Friday, April 11, 2014

வலம்புரிச் சங்கும் நானும்

வலம்புரிச் சங்கும் நானும்

வலம்புரிச் சங்கு வலம்புரிச் சங்கு என்று நிறையவே கேள்விப்பட்டிருக்கிறேன். அது பற்றிய நிறையக் கதைகளையும் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆயினும் அவை நமக்கு  கண்ணால் காணக் கிடைக்காத ஒரு வகை அரியவகைப் பொருளாகவே கருதியிருந்தேன். அத்துடன் வலம்புரி பற்றி இணையத்தில் தேடியும் பார்த்தேன் ஆனால் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. அதன் பின்னர் வலம்புரிகளுடன் எனக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.  அது பற்றிய பகிர்தல்தான் இது. 

இந்தப் பகிர்வுக்குப் பின்னர் வலம்புரி  எனும் வட்த்திற்குள்ளால் விரிக்கப்பட்டுள்ள மாய வலைக்குள் யாரும் சிக்கிக் கொள்ளாதிருக்கவும் அது பற்றிய தெளிவுடன் இந்த விடயத்தை அணுகவும் வழி பிறக்கலாம். அத்துடன் யாரிடமாவது வலம்புரி இருந்தால் அதை நல்ல விலைக்கு விற்றுக் கொள்வதற்கும் முடியுமாக இருக்கலாம். ஏனெனில் தரமான வலம்புரி வியாபாரம் பெரும்பாலும் லட்சங்களில் புரள்வதாகும். அத்துடன் கோடிகளில் புரளும் இன்னொருவித வியாபாரமும் உண்டு, ற்ரைட்டென் எனப்படும் வகையாறா பற்றியது. அதையும் பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

இடம்புரி வலம்புரி  என்பவற்றில் அனுபவமில்லாதபடியால் நிறையக் குளறுபடிகள் சர்வசாதாரணமாக நடந்து முடியும். உதாரணத்திற்கு மிகவும் நீண்ட வரலாறு கொண்ட வலம்புரிக் கவிதா வட்டம் (வகவம்) அமைப்பு அதன் இலட்சிணையில் ஒரு சங்கைப் போட்டிருக்கிறார்கள். ஆனால் அது வலம்புரியல்ல இடம்புரி. ஒரு கவியரங்கில் அதைச் சுட்டிக் காட்டிய போது இத்தனை வருடமாக யாருக்கும் அது தெரியவில்லையே என்று பதில் வந்தது. பார்ப்போம் இந்தப் பத்திக்குப் பின்னராவது வலம்புரிக் கவிதாவட்டத்தின் இலட்சிணையில் இடம்புரியைத் துரத்திவிட்டு வலம்புரியொன்று வந்தமர்கின்றதா என்று. 

விஷ்னு, லக்ஷ்மி, கௌரி, என்பன வலம்புரியில் பிரபலமாகப் பேசப்படும் சொற்பிரயோகங்கள். எல்லாம் அப்படியே இருக்க வலம்புரி என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது?

ஊதப்படும் பக்கத்தை வாயில் வைத்தால் இடது கையினை உள்ளே போடக் கூடிய மாதிரி இருக்க வேண்டும். அதுதான் வலம்புரி. வலது கை உள்ளே நுளைந்தால் அது இடம்புரி. இடம்புரி மிகவும் பரவலாகக் கிடைக்கும். அரிதாகக் கிடைக்கும் வகையறாதான் வலம்புரி. இந்து சமயக் கோட்பாட்டின் படி அபிவிருத்தியும் வளமும் நிறைந்த வாழ்க்கையினை வேண்டி ஆயிரம் இடம்புரிச் சங்குகளைக் கொண்டு ஒரு பூஜை செய்வர். அவ்வாறு ஆயிரம் இடம்புரிச் சங்குகளுக்குச் சமமானது ஒற்றை வலம்புரி. எனவேதான் வலம்புரிக்கு ஒரு மார்க்கட் இருக்கிறது. 

விஷ்னு என்பது வலம்புரியின் ஆண் சங்கு, லக்ஷ்மி என்பது  வலம்புரியின் பெண் சங்கு. கௌரி என்பது ஐஸ் கோன் மாதிரி கொஞ்சம் நீண்டு இருக்கும் அத்தோடு சாமி சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கும் வலம்புரி பயன்படுத்தப்படும். அதனாலும் இந்தச் சங்கு சனாதன தர்மத்தின் பிரகாரம் சமய வழக்கத்தில் விஷேடம் பெறுகின்றது. 

சந்தைப் பெறுமானத்தைப் பார்த்தால் வலம்புரியின் தரத்தை வைத்து விலை மாறுபடும். லக்ஷ்மி  வலம்புரி சந்தையில் அவ்வளவாக எடுபடாது ஒரு சங்கு தரத்தைப் பொறுத்து ஐயாயிரம் ரூபாய்வரைப் போகும். அதன் நிறை கவணத்திற் கொள்ளப்படமாட்டாது. விஷ்னு வலம்புரியில் பல வகையுண்டு அதுவும் தரத்தை வைத்து ஒரு கிராமுக்கு 3000 தொடக்கம் 6000 வரையும் போகும் வில சமயம் கிராம் 9000வரையும் கூடச் செல்லும் அதுபோல கௌரி கிராம் ஒன்று 8000 தொடக்கம் 15000 வரையும் விலை போகும். இங்கு முக்கியமான அம்சம் சங்கினுடைய தரம்தான் அதன் விலையைத் தீர்மானிக்கும்.

அடுத்த வகையறா ற்ரைட்டென், இது பார்ப்பதற்கே ரொம்ப அட்டகாசமாக இருக்கும். சகல அம்சங்களும் பொருந்தி அமைந்துவிட்டால் இருநூறு கோடி ரூபாய் வரை ஒன்றின் விலை எகிறும். இதுவும் கவர்ச்சியான நிறத்தில் ஐஸ்கோன் போல வால் பகுதி நீண்டிருக்கும். வாய்ப் பகுதி அகன்று இருக்கும். மில்லியனுக்கு ஒரு ற்ரைட்டென் தான்; கிடைக்கும், மிகவும் அரிது. கிடைத்துவிட்டால் அதிஸ்டம் தான். இதில் இடம்புரி வலம்புரி என்ற இரண்டுக்கும் சந்தை வாய்ப்பு தாராளமாக இருக்கிறது. 

தென்னாபிரிக்க கடற் பகுதியயில் விளையும் சங்குகள் பெரும்பாலும் வலம்புரியாகவே இருக்கும். அங்கு யாரும் இதைக் கணக்கிலெடுப்பதில்லை அதனால் அங்கிருந்து வலம்புரி இலங்கைக்கு கென்றைனர் கென்றைனராகக்  கடத்தப்பட்டு இங்கிருந்து இந்தியாவுக்கு விற்கப்படுகின்றது. இந்தியாவில் இதெற்கென்றிருக்கும் சந்தை வாய்ப்பை இந்த கடத்தல் வியாபாரிகள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆபிரிக்க சங்குகளை அனுபவமுள்ள ஒருவர் மிக எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார். அதுபோலவே வலம்புரிங் சங்கு உற்பத்திகளும் நடைபெறாமலில்லை. பார்வைக்கு அசலைப் போலவே இருக்கும் போலிகள் மிகத் தாராளமாக உலவிக் கொண்டிருக்கின்ற. யாரும் அதில் எளிதாக மாட்டிக் கொள்வர். இந்தக் குறிப்பிட்ட சின்னஞ்சிறிய காலப்பகுதியில் இந்தச் சங்கு மேட்டரில் கலாநிதிப்பட்டம் முடித்தமாதிரி ஒரு அனுபவம் எனக்கு. யாராவது தன்னிடம் ஒரு வலம்புரி இருப்பதாகச் சொன்னால் உடனே செய்ய வேண்டியது அன்றைய பத்திரிகையினை வாங்கி அதன் மேல் வைத்து திகதி தெரியுமாப் போல ஒரு படம் எடுத்து அனுப்பச் சொல்ல வேண்டும். ஏனெனில் எங்கோ இருந்த  ஒரு படத்தை எடுத்து வைத்துக் கொண்டு பேரம் பேசும் கூட்டம் அதிகம். சில சமயங்களில் எறும்பை வைத்துக்கொண்டு யானை விலை சொல்வார்கள், அது கூடப் பறவாயில்லை சிலர் டைனோசர் விலை சொல்வார்கள் அப்போது அவர்கள் மீது வருமே ஒரு இரக்கம்

இந்தச் சங்கு மேட்டரை மையப்படுத்தி ஒரு சிறுகதை எனக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறது ஆனாலும் அது ஒரு பாஷையிலும் வெளிவருவதாக இல்லை. அதனால்தான் ஒரு ஓரக் குறிப்பாக இதை எழுதியிருக்கிறேன் எப்போதாது அக்கதை எனது சிறையிலிருந்து வெளிப்படக் கூடும் அப்போது பார்ப்போம். என்னைக் கடந்து சென்ற சில சங்குப்படங்கள் நீங்களும் அறிந்திருக்க வேண்டுமே என்பதற்காக இங்கே காட்சிப்படுத்தியிருக்கிறேன். அதை எடுத்துக் கொண்டு யாரும் விலை பேசக் கிளம்பிட வேண்டாம், பின்னர் கடுப்பாயிடும்.

அப்பப்பா எழுத்தாளனாக இருப்பதற்கு என்னனென்னவெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கு பாருங்கள். சொ...பா... முடியல.

2 comments:

 1. அருமையான அனுபவப்பட்டமாதிரியான ஒரு பதிவு,என்னிடமும் ஒரு சங்கு இருந்தது அதை ஒரு வைத்திய விடயமாக ரூபா ஜநூறு கொடுத்து வாங்கினேன்,சுகம் கிடைத்தமாதிரி இல்லை,,அதை காற்றூக்கு ஒடும் கதவுக்கு அடைக்காக வைத்தேன்.வீட்டுக்கு வந்த ஒரு விருந்தாளி இப்படி செய்வது கூடாது என்றார்,அப்புறம் மேசையில் வைத்தேன் யாரோ ஒருவர் கேட்டார்( யார் என்று ஞாபகம் இல்லை)சும்மா கொடுத்துவிட்டேன்.இப்போது ,கட்டுரையை படித்த பின் கவலையாகத்தான் இருக்கிறது.இருந்தும் வலமா ,இடமா என்றுதான் தெரியவில்லை

  ReplyDelete
  Replies
  1. மாதிரி இல்லை
   அனுபவம்

   Delete