அ.மார்க்ஸ் பற்றிய எனது புரிதலும். ஜெயமோகனுக்கான குறிப்பும்.
1998 ஆம் ஆண்டு எனது பதினைந்தாவது வயதில் அ.மார்க்ஸ் அவர்களின் எழுத்துக்கள் அறிமுகமாகின. அவரை அறிமுகப் படுத்தியவர் எனது தமிழ்ப்பாட ஆசான் மன்சூர் அவர்கள். அதன் பின்னர் சில வருடங்களில் இந்துத்துவம் ஒரு பண்முக ஆய்வு எனும் நூலை மாணவர் மன்றத்தில் விரிவாக ஆய்வு செய்து பேசிய ஞாபகம் இன்னும் இருக்கின்றது. பேராசிரியர் மீது மிகுந்த மரியாதை எப்போதுமே இருந்து வந்தது. அதே காலப்பிரிவில் ஜெயமோகனையும் படித்து வந்தேன். ஜேயமோகனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் இலக்கியவாதியும் எனது ஆங்கிலப்பாட ஆசானுமான நாவல் நகர் ப.ஆப்டீன். ஆனால் இயல்பாகவே என்னுள் மார்க்ஸ் மீது ஏற்பட்ட ஈர்ப்பு ஜெயமோகன் மீது ஏற்படவில்லை. அந்த நேசத்தை யாரும் விதைக்கவில்லை அது தானாக ஆனது. அதுதானே ஒரு எழுத்தாளனின் எழுத்துக்குக் கிடைக்கும் வெற்றி. அதற்காக ஜெயமோகன் மீது பிடிப்பில்லை என்று சொல்லவில்லை. அதாவது மார்க்ஸை நேசித்தேன் ஜெயமோகனைப் பிடித்திருந்தது.
2010ம் ஆண்டு கீற்று இணைய தளத்தின் ஆறாம் ஆண்டு நிகழ்வு 'இஸ்லாமியர் மீதான ஒடுக்குமுறைகள்' என்ற தலைப்பில் சென்னை தேவனேயப் பாவனர் அரங்கில் இடம்பெற்ற போது இலங்கை தொடர்பான விடயங்களைச் சமர்ப்பிக்;கும் ஒரு பேச்சாளனாக நான் கலந்து கொண்டேன். அங்கு விடுதலைப்புலிகளுக்கும் எதிராகப் பேசினேன் ஆயினும் அந்தப் பேச்சோடு சபை கொந்தளித்து பேச்சை இடையிலேயே நிறுத்த வேண்டி வந்தது. ஏதிர்ப்பும் ஆதரவும் ஒருங்கே கிளம்பிய போது மீண்டும் பேச அனுமதிக்கப்பட்டேன். ஆயினும் மீண்டும் எதிர்ப்பு வலுத்தது இடையிலேயே பேச்சை நிறுத்த வேண்டி வந்தது. ஆயினும் அந்நிகழ்வில் எல்லோரையும்விட ஒதுக்கப்பட்ட நேரத்தில் அதிகம் பேசியது நான்தான் என்ற அடிப்படையில் கீற்று ஆசிரியருக்கும் ஏற்பாட்டுக்குழுவுக்கும் நன்றி தெரிவித்தேன்.
மறுநாள் ஊடகங்களில் இது பேசு பொருளானது. இலங்கையிலிருந்து வந்த தோழர் கீற்றுவால் அவமானப்படுத்தப்பட்டார் என்று கீற்றுவுக்கு எதிரான பிரச்சாரம் வலுப்பெற்றபோது அது அப்படியில்லை. கீற்று நியாயமாகத்தான் நடந்து கொண்டது என்பதை நானே வலியுறுத்தினேன். அப்போதுதான் பேராசிரியர் மார்க்ஸ் பற்றி இன்னொருபக்கக் கருத்தியல் இருப்தை நான் கண்டு கொண்டேன்.
கீற்றுவின் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான அந்த நிகழ்வைக் குழப்புவதில் பேராசியருக்கும் அவர் சார்பானவர்களுக்கும் அதிக பங்கு இருந்ததாகத் தகல் கிடைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இதற்கிடையில் சோபாஷக்தியும் இதற்குள் இணைக்கப்பட்டபோது இன்னும் வருத்தமாக இருந்தது. சில விடயங்களை இன்னும் கூட என்னால் புரிந்துகொள்ள முடியாமல் திணறத்தான் முடிந்தது. தொடர்ச்சியாக இந்நிகழ்வு தொடர்பில் வந்த இருபக்க எழுத்துக்களையும் அவதானித்தேன். கீற்றுவில் அது தொடர்பில் நீண்ட ஆக்கமென்றையும் தோழர் ரமேஸ் எழுதியிருந்தார்.
மீண்டும் 2011ல் இந்தியாவுக்குச் சென்ற போது நேராக தோழர் ரமேஸ் வீட்டுக்குத்தான் நான் போனேன். அது ஒரு ஆவணப்படத்துக்காக தமழ் தேசியவாதிகளின் கருத்துக்களைப் பதிவு செய்வதற்கான முயற்சியாக இருந்தது. தோழர் ரமேஸ் மற்றும் ப்ரியாத்தம்பி ஆகியோரின் உபசாரமும் ஒத்துழைப்பும் எப்போதும் என்னால் மறக்கப்பட முடியாதவை.
இந்த நிகழ்வுக்குப் பின்னரான பதிவுகள் அனைத்துமே பேராசிரியர் மார்க்ஸ் மீது எதிர்மறையான உணர்வுகளையே வலுப்படுத்தின. அவர் இலங்கைக்கு வந்த போது கூட அவரைச் சந்திக்கும் ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் பின்னரும் பின்னரும் எனக்குள் இடித்துக் கொண்டிருந்த விடயம் பேராசிரியரைச் சந்தித்துவிட வேண்டும் என்பதுதான். அவரிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும் என்றும் மனந்திறந்து சிலவிடயங்களைக் கலந்துரையாட வேண்டும் என்றும் எனக்குள் ஓர் உள்ளுணர்வு இப்போதும் இருக்கிறது. அதன் பின்னர்தான் நடு நிலையாக என்னால் சில விடயங்களைப் பேச முடியும் என்று கருதுகின்றேன். அது போலவே ஷோபா சக்தியிடமும் சில கேள்விகள் கேட்க வேண்டியுள்ளது. அதையும் அவகாசம் வரும் போது செய்வேன். கீற்றுவில் வெளிவந்த இது தொடர்பான பதிவுகள் அப்பிரச்சினையின் வீரியத்தைப் புரிந்து கொள்ள உதவும். ஆர்வமுள்ளவர்கள் அவற்றை அங்கு படிக்கலாம்.
இதன் பின்னர் பேராசிரியர் மீதுள்ள நேசம் குறைந்தது என்னவோ உண்மைதான் ஆனால் அவரின் எழுத்துக்கள் மீதுள்ள ஈர்ப்பு இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
இந்தியத் தேர்தல் களம் சூடுபிடிக்கும் போது மோடி அலை வெகுவாக சோடனை செய்யப்படும் வேளை பேராசிரியரின் பதிவுகளை உன்னிப்பாக அவதானிக்கிறேன். அதில் ஜெயமோகன் மார்க்ஸ் குறித்து எழுதியதாக ஒரு பதிவைப் போட்டிருந்தார். அந்தப் பதிவையும் அதன் பின்னுள்ள பின்னூட்டங்களையும் முழுமையாக வாசித்துவிட்டே இந்தக் குறிப்பை எழுதுகின்றேன்.
ஜெயமேகன் குறிப்பில்
01. // ஓரு கூட்டத்தில் ஜோவைப் பார்த்ததும் அவருக்கு 'அந்த ஆசாமியின்' முகத்தில் கூட விழிக்கவேண்டும் என்று தோன்றவில்லையாம். தமிழ் தலைநிமிர்ந்து நோக்கவேண்டிய படைப்புகளை அளித்த ஒரு படைப்பாளியைப்பற்றி இப்படிச் சொல்ல தனக்கு என்ன குறைந்தபட்சத் தகுதி என்று அடிப்படை நேர்மையோ அழகுணர்வோ இல்லாத இந்த ஆசாமிக்கு தோன்றாதது நியாயம். வாசிக்கும் இலக்கிய வாசகர் நான்குபேருக்காவது தோன்றவேண்டாமா? இந்த ஆசாமியும் இவர்களுக்கு கீழே திரளும் வெற்றுக்கும்பலும் யாரென்றே தெரியாமலாகும் காலத்திலும் ஜோவின் புனைவுகள் வாழுமென அறிந்த பத்துபேராவது நம்மிடம் வேண்டாமா?//
மார்க்ஸ் அவர்கள் ஜோவைப் பற்றிய குறிப்பைப் போட்டவுடன் அதற்கு நான் இட்ட பின்னூட்டம் இது. ஜோ டீ குரூஸ் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது. அவரது நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்த போது அகமகிழந்தேன். அவசியம் அந்த நாவலை வாங்கிப் படிக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தேன். ஆனால் இப்போது கொற்கை விருது வென்றதில் நிச்சயம் நியாயமான வழிமுறை இருக்காது என்றே கருதுகின்றேன். கொற்கை படிக்கும் ஆவலும் விட்டுப்போனது. அவருடைய மோடி குருஸ் பக்கம் தெரியாமல் போய்விட்டதே....
நல்லவேளை தப்பித்தேன் ஒரு இனவாதியின் எழுத்தைப் படிப்பதிலிருந்து.
ஜோ எவ்வளவு பெரிய உச்சத்திலும் இருக்கட்டும் அதல்ல மேட்டர். இங்கு மோடி என்ற அசிங்கத்துக்கு ஆதரவாக எப்படி ஒரு நியாயமான எழுத்தாளன் குரல் கொடுக்க முடியும் என்பது ஒரு வாசகனாக எனக்குள் எழுந்த கேள்வி. ஐயா ஜெயமோகன் நீங்கள் கேட்டபடி
//வாசிக்கும் இலக்கிய வாசகர் நான்குபேருக்காவது தோன்ற வேண்டாமா?//
என்பதற்கு எனக்குத் தோன்றியதை சொல்கிறேன். அத்துடன் நீங்கள் மார்க்ஸை நோக்கிப் பிரயோகிக்கும் சொற்கள் உங்களை நோக்கி அதைவிடவும் மோசமான விதத்தில் திரும்பும். அதுவே பின்னூங்களில் நிகழ்ந்திருக்கிறது. இந்த இடத்தில் ஜோவுக்கு ஆதரவாக களமிறங்கிய உங்கள் நேர்மைக்கு என்னவாயிற்று? என்று ஒரு வாசகனாக நான் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் இருக்கிறது உங்களிடம். மார்க்சுக்கு எதிராக உங்களால் கடும் வார்த்தைகளைப் பிரயோகிக்க முடியுமானால் அதற்கு உரிமை இருக்கிறதென்றால் அதில் பிழை இல்லையென்றால் ஜோவுக்கு எதிரான மார்சின் நிலைப்பாட்டிலும் அதையே பொருத்திப் பார்த்தால் முரண்படாத வித்தியாசமான சமன்பாடு கிடைக்கிறதே.
அடுத்தது நீங்கள் சொல்கின்றீர்கள்
//இந்த ஆசாமியும் இவர்களுக்கு கீழே திரளும் வெற்றுக்கும்பலும்//
இப்படிச் சொல்லும் போது உங்கள் மனசாட்சி உங்களுக்கு ஒன்றுமே சொல்லவில்லையா? மனசாட்சி நியாயமானது. அது எதாவது சொல்லியிருக்கும், அதை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். அப்படியொன்றுமே அது உங்களுக்குச் சொல்லவில்லையானால் உங்களுடன் இதையெல்லாம் பேசுவது சுத்த வேஸ்ட்.
02. // இந்து அடிப்படைவாதத்தை விட பத்துமடங்கு பிற்பட்டதும்இ இஸ்லாமிய சமூகத்தையே கண்கூடாக மிரட்டிக்கட்டுப்படுத்தி அழித்துக்கொண்டிருப்பதுமான கொலைகார இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் குரலாகச் செயல்படும் அ.மார்க்ஸ் போன்றவர்களிடம் அவர்கள் சில கேள்விகள் கேட்டிருக்கவேண்டாமா? //
03. //உலகமெங்கும் இஸ்லாமியர் உட்பட அப்பாவிகளைக் கொன்றொழிக்கும் கீழ்த்தர பயங்கரவாத அமைப்புகளின் கைக்கூலியா இங்கே மதச்சார்பின்மை பேசுவது? //
இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்லவும் உங்களிடம் பதில் கேள்வி கேட்கவும் மீண்டும் உங்கள் எழுத்துக்களையும் போக்குகளையும் அத்துடன் மார்க்ஸின் எழுத்துக்களையும் போக்குகளையும் நான் நுண்ணிய அவதானத்துடன் திரும்பவும் படிக்க வேண்டும். அதற்குக் காலம் போகும் ஆனால் ஒரு விடயத்தைக் கேட்க விரும்புகின்றேன்.
01. இஸ்லாமிய அடிப்படைவாதம்
02. இஸ்லாமிய தீவிரவாதம்
03. இஸ்லாமியப் பயங்கரவாதம்
குறித்து உங்களுக்கு அறவே தெளிவில்லை அந்தச் சொற்கள் தெரியும் என்பதற்காக எதனெதனோடோவெல்லாம் இணைத்துப் புணைந்துள்ள உங்கள் எழுத்து உங்களை ஒரு ஜோக்கராகவே பார்க்கவைக்கிறது. முடிந்தால் இந்தச் சொல்லாடல்களுக்கு புத்திசாலியாக இல்லாவிட்டாலும் ஒரு படைப்பாளியாக நியாயமான உங்கள் பார்வையை முன்வையுங்கள். ஏனெனில் இஸ்லாத்தை இழுத்திருப்பதால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒரு முஸ்லிம் கேள்வி கேட்கக் கடப்பாடுடையவன் என்ற வகையில்தான் உங்களிடம் கேட்கின்றேன். உங்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியும்தானே. நீங்கள் அது குறித்த பார்வையை முன்வைத்த பின்னரே மார்க்ஸ் குறித்து நீங்கள் இங்கு சம்பந்தப்படுத்தியுள்ள விடயங்கள் குறித்து காரசாரமான எழுத்துக்களை நான் முன்வைக்க முடியும். ஏனெனில் இங்கு மார்க்சுக்கு எதிராக நீங்கள் பிரயோகித்திருக்கும் சொல்லாடல்களுக்கு அவர் பதில் சொல்லவே தேவையில்லை அதை நானே பார்த்துக் கொள்கின்றேன் உங்கள் விளக்கத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
04. கூஜா தூக்குவதாக யாரும் குறிப்பிடும்படியான எந்த வசவுகளுக்கும் இடமில்லையாதலால் நான் தெளிவாக எனது பதிவை இங்கு முன் வைத்திருக்கிறேன். அதற்காகவே இதுவரை நான் நேரில் சந்தித்திராத இதுவரை நான் ஒரு வார்த்தையேனும் பேசியிராத அ.மர்க்ஸ் பற்றி மேலே குறிப்பிட்டேன்.
No comments:
Post a Comment