Tuesday, March 29, 2016

மர்ஹூம் வை.அஹமத் அவர்களின் புரட்சிக் குழந்தை குறுநாவலுக்கு எழுதிய பதிப்புரை.

மர்ஹூம் வை.அஹமத் அவர்களின் புரட்சிக் குழந்தை குறுநாவலுக்கு நான் எழுதிய பதிப்புரை.
நினையாத ஒன்று
மர்ஹூம் வை.அஹமத் அவர்களின் 'புரட்சிக் குழந்தை' என்ற இக்குறுநாவலை எமது செய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்தப் பதிப்பகம் ஊடாகப் பதிப்பிப்போம் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.

1992ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்ட போது நான் ஒன்பது வயதுச் சிறுவன்தான். ஏதோ நடக்கின்றது என்று தெரியும் ஆனால் என்ன நடக்கின்றது என்று புரிந்து கொள்ள முடியவில்லை அப்போது. 

பின்னொரு காலத்தில் எல்லாவற்றையும் புரிந்து கொள்ளும் போது எல்லோரையும் போல என்னால் அமைதியாக ஒரு பார்வையாளனாக மட்டும் இருக்க முடியவில்லை. 

2004ஆம் ஆண்டு எமது SIM-Production வெளியிட்ட அக்கினிச் சுவாசம் பாடல் அல்பத்தில் உள்ள 'நாமங்கள் மறையா நமக்காக வாழ்ந்தோர் நினைவுகள் உயிர் கொள்ளுதே' என்ற பாடல் வை.அஹமத் அவர்களையும் அவர்போன்ற சமுகத்திற்காக உழைத்த நபர்களையும் மையப்படுத்தி  எழுதியதாகும். 

அதன் பின்னர் வை.அஹமத் அவர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்றைச் செய்வதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் தகவல் சேகரிப்புடன் மட்டும் நின்று போனதற்கு பொருளாதாரச் சுமை மட்டுமல்ல வை. அஹமத் அவர்களை மட்டுமன்றி அவருடன் பயணித்து மரணமடைந்த ஏனையவர்களைப் பற்றியும் ஆவணமாக்க வேண்டி இருந்ததால் வேலை பெரிதாகிவிட்டமையும் பிரதான காரணமாகும். என்றாவது ஒரு நாள் அந்தப் பணி முழுமை பெறும் என்று இப்போதும் நம்புகின்றேன். 

வை அஹமத் மீதான தாக்குதல் குறித்து அவர் மறைந்து பதின்மூன்று வருடங்களின் பின்னர் ஒரு புலனாய்வுப் பணியை ஆரம்பித்தேன். அந்தப் பயணம்தான் என்னை பல்வேறு சமூகவிடயங்களின்பாலும் வெறிகொண்ட தேடலைச் செய்ய வைத்தது. பல நண்பர்கள் பயனற்ற வேலை இது என்றுதான் சொன்னார்கள். ஆனாலும் வாய்வழியாகவும் ஒவ்வொருவரினதும் கற்பனையிலும் இருந்த அந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் பெருதற்கரிய பல முக்கிய தகவல்கள் கிடைத்தன. இப்போது அதன் சில குறிப்புக்களை மட்டும் பகிர்ந்து கொள்கின்றேன்.

அந்தக் கண்ணிவெடியை வெடிக்க வைத்தவர் முத்து என்பராவார். வாகனேரிப் பகுதியில் இருந்து மீன் வியாபாரத்தில் கொஞ்சக் காலம் ஈடுபட்ட அவரைப் பலருக்கும் புலி என்று தெரியாது. அந்தக் கைங்கரியத்தைச் செய்தவர் அவர்தான் என்பதும் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை.  2002ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் ஏற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட கருணா-பிரபா பிளவின்ன பின்னர் எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கியிருந்த அவர் அல்லது 2003ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் ஓட்டமாவடிப் பகுதி முஸ்லிம் மக்களுடன் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களில் மிகச் சுதந்திரமாக ஈடுபட்டு வந்தார். 

இராணுவப் புலனாய்வு அதிகாரி கலீல் மீரா லெப்பை அவர்களின் உதவியோடுதான் இந்தத் தேடலை என்னால் செய்ய முடியுமாக இருந்தது. ஒரு நாள் ஓட்டமாவடியில் வைத்து மோட்டார் பைக்கில் வந்த அவரை அடையாளம் காட்டிய போதிலிருந்து அவரை நான் ஒர் அழகிய சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தபடி நிறையவே அவதானித்து வந்தேன். 

ஒரு நாள் அச்சந்தர்ப்பம் வாய்த்தது. அவருடைய பெயரைக் கேட்ட பின்னர் அவரிடம் முதலாவது கேட்ட கேள்வி மியான்குளச் சந்தியில் வைத்து 1992ஆம் ஆண்டு கண்ணிவெடி வைத்து கொஞ்சப் பேரைக் கொன்றீர்கள் ஞாபகமிருக்கா? என்பதுதான். அவரிடமிருந்து பெற்றுக் கொண்ட அடிப்படைத்தகவல்கள் மட்டும்தான் என்ன நடந்தது என்பதற்கான ஒற்றை ஆதாரம். அதன் பின்னர் அவர் குறிப்பிட்ட சில நபர்கள் தொடர்பில் பாரிய தேடல்களைச் செய்து பலரையும் இனங்காண புலிகள் இயக்கத்தில் இருந்த பிளவு மிகுந்த ஒத்தாசை நல்கியது. 

அந்தத் தாக்குதலுக்கான தயார்படுத்தல் எப்படி மேற்கொள்ளப்பட்டது? திட்டமிடல் மேற்கொள்ளப்பட்ட விதம் தகவல் பரிமாறப்பட்டவிதம், தாக்குதலின் நோக்கம் தாக்குதல் நடந்த விதம் பற்றி முழுமையாகப் பேசும் வகையில்தான் ஆவணப் படத்தின் ஸ்கிரிப்ட் அமைந்திருந்தது. மிகுந்த அபாயகரமான ஒரு பயணமாக அது அப்போது இருந்தது. இப்போது நினைத்துப் பார்க்கையில் வியப்பாக இருக்கின்றது. அந்தத் தாக்குதல் தொடர்பில் இப்போது சொல்லப்படும் பல வியாக்கியானங்களை எனது தேடல் தகர்த்துவிட்டிருந்தது. அதனாலும் நான் அமைதி காக்கின்றேன். அந்த அமைதி முடிவுக்கு வரும் காலம் நெருங்கிவிட்டது என்றே கருதுகின்றேன். அதை முழுமையாக ஒரு கட்டுரை வடிவில் மீளவும் எழுத வேண்டும் என்று நினைக்கின்றேன். நான் எழுதினால் மட்டும்தான் அந்த உண்மைகள் உலகுக்குத் தெரியவரும் என்ற நிலையில்தான் இப்போதைக்கு அது இருக்கின்றது. எனது பணியை சரியாகச் செய்வேன் என்று நம்புகின்றேன். இப்போதைக்கு இந்த விடயத்தை இத்தோடு நிறுத்திக் கொள்கின்றேன்.

வை.அஹமத்; அவர்களின் படைப்புக்கள் அனைத்தையும் தேடி எடுக்க வேண்டும் என்ற கருத்தைப் பகிர்ந்து கொண்ட போது எமது பிரதேசத்தின் அனுபவமிக்க எழுத்தாளரான அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள் புரட்சிக் குழந்தை என்ற குறுநாவல் பற்றிய தகவலைத் தந்தார். இது வரையில் அது பற்றிய தகவல் எங்கும் கிடைக்கவேயில்லை அது அப்போது அச்சிடப்பட்டும் இருக்கவில்லை என்றார். அத்துடன் மேலதிக தகவலாக வை சேரின் மூலப்பிரதியைப் பார்த்து மீண்டும் தானே எழுதிக் கொடுத்ததாகவும் சொன்னார். இருளின் நிழலில், தரிசனங்கள் ஆகிய இரு குறு நாவல்களும் ஏற்கனவே பதிப்பிக்கப் பட்டிருந்தன. அதன் பதிப்புரையிலும் புரட்சிக் குழந்தை கிடைக்கவில்லை என்ற தகவல்தான் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதை விசாரித்துக் கொண்டு செல்லும் போதுதான் வை சேரின் அனைத்துப் படைப்புக்களும் என் கரம் சேர்ந்தன. அதற்காக அவரின் குடும்பத்தவர்களுக்கு என்றும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். 

 அச்சுச் செலவுகள் கூடுதல் நஷ்டத்தையே ஏற்படுத்துகின்ற இக்காலத்தில் அதையே காரணமாக வைத்து வை அஹமதின் படைப்புக்கள் மொத்தமாக மக்கள் கரம் சேர்வதைத் தாமதப்படுத்த நாம் விரும்பவில்லை. 

வை சேரின் எழுத்துக்களைத் தனியுரிமை கொண்டாட சிலர் எடுக்கும் பிரயத்தனங்கள் பற்றி அறிந்து மிகவும் கவலையுற்றேன். அக்கவலையைப் போக்கிக் கொள்ளவே எமது பதிப்பகத்தின் மின்னூல் திட்டத்தின் மூலம் முதலாவது மின்னூலாக காணாமல் போனதாகக் கருதப்பட்ட புரட்சிக் குழந்தை குறுநாவல் இப்போது உங்கள் பார்வைக்கு வந்துள்ளது. ஏனைய படைப்புக்களும் விரைவில் உங்கள் வாசிப்புக்குக் கிடைக்கும் காத்திருங்கள்.

யாசீன் பாவா - சுலைஹா உம்மா தம்பதிகளின் மகனாக 29.04.1945 அனறு வாழைச்சேனையில் பிறந்தார். வாழைச்சேனையிலும் ஓட்டமாவடியிலும் ஆரம்பக் கல்வியைக் கற்ற அவர் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் பெற்நார். பின்னர்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் படிப்பு கல்வி டிப்ளோமாவையும் பெற்றார்.

1964 முதல் ஆசிரியராய் நியமனம் பெற்று ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசப் பாடசாலைகளில் அதிபராக இருந்து மூதூர் கோட்டக்கல்வி அலுவலக அதிகாரியாகப் பணிபுரிந்து பின்னர் மூதூரில் இருந்து இடமாற்றம் பெற்று உதவிக் கல்விப் பணிப்பாளராக வாழைச்சேனைக்கு வந்த அவருக்கு கல்வி நிர்வாகத் தலைமைப் பதவி கிடைத்திருக்க வேண்டும். ஆயினும் அது இனவாத நோக்கில் மறுக்கப்பட்டது. ஒரு வாயில் மூடப்பட்டால் மறுவாயில் திறக்கும் என்பதற்கொப்ப 1991 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நிர்வாகத் துறையில் பதவியுயர்வு பெற்று பணிபுரியும்  வாய்ப்புக் கிடைத்தது. 

அதன்பின்னர் 1992 டிசம்பர் 26 அவர் கொல்லப்பட்டார்.
அவர் கொல்லப்பட்ட பின்னர் 1993 ஏப்ரல் 15ஆம் திகதி மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஒரு நீண்ட அறிக்கையைச் சமர்ப்பித்தது. அதைத் தவிர அவரது படுகொலையை யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஆனாலும் உண்மைகள் அவ்வளவு சீக்கிரம் ஓய்ந்து விடுவதில்லை
தனது எழுத்துக்கள் குறித்து 1988ஆம் ஆண்டு அவர் எழுதிய குறிப்பில் இந்த உலகத்தில் மனிதர்களாக நாம் வாழப் பழக வேண்டியது அவசியமாகின்றது. மனிதத்துவம், மனித நேயம் என்பனவற்றை வளர்க்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

அநீதியை எதிர்த்துப் போராடி வெற்றி பெற வேண்டும்.
ஆதிக்க உணர்வை அழிக்க வேண்டும்.
வறுமையை ஒழிக்க வேண்டும்.
அறிவை மலரச் செய்ய வேண்டும்.
இவற்றிற்கெல்லாம் எழுத்துப் பயன்படுமானால் அந்தப் பங்களிப்பு எனக்குத் திருப்தியை ஏற்படுத்தும்.
எனது கதைகள் எங்கேயாவது ஏதாவதொரு உண்மையைத் தேடித்தான் செல்ல வேண்டும் என்பது எனது எண்ணம். அந்த உண்மைகள் உங்களுக்கும் தெரிகிறதா? என்று பாருங்கள்.
அப்படியானால் அதுவே நான் எழுதுகோலைப் பிடிப்பதற்கு தகுதியாக்கும். (வை.அஹமத் 1988.12.31)

வை அஹமத் அவர்களின் இக்குறுநாவலை செம்மைப்படுத்தி சீராக்கி எடுக்க சிறிது காலம் எடுத்தது. எனது பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய ஒத்துழைப்பு நல்கிய மனைவிக்கும், செல்லமாகத் தொந்தரவுகள் தந்தாலும் அவ்வப்போது அமைதியடைந்தும் உறங்கியும் ஒத்துழைத்த மகன் உமர் காலித்துக்கும் ஒரு சிறுகுறிப்பைத் தந்துதவிய எழுத்தாளரும் வை அஹமத்தின் மாணவருமான அஷ்ரப் சிஹாப்தீன் அவர்களுக்கும்  இதை ஓடியோவாகப் பதிவு செய்ய குரல் கொடுத்த எனது மனைவி ஷாமிலாவுக்கும், சூரியன் எப்எம் அறிவிப்பாளர் ரிம்சாத் அவர்கட்கும் ஒலிப்பதிவு செய்துதந்த இசையமைப்பாளர் பஸால் எம் ஜின்னாஹ் அவர்கட்கும் எனது  மனமார்ந்த நன்றிகள்.

முஸ்டீன்

No comments:

Post a Comment