Friday, June 3, 2016

பிணம் தின்னிகள்.(சிறுகதை)


20011 / 2012 காலப்பிரிவில் பொலன்னறுவை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் இருந்த நபர்களில் 10 வீதமானவர்கள் தமது சொந்த மகளை பாலியல் வன்புனர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதானவர்கள். அவர்கள் ஒவ்வொருவருடனும் மேற்கொள்ளப்பட்ட உரையாடலின் பிரகாரம் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டே இக்கதை எழுதப் பட்டுள்ளது. கவனம் செலுத்தாமலு; கரிசனையற்றும் இருக்கும் ஒரு முக்கியமான பகுதி இது.
-முஸ்டீன்-


மிருகம் 01

தனபால இரண்டு பிள்ளைகளின் தந்தை. அவனுக்கு வாழ்க்கை ஒரு போராட்டக் களம். ஆயினும் அதில் போராடும் திறனையும் ஆற்றலையும் கடவுள் அவனுக்கு அளித்திருந்தார். ஒரு நாளைக்கு ஐந்நூறு ரூபாய் சம்பாதிப்பதற்கு இரண்டு தேங்காய்ச் சிரட்டைகள் அவனுக்குப் போதும். இப்போதுள்ள ஆட்சியில் ஒரு நாளைக்கு வாழ்வதற்கு ஐந்நூறு ரூபாய் போதாதுதான் ஆயினும் என்ன செய்வது? ஜனாதிபதிக்கே ஒரு நாளைக்கு இரண்டு கோடி ரூபாய் செலவுக்குப் போதாதென்று இன்னும் ஐம்பது லட்சம் அதிகரிக்க ஆலோசித்துக் கொண்டிருக்கும் போது சதாரான அடித்தட்டுக் குடிமகனான தனபாலவுக்கு ஐந்நூறு ரூபாய் எங்ஙனம்?? அதிலும் அயராது பாடுபட்டு உழைத்த அந்த ஐநூறில் வரியென்ற பெயரில் அரசாங்கம் எப்படியும் நூற்றியைம்பது ரூபாவைப் பிடுங்கிக் கொள்ளும். அப்பாவி அதெல்லாம் அவனுக்கெங்கே தெரியப் போகிறது.

மிகவும் அழகானதும் கவர்ச்சிகரமானதுமான ஆபரணங்களை அவன் தேங்காய்ச் சிரட்டையைக் கொண்டு செய்துவிடுவான். அதில் அவன் செய்யும் வேலைப்பாடுகள் இயல்பாகவே நம்மை அதன் பக்கம் ஈர்த்து விடும். அத்துடன் அவை சிரட்டையிலிருந்து செய்யப்ட்டவைதானா என்பதை அறியும் போது ஆச்சரியத்தால் நாம் வாய் பிளப்பதும் இயல்பாகவே நடந்து விடும். அவனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் கலை நுணுக்கத்துடனும் அவற்றைச் செய்வான். 

தேங்காய்ச் சிரட்டைகளை, இரும்பு அறுக்கப் பயன்படுத்தும் வாளால் தேவையான அளவுக்குச் சமமான துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்வான். சிறிய துண்டுகள் இரண்டையும் ஒன்றினைத்து சுப்பர் குளு பசை கொண்டு ஒட்டி அது காய்ந்த பின்னர் நடுவில் சிறிதாகத் துளையிட்டு அதைக் குடைந்து குடைந்து தேவையான அளவுக்கப் பெரிது படுத்திக் கொள்வான். அதன் பின்னர் கரடுமுரடான தரையில் அல்லது கல்லில் நன்றாகத் தேய்த்து சமப்படுத்திய பின்னர், மீண்டும் வட்டவடிவமாக அதைத் தேய்த்தே ஒழுங்கமைத்து விரலுக்கு அளவாக அமைத்துக் கொணட பின், சிரட்டையை வாளால் அறுக்கும் போது வந்த தூசுகளை சுப்பர்குளு பசை மூலம் முழுமையாக ஒட்டி அது நன்றாகக் காய்ந்த பின்னர் செப்புக் கம்பியால் அலங்காரம் செய்து கம்பியின் மீது நன்றாகப் பசையிட்டு மீண்டும் அதன் மீது சிரட்டைத் துகள்களைத் தூவி அதை பொலிசிங் பேப்பர் கொண்டு மெது மெதுவாகவும் பக்குவமாகவும் தேய்த்து எடுத்து, பின்னர் தரைகளுக்குப் பிடிக்கும் டைல்துண்டுகளில் இருந்து பெறப்பட்ட மா போன்ற துகள்களால் அழுத்தமாகப் பல முறை துடைத்துச் சுத்தப்படுத்திய பின்னர் அது ஒரு பளபளப்பான அற்புதமான மோதிரம். விலையுயர்ந்த கவர்ச்சி அதில் இருக்கும். இயல்பாகவே நாம் சொக்கிப் போவதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி அவன் மோதிரம் மட்டுமல்ல எல்லாவிதமான ஆபரணங்களையும் அலுப்பின்றிச் செய்து கொண்டே இருப்பான்.

ரேணு அவனின் மூத்த மகள், பதினாறு வயதாகிறது, பெரிதாகச் சொல்லும் அளவுக்கு அவள் அழகும் கிடையாது சுண்டியிழுக்கும் நிறமும்  கிடையாது. ஆயினும் கவர்ச்சியான ஆடைகளும் தந்தையின் கைவண்ணத்தில் உருவான விதவிதமான ஆபரணங்களும் அவளை அலங்கரித்திருந்தன. வீட்டில் எப்போதும் மிகச் சாதாரணமான ஆடைகளுடன் கொஞ்சம் எடுப்பாகவே திரியும் அவளது பருத்த மார்புகளும் மெல்லிய இடையும் கொஞ்சம் உற்றுப் பார்க்கத் தூண்டும். மிகமிகக் குட்டையான பாவாடைகளையே அவள் அதிகம் விரும்பினாள். கொஞ்சம் குனிந்தால் கூட ஏடாகூடமாகிவிடும் ஆயினும் அதை அவள் பொருட்படுத்துவதில்லை. தாய் எப்போதும் இது குறித்து அவளுக்குச் சொல்லும் புத்திமதிகளை காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. தாயைவிடத் தந்தையின் மீதுதான் ஈர்ப்பு அதிகம். மொத்தத்தில் அவள் ஒரு டாடி செல்லம். என்னதான் பிரச்சினைகள் வந்தாலும் தந்தையை அனைத்துக் கொண்டிருந்தாலே போதும் அவளது பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்த மாதிரி உணர்வாள்.

தனபாலவின் மனைவி மிகவும் அழகானவள். அவளுடன் ஊரிலுள்ள எல்லா ஆண்களும் கதைக்க வேண்டும் என்று ஆசைப்படுவர். இளவயதிலேயே திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றதோடு அவளுக்கும் கணவனுக்குமிடையிலான உடலியல் இடைவெளி அதிகரித்து விட்டது. தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும் வம்பளக்க அயல்வீடுகளுக்குச் செல்வதிலும்தான் அவளுக்கு நாட்டம் அதிகம். மிக இள வயதில் திருமணம் முடித்தமையும் அவளது மன அளவில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியே இருந்தது. முதல் வருடத்திலேயே முதல் குழந்தை பெண்ணாகக் கிடைத்தது, அடுத்த மூன்றாவது வருடத்தில் இரண்டாவது குழந்தை ஆணாகக் கிடைத்தது. இருபத்தைந்து வயதாகும் போதே அவள் உடலுறவு விடயத்தில் களைத்துப் போனாள். ஆனால் தனபாலவுக்கோ அதன் பின்னர்தான் மனைவி மீதான ஈர்ப்பும் உறவின் மீதான நாட்டமும் அதிகரித்தது. 

அவனிடம் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. தனது உழைப்பில் வாழ்ந்தான். குடும்பத்தைப் பராமரிப்தற்காக ஓய்வில்லாது உழைத்தான். ஒருநாள் கூட அவன் தனது மனைவி பிள்ளைகளைப் பட்டிணி போட்டது கிடையாது. ஆடம்பரமாக பணக்கார வாழ்க்கை வாழக் கொடுத்து வைக்கவில்லை அவ்வளவுதான், மற்றபடி நிம்மதியான வாழ்க்கை. பௌத்தத் தர்மத்தின் மீது அவனுக்கு அளவுகடந்த நம்பிக்கை இருந்தது. அதனால் மதுவை ஒரு போதும் அவன் நாடியது கிடையாது. சும்மா விளையாட்டுக்காகவேணும் அவன் குடித்துப்பார்த்ததும் கிடையாது. அவன் நல்ல ஆரோக்கியமாக இருந்தான். தனது பொறுப்புக்களை நிறைவாகச் செய்த அவனால் தனது மனைவி ஊர் சுற்றப் போவதை மட்டும் தடுக்கவோ அல்லது அவளைக் கடடுப்படுத்தவோ முடியவில்லை. சாடைமாடையாக அதை அவளுக்கு உணர்த்திய போது அவளும் 'வாழ்க்கையில் எதைத்தான் பெரிதாக அனுபவித்து விட்டோம், இது மட்டும்தான் எனக்கு நிம்மதி' என்றவாறு கிளம்பிச் சென்றுவிட்டாள். அதன்பிறகு அவன் இது குறித்து ஒரு வார்த்தை பேசுவதில்லை.

ஒரு மாலை வேளை தனபால தனது வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு மிகுந்த அசதியுடன் வீட்டுக்கு வந்தான். அப்போது ஒரு பிளேன்ரீ குடித்தால் அசதியைப் போக்கித் தெம்பாக இருக்கலாம் என்று நினைத்தான். ஆயினும் அவசியமானபோது ஒரு தேயிலைத் தண்ணி ஊற்றிக்கொடுக்கவும் ஆள் இல்லை. மனைவி வழமைபோல ஊர்வம்பளக்க வெளியே சென்றிருந்தாள். மகனைக் காணவில்லை, முத்தவள் தூங்கிக் கொண்டிருந்தாள். தானே குசினிக்குள் நுளைந்து தேநீர் தயாரித்துக் குடித்தான். புதுத் தெம்பு பிறந்தது, உடைகளைக் களைந்;துவிட்டு குளிக்கலாம் என்று மாற்றுடைகளை எடுத்துக் கொண்டு கிணற்றடிக்குச் செல்ல வெளிக்கிட்டவன் மகளின் அறைக்கு முன்னால் அப்படியே பேயறைந்தவன் போல நின்றான். 

மகள் நல்ல நித்திரை, அவள் அறைகுறை ஆடையோடு உள்ரங்கமெல்லாம் வெளியே தெரிய அப்பாவியாய்த் தூங்கிக் கொண்டிருந்தாள். அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டுபுட்டென்று கதவுகளையெல்லாம் சாத்தினான். மகளின் அறைக்குள் நுளைந்தான் பிரமிப்போடு அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் கவர்ச்சி அவனை என்னவோ பண்ணியது. அவனுக்குள் உறங்கிக்கிடந்த பாலியல் மிருகம் விழித்துக் கொண்டது. தன்னை நிர்வானப்படுத்திக் கொண்டு வெறியோடு மகளை அனைத்தான் அவளின் ஆடைகள் கிழிந்து பறந்தன. தனக்கு என்ன நடக்கிறது என்பதையே அனுமானிப்பதற்கு அவகாசமே இருக்கவில்லை ஆயினும் அவள் பலங்கொண்ட மட்டும் கதறினாள். அந்த மிருகம் எதையும் இழக்கத் தயாரில்லை, மூச்சுத் திணறி அவள் அசையாது  மூர்ச்சையானாள். தனபால பிணம் தின்று கொண்டிருந்தான்.
வெளியே கதவு பலமாகத் தட்டப்பட

#      #      #     #           #         #


மிருகம் - 02

நிசாந்த ஒரு கூலித் தொழிலாளி, அவனது வருமானம் சாப்பாட்டிற்கு மட்டுமே சரியாக இருந்தது. ஏனைய எந்தத் தேவைகளைக் கவணிக்கவும் அது போதவில்லை. அவன் முன்னேறுவதற்கும் கை நிறையச் சம்பாதிப்பதற்கும் எவ்வளவோ முயன்றான், ஆயினும் முடியவில்லை. முதலாளி வர்க்கத்தின் கருணைப் பார்வை அவன் மீது விழவேயில்லை. பத்து மாடுகளுக்குச் சமமாக உழைத்தான். இருந்தும் என்ன பயன் அவனது உழைப்புக்கேற்ற போதிய கூலியைக் கொடுப்பதில் முதலாளிக்கு தாராளமனம் இருக்கவுமில்லை மனிதபிமானம் இருக்கவுமில்லை. உழைப்பதில் சரிபாதி மது குடிப்பதற்கே சரியாக இருந்தது. உழைத்துக் களைத்து அசதியுடன் வரும் அவனுக்கு கஷ்டங்கள் அனைத்தையும் மறந்து நிம்மதியாகத் தூங்க அது தேவைப்பட்டது. அவன் படுகின்ற கஸ்டங்களையெல்லாம் தெரிந்த மனைவி அவனைத் தடுக்கவுமில்லை. அவனது மனைவி எல்லாத் துன்பங்களின் போதும் அவனுக்கு உறுதுணையாகவே இருந்தாள். 

வாழ்க்கை என்பது இரு மனம் ஒத்திணைந்திருந்தால் எல்லாமே இன்பம்தான், அது வறுமையாயினும் கூட என்பதைத் தெளிவாக அறிவிக்கும் வகையிலான வாழ்க்கையை இருவரும் அனுவித்ததன் அடையாளச் சின்னமாக அவர்களுக்கு எட்டுவயது மகள் இருந்தாள். அவள் படுசுட்டி, படிப்பில் அவள்தான் முதலிடம், அறிவிலும் ஆற்றலிலும் தேர்ந்தவள், வயதை மிஞ்சிய புத்தி, அவளது கல்வி மற்றும் இதர தேவைகளைக் கவணிக்க போதிய பணம் இல்லை, இனியும் இப்படியே இருந்தால் மகளின் சுபீட்சமான எதிர்காலம் கேள்விக்குறியாகிப் போகுமோ என இருவரும் பயந்தார்கள். 

நிசாந்தவின் வருமானம், முழுமையாக அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றப் போதாது என்பதில் இருவரும் மனமொத்து உடன் பட்டனர், அப்படியாயின் வருமானத்திற்கு அடுத்து என்ன வழி? என்ற கேள்வி இருவரையும் குடைந்து கொண்டிருக்கும் போதே அவள் சொன்னாள்
'நான் மத்திய கிழக்கு நாடொன்றுக்கு வேலைக்குப் போறன், நானும் உழைக்கிறன் ஒரு ரெண்டு வருசம் பல்லைக்கடிச்சிக்கிட்டு இருங்க, இஞ்ச எல்லாத்தையும் நீங்க பாத்துக் கொள்ளுங்க, ஒரு ஸ்திரமான நிலைக்கு வந்துட்டா அப்புறம் நாம யாரையும் எதிர்பார்க்காம வாழலாம் தானே'
'நீ சொல்றதும் சரிதான், எக்காரணம் கொண்டும் ரெண்டு வருசத்துக்கு மேல நீ இருக்கக் கூடா. என்ன செய்றது நம்ம நிலம அப்பிடி இருக்கு. நீயும் கஸ்டப்பட்டு நானும் கஸ்டப்பட்டுத்தான் நம்ம வாழ்க்கைய நிமிர்த்த வேண்டி இருக்கும்...'
அவன் பெருமூச்சு விட்டான். அவள் தன் மீது வைத்திருந்த அன்பு அவனை என்வோ செய்தது அப்படியே மனைவியை வாரி அனைத்துக் கொண்டான் பாசப் பெருக்கோடு முத்தமிட்டபடி...

இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன, மகளும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தாள். தனது மனைவியை நாடு திரும்பும்படி அவன் வேண்டினான். தனது உழைப்பு எல்லாவற்றுக்கும் போதும் என்றும் அறிவித்தான். ஆயினும் அவனது  மனைவி இன்னும் இரண்டு வருடங்கள் மேலதிகமாக உழைத்துவிட்டு நாடு திரும்புவதாக அறிவித்தாள்.  நிசாந்தவின் வாழ்க்கை ஒழுங்கு மாறியிருந்தது. உடல் அசதி தெரியாமல் இருக்கக் குடித்த மதுவுக்கு அவன் அடிமையாகவிருந்தான். மதுவில்லாமல் அவனில்லை என்ற நிலைக்கு எல்லாம் மாறிவிட்டிருந்தது. போயா தினங்களில் கூட வீட்டில் எடுத்து வைத்திருந்து குடித்தான். அவனது தொழிலிலும் ஓரளவு முன்னேற்றம் தெரிந்தது. முன்னரை விட இருமடங்கு சம்பாதித்தான். தனது சம்பாத்தியத்தில் வீட்டுத் தேவைகள் அனைத்தையும் கவனித்தான், மகளின் பெரும்பாலான தேவைகளை அவனது பணத்திலிருந்தே நிறைவேற்றினான். மனைவி அனுப்பும் பணத்தினை அவளது பெயரிலேயே சேமித்தான். அவளது உழைப்பில் ஒரு சிறு தொகை மட்டுமே செலவுக்காக எடுத்துக் கொண்டான். அதுவும் மகளின் தேவைகளுக்காக மட்டும். அதுமட்டுமல்லாது மகளின் பெயரிலும் நிறையவே சேமித்தான்.

ஆறு வருடங்களாயிற்று அப்போதும் மனைவி வரவில்லை, மகள் பெரிய பிள்ளையான போது கூட தாய் பக்கத்தில் இல்லையென்ற குறை அவனை மட்டுமல்ல மகளையும் பாதித்திருந்தது. அவள் உழைப்பில் பெரும்பாலும் வெற்றி பெற்றாள். அவனும் வாழ்வில் வெற்றி பெற்றான் அந்த வெற்றி பொருளாதாரத்தினால் கட்டமைக்கப்பட்டது. குடிசை வீடு, அளவானதும் அழகானதுமான கல்வீடாக மாறியது, வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் அவன் வாங்கியிருந்தன், அத்தியவசியப் பொருட்கள் என்றில்லாமல் ஆடம்பரப் பொருட்களும் கூடவே வீட்டை மேலும் அலங்கரித்தன. மகளின் பெயரிலும், மனைவியின் பெயரிலும் வங்கியில் சேமிப்பு பல லட்சங்களைத் தாண்டியிருந்தது. 

மேம்பட்டவாழ்க்கைத் தரத்தின் வெகுமதிகளை மகள் மட்டுமல்ல அவனும் அனுபவித்தான். அவனது விடாமுயற்சியும் பிடிவாதமும் அவனைத் தூக்கி நிறுத்தியிருந்தன, மனைவியை பலமுறை வருமாறு அழைத்துவிட்டான் ஆயினும் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று அவள் வெளிநாட்டு வாழ்க்கையில் முழுமையாக ஐக்கியமாகினாள். ஆயினும் இரண்டு மாதத்திற்கொருமுறை தவறாமல் பெருந்தொகைப் பணம் அனுப்பிக் கொண்டே இருந்தாள். அவனும் மனைவியை அலட்டிக் கொள்ளாமல் வாழத் தொடங்கினான். வீட்டோடு ஒட்டியபடி பலசரக்குக் கடையொன்றைப் போட்டான், கூடவே சொந்தமாக தரமான கரவை மாடுகளை வாங்கி பால் விற்றான், தயிர் செய்து விற்றான், நெய் உற்பத்தியிலும் வெற்றிபெற்றான். நல்ல வேளை ரஜணியின்அன்னாமலைத் திரைப்படத்தை அதிஸ்டவசமாகப் பார்க்காமல் விட்டிருந்தான். மொழி அவனைக் காப்பாற்றி இருக்கக் கூடும்.

மனைவி எட்டு வருடங்கள் கழித்து நாட்டுக்கு மீண்டாள், அவளின் நடையுடை பாவனை பேச்சு பழக்கவழக்கம் எல்லாமே மாறியிருந்தன, எந்நேரமும் தெலைபேசியில் உரையாடிக் கொண்டே இருந்தாள், தனது நகைகளையும் ஆடம்பரத்தையும் மற்றவர்களுக்குக் காட்ட வேண்டும் என்றே எல்லா இடங்களுக்கும் உறவினர்களைத் தேடித் தேடிப் போனாள். கணவனும் மகளும் தன்னோடு பெரிய ஈர்ப்புடன் கதைக்காதது கூட அவளுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை,  மகள் பாடசாலைக்குப் போவதை நிறுத்தி பல வருடங்கள் ஆகியிருந்தன. ஏன் எனக் கேட்ட போது நிசாந்த ஆயிரம் காரணங்கள் சொன்னான்.  நிசாந்தவும்  வீட்டோடே இருந்தான். கனவனை நினைத்து அவள் மிகவும் பெருமைப்பட்டாள். இன்னும் இரண்டு மாதத்தில் மீண்டும் தான் வெளிநாடு  போய்விட வேண்டும் என்று பக்குவமாக அறிவித்தாள். ஆனாலும் அதையும் கூட அவன் அலட்டிக் கொள்ளவில்லை.
குடும்பங்களுடன் உறவு கொண்டாடப் போய்விட்டு நன்கு இருட்டியிருந்த வேளை வீட்டுக்குத் திரும்பிய அவள் அதிர்ச்சியோடு உறைந்து போய் நின்றாள்..

அவள் கண்ட காட்சி, இதயமே வெடித்துவிடும்போல இருந்தது. தனது கணவனும் மகளுமா? இப்படி!! அவளால் எதையுமே நம்ப முடியவில்லை, சுயநினைவுக்கு வர நீண்ட நேரமானது. கடந்த பல வருடங்களாக அவன் மகளுடன் குடும்பம் நடாத்துவதை அறியாமல் அவள் சிலையாக நிற்க நிசாந்த பிணம் தின்பதில் குறியாக இருந்தான்...

#       #      #      #      # 

மிருகம் - 03

நதீஷா நல்ல அழகி. யாரோடும் பெரிதாகப் பேசமாட்டாள், எந்த வம்பு தும்புக்கும் போகவும் மாட்டாள். அவளைப் பொறுத்தவரைக்கும் தாய், தந்தை, வீடு, பாடசாலை இதுதான் அவளது உலகம், பணத்திற்குப் பஞ்சமில்லை, தந்தை மத்தியகிழக்கில் வேலை செய்கிறார். ஒரு சாரதியாகச்  சென்று இப்போது ஒரு அமைச்சரின் அளவுக்குச் சம்பாதிக்கிறான். பணம் சம்பாதிக்க வேண்டும் அவ்வளவுதான் அவனது கொள்கை. அது எப்படி என்றெல்லாம் இல்லை, யாருக்கு என்ன நடந்தாலும் பறவாயில்லை பணம் சம்பாதிக்க வேண்டும் அவ்வளவுதான். ரோஜர் என்ற பெயரை அவனே தனக்குச் சூட்டிக் கொண்டான். ரோஜர் என்று சொன்னால்தான் யாருக்கும் அவனைத் தெரியும். 

இப்போது ரோஜர் ஒரு முக்கிய புள்ளி, அவன்தான் ஊரில் உள்ள நிறையப் பேருக்கு மத்திய கிழக்கில் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுத்தான். அதிகம் இளம் பெண்களுக்கு அவன்தான் வீசா அனுப்பி வைத்திருந்தான். அவர்களெல்லாம் இப்போது அமோகமாகச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள் எப்படி என்றெல்லாம் யாரும் கேட்கக் கூடாது அது ஹீரோ ரோஜரின் சாமர்த்தியமும் கைங்கரியமும். அப்பெண்களுக்கெல்லாம் அவன்தான் போஸ். மொத்தத்தில் ஊரில் பலருக்கு அவனது முகமே ஞாபகமில்லை ஆயினும் அவனது பெயர் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அவனது வீடு கூட ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மாதிரிச் செயற்பட்டது. சொன்னால் சொன்னதுதான் பேச்சு மாறமாட்டான். அதனால் அவன் மீது அபிமானமும் நம்பிக்கையும் மிகைத்து இருந்தது.

அவன் வெளிநாடு செல்லும் போது நதீஷா மூன்று வயதுச் சிறுமி, பதினைந்து வருடங்களாயிற்று இன்னும் தந்தையின் குரலை மட்டும்தான் கேட்டுக் கொண்டிருக்கிறாள். எப்போதும் அவன் தவறாமல் அவளுடன் கதைப்பான். தந்தைதான் அவளுக்கு எல்லாமே. அவள் கேட்ட எதையும் உடனே கிடைக்கச் செய்து விடுவான். உடை, நகை, உட்பட அனைத்து ஆடம்பரப் பொருட்களையும் அவள் நினைத்தவுடனேயே பெற்றுக் கொள்வாள். தானும் ஒரு ரோயல் பெமிலிப் பிள்ளை என்பதை அவள் பெருமையுடன் சொல்லிக் கொள்வாள்.

ஆடை விடயத்தில் அவள் அதிக ஆடம்பரத்தைக் காட்டினாள். அதற்காகவே பல லட்சங்களை மாதாமாதம் செலவு செய்தாள். மிக விலையுயர்ந்த மெல்லிய ஆடைகளின் மீதான அவளது விருப்பம் அதீதமானது. அவளை ஒரு அழகு ராணியாக்கிப் பார்க்க வேண்டும் என்பது அவளது தாயின் வெகுநாளைய ஆசை அதனால் மகளை விதவிதமாக அலங்கரித்துப் பார்ப்பதில் அவளுக்கும் கொள்ளைப் பிரியம். அழகு ராணிக் கனவினை தனது கணவனோடு கலந்தாலோசித்த பின்னரே முடிவெடுக்க வேண்டும் என்று கருதிக் கொண்டாள். ஆக மொத்தத்தில் நதீஷாவின் வாழ்க்கை எந்தப் பிரச்சினைகளையும் எதிர் கொள்ளாமல் மகிழச்சியை மட்டுமே அனுபவித்துக் கழிந்தது.

யாரோடும் அதிகம் பேசாத அவளது குணத்தின் பயனாய் யாரும் அவளை அவ்வளவு எளிதில் நெருங்க மாட்டார்கள். அத்துடன் ரோஜர் என்ற நாமம் எல்லோரையும் பெரிய இடம் என்ற மனோநிலையில் கட்டிப் போட்டிருந்ததால் பத்தடி தள்ளியே லொள்ளு விடும் பசங்க எல்லோரும் ஜொல்லு விட்டபடி நின்றார்கள். உயர் தரப் பரீட்சை முடிந்ததும் நதீஷாவின் உலகம் வீடே என்றானது. அவள் படிப்பில் அவ்வளவு பெரிதாக கெட்டிக்காரி கிடையாது, தன்னை அலங்கரித்துக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை அவளால் படிப்பதில் காட்ட முடியவில்லை, தேசியமட்டத்தில் எதுவும் சாதிக்கப் போவதில்லை அத்துடன் பல்கலைக்கழகத்திற்கும் அவள் தகுதிபெறப் போவதுமில்லை, ஏதோ பரீட்சையில் சித்தி அத்தோடு முடிந்தது. வாழ்க்கை வசதிகள் மிகத்தாராளமாக இருக்கும் போது கல்வியும் தராதரமும் எதற்கவளுக்கு? அதனால் எதையுமே அவள் அலட்டிக் கொள்ளவில்லை. 

நதீஷா மிகுந்த கொண்டாட்டத்தில் இருந்தாள். அவளின் ஹீரோ நாட்டுக்கு வருகின்றார். வெளிநாடுகளைச் சுற்றிப் பார்க்க வேண்டும்.ஒரு முறையாவது மலேசியாவுக்குச் செல்ல வேண்டும். மஹாதீர் முஹம்மதுவின் சாதனைகளைப் பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் உலகின் மிக உயர்ந்த போபுரம் என்ற பெயரைப் பெற்றிருந்த மலேசியாவின் இரட்டைக் கோபுரங்களைப் பார்க்க வேண்டும். இரண்டு கோபுரங்களுக்கும் நடுவில் போடப்பட்டுள்ள பாலத்தில் நடைபயில வேண்டும் அதில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதெல்லாம் அவளின் மனதில் எப்போதும் அலைபாயும் எண்ணம். தந்தையைக் கண்டதும் நலம் விசாரித்த பின்னர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பார் யோசிக்காமல் மலேசியாவுக்குப் போக வேண்டும் என்று சொல்லிட வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தாள். தாயுடன் விமாநிலையம் நோக்கிப் புறப்பட்டாள்.

ரோஜர் வந்திறங்கினான். கோட்டு சூட்டுடன் பார்ப்தற்கு அப்படியொரு கம்பீரம். அவனது மனைவியாலேயே அவனை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடிக்கவில்லையென்றால் கேட்கவா வேண்டும். நீண்ட நாள் பிரிவின் பின்னரான சந்திப்பின் அழுத்தத்தைத் தயங்காமல் மனைவி வெளிப்படுத்தியதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவேயில்லை. நதீஷாவை ஆச்சரியமாகப பார்த்தான். இத்தனை அழகு மகளா என்று வாரி அனைத்துக் கொண்டான். முத்தமிட்டுக் கொண்டே கேட்டான் உனக்கு என்ன வேண்டும் என்று. அவளும் தயங்காமல் மலேசியா மேட்டரை பட்டென்று உடைத்துவிட்டாள். அவனும் டபள் ஓகே சொன்னான் அவளுக்கோ அளவில்லாத குஷி.

ஐந்தாறு நாட்களாயிற்று நதீஷா தன்னைப் படுகவர்ச்சியாக அலங்கரித்துக் கொண்டாள். ஆடையின் மெல்லிய தன்மையினை அளவீடு செய்ய ஒரேயொரு உதாரணம், அப்படியே பார்த்தால் மார்புக்கச்சையின் நிறம் என்ன என்று இலகுவாகச் சொல்லிவிடலாம். வெளியில் எங்கோ சென்று திரும்பிய ரோஜர் அம்மா எங்கே என்று கேட்டான் அவள் வெளியே போயிருப்பதாகச் சொன்னாள். கொஞ்சமும் தாமதிக்காமல் மகளைக் கட்டியனைத்து முத்தமிட்டான். அப்படியே அவளை அள்ளிக் கொண்டு போய்க் கட்டிலில் கிடத்தினான். அவனுக்குள் இருந்த காமப்பிசாசு விழித்துக் கொண்டு வெறியாட்டம் ஆடியது. அவளுக்கு எதையும் உணர்ந்து கொள்ளும் அவகாசம் இருக்கவில்லை. வெறித்தனமாக அவன் என்னவெல்லாமோ செய்தான் அவள் அசைவற்றுக் கிடந்தாள். அவனது மனைவி வீட்டுக்கு வந்தாள். அதிர்ச்சியோடு அப்படியே நின்றாள். அவன் பிணம் தின்று கொண்டிருந்தான்.

#       #       #     #

மிருகம் -  04

விக்ரமபால ஒரு விவசாயி, நாற்பத்தெட்டு வயதாகிறது அவனுக்கு. ஐந்து பிள்ளைகளின் தந்தை. சொந்தமாக மூன்று ஏக்கர் வயல் நிலம் இருக்கிறது. அதில்தான் அவனது பெரும்பகுதி நேரம் கழியும். அவனே வயலை உழுது வரம்பு கட்டி, போர்ப்பலகை அடித்து நிலத்தைச் சமப்படுத்தி அலக்கொத்தி தேவைக்கதிகமான நீரை வெளியேற்றி, கைப்பலகை இழுத்து சின்னஞ்சிறிய பள்ளங்களையும் நீர் தேங்காத முறையில் நேர்த்தியாக்கி, விட்டுத்தான் விதை நெல்லை முளை கட்டப் போடுவான்.

கைப்பலகை இழுப்பதில் விக்ரமபால மிகத் தேர்ச்சி பெற்றவன். முளைவிட்டிருக்கும் விதை நெல்லைத் தூவுவதற்கு முன்னர் கைப்பலகை இழுப்பது மிகவும் முக்கியமானது. அல்லாதபட்சத்தில் அங்கிருக்கும் சிறுசிறு குழிகளில் நீர் தேங்கி நிற்கும் நிலையில் முளைநெல்லைத் தூவினால் ஏழு நாட்களில் அந்த முளை நெல்லு அழுகிப் போகும். அதனால் விதைப்பு தோல்விதான். 

கொத்திய அலைகளுக்குள் கைப்பலகையை லாவகமாகப் போட்டு இழுப்பதில் அவன் மிகத் தேர்ச்சி பெற்றிருந்தமையால் மிக வேகமாக அந்தப் பணியை நிறைவு செய்துவிடுவான். அவனது வயலில் மட்டுமல்ல நல்ல சம்பளத்தில் பலருக்கும் அவன் கைப்பலகை இழுத்துக் கொடுப்பான். விக்ரமபால கைப்பலகை இழுத்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பது பலரது நம்பிக்கை. 

விதை நெல்லுத் தூவி ஏழாவது நாள் தொடக்கம் பன்னிரெண்டாவது நாளைக்குள் த்ரீபிளஸ் டீபீஏ எண்ணெய் அடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நெல்லுடன் சேர்ந்து கொஜரா, மற்றும் கோரை வகைப் புற்களும் முளைத்துவிடும். எண்ணெய் அடித்த மூன்றாவது நாள் இரண்டு அங்குலத்திற்கு நீர் கட்ட வேண்டும். அந்நீர் தேங்கி நிற்கும் மூன்று நாட்களில் புல்லு இனங்களெல்லாம் அழுகி நெல்லு மட்டும் தலைநிமிர்ந்து கம்பீரமாக நிற்கும். அந்தக் காட்சியைக் கண்குளிக் கண்ட பின்னர்தான் அவனுக்கு நிம்மதி. அதிலிருந்து இருபத்தியொரு நட்களும் மிக முக்கியமானவை, பிறந்த குழந்தையைப் பராமரிப்பது போலத்தான் தேவையானளவு தண்ணீர் விட்டுப் பராமரிக்க வேண்டும். 

அந்த இருபத்தியொரு நாட்களின் பின்னரும் கூடுதல் அவதானம் தேவை, காரணம் பல்வேறு விதமாக புழு வகைகள் தோற்றம் பெறுவதற்கு இடமிருக்கிறது. அப்படிப் புழுக்கள் தோன்றினால் வேளான்மை மிகவும் சோர்வாக இருக்கும். அவை வேளான்மையின் பலத்தை இழக்கச் செய்துவிடுவதால் அப்படியாகும். அதைக்கண்டால் உடனே புழுக்களைக் கொல்ல பூச்சுமருந்தும் கிருமி நாசினிகளும் பயன்படுத்த வேண்டும். பின்னர் வேளான்மையின் வளர்ச்சியைப் பொறுத்து நீரும் பசளையும் இட வேண்டும்.  

இடையே குருத்து நோய், தண்டரிப்பு நோய் போன்றவை வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும். அத்தோடு அறக்கொட்டியான்கள் தோன்றி வேளான்மையின் பச்சயத்தை உறுஞ்சிக் குடித்துவிடவும் கூடும். அது மட்டுமா நெல் விளையும் காலத்தில் ஈப்பூச்சிகள் தோன்றி நெல்லில் இருக்கும் பாலை உறுஞ்சிக் குடித்துவிட்டால் நெல்லு பதராகிப் போகும்.  விளைந்த காலத்திலும் அறக்கொட்டியான்களின் தொல்லை இருக்கவே செய்யும். அவையனைத்திலும் கவனமாக இருந்தால் மட்டுமே நல்லதொரு அறுவடையைக் காணமுடியும். கண்ணும் கருத்துமாக இருந்தால் மட்டுமே வெல்லமுடியும், அவன் தேர்ந்த விவசாயி என்பதால் அவன்தான் ஊரில் ஒரு விவசாயப் போதனா  ஆசிரியர் போன்று செயற்பட்டான். எல்லோரும் அவனிடமே சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளத் தேடிவருவர். அவ்வளவு அனுபவம். 

வயலே கதியென்று கிடக்கும் அவன் எப்போதாவதுதான் வீட்டுக்கே செல்வான். அவனுக்குத் தேவையான அனைத்தையும் அவனது மனைவியே சுமந்து கொண்டு வயலுக்கு வந்துவிடுவாள். பிள்ளைகள் மூன்றுபேர் திருமணம் முடித்து அவரவர் வாழ்க்கiயில் செட்டிலாகி விட்டார்கள் நான்காமவன் சாதாரணதரம் படித்துக் கொண்டிருந்தான், கடைக்குட்டி செல்லப் பிள்ளை பதின்மூன்று வயது. அவள் ஏழாம் தரத்தில் இரண்டாவது முறையாகவும் படித்துக் கொண்டிருந்தாள். அவ்வளவு கெட்டித்தனம்.

 சிறுபோகச் செய்கையில் விக்ரம ஈடுபாட்டுடன் உழைத்துக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட அறுவடைக்காலம் நெருங்கிவிட்டது. அமோக விளைச்சல் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்த்தான். இத்தனை வருட காலத்தில் அவன்கடையில் அரிசி வாங்கியதாக ஞாபகமில்லை. அவனது பாட்டனின் காலத்திலிருந்தே அவன் வயலில்தான் கிடக்கிறான். ஒருநாள் கூட சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடந்தது கிடையாது ஆயினும் அவன் ஏழை. ஒரேயொரு துவிச்சக்கரவண்டிக்குச் சொந்தக்காரன். அது தவிர சின்னதாய் ஒரு களிமன் வீடு, அது அவனது தந்தை கட்டியது. அவனால் முடிந்தளவு பிள்ளைகளைப்படிக்க வைத்தான். அதுவே அவன் அவர்களுக்குச் செய்த பேருபகாரமாக இருந்தது. 

மனைவி வயலுக்குச் சாப்பாடு கொண்டு வந்திருந்தாள். அவசர வேலையாக வெளியே சென்றுவர வேண்டியிருந்துது. உடனே வெளிக்கிட்டவன் வேலையை முடித்துவிட்டு எதற்காகவோ வீட்டுக்குச் சென்றான். பழைய உரப் பைகளையும் கயிற்று முடிச்சுக்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பியபோதுதான் தன் செல்லக்கடைக்குட்டி மகளைக் கண்டான். அவள் குளித்துவிட்டு உள்ளே பாட்டுப்பாடியவண்ணம் உடைமாற்றிக் கொண்டிருந்தாள். அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ தெரியாது ஒரேயடியாக வீட்டினுள் புகுந்தான் அவளைக் கட்டியனைத்தான் வெறிகொண்ட மிருகமாய் மாறினான். அவளின் கதறல் எல்லாப் பக்கமும் எதிரொலித்தது, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களெல்லாம் ஓடிவருகையில் அவன் பிணம் தின்று கொண்டிருந்தான்.

சூ சூ சூ சூ சூ


சிறைச்சாலை

தனபால, நிஸாந்த ரோஜர், விக்ரம எல்லோரும் அங்கு பினை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்துக் கிடந்தார்கள்.  கொள்ளைக்காரனுக்குக் கூட மதிப்பிருந்தது. ஆனால் அங்கு இந்த ஈனப் பிறவிகளுக்கு துளியும் மதிப்பிருக்கவில்லை, மொத்தம் முன்னூறு கைதிகளில் இருபத்தைந்து பேர் தனது மகளைக் காம வேட்டையாடிய மிருகங்கள். திருடனையும்,கொள்ளைக்காரனையும் அங்கீகரித்த சமூகம் பிணந்தின்னிகளை அசிங்கமாகவே பார்த்திற்று.
'சவுதியில போல இவனுகள நடு ரோட்டில வெச்சி கழுத்த வெட்டனும்' சொன்னது கஞ்சா வியாபாரி, 
'ஈரான்ல போல பப்ளிக்ல தூக்குல போடனும்' சொன்னது தூள் பாவித்து அகப்பட்டுக்கொண்டவன்
'எப்பிடிடா மனசு வந்திச்சி உனக்கெல்லாம் சொந்தமகள... ச்சீ வெக்கமாயில்ல'  சொன்னவன் குடிகாரன்
'இவெனல்லாம் திருந்தவே மாட்டானுகள், அவன டொய்லெட் கிட்டத்தான் படுக்கப் போடனும்' சொன்னது திருடன்
அப்போது ஒருவன் ஒரு செய்தி கொண்டு வந்தான்
'மச்சான் செய்தி தெரியுமா?'
'சொன்னாத்தானெ தெரியும்'
'பொண்டாட்டிய வெளிநாட்டுக்கு அனுப்பிட்டு மகளுக்கு வேலபாத்த நிசாந்தவுக்கு புள்ள கிடச்சிரிக்கிதாம். அவன்ட மகளுக்குப் பிறந்த புள்ள, அவன் மூலமாப் பிறந்ததுதானாம் டீஎன்ஏ ரிப்போட் மூலமா புரூப் ஆகிட்டு கடைசி வரையும் நீதிபதி பின குடுக்கமாட்டாரு போலத்தான் தெரியிது' 
'இவனுகளுக்குப் பின குடுத்து என்னதான் செய்ய'
ஏங்கிப் போய் இருந்த நிசாந்தவைப் பார்த்து ஒருவன் சொன்னான்
'நீ கவலப்படாத மச்சான், மிஞ்சிப் போனா பத்து வருசம் கிடைக்கும் அதுக்கிடையில எத்தனையோ பொது மன்னிப்புக்காலம் வரும் அப்பிடியும் இப்பிடியுமா ஒரு அஞ்சி இல்லாட்டி ஆறு வருசம்தான் உள்ள இரிக்க வேண்டி வரும் டோன்ட் வொர்ரி பீ ஹேப்பி...' 
அவன் புன்னகைத்துக் கொண்டான்
காலம் நம் நாட்டுச் சட்டத்தைப் பார்த்து எக்காளமிட்டுச் சிரித்தது.

-2011-

No comments:

Post a Comment