Thursday, April 17, 2014

அ.மார்க்ஸ் பற்றிய எனது புரிதலும். ஜெயமோகனுக்கான குறிப்பும்.


அ.மார்க்ஸ் பற்றிய எனது புரிதலும். ஜெயமோகனுக்கான  குறிப்பும்.

1998 ஆம் ஆண்டு எனது பதினைந்தாவது வயதில் அ.மார்க்ஸ் அவர்களின் எழுத்துக்கள் அறிமுகமாகின. அவரை அறிமுகப் படுத்தியவர் எனது தமிழ்ப்பாட ஆசான் மன்சூர் அவர்கள். அதன் பின்னர் சில வருடங்களில் இந்துத்துவம் ஒரு பண்முக ஆய்வு எனும் நூலை மாணவர் மன்றத்தில் விரிவாக ஆய்வு செய்து பேசிய ஞாபகம் இன்னும் இருக்கின்றது. பேராசிரியர் மீது மிகுந்த மரியாதை எப்போதுமே இருந்து வந்தது. அதே காலப்பிரிவில் ஜெயமோகனையும் படித்து வந்தேன். ஜேயமோகனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் இலக்கியவாதியும்  எனது ஆங்கிலப்பாட ஆசானுமான நாவல் நகர் ப.ஆப்டீன். ஆனால் இயல்பாகவே என்னுள் மார்க்ஸ் மீது ஏற்பட்ட ஈர்ப்பு ஜெயமோகன் மீது ஏற்படவில்லை. அந்த நேசத்தை யாரும் விதைக்கவில்லை அது தானாக ஆனது. அதுதானே ஒரு எழுத்தாளனின் எழுத்துக்குக் கிடைக்கும் வெற்றி. அதற்காக ஜெயமோகன் மீது பிடிப்பில்லை என்று சொல்லவில்லை. அதாவது மார்க்ஸை நேசித்தேன் ஜெயமோகனைப் பிடித்திருந்தது.

2010ம் ஆண்டு கீற்று இணைய தளத்தின் ஆறாம் ஆண்டு நிகழ்வு 'இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறைகள்' என்ற தலைப்பில் சென்னை தேவனேயப் பாவனர் அரங்கில் இடம்பெற்ற போது இலங்கை தொடர்பான விடயங்களைச் சமர்ப்பிக்;கும் ஒரு பேச்சாளனாக நான் கலந்து கொண்டேன். அங்கு  விடுதலைப்புலிகளுக்கும் எதிராகப் பேசினேன் ஆயினும் அந்தப் பேச்சோடு சபை கொந்தளித்து பேச்சை இடையிலேயே நிறுத்த வேண்டி வந்தது. ஏதிர்ப்பும் ஆதரவும் ஒருங்கே கிளம்பிய போது மீண்டும் பேச அனுமதிக்கப்பட்டேன். ஆயினும் மீண்டும் எதிர்ப்பு வலுத்தது இடையிலேயே பேச்சை நிறுத்த வேண்டி வந்தது. ஆயினும் அந்நிகழ்வில் எல்லோரையும்விட ஒதுக்கப்பட்ட நேரத்தில் அதிகம் பேசியது நான்தான் என்ற அடிப்படையில் கீற்று ஆசிரியருக்கும் ஏற்பாட்டுக்குழுவுக்கும் நன்றி  தெரிவித்தேன். 

மறுநாள் ஊடகங்களில் இது பேசு பொருளானது. இலங்கையிலிருந்து வந்த தோழர் கீற்றுவால் அவமானப்படுத்தப்பட்டார் என்று கீற்றுவுக்கு எதிரான பிரச்சாரம் வலுப்பெற்றபோது அது அப்படியில்லை. கீற்று நியாயமாகத்தான் நடந்து கொண்டது என்பதை நானே வலியுறுத்தினேன். அப்போதுதான் பேராசிரியர் மார்க்ஸ் பற்றி இன்னொருபக்கக் கருத்தியல் இருப்தை நான் கண்டு கொண்டேன். 
கீற்றுவின் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான அந்த நிகழ்வைக் குழப்புவதில் பேராசியருக்கும் அவர் சார்பானவர்களுக்கும் அதிக பங்கு இருந்ததாகத் தகல் கிடைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இதற்கிடையில் சோபாஷக்தியும் இதற்குள் இணைக்கப்பட்டபோது இன்னும் வருத்தமாக இருந்தது. சில  விடயங்களை இன்னும் கூட என்னால் புரிந்துகொள்ள முடியாமல் திணறத்தான் முடிந்தது. தொடர்ச்சியாக இந்நிகழ்வு தொடர்பில் வந்த இருபக்க எழுத்துக்களையும் அவதானித்தேன். கீற்றுவில் அது தொடர்பில் நீண்ட ஆக்கமென்றையும் தோழர் ரமேஸ் எழுதியிருந்தார். 

மீண்டும் 2011ல் இந்தியாவுக்குச் சென்ற போது நேராக தோழர் ரமேஸ் வீட்டுக்குத்தான் நான் போனேன். அது ஒரு ஆவணப்படத்துக்காக தமழ் தேசியவாதிகளின் கருத்துக்களைப் பதிவு செய்வதற்கான முயற்சியாக  இருந்தது. தோழர் ரமேஸ் மற்றும் ப்ரியாத்தம்பி ஆகியோரின் உபசாரமும் ஒத்துழைப்பும் எப்போதும் என்னால் மறக்கப்பட முடியாதவை. 

இந்த நிகழ்வுக்குப் பின்னரான பதிவுகள் அனைத்துமே பேராசிரியர் மார்க்ஸ் மீது எதிர்மறையான உணர்வுகளையே வலுப்படுத்தின. அவர் இலங்கைக்கு வந்த போது கூட அவரைச் சந்திக்கும் ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் பின்னரும் பின்னரும் எனக்குள் இடித்துக் கொண்டிருந்த விடயம் பேராசிரியரைச் சந்தித்துவிட வேண்டும் என்பதுதான்.  அவரிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றும் மனந்திறந்து சிலவிடயங்களைக் கலந்துரையாட வேண்டும் என்றும் எனக்குள் ஓர் உள்ளுணர்வு இப்போதும் இருக்கிறது. அதன் பின்னர்தான் நடு நிலையாக என்னால் சில விடயங்களைப் பேச முடியும் என்று கருதுகின்றேன். அது போலவே ஷோபா சக்தியிடமும் சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது. அதையும் அவகாசம் வரும் போது செய்வேன். கீற்றுவில் வெளிவந்த இது தொடர்பான பதிவுகள் அப்பிரச்சினையின் வீரியத்தைப் புரிந்து கொள்ள உதவும். ஆர்வமுள்ளவர்கள் அவற்றை அங்கு படிக்கலாம்.

இதன் பின்னர் பேராசிரியர் மீதுள்ள நேசம் குறைந்தது என்னவோ உண்மைதான் ஆனால் அவரின் எழுத்துக்கள் மீதுள்ள ஈர்ப்பு இன்னும் அப்படியேதான் இருக்கிறது. 

இந்தியத் தேர்தல் களம் சூடுபிடிக்கும் போது மோடி அலை வெகுவாக சோடனை செய்யப்படும் வேளை பேராசிரியரின் பதிவுகளை உன்னிப்பாக அவதானிக்கிறேன். அதில் ஜெயமோகன் மார்க்ஸ் குறித்து எழுதியதாக ஒரு பதிவைப் போட்டிருந்தார். அந்தப் பதிவையும் அதன் பின்னுள்ள பின்னூட்டங்களையும் முழுமையாக வாசித்துவிட்டே இந்தக் குறிப்பை எழுதுகின்றேன்.

ஜெயமேகன் குறிப்பில்
01. // ஓரு கூட்டத்தில் ஜோவைப் பார்த்ததும் அவருக்கு 'அந்த ஆசாமியின்' முகத்தில் கூட விழிக்கவேண்டும் என்று தோன்றவில்லையாம். தமிழ் தலைநிமிர்ந்து நோக்கவேண்டிய படைப்புகளை அளித்த ஒரு படைப்பாளியைப்பற்றி இப்படிச் சொல்ல தனக்கு என்ன குறைந்தபட்சத் தகுதி என்று அடிப்படை நேர்மையோ அழகுணர்வோ இல்லாத இந்த ஆசாமிக்கு தோன்றாதது நியாயம். வாசிக்கும் இலக்கிய வாசகர் நான்குபேருக்காவது தோன்றவேண்டாமா? இந்த ஆசாமியும் இவர்களுக்கு கீழே திரளும் வெற்றுக்கும்பலும் யாரென்றே தெரியாமலாகும் காலத்திலும் ஜோவின் புனைவுகள் வாழுமென அறிந்த பத்துபேராவது நம்மிடம் வேண்டாமா?//

மார்க்ஸ் அவர்கள் ஜோவைப் பற்றிய குறிப்பைப் போட்டவுடன் அதற்கு நான் இட்ட பின்னூட்டம் இது. ஜோ டீ குரூஸ் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. அவரது நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்த போது அகமகிழந்தேன். அவசியம் அந்த நாவலை வாங்கிப் படிக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தேன். ஆனால் இப்போது கொற்கை விருது வென்றதில் நிச்சயம் நியாயமான வழிமுறை இருக்காது என்றே கருதுகின்றேன். கொற்கை படிக்கும் ஆவலும் விட்டுப்போனது. அவருடைய மோடி குருஸ் பக்கம் தெரியாமல் போய்விட்டதே....

நல்லவேளை தப்பித்தேன் ஒரு இனவாதியின் எழுத்தைப் படிப்பதிலிருந்து.
ஜோ எவ்வளவு பெரிய உச்சத்திலும் இருக்கட்டும் அதல்ல மேட்டர். இங்கு மோடி என்ற அசிங்கத்துக்கு ஆதரவாக எப்படி ஒரு நியாயமான எழுத்தாளன் குரல் கொடுக்க முடியும் என்பது ஒரு வாசகனாக எனக்குள் எழுந்த கேள்வி. ஐயா ஜெயமோகன் நீங்கள் கேட்டபடி 

//வாசிக்கும் இலக்கிய வாசகர் நான்குபேருக்காவது தோன்ற வேண்டாமா?//

 என்பதற்கு எனக்குத் தோன்றியதை சொல்கிறேன். அத்துடன் நீங்கள் மார்க்ஸை நோக்கிப் பிரயோகிக்கும் சொற்கள் உங்களை நோக்கி அதைவிடவும் மோசமான விதத்தில் திரும்பும். அதுவே பின்னூங்களில் நிகழ்ந்திருக்கிறது. இந்த இடத்தில் ஜோவுக்கு ஆதரவாக களமிறங்கிய உங்கள் நேர்மைக்கு என்னவாயிற்று? என்று ஒரு வாசகனாக நான் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் இருக்கிறது உங்களிடம். மார்க்சுக்கு எதிராக உங்களால் கடும் வார்த்தைகளைப் பிரயோகிக்க முடியுமானால் அதற்கு உரிமை இருக்கிறதென்றால் அதில் பிழை இல்லையென்றால் ஜோவுக்கு எதிரான மார்சின் நிலைப்பாட்டிலும் அதையே பொருத்திப் பார்த்தால் முரண்படாத வித்தியாசமான சமன்பாடு கிடைக்கிறதே.

அடுத்தது நீங்கள் சொல்கின்றீர்கள் 
//இந்த ஆசாமியும் இவர்களுக்கு கீழே திரளும் வெற்றுக்கும்பலும்//

 இப்படிச் சொல்லும் போது உங்கள் மனசாட்சி உங்களுக்கு ஒன்றுமே சொல்லவில்லையா? மனசாட்சி நியாயமானது. அது எதாவது சொல்லியிருக்கும், அதை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். அப்படியொன்றுமே அது உங்களுக்குச் சொல்லவில்லையானால் உங்களுடன் இதையெல்லாம் பேசுவது சுத்த வேஸ்ட்.

02. // இந்து அடிப்படைவாதத்தை விட பத்துமடங்கு பிற்பட்டதும்இ இஸ்லாமிய சமூகத்தையே கண்கூடாக மிரட்டிக்கட்டுப்படுத்தி அழித்துக்கொண்டிருப்பதுமான கொலைகார இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் குரலாகச் செயல்படும் அ.மார்க்ஸ் போன்றவர்களிடம் அவர்கள் சில கேள்விகள் கேட்டிருக்கவேண்டாமா? // 

03. //உலகமெங்கும் இஸ்லாமியர் உட்பட அப்பாவிகளைக் கொன்றொழிக்கும் கீழ்த்தர பயங்கரவாத அமைப்புகளின் கைக்கூலியா  இங்கே மதச்சார்பின்மை பேசுவது? //

இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்லவும் உங்களிடம் பதில் கேள்வி கேட்கவும் மீண்டும் உங்கள் எழுத்துக்களையும் போக்குகளையும் அத்துடன் மார்க்ஸின் எழுத்துக்களையும் போக்குகளையும் நான் நுண்ணிய அவதானத்துடன் திரும்பவும் படிக்க வேண்டும். அதற்குக் காலம் போகும் ஆனால் ஒரு விடயத்தைக் கேட்க விரும்புகின்றேன். 

01. இஸ்லாமிய அடிப்படைவாதம் 
02. இஸ்லாமிய தீவிரவாதம் 
03. இஸ்லாமியப் பயங்கரவாதம் 
குறித்து உங்களுக்கு அறவே தெளிவில்லை அந்தச் சொற்கள் தெரியும் என்பதற்காக எதனெதனோடோவெல்லாம் இணைத்துப் புணைந்துள்ள உங்கள் எழுத்து உங்களை ஒரு ஜோக்கராகவே பார்க்கவைக்கிறது. முடிந்தால் இந்தச் சொல்லாடல்களுக்கு புத்திசாலியாக இல்லாவிட்டாலும் ஒரு படைப்பாளியாக நியாயமான உங்கள் பார்வையை முன்வையுங்கள். ஏனெனில் இஸ்லாத்தை இழுத்திருப்பதால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒரு முஸ்லிம் கேள்வி கேட்கக் கடப்பாடுடையவன் என்ற வகையில்தான் உங்களிடம் கேட்கின்றேன். உங்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியும்தானே.  நீங்கள் அது குறித்த பார்வையை முன்வைத்த பின்னரே மார்க்ஸ் குறித்து நீங்கள் இங்கு சம்பந்தப்படுத்தியுள்ள விடயங்கள் குறித்து காரசாரமான எழுத்துக்களை நான் முன்வைக்க முடியும். ஏனெனில் இங்கு மார்க்சுக்கு எதிராக நீங்கள் பிரயோகித்திருக்கும் சொல்லாடல்களுக்கு அவர் பதில் சொல்லவே தேவையில்லை அதை நானே பார்த்துக் கொள்கின்றேன் உங்கள் விளக்கத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

04. கூஜா தூக்குவதாக யாரும் குறிப்பிடும்படியான எந்த வசவுகளுக்கும் இடமில்லையாதலால் நான் தெளிவாக எனது பதிவை இங்கு முன் வைத்திருக்கிறேன். அதற்காகவே இதுவரை நான் நேரில் சந்தித்திராத இதுவரை நான் ஒரு வார்த்தையேனும் பேசியிராத அ.மர்க்ஸ் பற்றி மேலே குறிப்பிட்டேன்.

Friday, April 11, 2014

வலம்புரிச் சங்கும் நானும்

வலம்புரிச் சங்கும் நானும்

வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கு என்று நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன். அது பற்றிய நிறையக் கதைகளையும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆயினும் அவை நமக்கு  கண்ணால் காணக் கிடைக்காத ஒரு வகை அரியவகைப் பொருளாகவே கருதியிருந்தேன். அத்துடன் வலம்புரி பற்றி இணையத்தில் தேடியும் பார்த்தேன் ஆனால் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. அதன் பின்னர் வலம்புரிகளுடன் எனக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.  அது பற்றிய பகிர்தல்தான் இது. 

இந்தப் பகிர்வுக்குப் பின்னர் வலம்புரி  எனும் வட்த்திற்குள்ளால் விரிக்கப்பட்டுள்ள மாய வலைக்குள் யாரும் சிக்கிக் கொள்ளாதிருக்கவும் அது பற்றிய தெளிவுடன் இந்த விடயத்தை அணுகவும் வழி பிறக்கலாம். அத்துடன் யாரிடமாவது வலம்புரி இருந்தால் அதை நல்ல விலைக்கு விற்றுக் கொள்வதற்கும் முடியுமாக இருக்கலாம். ஏனெனில் தரமான வலம்புரி வியாபாரம் பெரும்பாலும் லட்சங்களில் புரள்வதாகும். அத்துடன் கோடிகளில் புரளும் இன்னொருவித வியாபாரமும் உண்டு, ற்ரைட்டென் எனப்படும் வகையாறா பற்றியது. அதையும் பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

இடம்புரி வலம்புரி  என்பவற்றில் அனுபவமில்லாதபடியால் நிறையக் குளறுபடிகள் சர்வசாதாரணமாக நடந்து முடியும். உதாரணத்திற்கு மிகவும் நீண்ட வரலாறு கொண்ட வலம்புரிக் கவிதா வட்டம் (வகவம்) அமைப்பு அதன் இலட்சிணையில் ஒரு சங்கைப் போட்டிருக்கிறார்கள். ஆனால் அது வலம்புரியல்ல இடம்புரி. ஒரு கவியரங்கில் அதைச் சுட்டிக் காட்டிய போது இத்தனை வருடமாக யாருக்கும் அது தெரியவில்லையே என்று பதில் வந்தது. பார்ப்போம் இந்தப் பத்திக்குப் பின்னராவது வலம்புரிக் கவிதாவட்டத்தின் இலட்சிணையில் இடம்புரியைத் துரத்திவிட்டு வலம்புரியொன்று வந்தமர்கின்றதா என்று. 

விஷ்னு, லக்ஷ்மி, கௌரி, என்பன வலம்புரியில் பிரபலமாகப் பேசப்படும் சொற்பிரயோகங்கள். எல்லாம் அப்படியே இருக்க வலம்புரி என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது?

ஊதப்படும் பக்கத்தை வாயில் வைத்தால் இடது கையினை உள்ளே போடக் கூடிய மாதிரி இருக்க வேண்டும். அதுதான் வலம்புரி. வலது கை உள்ளே நுளைந்தால் அது இடம்புரி. இடம்புரி மிகவும் பரவலாகக் கிடைக்கும். அரிதாகக் கிடைக்கும் வகையறாதான் வலம்புரி. இந்து சமயக் கோட்பாட்டின் படி அபிவிருத்தியும் வளமும் நிறைந்த வாழ்க்கையினை வேண்டி ஆயிரம் இடம்புரிச் சங்குகளைக் கொண்டு ஒரு பூஜை செய்வர். அவ்வாறு ஆயிரம் இடம்புரிச் சங்குகளுக்குச் சமமானது ஒற்றை வலம்புரி. எனவேதான் வலம்புரிக்கு ஒரு மார்க்கட் இருக்கிறது. 

விஷ்னு என்பது வலம்புரியின் ஆண் சங்கு, லக்ஷ்மி என்பது  வலம்புரியின் பெண் சங்கு. கௌரி என்பது ஐஸ் கோன் மாதிரி கொஞ்சம் நீண்டு இருக்கும் அத்தோடு சாமி சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கும் வலம்புரி பயன்படுத்தப்படும். அதனாலும் இந்தச் சங்கு சனாதன தர்மத்தின் பிரகாரம் சமய வழக்கத்தில் விஷேடம் பெறுகின்றது. 

சந்தைப் பெறுமானத்தைப் பார்த்தால் வலம்புரியின் தரத்தை வைத்து விலை மாறுபடும். லக்ஷ்மி  வலம்புரி சந்தையில் அவ்வளவாக எடுபடாது ஒரு சங்கு தரத்தைப் பொறுத்து ஐயாயிரம் ரூபாய்வரைப் போகும். அதன் நிறை கவணத்திற் கொள்ளப்படமாட்டாது. விஷ்னு வலம்புரியில் பல வகையுண்டு அதுவும் தரத்தை வைத்து ஒரு கிராமுக்கு 3000 தொடக்கம் 6000 வரையும் போகும் வில சமயம் கிராம் 9000வரையும் கூடச் செல்லும் அதுபோல கௌரி கிராம் ஒன்று 8000 தொடக்கம் 15000 வரையும் விலை போகும். இங்கு முக்கியமான அம்சம் சங்கினுடைய தரம்தான் அதன் விலையைத் தீர்மானிக்கும்.

அடுத்த வகையறா ற்ரைட்டென், இது பார்ப்பதற்கே ரொம்ப அட்டகாசமாக இருக்கும். சகல அம்சங்களும் பொருந்தி அமைந்துவிட்டால் இருநூறு கோடி ரூபாய் வரை ஒன்றின் விலை எகிறும். இதுவும் கவர்ச்சியான நிறத்தில் ஐஸ்கோன் போல வால் பகுதி நீண்டிருக்கும். வாய்ப் பகுதி அகன்று இருக்கும். மில்லியனுக்கு ஒரு ற்ரைட்டென் தான்; கிடைக்கும், மிகவும் அரிது. கிடைத்துவிட்டால் அதிஸ்டம் தான். இதில் இடம்புரி வலம்புரி என்ற இரண்டுக்கும் சந்தை வாய்ப்பு தாராளமாக இருக்கிறது. 

தென்னாபிரிக்க கடற் பகுதியயில் விளையும் சங்குகள் பெரும்பாலும் வலம்புரியாகவே இருக்கும். அங்கு யாரும் இதைக் கணக்கிலெடுப்பதில்லை அதனால் அங்கிருந்து வலம்புரி இலங்கைக்கு கென்றைனர் கென்றைனராகக்  கடத்தப்பட்டு இங்கிருந்து இந்தியாவுக்கு விற்கப்படுகின்றது. இந்தியாவில் இதெற்கென்றிருக்கும் சந்தை வாய்ப்பை இந்த கடத்தல் வியாபாரிகள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆபிரிக்க சங்குகளை அனுபவமுள்ள ஒருவர் மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார். அதுபோலவே வலம்புரிங் சங்கு உற்பத்திகளும் நடைபெறாமலில்லை. பார்வைக்கு அசலைப் போலவே இருக்கும் போலிகள் மிகத் தாராளமாக உலவிக் கொண்டிருக்கின்ற. யாரும் அதில் எளிதாக மாட்டிக் கொள்வர். இந்தக் குறிப்பிட்ட சின்னஞ்சிறிய காலப்பகுதியில் இந்தச் சங்கு மேட்டரில் கலாநிதிப்பட்டம் முடித்தமாதிரி ஒரு அனுபவம் எனக்கு. யாராவது தன்னிடம் ஒரு வலம்புரி இருப்பதாகச் சொன்னால் உடனே செய்ய வேண்டியது அன்றைய பத்திரிகையினை வாங்கி அதன் மேல் வைத்து திகதி தெரியுமாப் போல ஒரு படம் எடுத்து அனுப்பச் சொல்ல வேண்டும். ஏனெனில் எங்கோ இருந்த  ஒரு படத்தை எடுத்து வைத்துக் கொண்டு பேரம் பேசும் கூட்டம் அதிகம். சில சமயங்களில் எறும்பை வைத்துக்கொண்டு யானை விலை சொல்வார்கள், அது கூடப் பறவாயில்லை சிலர் டைனோசர் விலை சொல்வார்கள் அப்போது அவர்கள் மீது வருமே ஒரு இரக்கம்

இந்தச் சங்கு மேட்டரை மையப்படுத்தி ஒரு சிறுகதை எனக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறது ஆனாலும் அது ஒரு பாஷையிலும் வெளிவருவதாக இல்லை. அதனால்தான் ஒரு ஓரக் குறிப்பாக இதை எழுதியிருக்கிறேன் எப்போதாது அக்கதை எனது சிறையிலிருந்து வெளிப்படக் கூடும் அப்போது பார்ப்போம். என்னைக் கடந்து சென்ற சில சங்குப்படங்கள் நீங்களும் அறிந்திருக்க வேண்டுமே என்பதற்காக இங்கே காட்சிப்படுத்தியிருக்கிறேன். அதை எடுத்துக் கொண்டு யாரும் விலை பேசக் கிளம்பிட வேண்டாம், பின்னர் கடுப்பாயிடும்.

அப்பப்பா எழுத்தாளனாக இருப்பதற்கு என்னனென்னவெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கு பாருங்கள். சொ...பா... முடியல.

Thursday, April 3, 2014

கண்ணைக் கொத்தப் பார்க்கும் காக்கா

கண்ணைக் கொத்தப் பார்க்கும் காக்கா

கொழும்பில்  பயணம் செய்வதில் உள்ள கொடுமையை உணர்ந்து கொள்ள வேண்டுமாயின் ஒரு பகல் பொழுதில் ஆமர் வீதியில் இருந்து வெள்ளவத்தைக்குச் சென்று திரும்பி வந்து பார்க்க வேண்டும், அதுவும் கொழுத்தும் வெயிலில் 155ஆம் இலக்க பஸ்ஸில், ஒரு முறை போய் வந்தால் போதும் வெறுப்பின் உச்சத்தில் யாரைக் கண்டாலும் கோபம் வரும். அப்படியொரு சூடு உடலின் ஒவ்வொரு அணுவிலும் குடியிருக்கும். பயணம் நரக நெருப்பின் ஒரு துளி என்று முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. நான் நினைத்திருந்தேன் கொழுத்தும் வெயிலில் தாங்கொனா உஷ்னத்தின் கொடுமைக்கு மத்தியில் பாலைவனத்தில் ஒட்டகத்தில் பிரயாணம் செய்வதன் கொடுமையை உணர்த்தவே நபிகளார் அப்படிச் சொல்லி இருப்பார்கள் என்று, ஆனால் அது அப்படியல்ல என்பதை பட்டப்பகலில் கொழும்பில் பயணம் செய்து பார்த்தபோது புரிந்தது. சில விடயங்கள் பற்றி எவ்வளவுதான் அறிந்து கொண்டாலும் பேவினாலும் வாசித்தாலும் அனுபவ பூர்வமாக உணர்ந்து கொள்ளும் போது அது விஷேடமான அம்சமாகின்றது. ஏசி வாகனத்தில் குளுகுளுப்பாகச் செல்லும் மனிதர்களுக்கு நெரிசலில் காத்து நிற்கும் கொடுமையையும் கொஞ்சம் பெற்றோல் விரயமாகும் துரதிஸ்டத்தையும் தவிர வேறு துன்பங்கள் கிடையாது. ஆனால் ஏனையவர்கள் பாவம்.

வாகன நெரிசலுக்குள் சிக்கிக் கொள்ளக் கூடாதென்று பல கிலோமீட்டர்களை கொழுத்தும் வெயிலில் நடந்தே கடந்துவிடும் தண்டனையை எப்போதேனும் யாரேனும் அனுபவித்ததுண்டா? அண்மையில் மாடறுக்கக் கூடாதென்று சில காவி உடுத்த எருமை மாடுகள் நடுவீதியை மறித்து நடாத்திய ஆர்ப்பாட்டத்தினால் ஏற்பட்ட வாகன நெரிசலில் அகப்பட்டு அவதிப்பட்டு இரண்டு மணித்தியாலங்களுக்கு மெல் காத்திருந்து இறுதியில் முடியாமல் போக கொள்ளுப்பிட்டிச் சந்தியிலிருந்து குனசிங்கபுர வரை நடந்து வந்தேன், கிட்டத்தட்ட மூன்றரைக் கிலோ மீட்டர்கள். இதற்கு முன்னர் ஒரு முறை பெருவெள்ளம் காரணமாக வாகனப் போக்குவரத்து தடைப்பட்டு கதுருவெலயிலிருந்து ஓட்டமாவடி வரை ஐந்தாறு கிலோமீட்டர்கள் நீங்கலாக கிட்டத்தட்ட அறுபது கிலோமீட்டர்கள் கவிஞர் எஸ்.நளீமுடன் நடந்து கடந்ததுதான் பெரிய அனுபவம். மிகவும் சுவாரஷ்யம் நிறைந்த அது தொடர்பான பதிவு தனியாக உள்ளது. இதனோடு ஒப்பிடும் போது அது பறவாயில்லை என்று தோன்றுகின்றது.  கோட்டை ரயில்வே ஸ்டேஸனுக்கு முன்னால் மொக்கனுகள் நடுவீதியில் நின்று கத்திக் கொண்டு நின்றார்கள், புத்தர் பெருமான் மட்டும் இவன்கள் போடும் ஆட்டத்தைக் கண்டிருந்தால் உடனடியாக அரச பதவியை ஏற்று அனைத்து மொட்டைகளையும் கழுவேற்றிக் கொன்றிருப்பார். 

அலுப்போடு நடைபோட்டு எங்காவது இருக்கும் மரத்தின் கீழ் கொஞ்ச நேரம் இளைப்பாறும் போதுதான் அந்தக் காக்காய்களைக் காணமுடியும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காக்கா என்று அன்போடு அழைப்பது அண்ணனைதான். ஆனால் கிழக்கிற்கு வெளியே காக்கா என்பது காகத்தை, அப்போதிருந்தே காக்கா என்று அழைப்பவர்களை நக்கலடித்து நக்கலடித்தே இப்போது அண்ணனை காக்கா என்று அழைப்பதற்கு யாரும் தயாரில்லாத நிலையைத் தோற்றுவித்துவிட்டார்கள். காக்கா இறந்து நாநாவாகிப் போனது. நாநா என்பது பெஷன் சொல்லாகவும் மாறிப் போய் தமிழ் சிங்கள மக்கள் கூட நாநா என்றே இப்போது அழைக்கப்பழகிவிட்டனர். ஆனால் காயல்பட்டணத்தில் இன்னும் காக்கா வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாநா என்பது அங்கு அந்நியம். இது அப்படியே இருக்கட்டும்.

கொழும்பிலுள்ள காகங்களுக்குப் பயமென்பதே கிடையாது. ஒரு பத்து வருடங்களுக்கு முந்திய போதைப் பொருள் வியாபாரிகள் போலவும் மூடை தூக்கும் நாட்டாமிகள் போலவும் தெனாவட்டுடன் நம்மை எதிர்கொள்ளப் பழகிவிட்டன. அது மட்டுமல்லாது அச்சுருத்தவும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. கிராமத்துக் காகங்களுக்குச் சும்மா கையை அசைத்தாலே போதும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று மறு திசையில் பறந்து மறையும். சில காகங்களை முறைத்துப் பார்த்ததாலே பறந்து போய்விடும். உள்ளூர் அரசியல்வாதிமாதிரி இந்தக் காகங்களும் பயத்தை உள்ளே மறைத்து வைத்துக் கொண்டு பந்தாக் காட்டப் படித்துக் கொண்டன போலும். 

நமது கண்ணுக்கு முன்னால் கைக்கெட்டிய தூரத்தில் அதுவும் ஆயாசமாக அமர்ந்திருக்கும். நாம் கண்ணை இமைக்க கொஞ்சம் மறந்தாலும் போதும் கொத்திக் கொண்டு போய்விடும் அளவுக்கு நம்மை முறைத்துப் பார்க்கும். நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் போல. அவர்களும் அப்படித்தான் மக்கள் கொஞ்சம் அசந்தால் போதும் ஜட்டியைக் கூட அவிழ்த்துச் சென்று பேரம் பேசி விற்றுவிடுவார்கள். அபிவிருத்திக்கென ஐம்பது சதம் கொடுத்தாலும் அதில் முப்பது சத்ததைக் களவெடுத்துக் கொண்டு மிகுதியில் ஏதாவது செய்து ஊரை ஏமாற்றிவிடுவார்கள். அவற்றை உணர்ந்து கொள்வதற்கு அவகாசமே இருக்காது. அப்படியொரு ராஜதந்திரக் களவும் கொள்ளையும். பொலிசாரின் கண்ணில் இவர்கள் விரலைவிட்டு ஆட்டுவது போலத்தான். 

எல்லா இடங்களிலும் சுவர்களை ஆக்கிரமித்திருக்கும் தேர்தல் காலப் போஸ்டர்கள் போலத்தான் கொழும்புக் காகங்கள். ஓரிடத்தையும் மிச்சம் வைக்காது எச்சம் போட்டுத் தமது இருப்பை நிறுவி வைத்திருப்பர்.  மக்கள்தான் அவதானமாக நடந்து கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் தலையில் மட்டுமல்ல தட்டிலும் எஞ்சுவது எச்சம் மட்டுமே! 

கொழும்பில் மக்களுக்கு மட்டுமல்ல காக்கைகளுக்கும் இருப்பிடப் பிரச்சினைதான் பெரிய பிரச்சினை. பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொழும்பின் கவர்ச்சிக்கு மயங்கி வந்து சேர்ந்த மக்கள் கூட்டம் போல ஒரு காக்கைகள் கூட்டமும் இருக்கத்தான் செய்கின்றது. வீதிகளைவிட வாகனங்களின் தொகை அதிகரித்து ஏறுகோணத்தில் செல்லும் சிக்கல் போலத்தான் போதியளவு மரங்கள் இன்றி அதிகரித்துவிட்ட தொகையுடன் அகதிகளாக தங்குவதற்கு சரியான இடமின்றி அலையும் காகங்களைப் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கும். 

நகர அபிவிருத்தி என்ற பெயரில் வெட்டப்படும் பெரிய மரங்களும் பல காகங்களின் பூர்வீக இருப்பிடம்தான் என்பதை பலர் அவதானிக்கத் தவறிவிடுகின்றார்கள். வெட்டப்பட்ட பெரிய மரங்களுக்குப் பகரமாக நடப்படும் சிறிய மரங்கள் எப்போது அந்த இடைவெளியை நிரப்புமோ தெரியாது. அது வரைக்கும் வீடிழந்து அந்தரத்தில் அழையும் வாழ்க்கைதான் அவைகளுக்குச் சொந்தம். ஒரு பௌத்த நாட்டின் தலை நகரத்தில் காகங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எந்தவொரு தீவிர பௌத்த பூதங்களும் கண்டுகொள்ளவில்லை. இதற்காக பாதுகாப்புச் செயலாளரிடம் மனுக் கொடுக்க முடியுமா? 

கொழும்பில் இடிக்கப்பட்டு வீடிழந்த பலருக்கு இன்னும் முழுமையாக மாற்றீடுகள் வழங்கி முடிக்கப்படவில்லை. அப்படியிருக்கும் போது காகங்களின் பிச்சினைகளை யார்தான் கண்டு கொள்ளப் போகின்றார்கள். காகங்கள் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் கூட நீதிமன்றத்தை நாடி தீர்வு கேட்டிருக்கும். சேரிப்புற மக்களைப் போல அவைகட்கும் கல்விக்கான வாய்ப்புகள் ஏதுமில்லாததால் கிடைப்பதோடு திருப்திப்பட்டுக் கொள்கின்றன போலும். அப்படித்தான் புறக் கோட்டை பஸ் நிலையத்தில் ஒரு இரும்புக் கம்பிக்கு மேல் இரண்டு காகங்கள் தமது ஒற்றைக் குஞ்சுடன் சோகமாக அமர்ந்திருப்பதைக் கண்டேன். பாவம் அவை தமது மற்றுமொரு பிள்ளையை இழந்த சோகத்திலும் கூடிழந்த சோகத்திலும் ஆழ்ந்திருந்திருக்கவும் கூடும். யுத்தம் விதைத்த வடுக்களைப் போல இதுவும் இன்னும் நெஞ்சைப் பிழிந்துகொண்டுதான் இருக்கிறது. 

பெரிய அரச மரம் பக்கத்தில் இருந்தும் அதில் அமர அந்தக் காகங்கள் அனுமதிக்கப்படவில்லைபோலும். நமது பிரதேச மற்றும் இனத்துவ அரசியலின் தாக்கத்தினால் அவற்றின் மாசு மறுவில்லாத சூழலும் கெட்டுப்போய் விட்டது போலும். அங்கும் புறக்கனிப்பு. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சகித்துக்கொள்ள முடியவில்லை ஏன் என்றுதான் தெரியவில்லை. காகங்களின் வாழ்க்கையும் பரிதாபங்களால் ஆட்கொள்ளப்பட்டு அலைக்கழிக்கப்படும் நிகழ்வு இன்னும் ஒரு தளத்திலேனும் கண்டு கொள்ளப்படவில்லை. அதற்காகன கவனயீர்ப்புப் போராட்டமாகத்தான் அன்மையில் பெருந்தொகையான காகங்கள் மொத்தமாகச் செத்து மடிந்தனவோ தெரியவில்லை. அப்படியும் கூட அவற்றின் பிரச்சினைகளின் பக்கம் யாரும் கரிசனை கொள்ளவில்லை. போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் எதுவுமே இங்கு எதையும் சாதிக்கவில்லை வெறும் சாவுகளைத் தவிர. அவைபெற்றுத்தந்தது இழப்பு மட்டும்தான். அந்த வழிமுறையும் அவைகட்டு பலனளிக்கவில்லையாயின் வேறு எதைத்தான் தேர்வு செய்வது. ஒரேயொரு பொருத்தமான தெரிவு மௌனம். ஆயினும் அது பொருத்தமா?

காகங்களுக்கு மட்டுமல்ல இப்போது குடியிருப்புப் பிரச்சினை. நிறையப் பறவைகளுக்கும்தான். அவைகளின் பிரச்சினை எப்போதாவது எங்காவது இடித்தால் அதையும் எழுதி வைப்போம். இல்லாவிட்டால் நமது இலக்கிப் பேச்சாளர்கள் போல காகங்களின் பிரச்சினையைப் பேச வந்து கொக்குகளினதும் கழிவு நீரில் வாழ்ந்து கொண்டிருக்கும் வாத்துகளினதும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிவிட்டுப் போவதாக அமைந்துவிடும். அப்படிப் பேசினால் போல என்ன மக்கத்துச் சால்வையும் போர்த்தி எழுத்தாளச் செம்மல் பட்டமும் கொடுக்கவும் முதுகு சொரியவும் நிறையப் பேர் இருக்கிறார்களே. பரஸ்பரம்..   அதனால் தள்ளி நின்று காகங்களுக்காக இப்போது பரிதாப்ப படுவோம். காரணம் இது காகங்களுக்கான நேரம். 

தெற்காசியாவின் உயர்ந் கோபுரமாகக் கட்டப்படப்போகும் தாமரைக் கோபுரத்தின் அவசியமற்ற ஒரு பகுதியிலேனும் இந்தக் காகங்கள் ஒரு கூடு கட்டிக் கொள்ள அனுமதிக்கப்படுமாயின். அதுவே பெரிய வெற்றி. யாராNனும் ஒரு அமைச்சர் அதற்கும் பற்றுச் சீட்டு சமர்ப்பித்து பொதுநிதியிலிருந்து ஏப்பம் விடாமல் இருந்தால் சரி. 

எவ்வளவு விலையுயர்ந்த உணவைச் சாப்பிட்டாலும் கக்கூசுக்குச் சென்று கழிவை யாரும் பத்திரப்படுத்தி வைப்பதில்லைதானே, ஆனால் நமது அரசியல் வாதிகள் அந்தக் கழிவுகளைத்தான் சாமி அறையிலும் தொழுகை அறையிலும் காரியாலயத்திலும் நிறையச் சேமித்து காட்சிக்கு வைத்துள்ளார்கள்.

கவணம் கைவிடப்பட்ட காகங்கள் கண்ணைக் கொத்திப் போடும்.