மனதிற்பட்டது - 18
கபூர் மௌலவி
மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் அயராது பாடுபடுகின்ற நபர்கள் மிகவும் குறைவுதான். அப்படிப்பட்டவர்கள் அடுத்தவர்களின் பாராட்டையோ, புகழ்ச்சியையோ எதிர்பார்த்துக் காத்திருக்கவே மாட்டார்கள். தம் பாட்டில் தமது வேலைகளைச் செய்து அனைத்தையும் சலனமின்றித் தாண்டிச் சென்று கொண்டே இருப்பார்கள்.
கல்குடா பிராந்தியத்தில் தந்தையை இழந்த அநாதைக் குழந்தைகளின் வாழ்க்கையில் ஏதோவோர் விதத்தில் தன்னால் முடிந்தளவு ஒளியேற்றி வைக்கப் பாடுபட்ட ஒரு நல்ல உள்ளம் இருக்கின்றதென்றால் அது கபூர் மௌலவிதான்.
1956ஆம் ஆண்டு பிறந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த இவர் 1975ஆம் ஆண்டு அட்டாளைச் சேனை மத்ரதுஸ் ஷர்கிய்யாவில் மௌலவிப்பட்டம் பெற்றார். பின்னர் 1983ஆம் ஆண்டு கல்லிச்சை எனும் கிராமத்தில் ஆரிசியராகக் கடமையாற்றினார். அப்பிரதேசத்தில் கற்பித்தலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது சமுகத்தால் சரியான முறையில் வழிகாட்டப்பட்டு பராமரிக்கப்படாத அனாதைகள் அவரது கவனத்தை ஈர்த்தனர். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் சிந்தித்தன் விளைவுதான் இலங்கையில் உள்ள பல்வேறு யதீம்கானாக்காளில் அப்பிள்ளைகளைச் சேர்த்துவிடுவதாகும் முதன் முதலில் அப்படி 16 பேருக்கு வாழ வழிகாட்டினார்.
பின்னர் மக்களின் வாழ்வியல் தளத்தின் அடிக்கோடு வரைச் சென்று தேவை உள்ளவர்களை அவராகவே தேடி, அப்பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு ஒளியேற்ற என்னென்ன விடயங்களைச் செய்யலாம் என்று அவர்களின் தாய்மாருக்கு தெளிவூட்டினார். தம் பிள்ளைகளை கண்காணாத பிரதேசம் ஒன்றிற்கு அனுப்புவதில் தாய்மார் கொண்டிருந்த பிடிவாதத்தை தனது அமைதியான வார்த்தைகளால் வென்றார்.
'அனாதி மடுவத்துக்கு புள்ளயக் குடுத்தல்' என்ற அடிப்படையில் பிழையாகக் கற்பிதம் செய்து அச்சுருத்தல் செய்யப்பட்டிருந்த கருத்தியல் தளத்தை அவர் உடைத்தெறிந்தார். ஆரம்பத்தில் இலகுவாக அது வசப்படவில்லைதான் ஆயினும் தொடர்ந்தேச்சையாக அதில் நேரிய சிந்தனையோடு செயற்பட்டு இக்கருத்தியலையே புரட்டிப் போட்டார்.
ஒரு சமுதாயத் தலைவன் செய்ய வேண்டிய பணிகளை அவர் ஒற்றையாக நின்று நிறைவேற்றினார். அதற்காக இந்த சமுதாயம் அவருக்கு கிரீடம் சூட்டிக் கொண்டாடவுமில்லை, தலையில் தூக்கி வைத்துக் கொள்ளவுமில்லை, அவரது சமுதாயப் பணியைப் பாராட்டவுமில்லை. அவற்றை அவர் எதிர் பார்க்கவுமில்லை.
60 வயதாகியும் தனது பணியை அவர் ஆரவாரமின்றி இன்னும் செய்து கொண்டுதான் இருக்கின்றார். தேவையுடையவர்களைத் தேடிப்பிடித்து உதவுவதுதானே அவரது ஸ்பெஷல்.
கபூர் மௌலவி போன்ற இத்தகைய மனிதர்கள் மிகவும் அபூர்வமாகத்தான் சமுதாயத்தில் இருப்பார்கள். அத்தகையவர்களுக்கு துணையாக நிற்க வேண்டிய சமுதாய ஒழுங்குகள் தமது பணியைச் செய்தனவா? என்று கேள்வி கேட்டால் அதற்குத் திருப்திகரமான பதில் நிச்சயம் கிடைக்காது. ஏனெனில் இந்த ஒழுங்குகளுக்குள் புகுந்திருக்கும் சுயநலவாத அரசியல் எச்சம் அப்படித்தான் பயணப்பட வைத்திருக்கின்றது. அதற்காக இந்த அசுத்தங்களுக்குள் சென்று மண்டியிட்டு நிற்கும் பணியையோ அல்லது தனது முயற்சிகளுக்காக அங்கிருந்து ஒத்தாசைகளைப் பெறும் எதிர்பார்ப்பையோ அவர் கொண்டிருக்கவில்லை.
மிதிவண்டியில் ஓட்டமாவடி வாழைச்சேனை மீராவோடை காவத்தமுனை என்று தெருக்கள் தோரும் தேவையுடைய மக்களைத் தேடி அவர் பயணப் படுகையில் ஒரு சிறந்த மனிதரைக் கடந்து செல்கின்றோமே என்று யாரும் நினைத்துச் செல்லுமளவுக்கு அவர் ஆடம்பரமாக இருக்கவில்லை. தனது பணியின் பயன் அல்லாவிடமிருந்து மட்டுமே என்று தனது எதிர்பார்ப்புகளை அவனை நோக்கியே குவித்தமையினால் உலக மக்களின் சல்யூட் அவருக்கு அவசியப்படவில்லை.
இன்று பெரும் பெரும் சமூக சேவகர்களாக பல்லாயிரம் ரூபாய்கள் செலவழித்து பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டு செயற்படுகின்ற புகழ்விரும்பி மனிதர்கள் கபூர் மௌலவியிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே இருக்கின்றது.
சமூ அவலங்களைக் கண்டு பொங்கியெழுகின்ற இஸ்லாமிய தஃவா கம்பனிகளின் ஏஜெண்டுகள் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ள நிறைய முன்மாதிரிகள் இருக்கின்றன. அடுத்த இயக்கத்திடம் அல்லது கொள்கையிடம் குறைதேடித்தேடியே காலத்தை வீணடிக்கும் தாஃயி குஞ்சுகள் சமுதாயப் பணி செய்தல் என்றால் என்ன அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
கபூர் மௌலவி அவர்களே இறைவன் உங்களின் ஆரோக்கியத்தை மேலும் பலப்படுத்தி, தூய்மையான எண்ணங்களை வலுப்படுத்தி உங்கள் பணிகளை அங்கீகரித்து இம்மையிலும் மறுமையிலும் பேறுபெற்றவராக மாற்றிட எமது பிரார்த்தனைகள்.
தொடரட்டும் உங்கள் பணி.
No comments:
Post a Comment