Sunday, October 27, 2013

அஹமதும் அனிவாவும்

அஹமதும் அனிவாவும்
சிறுகதை – முஸ்டீன்

முன்னொரு நாள்

'ச்சே நான் நம்பவேயில்ல அனிவா இப்பிடி ஹராங்குட்டி வேல பாப்பான் எண்டு'
அஹமது புலம்பிக் கொண்டிருந்தார், 
அஹமது புகழ்பெற்ற ஒரு எழுத்தாளர், பல கதைகள் பத்திரிகைகளில் வந்து அவருக்குப் புகழ் சேர்த்துக் கொண்டிருந்தன, நல்ல எழுத்து அவருக்கு வசப்பட்டிருந்தது, அது எல்லோரையும் வசீகரித்தது, அரச தொழிலில் இருந்தாலும் நேரமெடுத்துக் கொண்டு எழுதியது அவரது அதீத திறமைதான், 
அஹமதுக்கு ஒரு உற்ற நண்பன் இருந்தான் அவன் பெயர் அனிவா
அனிவாவுக்கு வாசிப்பது ரொம்பவுமே இஷ்டமான ஒன்று, எல்லாவற்றையும் தேடித்தேடி வாசிப்பான், நல்ல ரசனையும் இருந்தது, இலக்கிய ஆளுமைகள் மீது நல்ல ஈர்ப்பும் இருந்தது, கடிதத் தொடர்புகளையும் பேணிவந்தான், கடிதம் எழுத வந்த அனிவாவுக்குக் கதை எழுத வரவில்லை, ஆனாலும் அஹமதுவின் கதைகளுக்கு அனிவாதான் முதல் வாசகன், அஹமது ஒரு கதை எழுதிவிட்டால் அதை உடனே அனிவாவிடம் கொடுத்து
'மச்சான் இதக் கொஞ்சம் பாரு' என்பான்
அனிவாவுக்குப் பெரு மனது, நண்பனின் கதையை நன்றாகப் படித்து நல்ல கருத்துக்கள் நான்கைச் சொல்வான், அதன் பின்னர் திருப்தியுடன் அஹமது அதைப் பத்திரிகைக்கு அனுப்பி வைப்பார், இப்படியே எழுதி எழுதி அனிவாவிடம் கொடுத்த மூலப் பிரதிகள் ஏறாளம், அஹமது சிறுகதைகள் மட்டுமில்லாது குறுநாவல், நாவல் என்று பலதையும் எழுதிக் கொண்டே போக அவரது எழுத்துலகமும் விரிந்து கொண்டே சென்றது, 

அனிவாவுக்கு அஹமதைப் போலக் கதை எழுதிப் பெயர் வாங்க ஆசை வந்தது, அனிவா இரவுபகலாகக் கதை எழுதினான், இடையிடையே கதைகளையெல்லாம் கடிந்து கொண்டான், 
'இந்தக் கதை மசிறு வாசிக்க நல்லாத்தான் இரிக்கி எழுதத்தான் வருகுதில்லியே' 
ஆனாலும் அனிவா முயற்சியைக் கைவிடவில்லை, இதற்கிடையே அஹமதுக்குப் பிரச்சினைகள் ஏராளமாகின, குடும்பத்தினுள்ளும் பிரச்சினை, சமூகக்  களத்தில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய அரச அதிகாரியான அவருக்கு ஆயுத தாரிகளாலும் பிரச்சினை, இந்த இடைப்பட்ட காலத்தில் அனிவாவுடன் முன்னைய காலம் மாதிரி ஒட்டுறவாட அஹமதுக்கு அவகாசம் கிடைக்கவில்லை, ஆனாலும் அவ்வளவு பிரச்சினைக்குள்ளும் அஹமது எழுதுவதை நிறுத்தவேயில்லை, 
இப்படியிருக்க ஒரு நாள் அந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு 
அஹமது ஆடிப் போனார்
அப்படி என்னதான் நடந்தது?
அஹமது எழுதிய கதையொன்று அனிவாவின் பெயரில் சிறிய சிறிய திருத்தங்களுடன் பத்திரிகையில் பிரசுரமாகி இருந்தது, நட்புக்குள் விரிசல் வந்தது, அஹமது தனது நாற்குறிப்பேட்டில் இப்படி எழுதினார்
'எனது நண்பனை நம்பினேன், ஆனால் அவன்...?
நான் பெற்றெடுத்த குழந்தைக்கு தனது இனிஷ்ஷியலை வைத்துவிட்டான்'
அதன் பின்னர்தான் அஹமது வாய்விட்டுச் சொன்னார் 
'ச்சே நான் நம்பவேயில்ல அனிவா இப்பிடி ஹராங்குட்டி வேல பாப்பான் எண்டு'
அதன் பிறகு அஹமதுவுக்கு அனிவாவிடம் கொடுத்த சிறுகதைகளின் மூலப்பிரதிகள் திரும்பக் கிடைக்கவேயில்லை, ஆயினும் அனிவாவின் பெயரில் நிறையக் கதைகள் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கின, 
நட்புக்குள் வந்த விரிசலின் பின்னர் அஹமது எழுதும் கதைகள் நாவல் பிரதிகள் குறுநாவல் பிரதிகள் என்று அனைத்தையும் மிகவும் கவனமாகப் பாதுக்கத் தொடங்கினார், அனிவாவின் வாசிப்பாளுமை அவனையும் ஒரு இலக்கியவாதியாக மற்றவர்களை எண்ணத் தூண்டியது, அதனால் அனிவா தன்னை நிலைப்படுத்திக் கொள்ள நினைத்தான் இலக்கிய ஆளுமைகளுடன் கடிதப்பறிமாற்றங்களைச் செய்தான் அவற்றைப் பலரிடமும் காட்டிக் காட்டி மகிழ்ந்தான், பெரும் பெரும் இலக்கிய ஆளுமைகளைப் பற்றிப் பேசிவிட்டுத் தன்னையும் இடையில் சொருகிக் கொள்வான், அப்படியே கட்டமைக்கும் பணி தொடர்ந்து கொண்டிருக்க அனிவாவுக்கு தானும் ஒரு புத்தகம் வெளியிட வேண்டு மென்று ஆசை வந்தது, 
அஹமதுவின் கதைகளில் நன்கு பரிச்சயமாகியிருந்த அனிவா அதைப்போலவே எழுதத் தொடங்கினான் 
ஓரிரண்டு கதைகள் கைகூடின, 
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்ற அரசியற் கட்சிப் பிரிவினைகள் மேலோங்கியிருந்த காலத்தில் அது இலக்கியப் பரப்பிலும் பாதிப்பை உண்டு பன்னி முகாம் அமைக்கத் தூண்டிக் கொண்டிருந்தது, எஸ்.பொ மற்றும் சிவத்தம்பி பிரச்சினைகளும் அதற்குரம் சேர்க்க அனிவா நட்சத்திரமாகத் தன்னைக் கட்டமைப்பதில் மட்டும் குறியாக இருந்தான், பிரதேசத்தில் நடக்கின்ற எல்லா இலக்கியக் கூட்டங்களில் அவனும் பங்காளியானான்,  
விசயம் தெரியாத பலர் அனிவாவிடம் கதை சொன்னார்கள் நல்லதாய்த் தெரிந்தவைகளை அனிவா தன் பெயரில் எழுதிப் பிரசுரத்துககு அனுப்பினான், அனிவா படிப்படியாக வளர்ச்சி பெற்றுயர்ந்தான்,
'சால்வை' அனிவாவின் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததும் திரைப்படப் பாணியில் அனிவா தன் பெயருக்கு முன்னால் சால்வையைச் சேர்த்துக் கொண்டான், அதன்பின்னர் சால்வைப் புகழ் அனிவா எனத் தன்னைப் பிரகடனப் படுத்தினான், சின்னஞ் சிறு பிரசுரமாயினும் அதை வாங்கிப்பத்திரப்படுத்தும் அவனது இயல்பு புகழ் அனிவா தன்னை பெரும் இலக்கிய ஜாம்பவானாகப் பிரகடனப்படுத்தினான், கடிதங்களினூடாகப் பரஸ்பர முதுகு சொரியும் செய்திகளுடன் சால்வை புகழ் அனிவாவின் பெயரும் பின்னினைக்கப்பட்ட கடிதங்கள் தேசத்தின் எல்லைகள் கடந்தும் பயணிக்கத் தொடங்கின, 
அஹமதுவுக்குப் பிரச்சினைகள் தலைக்கு மேலாய்ப் போக குடும்பம் களைந்தது, மனைவி வேறொரு துணையைத் தேடிக் கொண்டு மாயமானாள், அஹமது அதையும் இலக்கியமாக்கினார், கண்ணிவெடித் தாக்குதலில் அவர் மரணித்துப் போகும் வரையும் நிம்மதியிழந்து தவித்தார், நண்பனின் துரோகம், மனைவியின் துரோகம் இப்படி எல்லாமும் எப்போதோ அவரைக் கொன்று போட்டிருந்தன, அந்த ஆத்மா மரணித்துப் போனதுடன் சால்வை புகழ் அனிவாவும் பெரிதாக எதையுமே எழுதுவதில்லை, சில வேளை பிந்திய காலத்தில் மூலப்பிரதிகளை அஹமது அனிவாவின் வாசிப்புக்காகக் கொடுத்திருந்தால் தொடர்ந்தும் அனிவா எழுதியிருகக் கூடும், அனிவாவின் எழுத்துலகம் அமைதியானாலும் சால்வையின் புகழைப் பரப்புவதில் அவன் கொஞ்சம் கூடத் தொய்வடையவில்லை,

பின்னொரு நாள்
சால்வைப் புகழ் அனிவாவை பெரும் இலக்கிய ஆளுமையாக மதித்த புதிய தலைமுறை இளைஞர்கள், அவரைப் பேட்டி காணச் சென்றார்கள், அவரின் வாசிப்பாளுமையும், தேடலும் வாதமும் பேச்சும் கூட கவர்ச்சிகரமானதாக இருந்தன, 
இளைஞர்கள்: உங்களின் இலக்கியப் பிரவேசம் பற்றிச் சொல்லுங்கள்
சால்வைப் புகழ் அனிபா : அது ஒரு விபத்து, நல்ல படைப்புக்களைத் தமிழ் இலக்கிய உலகுக்குத் தரவேண்டும் என்பதற்காகத்தான் அந்த விபத்து நிகழ்ந்தது, எனது கதைகள் புதிய மரபைத் தோற்றுவித்தன, எனது கதைகள் தமிழ்ச் சிறுகதை உலகின் பொக்கிசங்கள், ஒரு தனித்துவ அடையாளத்தை நிறுவின, எனது கதைகள் அப்படித்தான்
(பேட்டிகாணச் சென்றவர்கள் முகத்தை முகத்தைப் பார்த்தனர்)
இளைஞர்கள் :ஈழத்து இலக்கியப் பரப்பில் தொன்னூறுகளுக்குப் பின்னர் நல்ல காத்திரமான நாவல் ஒன்றும் வெளி வரவில்லையே ஏன்?
சால்வைப் புகழ் அனிபா : ஹா..ஹா.. அதுவா! அது இந்த அனிபா எழுதல்லடா, அதான் வரல்ல.
இளைஞர்கள் விக்கித்துப் போனார்கள் அதற்கு மேல் அவர்களால் நேர்காணல் செய்ய முடியவில்லை, அறுவைக்குக் கொண்டு போன கடாய் கழுத்தில் கத்தி பட கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடுவதைப் போல சென்று மறைந்தார்கள்,

இன்னொரு நாள்
அஹமது மரணித்துப் பத்தாண்டுகளின் பின்னர், அஹமதுவின் கதைகளைத் தேடும் பணியில் ஒரு சேகு ஈடுபட்டார், அவருக்கு  அஹமதுவின் எழுத்துக்கள் மீது அவ்வளவு விருப்பு, ஒருவாறாக இரண்டு குறு நாவல்களையும் பல சிறுகதைகளையும் சில குறிப்புக்களையும் கண்டெடுத்து அஹமதுவின் பெயரிலேயே தனது சொந்த செலவில் இரண்டு நூல்களாக வெளியிட்டார், அவ்வளவு பெரிய மனது சேகுக்கு, நல்ல வேலை அக்கதைகள் அனிவாவுக்குக் கிடைக்கவில்லை, கிடைத்திருந்தால் அனிவா தனது பெயரில் அதற்கு முக்காடு போட்டு உயிர்ப்பைத் தேடி  வேரைப் பலப்படுத்தி மீண்டும் தஸ்பி மணி உருட்டி இருப்பார், அஹமதுவின் உண்மையான உழைப்புக்கு இறைவன் அளித்த பரிசு அது, அனிவாவுக்கு அதைப் பார்த்த போதேனும் வெட்கம் வந்திருக்க வேண்டும், மனசாட்சி குத்தியிருக்க வேண்டும்...

மற்றொரு நாள்
சால்வை புகழ் அனிபா தலைநகரத்து நடைபாதையில் சென்று கொண்டிருந்தார், எதிர்த்தாற் போல வந்த மற்றுமொரு இலக்கியவாதியைக் கண்டு விட்டார், 
'ஆ எப்படி சுகமா?'
'அனிவா என்ன இந்தப் பக்கம்?  நான் நல்ல சுகம், மனைவிக்குத்தான் கொஞ்சம் சுகமில்ல, அதான் அவசரமா போய்க் கொண்டிருக்கிறன், பின்ன நீங்கள் எப்படி? சுகமே!'
'இஞ்ச ஒரு விழாவுக்கு வந்தன்'
'அப்படியா நல்லது நல்லது, பின்ன ஒரு நாளைக்கி சந்திப்பமே என்ன' 
'அதுக்கு முதல் லசரா எனக்கு கடிதம் போட்டிருந்தார்,  வாசிச்சிப் பாருங்களன்' அவர் கடிதத்தைக் கொடுத்தார்
'.................'
'இது சு.ரா எனக்கு எழுதியது'
'.................'
அவர்காட்டிய கடிதங்களை அலுப்போடு பார்த்துவிட்டும் அவர் சொன்ன கதைகளை வெறுப்போடு கேட்டுவிட்டும், கழன்று கொள்ள வெகு நேரமாகியது, அனிவாவிடமிருந்து அவர் வெருண்டோடினார்.

நேற்று
அனிவாவுக்கொரு ஆசை, ஒரு வீதிக்காவது இந்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளனின் பெயரை வைப்பதற்கு யாருமே பரிந்துரை செய்கிறார்களில்லையே என்பதுதான், இருதயமும் பலவீனப் பட்டுப் போய்க் கொண்டிருக்கையில், ஒரு வீதிப் பெயர்ப்பலகையிலேனும் தனது பெயரைக் கண்குளிரப் பார்த்துவிட்டு மரணிக்கலாம் என்றால் அது கடைசி வரையும் கைகூடாது போல விளங்கியது, அதனால்தான் மனம்விட்டே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி விட்டார், உலகப் புகழ் பெற்ற எழுத்தாளன் என்று தன்னைத்தானே பிரகடனமும் செய்து கொண்டார், 
அவ்வளவு புகழ் பெற்ற தன்னை இப்போதெல்லாம் யாருமே இலக்கியக் கூட்டங்களுக்குப் பேசுவதற்காக அழைப்பதில்லை என்ற ஆதங்கமும் அவருக்குள் ஈறலாக அரித்துக் கொண்டிருந்தது, தனது மேன்மையும் கீர்த்தியும் பேசப்படுவதில்லையே என்ற வெஞ்சமும் கூட இருந்தது, தான் அஹமதுவின் மரணத்திற்குப் பின்னர் எழுதாவிட்டாலும், இலக்கியத்தில் யாருக்கும் தெரியாத கொள்ளிமலை ரகசியமெல்லாம் தனக்குத் தெரியும் என்பதைப் பிரகடனப்படுத்தும் வண்ணம் நவீன உலகின் முகநூலையும் வலைத்தளத்தையும் பயன்படுத்திலாம் என்று முடிவும் எடுத்துக் கொண்டார், அதிலேனும் அதிக செலவில்லாது சுயபுராணம் பாடலாம் என்பது அவரது குட்டி ஆசை, கொஞ்சம் அவசரப்படாது விட்டிருந்தால் இன்று ஈழத்தின் தவிர்க்க முடியாத நாவலாசியராகவும் பல சிறுகதைத் தொகுதிகளைப் போட்ட கதைஞ்ஞராகவும் கூட மாறியிருக்கலாம் என்று அவ்வப்போது யோசிப்பதும் உண்டு, அதுவே அவரது இதயத்தில் அவ்வப்போது ஓங்கிக் குத்திப் பலவீனப்படுத்தியது,

இன்று
அனிவா அணிந்து கொண்ட சால்வை அஹமதுவுக்குரியது, எப்போதேனும் அனிவா அதை அஹமதுவின் கபுறுஸ்தானத்தில் போர்த்தக் கூடும் என்ற எதிர்பார்ப்புகள் எங்கும் உலாவிக் கொண்டிருக்க, அனிவா  தனது காய்கறித் தோட்டத்தை வெறித்துப் பார்த்தார்.

நாளை
அனிவா? சால்வை? புகழ்?