண்டியில் ஓட்டமாவடி வாழைச்சேனை மீராவோடை காவத்தமுனை என்று தெருக்கள் தோரும் தேவையுடைய மக்களைத் தேடி அவர் பயணப் படுகையில் ஒரு சிறந்த மனிதரைக் கடந்து செல்கின்றோமே என்று யாரும் நினைத்துச் செல்லுமளவுக்கு அவர் ஆடம்பரமாக இருக்கவில்லை. தனது பணியின் பயன் அல்லாவிடமிருந்து மட்டுமே என்று தனது எதிர்பார்ப்புகளை அவனை நோக்கியே குவித்தமையினால் உலக மக்களின் சல்யூட் அவருக்கு அவசியப்படவில்லை.

இன்று பெரும் பெரும் சமூக சேவகர்களாக பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டு செயற்படுகின்ற புகழ்விரும்பி மனிதர்கள் கபூர் மௌலவியிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே இருக்கின்றது.

சமூ அவலங்களைக் கண்டு பொங்கியெழுகின்ற இஸ்லாமிய தஃவா கம்பனிகளின் ஏஜெண்டுகள் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள நிறைய முன்மாதிரிகள் இருக்கின்றன. அடுத்த இயக்கத்திடம் அல்லது கொள்கையிடம் குறைதேடித்தேடியே காலத்தை வீணடிக்கும் தாஃயி குஞ்சுகள் சமுதாயப் பணி செய்தல் என்றால் என்ன அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

கபூர் மௌலவி அவர்களே இறைவன் உங்களின் ஆரோக்கியத்தை மேலும் பலப்படுத்தி, தூய்மையான எண்ணங்களை வலுப்படுத்தி உங்கள் பணிகளை அங்கீகரித்து இம்மையிலும் மறுமையிலும் பேறுபெற்றவராக மாற்றிட எமது பிரார்த்தனைகள்.
தொடரட்டும் உங்கள் பணி.

மனதிற் பட்டது - 17 சுதந்திரம்


இன்றோடு சரியாக நாம் சுதந்திரமடைந்து அறுபத்தெட்டு வருடங்கள் முடிந்து அறுபத்தொன்பதாவது வருடம் ஆரம்பிக்கின்றது. அடுத்த பெப்ரவரி 04ஆம் திகதி 69வது சுதந்திரதினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடும் போது நேற்றைய தினத்தினை எண்ணிப் பார்ப்பது குறைவுதான். 

நமது நாடு ஒருமித்துக் கொண்டாட வேண்டியதொரு தினமென்றால் அது சுதந்திர தினம் மட்டும்தான். தேசியமும் தேச பக்தியும் வெளிப்படுத்தப்படும் நாளாக இந்தத் தினம் இயல்பாக அமைதல் வேண்டும். அவ்வாறு அமைவதால் ஏற்படுகின்ற ஒரேயொரு உணர்வு இது எமது நாடு இது நமது நாடு என்பதாகும். 
தமீழம் என்றொரு நாடு வடக்கையும் கிழக்கையும் இணைத்து உருவாகும் என்ற கனவை தமிழ் பேசும் இனத்தில் ஒரு பகுதியினர் கண்டுகொண்டிருந்த போது தேசிய தினக் கொண்டாட்டம் என்பது சிங்களவர்களுக்கானது என்ற மனநிலைதான் இருந்தது. 

இலங்கைப் பாராளுமன்றில் அங்கம் வகிக்கின்ற ஒருவர் அல்லது அரசாங்கத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு வாழ்க்கையைத் தள்ளும் ஒருவர் வடக்கு கிழக்கில் தேசியக் கொடியான சிங்கக் கொடிக்குக் தலை வணங்குதல் தேச துரோகக் குற்றமாகக் கணிக்கப்பட்டது. யுத்தகாலம் காலம் என்பதால் துப்பாக்கிகள்தான் அனைத்தையும் தீர்மானித்தன. தமிழ் பேசும் மற்ற இனமான வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்களும் சரி கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்களும் சரி சுதந்திர தினத்தில் அவ்வவு அக்கறையுள்ளவர்களாக இருக்கவில்லை. மொத்தத்தில் ஒருமித்த தேசபக்தியை கடந்தகாலத் தேசிய தினங்கள் வெளிப்படுத்தியிருக்கவில்லை. 

சிங்கள மக்களோடு இணைந்து வாழ்ந்த தமிழ் பேசும் மக்கள் அனைவரதும் தேசிய தினக் கொண்டாட்டம் தொடர்பிலான மனோநிலை வேறுபட்டதாகவே இருந்தது, இந்த இருவித நிலைப்பாடுகளுக்குமான காரணத்தினைப் புரிந்து கொள்வது என்பது அவ்வளவு கடினமானதல்ல. ஆனால் இப்போது நிலைமைகள் வேறுபட்டுச் செல்கின்றன.  

யுத்தம் முடிந்த கையோடு முஸ்லிம் மக்களின் தேசத்தின் மீதான காதலை பரவலாக அவதானிக்க முடிந்தது. அது போல தனிநாட்டுக் கோரிக்கை கைவிடப்பட்ட நிலையல் தமிழ்தேசியக் கூட்டமைப்பு புலிக்கொடியை மறந்துவிட்டு சிங்கக் கொடிக்குத் தலைவணங்கிய போதுகூட சலசலப்பு ஏற்படத் தவறவில்லை. அந்தச் சலசலப்பொன்றே போதும் தேசியதினம் தேசியக் கொடி தொடர்பிலான அம்மக்களின் மனோநிலையினைப் புரிந்து கொள்வதற்கு.

மிக முக்கியமான இன்னொரு விடயத்தையும் நாம் அவதானித்தாக வேண்டும். தேச பக்தி என்பது யாரையும் யாரும் திருப்திப்படுத்தும் வகையைச் சார்ந்தது அல்ல. அது ஒரு மனிதனின் இதயத்தின் ஆழத்திலிருந்து இயல்பாக வரவேண்டும்.  அவன் எந்த மொழியினனாக இருப்பினும் எந்த மதத்தினனாயினும், எந்த இனத்தினனாயினும் சரியே. ஆனால் தேசபக்தி வெளிப்பாடு என்பது ஒரு நிரூபிப்பு எல்லைக்குள் நின்று இன்னும் விடுபடவில்லை. அவ்வாறு விடுபடாதவரைக்கும் தேசத்தின் மீதான உண்மையான காதலை நாம் காணமுடியாது. 

தேசம் சிங்கள மக்களுக்கு மட்டுமானது என்ற கருத்தியல் முன்னெடுக்கப்படும் காலமெல்லாம் தேச பக்தி என்பதும் கேள்விக்குறியானதாகவே மாறிக் கொண்டிருக்கும். ஒரு சின்னஞ்சிறிய குழுஅதைச் செய்துpடப் போதுமானது. என்று சுதந்திரம் பெற்றோமோ அன்றிலிருந்து அப்படியானதொரு சிறிய குழு இருந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த நாட்டில் ஏற்படும் இனக்கலவரங்கள் எல்லாமே இத்தகைய சின்னஞ்சிறிய குழுக்களின் கருத்தியல் தளத்தில் இருந்து பிறந்தனவே. 

அத்தகைய சின்னஞ்சிறிய குழுக்களை ஒவ்வொரு காலத்திற்கும் வவேறுவிதமான ஆனால் ஒரே சிந்தனையைக் கொண்ட தலைவர்கள் வழிநடாத்துவார்கள். அதை உரிமையோடு தடுத்துநிறுத்தி தேசியம் என்ற அம்சத்தைத் துணிந்து நிலைநிறுத்த அரசுகளால் முடியவில்லைதான் மென்மையான போக்கினால் கடந்து போகவே விரும்புவதை வெளிப்படையாகப் பார்க்கலாம்.

இப்போது தேசியக் கொடியில் இருந்து பிடுங்கப்பட்ட சிங்கம் ஏந்திய வாளோடு சிங்கலே என்று அச்சுருத்தி நிற்கும் போது கேள்விக்குள்ளாகி நிற்பது தேசபக்திதான் என்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை. 

சிதைத்துவிடுவதில்தான் தமக்கான இருப்பு இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம் என்று அசைவற்று நிற்கின்றதோ அன்றுதான் உண்மையான தேசிய தினமும் தேசியக் கொடிக்கான உளமார்ந்த கௌரவமும் கிடைத்து காதல் சொட்டும் தேச பக்தியும் வெளிப்படும். 

அதுவரைக்கும் எல்லாமே காற்றில் சுதந்திரமாக சும்மா ஆடிக் கொண்டுதான் இருக்கும்.

நேர்மறை 15 கேள்விகளுக்கு தம்பி ஐயா தேவதாஸ் பதில்கள்1. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
எழுத்து மூலம் மானுடம் பாடுபவன்

2. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
நான் யாருடனும் முரண்படுவதில்லை

3. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
இதுவரை அப்படி ஒன்றைக் கண்டதில்லை

4. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
பேராசிரியர் துரை மனோகரன்,மா.பா.சி, அஷ்ரப் ஷிஹாப்தீன், கே.எஸ்.சிவகுமாரன்,வீ.ஏ.திரு ஞானசுந்தரம், பரசுராமன், இன்னும் பலர்

5. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
ஒலிபரப்பாளர்கள் நூறு பேருக்கு மேல், சினமாக்காரர்கள் நூறுபேருக்கு மேல், எழுத்தாளர்கள் நூறுபேருக்கு மேல்

6. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
நல்ல கலைஞர்கள் அனவரையும்

7. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
வாங்கும் போதே நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்குவேன்.

8. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் புத்தகங்களைப் வாசிக்கும் போது

9. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
எல்லா இலக்கிய சஞ்சிகைகளையும் பிடிக்கும்

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
சில தொடர் கட்டுரைகளைக் கூட இலவசமாகத்தான் இன்னும் எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
ஆங்கில மொழிக்கு மொழி பெயர்த்தால்தான் நோபல் பரிசு என்பது தவறு

12. உங்களுக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
தமிழ்,ஆங்கிலம், சிங்களம் ஆகியவற்றில் சிறிது பாண்டித்தியம்

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
சுதந்திரமாக எழுத முடிகின்றது. ஆனால் சுய கட்டுப்பாட்டுடன் எழுத வேண்டும்.


14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
நான்,மனைவி, மூத்த மகன்மார் இருவர் கனடாவில் வாழ்கின்றனர், மூன்றாவது மகன் வங்கியில் வேலை செய்கின்றார். ஒரேயொரு மகள் அமெரிக்காவில் படிக்கின்றார்.

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
அந்தளவுக்குப் பெரிதாக எனக்குக் கோபம் வருவதில்லை

மனதிற் பட்டது - 16 மாபெரும் படைப்பாளி

மாபெரும் படைப்பாளி

பல்லாயிரம் ஒளியாண்டு தூரத்தில் இருக்கின்ற ஒரு நட்சத்திரம் ஒரு புள்ளியளவுக்கு மின்னிக் கொண்டிருக்கும் போது, அது நமது பார்வையில் தோற்றுவதும் மறைவதுமாக இருப்பதை மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கும் போது, பரந்த வானமும் இன்னபிற நட்சத்திரக் கூட்டங்களும் நமது பார்வையை ஈர்த்துக் கொள்ளும் போது, அவ்வப்போது எரிகட்கள் அல்லது வால் நட்சத்திரங்கள் ஒளி வீசிப் பிரகாசமாகப் பயணித்து சட்டென்று மறைந்து போகும் போது அந்த மாபெரும் படைப்பாளி பற்றிய சிந்தனை எனக்குள் தோன்றியது.

இந்த இயற்கையில் இருந்துதானே நமது படைப்புலகம் விரிந்து செல்கின்றது. இந்தப் பூமியில் உள்ள ஜீவராசிகள்தானே சமது படைப்புலகத்தின் மூலம். இந்த வஸ்துக்களின் வாழ்வியல் அசைவியக்கம்தானே நமது இலக்கியம். இந்த இயற்கையின் படிமங்களில் இருந்து சொற்கள் பொறுக்கிச் சேர்த்துத்தான் நமது எழுத்தாக்கங்கள் புகழ்பெற்றவையாக உருவெடுக்கின்றன.

மொத்தத்தில் நமெல்லாம் பிரதியெடுத்துக் கொண்டிருக்கின்றோம். நம்மால் புதிதாக எதனையும் படைத்துவிட முடியாது. இருப்பதில் இருந்து நாம் தேடிப் பெற்றுக் கொள்ளும் படிப்பினைகளும் எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் அவாக்களும் விருப்பு வெறுப்புக்களும் கோபதாபங்களும் ஆச்சரியங்களும் பிரமிப்புக்களும் ஆத்திரங்களும் ரசனைகளும் கற்பனைகளும்தான் நமது படைப்புலகம் அதைத் தாண்டி ஒன்றுமில்லை. அதற்கப்பால் நாங்களும் ஒன்றுமில்லை.

இப்போது அந்த மாபெரும் படைப்பாளிக்கு முன்னால் இயல்பாக நமது தலை குனியும்.

நாம் ஒன்றுமேயில்லாத வெறும் கூடுகள்தான் என்பதை அந்த மாபெரும் படைப்பாளி எப்போதுமே நினைவுறுத்திக் கொண்டிருக்கின்றான். அதை அன்றுதான் நாம் புதிதாகப் பார்க்கும் அழகிய சின்னஞ்சிறிய பூச்சியொன்று அல்லது வண்டு ஒன்று வெகு சுலபமாகப் பறைசாற்றிவிட்டுச் சென்றுவிடும். 
எத்தனை கோடிப் படைப்பினங்கள் இப்படி இன்னமும் மனித சக்திக்கு அப்பாற்பட்டு இந்தப் பிரபஞ்சத்தில் வசிக்கின்றன. மனிதனுக்கு சவால் விடுக்கின்ற எத்தனை அற்ப உயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. 

இப்போது நாம் நம்மீது கொண்டிருக்கும் பெருமிதம் குறித்துக் கேள்வி கேட்டுப் பார்த்தால் பதில் கிடைக்கவேண்டும். அவ்வாறு பதில் கிடைக்காது போனால் அது நமது துரதிஷ;டம். நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் நமது புத்தி மிகவும் சொற்பமானதுதான், நமது மூளைக்கு அவ்வளவுதான் முடியும் என்பதுதான் உண்மை.

நமது எழுத்துக்களில் ஒரு மகா பிரமாண்டத்தைக் கற்பிதம் செய்து கொண்டு நாம் பெரும் படைப்பாளிகள் என்று மனத் திருப்பி காண்கின்ற போது நம்மைவிடத் துரமிஸ்டசாலிகள் ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

ஏனெனில் பல்லாயிரம் ஒளியாண்டு தூரத்தில் பார்வையில் தோற்றுவதும் மறைவதுமாக புள்ளியளவுக்கு மின்னிக் கொண்டிருக்குமஇருக்கின்ற ஒரு நட்சத்திரம் எத்தனை பிரமாண்டமானது அதைப் படைத்தவன் எத்தகைய மகா பிரமாண்டமாக இருப்பான். அத்தகைய மகாபடைப்பாளி பற்றிச் சிந்தித்து அமைதி கொள்கன்ற உள்ளங்கள், அல்லது அம்கா படைப்பாளிக்கு முன்னால் சிறுமைகொண்டு தலைவணங்கி நிற்கின்ற மனிதர்களால்தான் உலகம் திரும்பிப் பார்க்கும் சின்னச் சின்ன விசயங்களைச் செய்ய முடியும். அது வரலாறாகி நிற்கும். 

தலைக்கணம் கொண்டு செருக்கு பிடித்து ஆணவம் தலைக்கேறி என்னை விடடால் ஆள்கிடையாது என்று மனிதப் பலவீனங்களில் புகுந்து காரியம் சாதித்துச் செல்லும் இலக்கியப் படைப்பாளிகள் நீண்ட தூரம் மிக வேகமாப் பயணித்து ஒரு கட்டத்தில் ஸ்தம்பித்து நிற்கையில் தான் தோன்றும் எங்கோ தவறு விட்டிருக்கின்றோம் என்பது. எல்லாவற்றுக்கும் மேலாக மீண்டு வர ஒரேயொரு வழிதான் இருக்கும் அது பணிவினால் ஆனதாக இருக்கும். பெருமையைத் தொலைத்துவிட்டுத் திரும்பி வரும் பாதையாக இருக்கும். புத்தி இருந்தால் திரும்பி வந்து பிழைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அங்கே நின்று சான்றுகளேயில்லாத வாழ்க்கையோடு அழிந்து போக வேண்டியதுதான்.

தெய்வ நம்பிக்கையில்லதவர்களை என்ன செய்து என்ற கேள்வி எழலாம். அதற்குப் பதில் அவர்கள் பாவம் என்பதுதான். இன்னும் அவர்களால் சின்னஞ்சிறிதாய்த் தோன்றும் ஒரு பென்னம்பெரிய நட்சத்திரத்தில் இருந்து படிப்பினை பெறத் தெரியவில்லை. அற்பமான கேள்விகளுக்கே அவர்களிடம் பதில் இருக்காது அதனால் அவர்களை கழிவிரக்கத்துடன் பரிதாமாகக் கடந்து செல்வோம்.

மாபெரும் படைப்பாளி எப்போதும் வல்ல இறைவன் மட்டும்தான். என்றென்றைக்கும் அவன் மட்டுமேதான். 


நேர் மறை 15 கேள்விகளுக்கு குப்பிழான் ஐ. சண்முகன் பதில்கள்

நேர் மறை 15 கேள்விகளுக்கு 
குப்பிழான் ஐ. சண்முகன் பதில்கள்

01. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
நான் கட்டுகளற்றவன். எனக்குச் சரியென்ப்பட்டதையே செய்பவன். என்னால் மற்றவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளவன்.

02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
முரண்பாடுகள் இயல்பானவை. அவரவர்கள் அவரவர்களது இயல்பிலேயே இயங்குவார்கலென்பதில் நம்பிக்கை உள்ளவன். எனக்கு உடன்பாடனாவற்றை ஏற்று கொள்வேன். முரண்பாடானவற்றுடன் மாறுபடுவேன். முரண்பாடுகளையும் நட்பு ரீதியாகவே கையாள முயல்வேன்.

 03. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
கவர்ந்தவையென்று குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவுமில்லையென்றே நினைக்கிறேன்.

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
சட்டென நினைவில் வந்த பெயர்கள் இவை ... முல்லைமணி சுப்பிரமணியம், தெளிவத்தை ஜோசெப் (புனை பெயரில்), அ. யேசுராசா, எம்.கே. முருகானந்தன்இ இரஞ்சகுமார், இயல்வாணன், சண்முகம் சிவலிங்கம், இராகவன், கருணாகரன், குணேஸ்வரன், அஜந்தகுமார், மயூரரூபன், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், சி. உதயகுமார், க. சட்டநாதன், சோ. பத்மநாதன், த. ஜெயசீலன் இப்படியே.....

05. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
2003 ல் நிகரி வெளியீடாக வந்த 'அறிமுகங்கள்- விமர்சனங்கள் குறிப்புகள்' என்ற எனது நூலில் பலரும் இடம்பெற்றுள்ளார்கள். பின்னரும் பலரைப் பற்றி எழுதியுள்ளேன்.


06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
என்னை நான் அறிந்து கொள்ளவும்இ எனது அறிவுப்பரப்பை விசாலப் படுத்தவும் உதவியவர்களை  நன்றியுடன் நினைவு கூறுவேன். அமரர்கள் கா.க சோமசுந்தரம், பண்டிதர் செ.நடராசா, பேராசிரியர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை சிவகுமார் ஆகியோருடன் இன்னும் பலர்.

07. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
பல புத்தகங்கள் எனக்கு அவ்வாறு தோன்றின.

08. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
பற்பல புத்தகங்கள் என்னைப் பிரமிக்க வைத்தன. பதின்மவயதில் காந்தியின் சத்திய சோதனையிலிருந்து.... அண்மைக்காலங்களில் ஏழுதலை முறைகள்( சழழவள)இ தமிழில் மொழிபெயர்பாக வெளிவந்த ரூஷியநாவல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.

09. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
நானும் எழுத வேண்டும் என்ற முனைப்பு மெலெழுந்த காலங்களில் வெளிவந்த தீபம்இ கணையாழிஇ தாமரை பின்னர் சுபமங்களா.

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்குஇ சிறுகதைக்குஇ ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
பொருளாதாரமதிப்பு.....? மற்றவர்களில் சிறிதளவாவது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற மதிப்பே போதுமானது.

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
நோபெல் பரிசு பெற்ற நாலைந்து நூல்களைப் படிந்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் முக்கியமானவை.

12. உங்களுக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
தமிழில் மட்டுமே பாண்டித்தியம் உள்ளது.

13. முகநூல்இ வலைப்பூஇ இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
குப்பைகளும் இருக்கின்றன. மாணிக்கங்களும் இருக்கின்றன.

14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
மனைவி- மகள்- நான் சிறிய குடும்பம். அம்மா வெளிநாட்டில் ஜீவியவந்தராக இருக்கிறார். ஒரு சகோதரன் உள்ளூரிலும்இ நாலு சகோதரங்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள்.

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
அப்படி ஒருபோதும் தோன்றியதே இல்லை.

மனதிற்பட்டது - 15 பாராளுமன்றும் பாலியல் தொல்லையும் மிஸ்டர் பிரசிடன்ட் உங்களின் கவனத்திற்கு

பாராளுமன்றும் பாலியல் தொல்லையும்
மிஸ்டர் பிரசிடன்ட் உங்களின் கவனத்திற்கு

பெண்கள் அழகானவர்கள். அந்த அழகில் இழையோடும் மென்மையும் நளினமும் புன்னகையும் எத்தகைய சண்டித்தனத்தையும் சாந்தமாக்கிவிடும். அதனால்தான் பெண்களில் கண்குளிர்ச்சி இருப்பதாக முகம்மது நபிகள் சொன்னார்கள். அப்படிப்பட்ட அழகான பெண்களை ரசிக்கத் தோன்றுவது மனித இயல்பு. அது வெறுமனே ரசனையோடு மட்டும் சென்றுவிட்டால் பாதகமில்லை. அந்த ரசனைக்கு செயற்பாட்டு வடிவம் கொடுக்க முனையும் போதுதான் பிரச்சினை உருவெடுக்கின்றது. ஆகவேதான் அழகான பெண்களை திரும்பிப் பார்க்கும் மனித இயல்புக்கு முகம்மது நபிகள் (அல்லாஹ்வின் சாந்தி அவர் மீது உண்டாகட்டும்) அழகாக ஒரு விடயத்தைச் சொன்னார்கள் 'முதல் பார்வை உனக்குரியது அதற்கடுத்த பார்வைக் உனக்குரியதல்ல அது சாத்தானுக்குரியது' ஆகவே திரும்பத் திரும்பப் பார்க்காதே என்று நயமாகச் சொல்கின்றது.

பெண்களின் வசீகரம் என்பது வெறுமனே தோல் நிறத்திலோ அல்லது அலங்காரத்திலோ கிடையாது அதையும் தாண்டி அது மையங் கொண்டிருக்கும் புள்ளி மிக முக்கியமானது. அதனால்தான் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் என்று புனித வேதமான உலகப் பொது மறை அல்குர்ஆன் மனிதர்கள் அனைவரையும் பார்த்துச் சொல்கின்றது. ஏனெனில் பார்வைக்கு அத்தனை பலம் இருக்கின்றது. அந்தப் பார்வை எல்லை மீறுகின்ற போது காமப் பிசாசு விழித்துக் கொள்கின்றது பாலியல் வன்மமும் பலாத்காரமும் வயது வித்தியாசமின்றி அரங்கேறுகின்றது.

எமது முழு நாட்டையும் அந்த பாலியல் வியாதி ஆட்கொண்டு எல்லா அடிப்படைகளையம் தகர்த்து தந்தையர்களையும் காமுகர்களாக்கி, சின்னக் குழந்தைகளையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி, சிறுமிகளையும் வன்புனர்வுக்குட்படுத்தி உயிரைப் பறித்து, யுவதிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பாலியல் சேட்டைகளாக உருவெடுத்து மொத்தத்தில் பெண்களையே துரத்திக் கொண்டிருக்கும் பிசாசாக மாறிவிட்டது. இப்போது அந்தப் பிசாசு நாட்டை ஆளும் பாராளுமன்ற வளாகத்தில் மையங்கொண்டிருக்கின்றது.

இது ஒன்றும் ஆச்சரியமான விடயம் கிடையாது, இத்தனை நாளும் தெருவில் திரிந்த அந்தப் பிசாசு சுதந்திர வர்த்தக வலயங்களிலும் ஆடைத் தொழிற்சாலைகளிலும் வேலை பார்க்கும் அபலைப் பெண்களைத் துரத்தி பின்னர் பாடசாலை வளாகத்தில் ஆசிரியர்களாலே பின்பற்றப்பட்டு வைத்தியசாலைகளில் ஊட்டச் சத்து அளிக்கப்பட்டு தனியார் அரச நிருவனங்களில் என்று பெண்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் அவர்களைத் துரத்தி இன்புற்று எல்லா இடங்களையும் வியாபித்து இறுதியாக பாராளுமன்றில் தஞ்சமடைந்திருக்கின்றது.

இனியும் பாலியல் சேட்டை, வன்புனர்வு, அல்லது ஆபாசமான பேச்சு என்பன குறித்து பாராளுமன்றம் கவனம் செலுத்தவில்லையானால் இந்த நாட்டை அது உருக்குலைத்துவிடும். இந்தத் தேசத்தில் தன்டனைக்காகக் காத்திருக்கும் வழக்குகளில் இருபது வீதத்திற்கும் மேல் பாலியல் வன்மம் சம்பந்தப்பட்ட வழக்குகளாகவே இருக்கும். வருடாவருடம் அத்தகைய குற்றவாளிகளின் தொகை அதிகரித்து வந்த போதுகூட இது தொடர்பில் போதிய கவனம் செலுத்த எமது நாட்டு அரசாங்கத்துக்கு நேரமிருக்கவில்லை.

கை நிறையப் பணமும் கவர்ச்சிகரமான விலையுயர்ந்த வாகனமும் இருந்துவிட்டால் போதும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று திரியும் ஒரு இளைஞர் கூட்டம் இந்ந நாட்டில் வசிக்கின்றது. அவர்களின் பாலியல் மோகமும் பெண்களை இச்சையைத் தனிக்கும் போகப் பொருளாகவே மட்டும் பயன்படுத்தும் கேவலமும் பெரும்பாலும் சட்டத்திற்கு முன்னோ அல்லது செய்தியாகவோ வருவதில்லை அதற்குக் காரணம் அவ்விளைஞர் கூட்டத்தின் யோக்கிவான்களான தந்தைகள் பாராளுமன்றின் அதிகாரக் கதிரைகளில் ஒய்யாரமாக வீற்றிருப்பதுதான். 

எந்தவொரு பெருங்குற்றத்தையும் பணம் மௌனிக்கச் செய்யும் துரதிஸ்டம் என்று நீங்கி சட்டமும் நீதியும் எல்லோருக்கும் பொதுவானது என்ற நிலை தோன்றுகின்றதோ அது வரைக்கும் இந்த அவலத்தில் இருந்து இந்நாட்டைக்காக்க யாராலும் முடியாது. 

பாராளுமன்ற உறுப்பினரான பெண்களுக்கே இந்த நாட்டில் பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாப்பில்லை என்றால் அது சொல்லும் செய்தி மிக முக்கியமானது. ஏனெனில் அங்கு தொல்லை கொடுக்கும் காமுகன் சாதாரண அன்றாடங்காய்ச்சி கிடையாது, ஒரு கூலித் தொழிலாளியும் கிடையாது, சட்டம் இலகுவாகத் தண்டிக்கும் அல்லது பொலிசார் பிடறியைப் பிடித்துத் தள்ளிச் செலுமளவுக்கு அல்லது சட்டைக் குளரைப் முறுக்கிப் பிடித்து இழுத்துச் செல்லும் அளவுக்குத் தண்டிக்க இலகுவான நபரோ கிடையாது. மாறாக கையில் விலங்கு மாட்டியதும் பல்லுத் தெரிய சிரித்தபடி கைகளைக் உயர்த்திக் காண்பித்து கமெராவுக்கு போஸ் கொடுக்கும் வகையினராகும் இவர்களிடமிருந்து பொலிசார் கூட ரெண்டடி தள்ளியேதான் இருப்பார்கள்.

மாடுகளையும் கால்நடைகளையும் காப்பதற்காக பிரயத்தனம் எடுக்கும் மிஸ்டர் பிரசிடன்ட் இதை உங்களின் கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம். பெண்களை காமப் பிசாசுகளிடமிருந்து பாதுகாருங்கள். குறைந்தபட்சம் புத்தர் சொல்லியபடி காமே சுமிச்சாச்சாரா வேரமணி சிக்காபதங் சமாதியாமி என்ற பன்சில் பத பஹ வில் ஒன்றான உபதேசத்தில் படிப்பினை பெற்று புத்தத்தின் வழியேனும் நாட்டை வழிநாடாத்தக் கட்டளையிடுங்கள்
எப்போது யார் வீட்டில் அப்பிசாசு அமரும் என்று யாருக்கும் தெரியாதுதானே!

நேர் மறை 15 கேள்விகளுக்கு எஸ். நளீம் பதில்கள்


01. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
ஏமாற்றிப் பிழைக்கத் தெரியாததால் எங்களுரில் வாழும் பல்லாயிரம் புத்தி ஜீவிகளுக்குள் ஒரு முட்டாள் நான்.

02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
முரண்பாடு முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். என்னோடு நானே முரண் பட்டிருக்கிறேன். இந்த இலட்சணத்தில் பிறருடன் முரண்படுவதை கேட்கவும் வேண்டுமா?

03. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
முனையூருல இரண்டு கிளிகள் இருந்திச்சாம். ஓன்று ஆண்கிளி மற்றையது பெண்கிளி. ஆண்கிளி தன்னைத் திட்டியதாக பெண்கிளிபோய் பொலிசுல முறைப்பாடு செய்திச்சாம். கூப்பிட்டு விசாரித்த பொலிஸ் காரர் இறுதியில் பெண்கிளியைப் பார்த்து சொன்னாராம் 'உனக்கும் வாய் இருக்குதான திட்டித் தொலயன்' அதைக்கேட்ட பெண்கிளி சொல்லிச்சாம் ஆணாதிக்கம்...ஆணாதிக்கம்...ஆணாதிக்கம்...

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
நண்பர்கள் என்றெல்லாம் சொல்லமுடியாது. அவர்கள் எனக்கு முன்னோடிகள். ஓடையூரான், அஷ்ரப் ஷிஹாப்தீன், சோலைக்கிளி இன்னும் பலர்

05. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
அஷ்ரப் பற்றி எழுதினேன். ஆதற்காக கைக்கு விலங்கு மட்டும்தான் மாட்டவில்லை. ஊர் அரசியல் வாதிகளைப்பற்றி எழுதினேன். அதற்காக கொடும்பாவி எரித்தனர்.

06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
எல்லாவற்றிலும் என்னைவிடத் திறமை காட்டும் என் குழந்தைகளைத்தான்.

07. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
அரச பாடப் புத்தகங்களை.

08. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
ஓவியர் ஆதிமூலத்தின் ..between the line…

09. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
மூன்றாவது மனிதன்.

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்குஇ சிறுகதைக்குஇ ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
கவிதையாகட்டும்,சிறுகதையாகட்டும்,வேறு எதுவாகட்டும் ஒரு நூல் வெளியிட்டால் 50,000 நஷ்டம்.

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
அதவிடுங்க எட்டாதபழம் புளிக்கும்.

12. உங்களுக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
மௌன மொழியில்

13. முகநூல்இ வலைப்பூஇ இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
fast food

14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
நாங்கள் நான்குபேர், எங்களைச்சுற்றி நாற்பதுபேர். கோழி,குருவி,கொக்கு,காகம்...மாடு,ஆடு,அணில்...அப்பப்ப வந்து செல்லும் வண்ணத்துப் பூச்சி..

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
வட்டம் அமைத்துக்கொண்டு சுழட்சிமுறையில் விருதுகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் அனைவருக்கும்

மனதிற் பட்டது - 14 - துப்பாக்கி முத்தங்கள்

துப்பாக்கி முத்தங்கள்

நம்நாட்டுக்கு கறைபடிந்து போன ஒரு துப்பாக்கி வரலாறு இரு;கின்றது. அந்த வரலாற்றை மீளப்புரட்டினால் குரோதமும் அச்சமும் மிக முக்கிய இரு காரணிகளாக இருக்கும். ஜேவிபி சுமந்த துப்பாக்கி, தமிழ் ஈழ விடுதலை இயக்கங்கள் சுமந்த துப்பாக்கி, குறிப்பாக விடுதலைப்புலிகள், பாதாள உலகக் குழுக்கள் சுமந்த துப்பாக்கி, அடுத்தது அரசாங்கம் சுமந்த துப்பாக்கி.

இந்தப் துப்பாக்கிகள் என்ன செய்து கிழித்தன என்று ஆய்வு செய்யப்போனால் ஒரு நடுநிலமையாளனுக்கு பல்லாயிரம் தொன் எடை கொண்ட சுமைதான் உள்ளத்தினுள்ளேறும். இறுதியில் கொஞ்சம் கண்ணீரும் ஒரு பெருமூச்சும் வெளியேறும்.

நம் நாட்டின் எத்தனை பொக்கிசங்களை இந்நத் துப்பாக்கிகள் சிதைத்துச் சூரையாடி இருக்கின்றன. பழைய வரலாற்றில் வாள்களும் அம்புகளும் ஈட்டிகளும் நஞ்சும் செய்த அதே விளையாட்டுக்களை நவீன காலத்தில் துப்பாக்கிகள் செய்து கொண்டிருக்கின்றன. 

இப்போது யுத்தம் என்ற கொடிய அத்தியாயம் ஏதோவொருவகையில் முடிவுக்கு வந்துவிட்டது. யுத்தம் முடிவுக்கு வருதல் என்றாலே அங்கு கண்ணீரும், அங்கச் சிதைவும், வகைதொகையில்லாத மரணங்களும், காரணம் கற்பிக்க முடியாத அல்லது நியாயப்படுத்த முடியாத பல்லாயிரம் அழிவுகளும் இடம்பெறுதல் என்பதும் தவிர்க்கவியலாததுதானே. 

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர்தான் பல்வேறு துப்பாக்கிகள் மௌனம் காக்கின்றன. இல்லாவிட்டால் பேனை பிடித்த பலருக்கும் தினம் தினம் நாம் இறுதி அஞ்சலி செலுத்த நேரிட்டிருக்கும்.

குறித்த நபரின் எழுத்தால் தமது தரப்புக்கு ஏற்படும் அச்சுருத்தலால் ஏற்படுகின்ற குரோதமும், அந்த எழுத்துக்கள் ஏற்படுத்தும் தாக்கங்களின் மூலம் ஏற்படும் அதிர்வுகளின் மீதுகொண்ட அச்சமும் துப்பாக்கி மூலம்தான் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன. 

புலனாய்வு குறித்தும் அல்லது புலனாய்வுக்காரனின் விசாரனை குறித்தும் ஹொலிவுட் படங்கள் அளவுக்கு நாவல் நாவலாக எழுத முடியும். அந்த விசாரனைகள் பெரும்பாலும் மரணத்தை நோக்கி அழைத்துச் செல்வதாகவே இருக்கும். உண்மைகளைப் பெற்றுக் கொண்ட பின்னர் உயிரோடு விடப்பட்ட நபர்கள் மிகவும் குறைவுதான். உண்மைகள் கிடைக்கவே கிடைக்காது அல்லது இனிப் பிரயோசனமில்லை என்ற தீர்மானத்திற்கு விசாரனை செய்பவன் வருகின்ற போது பெரும்பாலும் இறுதி முத்தமிடுவது துப்பாக்கியாகத்தான் இருக்கும். எதிர்வினை குறைவு என்றால் இறுதி அடக்கத்திற்குப் பிரேதம் கிடைக்கும் தேவையில்லாத மண்டைக்குத்து என்றால் அக்கினியோடு சங்கமம். இறுதிவரை அவர் காணாமல் போன நபர்தான். 

இதற்கு உலகில் உள்ள மாபெரும் ஜனநாயகநாடுகள், மனித சுதந்திரத்தை முழுமையாகப் போசிக்கும் நாடுகள் என்று எதுவுமே விதிவிலக்கல்ல. நியாயத்தையும் தர்மத்தையும் சிரித்தபடி பேசிக்கொண்டுதானே எல்லாதவித அக்கிரமங்களையும் அதிகார வர்க்கம் செய்துகொண்டிருக்கின்றது. அதை எவ்வகையிலேனும் தடுத்துவிட தனிமனிதர்களால் ஒருகாலத்தில் முடியாது. 
இந்தக் கட்டமைக்குள் இருந்து நியாயம் பேசுமளவுக்கு என்று மனிதம் விழித்துக் கொள்கின்றதோ அன்றே அவனுக்கும் இறுதி முத்தம் துப்பாக்கியால்தான். ஆனாலும் மிகவும் அபூர்வமாக சிலர் தம்மைத் தற்காத்துக் கொள்வார்கள். எல்லாவித மரண வலயங்களிலிருந்தும் தப்பித்து உயிரைத் தவிர பெயர் புகழ் மானம் கௌரவம் செல்வம் அனைத்தையும் இழந்து உண்மைகளை மட்டும் தங்களுக்குள் பத்திரமாகப் பதுக்கி வைத்திருப்பார்கள். அத்தகையவர்களால்தான் பல்வேறு மர்ம முடிச்சுக்கள் மெதுமெதுவாக அவிழும். அவை நம்பமுடியாதவைதான் ஆயினும் உண்மை.
தன்னைத் தற்காத்துக் கொண்;டு மிகவும் கவனமாக ஒரு பத்திரிகையாளனோ அல்லது எழுத்தாளனோ செயற்படுதல் என்பது அவனும் ஓரு புலனாய்வுக்காரனின் தரத்துக்குத் தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும். இது அரசியல்வாதி, சட்டத்தரணி, வர்த்தகன், என்று எல்லேலாருக்கும் பொருந்தும் 

ஏனெனில் துப்பாக்கி முத்தமிடத் துணிந்தால் எந்தத் தராதரத்தையும் அளவீடு செய்வதில்லை.

நேர் மறை 15 கேள்விகளுக்கு மேமன்கவி பதில்கள்

1.உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
    இத்தனை காலமும் வாழ்ந்தும் எதையும் சாதிக்காத மனிதன்.

2.நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
    பலருடன். அப்பட்டியல் காலத்திற்குக் காலம் மாறுகிறது.  தனிப்பட்ட முறையிலல்ல.       கருத்துகளால் பலருடன் முரண்பட்டும் முரண்பட்டுக் கொண்டுமிருக்கிறேன்.

3.இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
   வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டது என பல இலக்கியவாதிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாசிப்புப் பழக்கம் குறையவில்லை. வாசிக்கும் முறைமை மாறிவிட்டது. இந்த முரண்பாடு எனக்கு ரசிக்கதக்கதாக இருக்கிறது.

4.உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார் யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
   பலர் பல விதமாக எழுதி இருக்கிறார்கள். அது நீண்ட பட்டியல். என்னைப் பற்றி எழுதப்பட்டவைகளை விட, , என் படைப்புகளைப் பற்றி எழுதப்பட்டவைதான். எனக்குப் பிடித்தவை. எழுத்துக்களைப் பற்றி நான் கொண்டிருக்கும் கருத்து நிலையிலிருந்து அவை மாறுப்பட்டவையாக இருப்பினும் கூட.

5.நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
  பலரைப் பற்றி எழுதி இருக்கிறேன்.  அவை தனிமனித புகழ் பாடும் எழுத்துக்களல்ல. அவர்களின் எழுத்துக்கள் மீதான விமர்சனப் பார்வையினைக் கொண்டவை. அவர்கள்; எனது நண்பர்களாயினும் கூட.

6.யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
   மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, என் தமிழ் ஆசான் எம். அஸ்ரப்கான். அமரர் கவிஞர் ஈழவாணன்.

7.இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
  எழுதப்படும் அச்சடிக்கப்படும்  எல்லாமே புத்தகங்கள் அல்ல. ஒரு புத்தகத்தில் பேசப்படும் விடயத்தைப் பற்றிச்  சிறிதளவேனும் புரிதலற்ற படைப்புகளின் முதல் பக்கம் வாசித்ததுமே அப்படித் தோன்றுவதுண்டு.

8.இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
சிலதைப் படிக்கும் போது என்னை அறியாமலே பொறாமை உணர்ச்சி எனக்குள் எழுகிறது. இந்த மாதிரி நம்மால் எழுத முடியவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படுவதுண்டு. அத்தகைய புத்தகங்களை வாசிக்கும் பொழுதெலாம் இது அல்லவா புத்தகம் என்ற உணர்வு ஏற்படுவதுண்டு.. அப்புத்தகம் கொண்டிருக்கும் கருத்தியலில் முற்றும் முழுதுமாக எனக்கு உடன்பாடு இல்லாதப் பொழுதும்.

9.உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
   மல்லிகை

10.உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
   எல்லோருடையப் படைப்புகளும் விலை மதிக்க முடியாதவை. அவற்றுக்கு விலை நிர்ணயிக்க முடியாது. ஆனால் தரம் நிர்ணயிக்கப்படலாம். அப்படைப்பை வாசிக்கும் வாசக நிலையின் கருத்தியலுக்கேற்ப.

11.இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
   மேலைத்தேயக் கருத்தியலை உள்நிலையாக் கொண்ட தேர்வு முறைமையால் உலக தளத்தில் (கவனிக்க தரத்தில் அல்ல) பல்வேறு அறிவுத்துறைச் சார்ந்த ஆளுமைகளுக்கு  விருது வழங்கும் திட்டம்.

12.உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
  தமிழ், மேமன், உருது, ஆங்கிலம,; சிங்களம், குஜராத்தி,  இவற்றில் எல்லாம்  எனக்கு பாண்டித்தியம் அல்ல. பரிச்சயம் உண்டு

13.முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்து கிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
  அவை தவிர்க்க முடியாதவை. அவற்றின் தரம், தரமின்மையை காலம் நிர்ணயிக்கும்.

14.உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
    வாப்பா(மர்ஹூம்), உம்மா, மனைவி, இரு பெண் பிள்ளைகள், மூன்று பேரன்கள், ஒரு பேத்தி, இருமருமகன்கள்,  இன்னுப் பலர்.

15.எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
    என் முகத்தில்தான் . நான் தவறு செய்யும் பொழுது.

மனதிற் பட்டது - 13 சட்டத்தரணி தவராசா


சட்டத்தரணி தவராசா
மனிதம் கொண்ட பேரியக்கம் - 2

1981ஆம் ஆண்டு சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்ட சட்டத்தரணி வீ.தவாராசா அவர்கள் ஆஜரான முதல் வழக்கே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டதுதான். நம் நாட்டடில் தொடரச்சியாக நான்கு மாதங்கள் இடம்பெற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரேயொரு வழக்கு இதுதான். இவ்வழக்கில் இவருக்குக் கிடைத்த வெற்றிதான் அவரை தனித்துவமிக்க அடையாளமொன்றினை நோக்கி நகர்த்தியது. 

இவர் ஆஜரான பெரும்பான்மையான வழக்குகள் பயங்கரவாத மற்றும் அவசரகாலச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டவைகளே. அதில் மிக முக்கியமான சில வழக்குள் அமிர்தலிங்கம் கொலை 1991, டென்மார்கிலிருந்து நாடுகடத்தப்பட்ட மாணவி சித்ரா வழக்கு 1996, டென்மார்க் ஊடகவியலாளர் நான்கு பேர் கைது செய்யப்பட்ட வழக்கு1996, கலதாரி ஹோட்டல் குண்டு வெடிப்பு1997, கடற்;படை வீரர் நவாப்தீன்; புலிகளுடன் தொடர்பென தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2000, புலனாய்வு அதிகாரி தெகிவளை பொலிஸ் விடுதியில்   சுட்டுக்கொலை 2003, லக்;ஸ்மன் கதிர்காமர்  கொலை 2005, பாகிஸ்தான் உயர்ஸ்;தானிகர் கொலை முயற்சி 2006, ரவிராஜ் கொலை 2006, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய மீதான கொலை முயற்சி 2006, ஊடகவியளாளர்களான மு.பரமேஸ்வரி, வ.யசிகரன், ய.வளர்மதி வழக்குகள் 2008, த.தே.கூ இன் 04எம்பிகளுக்கெதிரான வழக்கு-2008, காலித்துறைமுகத் தாக்குதல் 2006, ஐந்து மாணவர்கள் கடற்படையினரால் கடத்தப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரணை 2008 (கோத்தபாய முகாம், கடற்படையினரின் திருகோணமலை இரகசிய சித்திரவதை முகாம் ஆகியன 23-6-2015ல் சான்றின் மூலம் பகிரங்கமானது) ஊடகவியளார் வித்யாதரன் கைது 2009, சுவிஸ்; பிரஜை கரன் கைது, (2013 புலிகளுடன் பணப்பரிமாற்றம் மேற்கொண்ட புலம் பெயர்தமிழர் வழக்கு விசாரனையில் விடுதலையான முதலாவது வழக்கு)

மேல் நீதிமன்றில் அரசியல் கைதிகளுக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு மேல் நீதிமன்றங்களால் விசாரணைகள் நடாத்தப்பட்ட  சகல வழக்குக்களிலும் தனது வாதத்தினால் சகல எதிரிகளையும் விடுதலை செய்ய வைத்தார்.    

இந்த வழக்குகளுக்கெல்லாம் அவர் ஆஜராகும் போது அவரைப் பார்த்து துப்பாக்கி புன்னகைத்தது மரணம் வியந்து நின்றது. அவருக்கு விடப்பட்ட அனைத்து அச்சுருத்தல்களையும் தாண்டி அவர் பயணித்தார். அவைகளை அவர் கணக்கிலெடுக்கவுமில்லை பொருட்டாக மதிக்கவுமில்லை, இனத்தின் மீது கொண்ட பற்று என்றால் என்னவென்று தவராசாவைப் பார்த்துக் தெரிந்துகொள்ளுங்கள் என்று நான் சொல்வேன்.

மாணவி வித்யா வழக்கில் கனேடிய  புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் அவர் ஆஜராகி பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தினார். ஒவ்வொரு முறையும் தனது பணத்தைச் செலவு செய்தே கொழும்பிலிருந்து வழக்காடச் சென்றார். வித்யாவின் படுகொலைக்குப் பின்னால் மறைந்திருக்கும் அரசியல் அதிகாரத்தின் பிடி பல்வேறுபட்ட திருகுதாளங்களில் அசுர ஆட்டம் ஆடி அவரை அவ்வழக்கில் இருந்து தூரமாக்கும் பணியில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்குக் கொடுத்த நெருக்குதல் காரணமாகவும் அவரை அவ்வழக்கில் ஆஜராகப் பணித்த தரப்பினர் நீங்கிக் கொள்ளுமாறு வேண்டியதன் காரணமாகவும் சட்டத்தரணி தவரசா அதில் இருந்து விலகினார். தவராசா இல்லாத வழக்கை அவர்கள் இலகுவாக வெல்லலாம் என்று மதிப்பிட்டுக் காரியமாற்றுகின்றனர். அவரின் நேர்மைக்கும் போர்க்குனத்திற்கும் சவாலாக அமைந்ததுதான் இந்நிகழ்வு.
சட்டத்தரணி தவராசாவிற்கு அருகில் இருக்கின்ற இன்னொரு மாபெரும் பலம் 1986ஆம் ஆண்டு அவர் திருமணம் செய்து கொண்ட கௌரி சங்கரிதான்.

மனித உரிமை வழக்குகள் என்றால் நிச்சயம் அங்கு சட்டத்தரணி கௌரி சங்கரி பிரசன்னமாகி இருப்பார். பல நூற்றுக்கணக்கான மனித உரிமை வழக்குகளை இவர் தாக்கல் செய்திருக்கின்றார். மனித உரிமை வழக்குகள் என்றால் நீங்கள் நாட வேண்டிய ஒரேயொரு உன்னதமும் உண்மையுமிக்க உறுதியான நபர் இவர்தான். பல சட்டத்தரணிகள் மேற்கொள்ளும் கண்கட்டு வித்தைகளுக்கு அப்பால் இவர்கள் இருவரும் விதைத்திருக்கும் நேர்மை என்றும் சாய்ந்திடாத வான்மைமிக்கது. 

சுயநலம் ஏதுமற்ற ஒரு அரசியல் ஈடுபாட்டாளரைப் பார்ப்பதென்றால் நீங்கள் சட்டத்தரனி தவராசாவின் புன்னகை தவழும் முகத்தைப் பாருங்கள்
உறுதியும் பற்றுமிக்க ஒரு மக்கள் செயற்பாட்டாளரைப் பார்ப்பதென்றால் அமைதியே உருவான அவரின் மனைவி சட்டத்தரணி கௌரி சங்கரியின் சலனமற்ற முகத்தைப் பாருங்கள்.