Thursday, January 21, 2016

கருத்துச் சுதந்திரம். நாம் எங்கே நிற்கின்றோம்?

20 ஜனவரி 2016 புதன்கிழமை தமிழ் மிரர் பத்திரிகையில் வெளியான கட்டுரை

கருத்துச் சுதந்திரம்.
நாம் எங்கே நிற்கின்றோம்?

-முஸ்டீன்-

(கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் சட்டத்தரணி காண்டீபன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற அறிவோர் அரங்கத்தில் சட்டத்தரணி மர்சூம் மௌலானா அவர்கள் ஆற்றிய உரையையும் அதன் பின்னர் இடம்பெற்ற கருத்தாடலையும் மையமாகக் கொண்டு தொகுக்கப்பட்டது)


கருத்துச் சுதந்திரம் என்ற அம்சம் மேற்கைரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் எப்போதோ ஒரு சட்டமூமாகப் பிரகடணப்படுத்தப்பட்டு அமுலாகிக் கொண்டிருக்கும் போது நாம் இப்போதுதான் அதனைச் சாத்தியப்படுத்துவது குறித்து எமது நாட்டில் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம் இந்த வார்த்தைகள் சட்டத்தரணி காண்டீபன் அவர்களுக்குரியது. இந்த நாட்டில் பல்வேறு விடயங்களையும் சாத்தியப்படுத்துவதில் பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. அவற்றின் தாக்கம் சில சமயங்களில் அடிப்படைகளையே புரட்டிப் போடும் வல்லமைமிக்கவையாக மாறிவிடுவதும் உண்டு.

அடிமை இந்தியாவில் மகாத்மா காந்தியை நாங்கள் பல தசாப்தங்கள் உயிரோடு வைத்திருந்தோம். ஆனால் சுதந்திர இந்தியாவில் நீங்கள் அவரை ஒரு வருடமேனும் உயிரோடு வைத்திராது கொன்றுவிட்டீர்களே என்று ஒரு ஆங்கிலேய அதிகாரி கூறிய கருத்துக்களை இந்த இடத்தில் நினைத்துப் பார்ப்பது பொருத்தம். 

ஒரு தேசத்தின் மாற்றத்தை நோக்கி தேசத் தலைமைகளின் கருத்துக்கள் எத்தகைய வலிமையான தளத்தை நோக்கி நகர முடியும் என்பதற்கும் அதைத் தடுப்பதற்குச் சதிசெய்யம் தீவிரவாத சக்திகள் வன்முறையைக் கையிலெடுத்து பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடுவதாலும் எத்தகைய விபரீதங்கள் நிகழும் என்பதற்கு இக்கூற்று ஒரு சிறந்த படிப்பினையைப் போதிக்கின்றது. 

சட்டத்தரணி மர்சூம் மௌலானா தனது உரையில் பின்வரும் அம்சங்களை வெளிப்படுத்தினார். அவற்றைச் சுருக்கமாகத் தொகுத்து நோக்குவோம். 

சர்வதேச வெளியில் கருத்துச் சுதந்திரம் என்பதை நாம் எந்தளவுக்குப் புரிந்து வைத்திருக்கின்றோம்? தேசிய ரீதியில் இடம்பெறுகின்ற சம்பவங்களின் அதிர்வுகள் சர்வதேசத்தினுடைய எதிரொலியாக எப்படித் தோற்றம் பெறுகின்றது? அவற்றைப் பொறுத்திப் பார்ப்பது எப்படி? என்கின்ற விடயங்களின் பால் நாம் கவனம் செலுத்த வேண்டிய வேளை இது.

வெறுப்பூட்டும் பேச்சுக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளையும் கவனத்திற் கொண்டவர்களாக சில சம்பவங்களையும் அதுசார் அடிப்படை விடயங்களையும் விளங்கிக் கொள்ள வேண்டிய தேவையும் எமக்கிருக்கின்றது. 

ஜனநாயம் பற்றிய எண்ணக்கரு எப்போது தோற்றம் பெற்றதோ அப்போதே அதற்குச் சமாந்திரமாகக் கருத்துச் சுதந்திரம் என்ற கோட்பாடும் தோற்றம் பெற்றது. அத்துடன் ஜனநாயக்ச் சூழலில் கருத்துச் சுதந்திரத்துக்கான களம் எத்தகையது அத்துடன் சோசலிச, கம்யுனிசச் சூழலில் கருத்துச் சுதந்திரத்தின் வகிபங்கு என்ன? ஒரு மன்னராட்சி நிலவுகின்ற தேசத்தில் கருத்துச் சுதந்திரத்துக்கான இடமென்ன? முதலாளித்துவப் பொருள்கோடலில் இதன் நிலையென்ன? செமித்திய மதங்களின் அரசியல் இடைவெளிகளில் கருத்துச் சுதந்திரம் எத்தகையது? கட்புலனாக ஆதிக்க சக்தியான சியோனிச ஊடக ஆளுகைக்குள் கருத்துச் சுதந்திரத்தின் எல்லை என்ன என்பதையும் பல்வேறு சித்தாந்த வெளிகளில் நின்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கிறித்துவுக்கு முந்திய காலத்தில் சோக்கிரடீஸ் நஞ்சூட்டப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்தே கருத்துச் சுதந்திரத்துக்கான களம் திறக்கப்பட்டது. அதனால்தான் கலீல் ஜிப்ரான் தனது கவிதையில் நீங்கள் சோக்ரடீசுக்கு நஞ்சூட்டும் போதும் நான் உங்களுக்கு அருகில்தான் இருந்தேன் நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபோதும் நான் உங்களுக்கு அருகில்தான் இருந்தேன். என்று கூறுகின்றார். கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்துக்கு எதிராக வன்முறையைக் கையிலெடுத்ததன் வாயிலாக நிகழ்ந்த நிகழ்வுகளின் அறுடைதான் அந்த இழப்புக்கள் என்பதை கலீல் ஜிப்ரான் சுட்டிக்காட்டுகின்றார். 

இந்த உலக வரலாற்றில் கருத்துச் சுதந்திரத்தின் வாயில்களை மூடுவதற்காக இப்படியான இறுக்கமான வதைகளை அந்தந்தக் காலத்துக் கருத்துக்களுக்கு எதிரான மக்கள் கைலெடுத்துத்தான் இருக்கின்றார்கள். பெரியாரிஸ்டுகள் சொல்வது போல எல்லாத் தீர்க்கதரிசிகளும் அந்தந்தக்காலத்தில் மிகப் பெரும் பகுத்தறிவுவாதிகளாகத்தான் இருந்திருக்கின்றார்கள். அதனால்தான் அவர்கள் தமது கருத்தை வெளியிடுவதில் வந்த எல்லாவிதமான தடங்களையும் எதிர்கொண்டு தமது சுதந்திரத்தை நிலைநாட்டப் பாடுபட்டார்கள்.

இலங்கைச் சூழலில் மிக அன்மையில் நடந்த இரண்டு விடயங்களை கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் இங்கு அலசுவது சாலப் பொருத்தம். 
ஞானசார தேரர்  இஸ்லாத்தின் புனித வேதமான அல்குர்ஆனத் தடைசெய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி இருப்பது. இரண்டாவதாகப் பாராளுமன்றத்தில் ஷரிஆ சட்டத்தை முன்வைத்துப் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் உரையாற்ற விளைந்த போது அவரைப் பேச விடாமல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டுக் குழப்பி இடையூறுவிளைவித்திருப்பது 

இந்த இரண்டு விடயங்களையும் பார்க்கும் போது ஒரு ஆட்சிமாற்றம்தான் புரட்சிகரமான மாற்றம் என்று கருதிவிட முடியாது. இனவாதத்திற்கெதிராகப் பேசி பேசியே ஆட்சி மாற்றத்திற்கான குரலினை வலுவாக எழுப்பியவர்கள், ஆட்சிபீடமேறியதும் அவ்வினவாதத்திற்கெதிராக எடுத்த நடவடிக்கைதான் என்ன? அல்லது இனவாதத்திற்கெதிரான அவர்களின் நிலைப்பாடுதான் என்ன? என்பதில் இன்னும் மயக்கம் இருக்கதான் செய்கின்றது. ஆட்சிமாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஆயுதமாகப் பயன்படுத்திய ஆக்ரோசமான பேச்சுக்கள் அல்லது ஆட்சிமாற்றத்திற்கான காரணங்களாய் முன்வைத்த விடயங்கள் தொடர்பில் ஆட்சிமாற்றத்தின் பின்னர் மௌனம் காப்பது என்பது அரசியல் தார்மீகமான விடயமாகாது. 

உதாரணமாகக் கெசினோவுக்கு எதிராகப் பேசப்பட்ட பேச்சுக்கள் எல்லாம் இப்போது எங்கே? கெசினோவுக்கு எதிராகப் பேசிப் பேசியே ஆட்சி மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்திய வாய்களெல்லாம் இப்போது எங்கே? கெசினோ தொடர்பான அவர்களின் நிலைப்பாடுதான் என்ன? ஆகவேதான் ஆட்சி மாற்றம்தான் புரட்சிகரமான மாற்றமாகாது என்று சொன்னேன். 

ஜனநாயகம் என்ற பார்வையில் பார்க்கின்ற போது செமித்திய மதங்களுக்கும் பௌத்த தர்மத்திற்கும் இடையில் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கின்றது. செமித்திய மதங்களின் வேதக் கருத்துக்கள் என்பது முற்றுப்பெற்றது, கேள்விக்குட்படுத்த முடியாதது. ஆனால் பௌத்த தர்மம் அப்படியானதல்ல. கௌதம புத்தர் ஒரு பெருஞ் ஜனநாயக வழியைத் தனது போதனைகளில் திறந்து வைத்துள்ளார். அவை முற்றுப் பெற்றதாக அவர் வலியுறுத்தவில்லை. இலங்கை அரசியலமைப்பு பௌத்த தர்மத்திற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருந்தாலும் அதன் கருத்தியல் விழுமியங்களைத் தன்னகத்தே கொண்ட அரசியலமைப்பாக இல்லை. பௌத்த தர்மத்தின் அடிப்படையிலான அரசியலமைப்பல்ல இப்போது இலங்கை கொண்டிருக்கும் அரசியலமைப்புச்சட்டம்.

ஞானசார தேரர் அல்குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என்று கருத்துச் சொன்ன போது அதை தமக்கெதிரான கருத்தாகப் பார்க்காமல் பௌத்த தர்மத்தின் அடிப்படையில் அக்கருத்தை முஸ்லிம்கள் பார்க்க வேண்டும். அப்படி நோக்கும் போது ஞானசார தேரர் பௌத்த தர்மத்தின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான ஒரு கருத்தைத்தான் ஞானசூனியமாக முன்வைக்கின்றார் என்பதைத் தெளிவு படுத்த வேண்டிய தேவையும் கடப்பாடும் எமக்கு இருக்கின்றது.

பௌத்தத்தைப் பாதுகாக்கின்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் சரத்துகளடங்கிய அரசியலமைப்புச் சட்டத்தினைக் கொண்டிருக்கும் இந்நாட்டிலே ஞான சாரர் போன்ற மேதவிகளின் கருத்துக்களுக்குப் பதில் அளிக்கின்ற போது மிக நுட்பமான பலவிடயங்களைக் கருத்திற்கொண்டு நேர்மையாகப் பதில் தருகின்ற சானக்கியத்தை முஸ்லிம் சமுகம் கவனத்திலெடுக்க வேண்டும். 

அதுபோலவே சுமந்திரன் அவர்கள் பாராளுமன்றில் உரையாற்ற வெளிக்கிட்டபோத இடம்பெற்ற விடயங்களையும் கவனத்திற் கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்களின் தேசிய மற்றும் சர்வதேசிய அரசியல் பின்புலம் அல்லது அது சார்ந்த அவரது அரசியல் கருத்துக்கள் என்பது குறித்துப் பேச வேறு ஒரு களத்தைத் திறக்க வேண்டும். அது வேறு விடயம் ஆனால் பாராளுமன்றில் இடம்பெற்ற நிகழ்வு குறித்துச் சொல்வதாயின் ஷரிஆ தொடர்பான அவரின் கருத்துக்கள் அனைத்தையும் முழுமையாகப் பேச வைத்து விட்டு அதற்கு பதில் அளித்திருக்கலாம். அப்படிப்பட்ட பொன்னான சந்தர்ப்பத்தை முஸ்லிம் தரப்பு நழுவ விட்டிருக்கின்றது என்பதுதான் கவனிக்க வேண்டிய விடயம். ஷரிஆ தொடர்பில் அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பதைச் சொல்லச் சந்தர்ப்பமளித்திருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரின் கருத்துச் சுதந்திரத்துக்கு ஊறுவிளைவித்துத் தடுத்திருக்கின்றார்கள். அதன் மூலம் ஒரு பொன்னான வாய்ப்பைத் தவறவிட்டிருக்கின்றார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரியது. ஷரிஆ தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் அவசியம் என்றுதான் சுமந்திரன் அவர்கள் தனது உரையைத் தொடங்கினார் ஆனாலும் அவர் அதன் பிற்பாடு என்ன சொல்ல வந்தார் என்பது தெரியாது. அதற்கிடையில் முஸ்லிம் பாராளுமனற் உறுப்பினர் இடையூறுவிளைவித்தார்கள் என்பதுதான் ஊடகங்களின் செய்தி.

ஷரிஆ என்ற கருப்பொருளில் சுமந்திரன் ஏன் பாராளுமன்றில் உரையாற்றத் தொடங்க வேண்டும் என்பதன் உள்ளார்ந்த நோக்கம் என்ன அதன் அடிப்படை என்ன என்பது மிக ஆழமாக அலச வேண்டிய ஒரு விடயம். 

ரிஸானா நபீக் விடயமும் இப்போது தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்து சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்ற சகோதரியின் விடயமும் வித்தியாசமானவை. ரிசானா நபீக் விடயத்தில் அது இஸ்லாமிய சரியத்தின் அடிப்படைகளுக்கு உட்பட்ட தீர்ப்பு என்று இலங்கை ஜம்இய்யதுல் உலமா அறிக்கை விட்டிருந்தது அவ்வறிக்கையின் 'இஸ்லாமிய சரியத்தின் அடிப்படைகளுக்கு உட்பட்ட' என்ற வார்த்தைகளை ஜம்இய்யதுல் உலமா வாபஸ் வாங்க வேண்டும் என்று ஒரு தொலைக்காட்சி நேரடி ஒலிபரப்பில் கூறிய போதும் அதற்கு எவ்வித எதிர்வினையையும் ஆற்றாமல் மௌனம் சாதித்தது உலமா சபை. மன்னராட்சி என்பதற்கு சரிஆவின் அடிப்படையில் எந்த அனுமதியும் இல்லாத நிலையில் மன்னராட்சி நிலவுகின்ற ஒரு நாடு எப்படி சரியத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியும் என்பதுதான் கேள்வி. எனவேதான் ஷரிஆ தொடர்பான மிகத்தெளிவான விளக்கங்கள் இல்லாமல் அது குறித்துக் கருத்துரைப்பது என்பது பல்வேறு விதமான சங்கடங்களைத் தோற்றுவித்துவிடக்கூடிய விடயமாகும். 

ரிசானா நபீக் விவகாரத்தில் சவுதி அரேபியாவின் இப்போதைய மன்னராட்சி விதிமுறைகளில் இஸ்லாமிய ஷரிஆவின் பெயரில் வழங்கப்பட்ட மரண தண்டனை என்னுடைய பார்வையில் பொய்களால் அழங்கரிக்கப்பட்ட அப்பட்டமான கொலை. அதில் எனக்கு மாற்றுக் கருத்துக் கிடயாது. ஆனால் ஷரிஆவின் நிலைப்பாடு இத்தகைய அநீதிகளில் இருந்து வேறுபட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ரிசானாவிற்கு மரண தண்டனையளிப்பதற்கு இஸ்லாமிய ஷரிஆவின் அடிப்படையில் மன்னராட்சி அரசு நிலவுகின்ற சவுதி அரேபியாவிற்கு எவ்விதமான அதிகாரமுமில்லை. ஷரீஆ பற்றிய புரிதலை சவுதி அரேபியா போன்ற நாடுகளின் தன்மைகளோடு இணைத்துப் புரிந்து கொள்கின்ற போது அது நிச்சயம் தவறான புரிதலாகவே இருக்கும். சிரேஸ்ட சட்டத்தரணி சுமந்திரனும் அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வெறுப்புக்குரிய பேச்சினைத் தடை செய்வதற்கான சட்டமூலத்தினை இப்போதைக்கு நிறைவேற்ற முடியாது என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்ற இவ்வேளையிலே தமிழ் முஸ்லிம் தரப்பு கருத்துச் சுதந்திரத்தைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டிய காலத்தருவாயில் இப்போது நாம் இருக்கின்றோம். என்றும் சட்டத்தரணி மர்சூம் மௌலானா கூறினார்.

ஒரு போட்டோவும் ஒரு குறிப்பும்
நான் ஜாமியா நளீமிய்யாவில் மாணவனாக இருக்கும் போது புகைப்படம் பிடிப்பது கூடுமா கூடாதா  என்று சவுதி அரேபிய அறிஞர் பின்பாஸ் அவர்களின் கருத்து ஒன்றை ஓர் அரபுச் சஞ்சிகையில் வாசித்தேன். ஆனாலும் அதை முழுமையாகப் படித்து முடிக்கவில்லை காரணம் பெரும்பாலும் கூடாது என்ற தொனியில்தான் அவர் கருத்து போய்க் கொண்டிருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் கட்டம் கட்டப்பட்ட அந்தக் கருத்துக்கு மேலே கண்ணில் குத்தும் வண்ணம் அவருடைய புகைப்படம் இருந்தது. இறுதியில் அவர் கூடும் என்றாரா கூடாது என்றாரா என்பது எனக்குத் தெரியாது (யாராவது தௌஹீத்வாதிகள் பின்பாஸ் அவர்களின் போட்டோ தொடர்பான இறுதி முடிவு என்ன என்பதை முடிந்தால் அறிவிக்கட்டும்) 

விமர்சன ரீதியாக எதையும் நோக்கும் எண்ணத்தை எனக்குள் விதைத்த பல்வேறு சந்தர்;பங்களில் இதுவும் ஒன்று. போட்டோ பிடிப்பது கூடுமா கூடாதா என்று வாதிக்கும் ஒருவர் காரணகாரியங்களை விளக்கமாகக் கூறு முயலுகையில் அவரது புகைப்படத்தையும் சேர்த்தே பிரசுரித்திருப்பது கவனிக்கவேண்டியதொன்று. அங்கு விரிவுரையொன்றும் அவசியமில்லை. குறித்த அறிஞரின் புகைப்படம் இருக்கின்றதென்றால் அது கூடும் என்றேதான் அர்த்தம். இப்படித்தான் இஸ்லாம் குறித்த நிறைய விடயங்கள் விவாதிக்கப்படுகின்றன. பின்பாஸ் அவர்கள் போட்டோ பிடிப்பது கூடாது என்று பத்வா கொடுத்திருந்தால் அது நகைப்புக்குரியது. அது போல அவசியப்படும் போது மட்டும் போட்டோ பிடிப்பதில் தப்பில்லையென்றால் குறித்த கருத்தில் அவரது போட்டோவுக்கான எந்த அவசியப்பாடும் இல்லை, அதுவும் தேவையற்றது. சரி அது அப்படியே இருக்கட்டும் சவுதி அரேபியாவில் பெய்யும் மழைக்கு இலங்கையில் குடை பிடிக்கும் கூட்டத்தின் பிரச்சினை அது.

இன்றைய சூழல் மிகவும் வேகமானது. சமுக வலைத்தளங்கள் என்ற மெகா மாஸ்டர் ப்ளானுக்குள் உலகின் பெரும்பகுதி மக்கள் சிக்கிக் கொண்டுள்ள காலம். அந்த மெகா மாஸ்டர் ப்ளானுக்குள் சமுகவலைத்தளங்கள் குறிப்பாக முகநூல் பெரும்பெரும் போராளிகளை இலவசமாக நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லப்போனால் மார்க்கப் பிரச்சாரத்திற்கென்றே அவதாரம் எடுத்த முப்திகள் கூட்டம், பத்வா வங்கிகள், ஹராம் ஹலால் வங்கிகள், அடுத்த வீட்டுப் பிரச்சனைகளைக் கண்டு கண்ணீர் வடித்துக் கதறும் அவ்லியாக் குஞ்சுகள் என்று அந்தப் பட்டியல் நீளும்.

சரி இனி போட்டோ பிரச்சினைக்கு வருவோம். அன்மையில் தாரிக் ரமழான் அவர்கள் இலங்கைக்கு வந்தார்கள் அவருடன் சேர்ந் நின்று ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள யாருக்குத்தான் விருப்பமிருக்காது. தற்கால இஸ்லாமிய உலகின் முக்கியமான சிந்தனையாளர்களுள் அவரும் ஒருவர். அந்த அடிப்படையில் ஒரு இஸ்லாமிய ஆளுமையுடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்வது தப்புமில்லைதானே. அதன்பிரகாரம் சகோதரி லறீனா அப்துல் ஹக் தாரிக் ரமழான் அவர்களுடன் நின்று ஒரு போட்டோ எடுத்து முகநூலின் முகப்புப்படமாகப் போட்டிருந்தார். அதன் பிறகுதான் சனியன் எல்லாம் ஒன்று சேர்ந்து மிஸ்டு கோல் கொடுக்க ஆரம்பித்தன. 

பத்வா வங்கிகள் புதிய அறிவிப்புக்களைச் செய்தன. இன்பொக்ஸ்; பேர்வழிகள் அட்வைஸ் அட்வைஸ்ஆகப் பண்ணித் தொலைத்தார்கள். பன்னிக் கூட்டமெல்லாம் நாய்க்குடிலுக்குள் கூடி நஜீஸ் பற்றியும் ஹராம் ஹலால் பற்றியும் வாதிக்கத் தொடங்கின. 

இயக்கப் பிசாசுகளுக்கு அன்றுதான் புது பூஸ்ட்டர் கிடைத்தமாதிரி, இந்தக் கருத்தாடல்களைப் பார்த்து கடுப்பேறி ரம்போ மாதிரி  ஒரு பெரிய துப்பாக்கியத் தூக்கிட்டுக் கிளம்புவமா என்று யோசித்த போதுதான் இப்போதைக்கு இதை எழுதுவதில்லை என்று பல மாதங்கள் தள்ளி வைத்துவிட்டு அவற்றையெல்லாம் மறந்துவிட்டு அமைதியாக இப்போது  எழுதிக் கொண்டிருக்கின்றேன். சும்மாவே நமக்கு வாய் சரியில்ல அதற்குள் இந்த நிகழ்வும் இணைந்து கொண்டால் பிரச்சினையொன்று உருவாகி நிச்சயம் அது வேறு தளமொன்றினை நோக்கி நகர்ந்து விடும் என்பதால் தான் அந்த லீவு.

சரி போட்டோ பிடிப்பது கூடுமா? கூடாதா? இந்த இஸ்லாமிய தஃவா இயக்கப் புரோக்கர்கள் என்ன சொல்கின்றார்கள்? அவனவன் நடிகரோடும் நடிகையோடும் ஏன் நாயோடும் எருமையோடும் கழுதையோடும் நின்று போட்டோபிடித்து போடும் போதெல்லாம் இவர்கள் எங்கே போனார்கள்? எவனோ ஒரு அரபிக்காரன் கொடுத்த பணத்தில் ஒரு கிணறுக் குஞ்சையும் அடி பைப்பையும் கக்கூசையும் கட்டி அதற்கு திறப்பு விழா வேறு வைத்து படம்படமா பிடித்துத்தள்ளி வந்த காசுக்குக் கணக்குக் காட்டுறான், ஆடுமாட அறுத்து இரத்தமும் சதையுமா பேனர் வைத்து போட்டோவாப் பிடித்துத் தள்ளுகிறான் ஏழை எளியதுகளன் கியூவில வைத்து ஒரு பார்சல் இறைச்சியக் குடுத்து வெக்கமில்லாமப் படமெடுத்து காசு கொடுத்தவனுக்கு விசுவாசத்தோட அனுப்பி வைக்கின்றான் இதையெல்லாம் பண்ணிக் கொண்டும் அவற்றில் ஏதோவொரு விதத்தில் பங்கு பற்றிக் கொண்டும் கேட்பதற்கு ஆள் இல்லாத தெனாவட்டுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பூஞ்சனம் பிடித்த புச்சிக் கொட்டைகள் கருத்துச் சொல்லவும் பத்வா கொடுக்கவும் இன்பொக்ஸ் அட்வைஸ் பண்ணவும் கிளம்பியிருப்பதுதான் வேடிக்கை.

இஸ்லாமிய ஆடைவிழுமியங்களுக்குள் நின்று விலாகாது இன்று வரையும் கல்வியிலும் தனது தொடர் முயற்சிகளைச் செய்து கலாநிதிக் கற்கையை ஆரம்பித்திருக்கும் சகோதரி லறீனா அப்துல் ஹக் என்ற ஆளுமைக்கு முன்னால் தீவிர வாசிப்பாளிக்கு முன்னால் ஒரு ஆய்வாளருக்கு முன்னால் எந்தப் பிடிமானத்துடன் நீங்கள் போய் நிற்கப் போகின்றீர்கள்?

நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் தவளை பிராண்ட் இஸ்லாத்திற்கு அப்பால் நின்று சிந்தித்தும் எழுதியும் கொண்டுமிருக்கும் சகோதரிக்கு முன்னால் நீங்கள் சீரிய சரியான கருத்துக்களோடு போய் நில்லுங்கள் அவர் அதைச் செவிமடுப்பார். அதை விட்டு விட்டு காட்டுக் கூச்சல் போட்டு மிம்பர் மேடைகளில் பலாய் கழுவும் அறைவேக்காட்டுத்தனத்தை நிறுத்துங்கள் இல்லாவிட்டால் நிறுத்த வேண்டி வரும். ஏனெனில் மார்க்கத்தில் தெளிவில்லாமல் நான் எழுதவரவில்லை. நபிகளார் போதித்த மார்க்கத்தையும் அதன்பிரகாரம் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களையும் தேடிக்கொண்டிருக்கும் எமக்கு அத்தகையவர்களை மதிக்கவும் தெரியும் போலிகளை தோலுரித்துத் தொங்கவிடவும் தெரியும்.

சரி இப்ப சொல்லுங்க போட்டோ பிடிப்பது கூடுமா கூடாதா?

Tuesday, January 5, 2016

மனதிற் பட்டது - 12 - சட்டத்தரணி தவராசா மனிதம் கொண்ட பேரியக்கம் - 01


தமிழ்மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்  - 12
சட்டத்தரணி தவராசா 
மனிதம் கொண்ட பேரியக்கம் - 01

சட்டத்தரணிகளில் வெகு சிலரைத்தான் எனக்குப் பிடிக்கும். பெயர் குறிப்பிடுவதாக இருந்தால் சட்டத்தரணி ரவுப், சட்டத்தரணி காண்டீபன், சட்டத்தரணி மர்சூம் மௌலானா, சட்டத்தரணி ராஜகுலேந்திரா, சட்டத்தரணி சுகந்தி ராஜகுலேந்திரா,  சட்டத்தரணி ரூமி, இப்படி இன்னும் சிலரை மட்டுமே.   பல சட்டத்தரணிகளைப் பிடிக்காமல் போவதற்கு  நிறையக் காரணங்கள் இருக்கின்றன.

 10.01.1952ஆம் ஆண்டு புங்குடுதீவில் பிறந்து சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று 1981 முதல் அவர் முக்கியமான நபராக அடையாளப்படுத்தப்படக் காரணம் அவரது தைரியமும் மனிதாபிமானமும்தான். எதற்குமஞ்சாத தைரியசாலிகளையும் எதையும் எதிர் கொள்ளும் நெஞ்சுரமிக்கவர்களையும் மிக விரைவிலேயே எனக்குப் பிடித்துப் போகும். அதிலும் குறிப்பாக உண்மைக்காகப் போராடுதல் என்பது மிக முக்கியமான விடயம். 

ஒரு கட்டத்தில் தவராசா என்ற பெயர் ஒர மீட்பரின் ஸ்தானத்தில் முகாமிட்டிருந்ததையும் நான் அறிவேன். பலருக்குள்ளும் அந்நம்பிக்கை துளிர்விடக் காரணம் யாராலும் திட்டமிட்டுக் கற்பிக்கப்பட்டதல்ல அது இயல்பாக உருவாகி விட்;;டிருந்தது. சிலவிடயங்கள் அப்படித்தான் அற்புதமான கவிதை போல மனதில் இடம்பிடித்துவிடும், கவிதை ரசிகனாக இராத போதும். 

தவராசா என்ற பெயர் எப்போதுமே எனக்குள் சிம்மாசனமிட்டிருந்த பெயர். வே.சு.கருணாகரண் அவர்கள் எழுதிய கனவுகளும் நினைவுகளும் புத்தக வெளியீட்டுவிழாவில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட போது நான் புத்தகத்தின் திறனாய்வுரைக்காக அழைக்கப்பட்டிருந்தேன். அப்போதுதான் அவரை முதன் முதலாக நேரடியாகக் காண்கின்றேன்.  ஒரே மேடையில் அவருடன் அமர்ந்திருப்பது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. கைகுலுக்கிக் கதைப்பதற்குக்கூட நான் பின்வாங்கினேன். மிகவும் மதிக்கும் ஒருவர் நமக்கு நேரெதிர் தோன்றுகையில் அப்படியே உரைந்து போய் இருப்பது இயல்புதானே. அதனாலேயே மேடையில் அமர்வதை பெரும்பாலும் தவிர்த்துக் கொண்டேன். 

நாம் அதிகம் நேசிக்கும் இலக்கியப் படைப்பாளியை நேரடியாக நமக்கு முன்னால் காண்கின்ற போது இரண்டு அடி தள்ளிக் கால்கள் தாமாகப் பின்னகருமே அத்தகைய மரியாதைக்கு முன்னால் வார்த்தைகள் மௌனமாக மெய்சிலிர்த்து எமக்குள் குடிகொள்ளும் அமைதிக்கு முன் நாம் சரணடைந்திருப்போம். மனதில் பெருமிதம் மட்டுமே நிறைந்திருக்கும். அத்தகைய உணர்வுதான் சட்டத்தரணி தவராசாவைக் கண்ட போதும் ஏற்பட்டது.

எல்லாவற்றுக்குமப்பால் தமிழர்களுக்குத் தலைமையை வழங்குமளவுக்குப் புதைந்து கிடக்கும் ஆளுமையை வெளிக்காட்டித் தம்பட்டமடித்து ஆரவாரிக்கத் தெரியாத அமைதியான சுபாவம் அவருக்கு எங்கிருந்து வந்தது என்று நான் எப்போதும் யோசிப்பதுண்டு. 

அவரது சிந்தனைகளையும் அவரது அறிவையும் நல்லெண்ணங்களையும் ஏன் இந்த சமுதாயம் முழுமையாகப் பயன்படுத்தத் தெரியாது அமைதியாகக் கடந்து போகின்றது என்பது இன்னும் புரியாத புதிர்தான். இப்போதுள்ள அரசியல் சக்கரத்தின் ஆர்ப்பாட்டமிக்க சுழலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் மிக நிதானமாகப் பயணப்படும் அவருக்குச் செங்கம்பளம் விரிக்க இளைஞர் குழாம் தயாராக வேண்டும். 

நாம் எத்தனையோ பேரைக் கடந்து போகின்றோம். ஆனால் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஆகர்சனம் வெகு சொற்பமான சிலருக்குத்தான் வாய்க்கும். அந்த ஈர்ப்பும் ஆகர்சனமும் அவர்களின் தூய்மையான உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்து வெளிப்பட்டு நம்மைக் கவர்ந்து சொக்கச் செய்வதாகும். அதில் போலியோ அல்லது நடிப்பு கலந்த பிரமாண்டத்தைக் கற்பிக்கும் செயற்கையான எதுவுமோ கலந்திருக்காது. அத்தகையவர்கள் எதற்காகவும் எவருக்குப் பின்னாலும் வலிந்து செல்லமாட்டார்கள். காலம் அவர்களை நமக்கு அடையாளங்காட்டும் அப்போது அவர்களின் கரங்களைப் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டும். அச்சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் நாமே நஷ்டவாளிகள். 

தரமான மனிதர்களின் தலைமைக்குக் கீழ் நாமெல்லாம் நடைபயிலும் போது நம் நெஞ்சில் உட்காரும் திமிருக்கு ஒரு மதிப்பீடு இருக்காது. அந்த முறுக்கு நம்மை நெஞ்சை நிமிர்த்தியபடி எதுவானாலும் எதிர்கொள்ள உந்தித் தள்ளும். வரலாறு சில இடங்களில் அடிக்கோடிடப்பட்டு எழுதப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களைப் பார்த்தால் அனைவரும் வாழவேண்டும் என்ற அடிப்படை எண்ணத்தால் புடம்போடப்பட்ட தலைமைகளின் செயற்பாடுகளால் விளைந்த விளைச்சலை சகல மக்களும் அனுபவிக்கும் தருணங்களாகத்தான் இருக்கும்.நேர்மறை 15 கேள்விகளுக்கு நாச்சியாதீவு பர்வீன் பதில்கள்

தமிழ் மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் இடம்பெறும் நேர்மறை 15 கேள்விகளுக்கு எழுத்தாளர் நாச்சியாதீவு பர்வீனின்
அவர்களின் பதில்கள்

01. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?  
பலரையும்விடத் திறமைமிக்க ஒரு மனிதன் என்று நான் நம்புகின்றேன்.

02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்? 
என் முரண்பாடுகள் ஒரு போதும் சுயநலத்திற்காக இருந்ததில்லை அதனால் அது கணக்கில் இல்லை

03. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது? 
இலக்கியவாதி அப்படி யாராவது இருக்காங்களா. வீம்புக்காக குழாயடிச் சண்டை போடும் நபர்கள்தானே அதிகம்.

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
மற்றவர்கள் எழுதும் அளவு  உயரத்திற்கு இன்னும் போகவில்லை

05. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
மனதிற்குப் பிடிக்கின்ற போது படைப்புக்களைப் பற்றியும் படைப்பாளிகள் பற்றியும் நிறையவே  எழுதி இருக்கின்றேன்.

06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்?
  முகமூடி போடாதவர்களை

07. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது? 
இப்போது வரும் ஐம்பது வீதமான புத்தங்கள் அப்படித்தானே இருக்கின்றன.

08. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது? 
நிறையப் புத்தகங்கள் அப்படியான உனர்வைத் தந்திருக்கன்றன. சரியாகத் தேர்வு செய்கின்றபோதுதான் அதை அனுபவிக்க முடியும்.

09. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை? 
யாத்ரா , மல்லிகை

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
ஒரு படைப்புக்கு விலை பேசுவது பெத்த குழந் தையை விலை பேசுவது போன்றது

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்? 
ஓஹ் அதுவா!!! கிடைத்தால் நல்லது அப்போது அதை வரவேற்போம்


12. உங்களுக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது? 
தாய் மொழியிலேயே இன்னும் தவிக்கிறேன்

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து? 
இப்போது பலரும் எழுத வாய்ப்பேற்பட்டு இருக்கின்றது. ஆயினும் அனைத்தையும் குப்பைகள் என்று புறக்கணிக்க முடியாது.

14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்? 
ஒரு கவிதை மற்றும் இரண்டு ஹைக்கூக்களின் சொந்தக்காரன் நான்

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்? 
இரண்டு மூன்று பேர் இருக்காங்க. எப்படிக் குத்துவது என்றுதான் யோசிக்கின்றேன்.

மனதிற் பட்டது - 11 மக்கத்துச் சால்வை ரிஷி மூலத்தைத் தேடி.

தமிழ்மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்  - 11

மக்கத்துச் சால்வை 
ரிஷி மூலத்தைத் தேடி...

அவ்வப்போது சில திருடர்கள் வசமாக மாட்டிக் கொள்வார்கள். வாங்கிக் கட்டியும்கொள்வ துண்டு. இங்கு பெரிய இடம் சின்ன இடம் என்றெல்லாம் கிடையாது. திருடு பிடிபட்ட பின்னர் அந்தத் திருடன் சொல்வான் பாருங்கள் ஒரு நியாயம் அதுதான் செம ஹைலைட்.

இலக்கியத்திருட்டுக்கள் அவ்வப்போது நடைபெறும். பெரும்பாலும் திருடர்கள் தாங்கள் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்ற நினைப்பில்தான் எப்போதும் இருப்பர். ஆனால் காலம் ஒரு கட்டத்தில் அவர்களை அப்படட்டமாகக் காட்டிக் கொடுத்துவிடும். அதை யாராவது ஒருவன் வெகு சுலபமாகச் செய்து விடுவான். 

ஒரு பழம்பெரும் படைப்பாளி கென்யச் சிறுகதை ஒன்றைத் தழுவி எழுதிவிட்டு தனது படைப்பாகப் பெயரைப் போட்டுக் கொண்டார். கென்யச் சிறுகதைதானே என்று இது யாருக்குத் தெரியப் போகின்றது என்பது அவரது நினைப்பாக இருந்திருக்கும். அன்மையில் காலச்சுவட்டில் கூட அப்படியொரு தழுவல் கதை ஒரு படைப்பாளியின் பெயரில் வெளிவந்திருந்தது. தழுவலைத் தழுவல் என்று போட்டுவிட்டால் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் தழுவி எழுதிவிட்டு தனது பெயரைப் போட்டுக் கொள்வதுதான் துரோகம், அபத்தம்.

கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசம் இலக்கியப் படைப்பாளிகள் பலரைத்; தந்த பிரதேசம். வை.அஹமது, ஏ.ஜியெம். சதக்கா, அஸ்ரப் ஷிஹாப்தீன், எஸ்.நளீம், அமர், ஹஸன், ஷாமிலா செரீப், ஜிப்ரி ஹாஸன் ஆபிதா செரீப், அறபாத், இஸ்மாயீல், யூ.எல்.எம்.நஜீப், ஏபியெம்.இத்ரீஸ், இப்படி அந்தப் பட்டியல் நீளும். இங்குதான் எஸ்.எல்.எம்.ஹனீபா என்பரும் வசிக்கின்றார். அவர் எழுதிய சிறுகதைதான் மக்கத்துச் சால்வை.

பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் முஸ்லிம் கலைக்கூறுகள் இலக்கியத்திற்குள் கொண்டுவரப்படுவது பற்றிப் பேசும் போது அடிக்கடி நினைவுகூரும் கதைதான் மக்கத்துச் சால்வை. சிலம்படி அக்கதையின் பிரதான கதையம்சமாகப் பிணைந்திருப்பதே அதற்குக் காரணம். எனது மண்ணில் அப்படி சிலம்படிப் போட்டிகள் முன்னய காலத்தில் இடம்பெற்றதுவா என்ற தேடலைச் செய்யத் தூண்டியதும் பேராசியரின் கூற்றுதான். அதன்பிரகாரம் மேற்கொண்ட ஆய்வில் சில வயது போன மனிதர்களைச் சந்தித்து அப்படியொரு கலைக்கூறு நம் மண்ணில் இருந்து எப்படி மறைந்து போனது என்பது குறித்துத் தேடிய போதுதான் சிலதகவல்கள் கிடைக்கப்பெற்றன. 

அன்னாவிமார் இருந்தார்கள்தான் ஆனால் மக்கத்துச் சால்வை சிறுகதை சொல்வது போல தமிழ் சினமாவில் அல்லது மலையாள சினமாவில் வருமளவுக்கு சிலம்படி என்பது ஒருவர் தனது பலத்தை நிருபிப்பதற்கான அடிப்படைகளைக் கொண்ட ஒரு கலைக் கூறாக இருக்கவில்லை. பெருநாள் தினங்களில் மற்றும் மீலாது தினங்களில் பொல்லடி நிகழ்வுகள் அரங்கேறும், நாடகங்கள், பக்கீர் பாவா பைத்துகள் போன்றனவும் இடம்பெற்ற நினைவுகள் எனக்கும் இருக்கின்றன. ஆனால் சிலம்படிதான் இன்னும் நினைவில்தட்டுப்படவில்லை.

அப்படியிருக்கையில் எஸ்எல்எம் ஹனிபா எங்கிருந்து இந்தக் கதைக்கான மூலத்தைப் பெற்றுக் கொண்டார் என்பது குடைந்து கொண்டே இருக்கும் கேள்வி. அதற்கான தேடலில் நிறையவே ஈடுபட வேண்டிய தேவையை எனக்குள் உண்டாக்கியதும் ஹனிபா மாமாதான். 

எனது சாச்சியைத் திருமணம் முடித்திருப்பவர் முகைதீன் குட்டி இஸ்மாயீல் குட்டி, இவர் ஒரு மலையாளி. கேரளத்துக் கலைக்கூறுகள் பலதையும் எனக்கு அறிமுகப்படுத்தியர். அவைகள் குறித்துக் கதைகதையாகச் சொன்னவர். சிலம்பாட்டம் அங்கு ஒரு போட்டியாகவே இடம்பெறும், கம்பு சுத்துவதில் வீட்டுக்கு வீடு வீரன் இருப்பானாம். அடிக்கடி போட்டிகள் இடம்பெறுமாம். எல்லாவற்றுக்கும் மேல் அவரது வாப்பாவும் ஒரு சீனக்கலை, வர்மக்கலை, சிலம்படி வீரன்தானாம், சாச்சாவும் கூட அப்படியேதான்...

தீபம் என்றொரு சஞ்சிகை வந்தது. இதில் எழுபது அல்லது என்பதுகளில் இத்தகைய கலைக்கூறுகளில் சிலம்படியைக் கதையம்சமாகக் கொண்ட ஒரு மலையாளச் சிறுகதை இடம்பெற்றிருந்ததாகச் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் எனது நினைவில் முதலில் வந்தது எஸ்எல்எம் ஹனிபாதான். அவரிடம் இப்போதும் பழைய தீபம் இதழ்கள் மிகவும் பத்திரமாக இருக்கின்றன.  அவரைத் தவிர வேறு யாரிடமும் அவ்விதழ்கள் இருக்காது என்று சொல்வதற்கில்லை தேடினால் அவை கிடைக்கும். அக்கதையில் இருந்து பிறந்ததுதான் மக்கத்துச் சால்வையா என்ற கேள்விக்கு விரைவில் பதில் தெரியவரும். 

இப்பணியை இலகுவாக்கிட பழைய தீபம் இதழ்கள் கைவசமிருப்பவர்கள் தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்- 0094 777 617 227 அல்லது simpro2002@gmail.com 

நேர்மறை 15 கேள்விகளுக்கு நந்தினி சேவியர் பதில்கள்

தமிழ் மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் இடம்பெறும் நேர்மறை 15 கேள்விகளுக்கு எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்களின் பதில்கள்

1. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
இயல்புவாழ்வில் சுழலும் ஒரு சராசரி மனிதன் மகனாக,தந்தையாக, கணவனாக என்று அனைத்திற்குமப்பால் ஒரு வாசகனாக இலக்கியவாதியாக

2. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
எனது வாழ்வே முரண்பாட்டுக்குள்தான் இருக்கின்றது. எனவே முரண்பட்டவர்களுக்கு எண்ணிக்கையில்லை.

3. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
முற்போக்கு இலக்கியவாதிகளிடையே ரஷ்ய சீன முரண்பாடு வந்து நாங்கள் இரண்டாக உடைந்த போதும் நட்பை உடைக்காமல் ஒரே கொள்கையில் இயங்கிய நிகழ்வு எனக்கு பிடித்தது.

4. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
நான் இடது சாரி எழுத்தாளன். என்னைப் பலர் புறக்கணித்த போது பலர் என்னை அங்கீகரித்தார்கள். எதிரணி உட்பட, எனது எழுத்துக்கள் தனித்தொகுப்பாக வந்துள்ளது. அதில் பெயர் விபரங்கள் இருக்கின்றன.

5. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
புதிய எழுத்தார்களில் இருந்து எனது சமகால எழுத்தாளர்கள் வரை பலரைப்பற்றியும் பலரது படைப்புக்கள் பற்றியும். அத்துடன் எழுதுவதற்கு அப்படைப்பு என்னைக் கவர்ந்திருக்கவும் வேண்டும்.

6. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
பேச்சுக்கும் எழுத்துக்கும் வித்தியாசமின்றி வாழ்கின்ற எனது கொள்கைட்;கு முரண்பட்டவர்களை

7. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
ஒன்றா ரெண்டா எடுத்துச் சொல்ல.

8. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
நான் ஒரு இடதுசாரி, கலைத்துவமிக்க இடதுசாரி இலக்கியங்களை வாசிக்கும் போது இந்த உணர்வு ஏற்பட்டது. அதுவே என்னை எழுத உந்தித்தள்ளியது.

9. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
எனக்கு பிடித்தவைகள் எல்லாமே நின்று போய்விட்டன.

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
ஒரு படைப்பின் பணமதிப்பீட்டை விட அது எந்தளவுக்கு வாசகர்களிடம் சென்றடைதல் அல்லது அங்கிகாரம் பெறுதல்  என்பதில்தான் அதன் பெறுமதி தங்கியிருக்கின்றது.

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
பரிசை நோக்கிய எழுத்து என்னளவில் உடன்பாடற்றது. ஒரு குழுவினால் மட்டும்  படைப்பின் தரத்தை தீர்மானிக்க இயலாது. பரிசுகள் படைப்பாளனைத் திருப்திப்படுத்தவே வழங்கப்படுகின்றன.பரிசுபெறாத எத்தனையோ சிறந்த புத்தகங்கள் இருக்கின்றன. அது ஒரு நிதியுதவி;.

12. உங்களுக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
தமிழைத் தவிர வேறொன்றிலுமில்லை. பாண்டித்தியம் என்பது கேள்விக்குறி.

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
பலர் நோயாளிகள் என்பதை மறந்து எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். நான் ஒரு இருதய நோயாளி. பல எழுத்துக்களால் எந்நேரமும் நான்  பாதிக்கப்படலாம். சுதந்திரமான பல எழுத்து வீரர்களை அது உருவாக்கி இருக்கு.


14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
நான்,மனைவி, ஒரு மகள்-ஒரு மகனை அநியாயமாக இழந்திருக்ககிறேன். அந்த இழப்பில் இருந்து இன்னும் விடுபடவில்லை.

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
அதற்கு இந்த இரண்டு கைகளும் போதாது. அவ்வளவு பேருக்கு குத்த வேண்டிக் கிடக்கு.

நேர்மறை 15 கேள்விகளுக்கு எஸ். எழில் வேந்தன் பதில்கள்


தமிழ் மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் இடம்பெறும் நேர்மறை 15 கேள்விகளுக்கு எஸ். எழில் வேந்தன்  அவர்களின் பதில்கள்


உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
1.பிழைக்கத் தெரியாத, எளிதில் ஏமாற்றப்படக்கூடிய, சுயபுராணம் பாடத் தெரியாத ஒருவன்

நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
2. முரண்பாடு இல்லாத வாழ்க்கையே இல்லை.  நிறையப் பேருடன்.

இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
3. நீலாவணன் – அண்ணல் வெண்பாச் சமர். இக்கால இலக்கியவாதிகளுக்கு அதுபற்றித் தெரியுமோ  நானறியேன்.

உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
4. பலர் தொட்டுச் சென்றிருக்கிறார்கள். மல்லிகை அட்டைப்படத்தில்  என்னைப்பற்றி எழுத ஆவல்கொண்ட அதன் ஆசிரியர்  யார் எழுதினால் விரும்புவீர்களெனக் கேட்டார். அஷ்ரப் ஷிஹாப்தீன் என்றேன். என் ராசி. பத்திரிகை வெளிவருவதே நின்றுவிட்டது.

நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
5. கவிஞர்களான மகாகவி, என் தந்தையார் நீலாவணன், சேரன், முகத்தார் ஜேசுரத்தினம், பேராசிரியர் சபா ஜெயராசா, எனப்பலரைப் பற்றி எழுதியிருக்கிறேன்.. ஒலிபரப்புப் பற்றி, வானொலி நாடக நூல்கள் பற்றியும் எழுதியுள்ளேன். எழுதப்  பல விஷயங்கள் உள்ளன.  என் சோம்பேறித் தனத்தால் தாமதமாகிக்கொண்டே போகிறது.

யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
6. என்  தந்தையாரை.

இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
7.வேண்டாமே. சொன்னால் எனக்கு நெருக்கமான பலரின் நட்பை இழந்துவிடுவேன்.

இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
8. பழையவர்கள் பலர் உள்ளனர். சமகாலத்தில் இலங்கையில் உமா வரதராஜன், யோ. கர்ணன், அகிலன் , அஷ்ரப் ஷிஹாப்தீன் , முஸ்டீன் (முகஸ்துதிக்காக அல்ல) ஆகியோரின் எழுத்துகள் பிடிக்கும். ஒன்றுக்கொன்று வித்தியாசமான படைப்புகளென்பதால்  தனியே ஒன்றை மட்டும் சொல்ல மனது மறுக்கிறது.

உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
9. ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்து வந்த தீபம். இப்போது அப்படியொன்று வருகிறதா? என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை.

உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
10. இலக்கியங்களுக்கான பொருளாதார மதிப்பு கொடுப்பவரின் மனதையும், மடியையும் பொறுத்தது.  என் தந்தை (நீலாவணன்) கவிதையொன்றுக்கு பத்திரிகைகள் அப்போது  கொடுத்த சன்மானம்  15 ரூபாய். எனது முதலாவது மெல்லிசைப் பாடலுக்கு ஒருவர் 400 ரூபா கொடுத்தார்.  என் சம்பளமே அப்போது 450 ரூபாய்தான்.
 விலைகூறி விற்க இலக்கியம் ஒன்றும் கடைச்  சரக்கல்ல. இதுநாள் வரை நான் ஒன்றுக்கும் விலை வைக்கவில்லை. ஆகவும் மோசமான கொடுப்பனவுகளைத் திருப்பிக் கொடுத்துள்ளேன். புண்ணியமாவது கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில்.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
11. தமிழ் இலக்கியங்களுக்கு நோபல் பரிசா? சர்வதேச விருதுகளுக்குச் சந்தைப்படுத்தல் அவசியமென்கிறார்கள். அச்சிட்ட 500 புத்தகங்களை விற்கவே நமது இலக்கியவாதிகள் மூச்சு வாங்குகிறார்கள். இதில் சந்தைப்படுத்தலா?

உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
12. பாண்டித்தியமென்றில்லாவிட்டாலும் தமிழ் ஓரளவு உண்டு., ஆங்கிலம் சிங்களம் (சரியாக)மொழிபெயர்க்கும்  அளவுக்குண்டு.

முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
13 இணையம் நம்மால் அடைய முடியாத சில நல்ல எழுத்துகளையும் எழுத்தாளர்களையும்  அறிமுகம் செய்துள்ளதை ஒப்புக்கொண்டேயாகவேண்டும்.

உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
14. ஒரு மனம், இரு மணம், மூன்று குழந்தைகள், நன்கு சகோதரங்கள்.

எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
15. என் இரு கைகள் போதாது என்பதால் அவர் – அவர்கள் தப்பித்தார்கள். பிழைத்துப் போகட்டும்.
மோசடி இலக்கியவாதிகள் முகத்தில் குத்தாது விட்ட எனக்கு நானே குத்திக்கொள்ள விருப்பம்.

மனதிற் பட்டது - 10 - ரஹ்மான் ஹஸன் மற்றும் ட்ரிம் ஆர்ட்ஸ்

தமிழ்மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்  - 10

'காற்றுச் சுமந்து வரும் கனவுகள்' என்று ஓர் ஓடியோ பாடல் அல்பம் 2003ஆம் ஆண்டு வெளிவந்தது. அதை 'ட்ரிம் ஆர்ட்ஸ்' என்ற நிறுவனம் வெளியிட்டிருந்தது. அரபுப் பாடல்களின் மெட்டு மாதிரியில் இருந்து தமிழ் வடிவம் பெற்ற அப்பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் அடிக்கடி முனுமுனுக்கப்படும் நிலையினையும் எட்டியிருந்தது. இதற்கு முதல் இஸ்லாமியப் பாடல் வகையறாக்கள் பல வெளிவந்திருந்தாலும் 'காற்றுச் சுமந்து வரும் கனவுகள்' அல்பம் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் வித்தியாசமானது. உயிர்ப்பானது. 
வரகாபொலையைச் சேர்ந்த ரஹ்மான் ஹஸன் இந்நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் ஒருவர். புதுமைகளைத் தேடிப் பயணிக்கும் இவர் ஓர் இசைப்பிரியரும் கூட.

இஸ்லாமிய மாதிரிகளைத் தேடும் இளைஞர் கூட்டத்திற்கு கவர்ச்சிகரமான ஈர்ப்புமிக்க பாடல்களை அளிப்பதில் இந்தோனேசியவைச் சேர்ந்த ஹதாத் அல்வி மற்றும் ஷூலிஸ் ஆகியோரின் பாடல்கள் வெற்றிபெற்றன என்றுதான் சொல்ல முடியும். அவர்களின் பாடல் மாதிரிகளைக் கொண்டு தமிழில் பாடல் இயற்றும் எண்ணம் யாருக்கும் வந்திருக்காத வேளை ரஹ்மான் ஹஸன் மற்றும் அஹ்சன் ஆரிப் அத்துடன் நுஸைர் நௌபர் ஆகிய மூவரும் இணைந்து அவ்வெண்ணத்தை செயல்வடிவமாக்கி வெற்றிபெறச் செய்ததன் அறுவடைதான் 'காற்றுச் சுமந்து வரும் கனவுகள்'

2003ஆம் ஆண்டு இம்மூவரும் ஜாமியா நழீமிய்யாவில் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள். ஜாமியாவின் நிருவாகம் நளீமீக்கள் எல்லாவிதத்திலும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் எதிர்பார்த்த அளவுக்கு செயற்பாட்டுத்தளத்தின் கதவுகளை இறுக மூடியிருந்த தருனம். அதனால் 'காற்றுச் சுமந்துவரும் கனவுகள்' அல்பத்தின் தயாரிப்புப் பணிகள் மிகவும் ரகசியமாகவே இடம்பெற்றுக் கொண்டிருந்தன. 

எனது வகுப்புத் தோழன் கிண்ணியாவைச் சேர்ந்த நாஸிக் மஜீட் அதில் ஒரு பாடல் எழுதியிருந்தான் ஆனால் அல்பம் பார்க்கும் வரை எங்களில் யாருக்கும் அது தெரிந்திருக்கவில்லை. அந்தளவுக்கு ரகசியம் பேணப்பட்டது. அத்துடன் அப்போது தாருல் அர்க்கமாக இருந்து இப்போது ஜமாஅத்துஸ் ஸலாமாவாக பெயர்மாற்றம் பெற்றிருக்கும் இயக்கப் பரப்பிற்குள்தான் எல்லாமும் நிகழந்தேறின.

மறுமொழி என்றொரு சஞ்சிகையையும் ஜெஸார் போன்றவர்களுடன் இணைந்து ரஹ்மான் ஹஸன் வெளியிட்டார். சுயம் என்று தரமானதொரு பத்திரிகை வெளிவந்தது. எல்லோருடைய எதிர்பார்ப்பையும் தூண்டிவிட்டு முதலாவது இதழோடே அது காணாமல் போயிற்று அது போலத்தான்  மறுமொழியும் ஒரு இதழுடன் நின்று போயிட்டு. ரஹ்மான் ஹஸனின் தேடலும் வாசிப்புத்தளமும் ரசனையும் பொது ரசனையில் இருந்து வேறுபட்டது. 

2002ல் ஷெய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த தயாரிப்பகம் ஆரம்பிக்கப்பட்டு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் விதையாய் விழுந்தது காற்றுச் சுமந்து வரும் கனவுகள். மருதானை சாஹிராக் கல்லூரியில் 2003 செப்தம்பர் 26ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்டபோது. அந்தப் பாடல்களைக் கேட்டவுடனேயே ளுஐஆ-Pசழனரஉவழைn அடுத்து என்ன செய்ய வேண்டு;ம் என்ற முடிவுக்கு நான் வந்திருந்தேன். 

புலிகளுக்கு எதிராக அப்பாடல்களில் சில வரிகள் இடம்பெற்றிருந்தன. பகைப்புலத்திலும் ஆத்திர வெளிப்பாடாகவும் நேரடியாகச் சுட்டாமல், புலிகள் மீதான் அச்சத்தினால் அமுங்கிப் போய், சமுகத்தின் மேல் கொண்ட பற்றினால் மேலெழுந்த வசனங்கள் அவை. ஏனெனில் அப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தைரியமாக எழுத முஸ்லிம்களுக்கு திராணி இருக்க வில்லை, பாடல்களில் சாடையாகப் புலிகளை உரசிச் செல்லும் வசனங்கள்தான் ஏன் எல்லோரும் இவர்களுக்கு இந்தளவு பயப்பட வெண்டும் என்ற கேள்விகளை எனக்குள் எழுப்பின.. அப்போதே சட்டென எடுக்கப்பட்ட முடிவுதான் அக்கினிச் சுவாசம் என்ற பாடல் அல்பம். 

எனது அக்கினிச் சுவாசம் அல்பத்திற்கான வீடியோ எடிட்டிங் வேலைகள் அனைத்தையும் நேர்த்தியாகச் செய்து அதன் அட்டைப்படம் உட்பட அனைத்து டிசைனிங் வேலைகளையும் செய்து விழாவிலும் இறுதிவரை என்னோடு துணையாக நின்றது மட்டுமல்ல ளுஐஆ- Pசழனரஉவழைn னின் ஸ்திரத்திற்கும் எந்தவிதமான எதிர்பாhர்ப்புகளுமில்லாது செயற்பட்டவர்தான் ரஹ்மான் ஹஸன்.

இப்போது அவர் எந்தளவுக்கு வளர்ந்நிருக்கின்றார். என்னென்ன தறைகளில் புலமை பெற்றிருக்கின்றார் என்பது குறித்து இனித்தான் தேடிப் பதிவு செய்ய வேண்டும். எங்கிருந்தாலும் வாழ்க ரஹ்மான்


மனதிற் பட்டது - 09 - நஜிமிலாஹி

தமிழ்மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்  - 09

இந்தப் பெயருக்கு உரிய நபர் சர்வதேச விருதுபெற்றவரோ அல்லது தடையின்றி வாய்ப்புகள் கிடைத்து நிறைவாகச் சாதித்தவரோ கிடையாது. அத்துடன் பெயர் பெற்ற பல புத்தகங்கள் வெளியிட்ட எழுத்தாளரோ கூடக் கிடையாது. அதனால் உங்களில் பலரும அவரைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

1984ஆம் ஆண்டு வாழைச்சேனை யில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த நஜிமிலாஹி ஊடகத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு இயங்கிய ஒரு இள ரத்தம். அதற்காக கொழும்பு ஊடகக் கல்லூரியில் சேர்ந்து கற்கையைப் பூர்த்தி செய்தார். 2007 என்றுதான் ஞாபகம், அப்போது அவர் தனது கற்கைக்காக ஒருவரை நேர்காணல் செய்து அதை வீடியோவாகப் பதிவு செய்து பூரணப்படுத்தி ஒப்படைக்க வேண்டும். அதற்காக நேர்காணப்படும் நபராக நஜிமிலாஹி என்னைத் தெரிவு செய்திருந்தார். அவ்வளவு வேலைப்பலுவுக்கு மத்தியிலும் அவரின் அழைப்புக்காகப் பதில் அளித்தேன். ஏன் என்னைத் தெரிவு செய்தார் என்பது இப்போது வரையும் எனக்குத் தெரியாது.

அந்த இளைஞனுக்கு ஊடகக் கற்கையைப் பூர்த்தி செய்தளவுக்கு அவனது ஆசை எதிர்பார்ப்பு மற்றும் தகுதிக்கு ஏற்ப வாய்ப்பு என்று எதுவுமே திருப்திகரமாக அமையவில்லை. அதற்காக அவன் சும்மா இருக்கவுமில்லை. ஒரு தொலைக்காட்சியின் காலைச் செய்திப் பத்திரிகைக் கண்ணோட்டத்தை அளிக்கை செய்தான். பின்னர் நவமனி பத்திரிகையில் பணியாற்றினான். இந்தப் பத்திரிகையில் பணியாற்றிய காலம்தான் மிக முக்கியமான காலம் என்று நான் கருதுகின்றேன்.

நவமனி பத்திரிகையின் ஆசிரியர் மறைந்த மர்ஹூம் அஸ்ஹர் அவர்களின் மீது கொண்ட மதிப்பும் கொள்கைப் பிடிப்பும் அவரின் மறைவோடு அங்கிருந்து அவனை வெளியேறச் செய்தது. இலங்கை முஸ்லிம்களுக்கான ஒரு தினசரிப் பத்திரிகை என்ற அவரின் கனவை தனது கனவாகச் சுமப்பதில் அவன் திருப்தி கண்டான். இறுதி நேரத்தில் அஸ்ஹர் அவர்கள் மரணிப்பதற்கு முன்னர் பல விடயங்களை நஜிமிலாஹியுடன் பகிர்ந்து கொண்டதாக அறியக் கிடைத்தது. அவை மிகவும் கசப்பான செய்திகள் என்பதால் இதுவரைக்கும் வெளிவரவில்லை என்று நினைக்கின்றேன். 

 பின்னர் ஒரு அரசியற் கட்சியோடு இணைந்து அக்கட்சியின் ஊடகப் பிரிவில் பொறுப்புவாய்ந்த ஒருவனாகப் பணியாற்றி மாற்றம் என்ற பத்திரிகையை ஆசிரியராக இருந்து வெளியிட்டு வைத்த நஜிமிலாஹியால் அந்தப் பத்திரிகையினை ஐந்து இதழ்களுக்கு மேல் வெளியிட முடியாமல் போனது.

சிறிது காலம் கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப் பிரிவில் பணிபுரிந்த போது அவனில் ஒரு தெளிவை என்னால் அவதானிக்க முடிந்தது. ஒரு திறமையுள்ள இளைஞனை இந்தக் காலம் எப்படியெல்லாம் பந்தாடுகின்ற என்பதற்கும் கனவுகளை அடைந்து கொள்வற்காக எப்படியெல்லாம் பாடுபட வேண்டும் என்தற்கும் இந்த இளைஞன் ஒரு நல்ல உதாரணம்.  

தனது கனவுகள் கைகூடவில்லையென்பதற்காக அவன் அமைதியாக வாளாவிருக்கவில்லை. ஒரு அரசியல் பாத்திரத்தினையும் கையிலெடுத்துப் பார்த்துத் தோல்வி கண்டான். இப்போதைய நடைமுறை அரசியல் கொள்கைகளுக்கும் லட்சிய புருசர்களுக்கும் சாதகமான முடிவைத்தராது என்பதை அப்போது அவன் புரிந்து கொண்டிருக்கக் கூடும்.

துடிப்புள்ள ஒரு இளைஞனுக்கு வாய்ப்பளிக்க யாராவது தயாராக இருந்து அத்தகைய இளைஞனைத் தேடிக் கொண்டிருப்பீர்களாயின் நான் நஜிமிலாஹி என்ற இளைஞனைப் பரிந்துரை செய்வேன்.

அவன் பிறந்த ஊருக்கு இன்னும் அவனைப் பயன்படுத்தத் தெரியவில்லை. அந்த ஊரில் உள்ள பெரியவர்களுக்கும் அவனது திறமையைப் பயன்படுத்திக் கொள்ளத் தோன்றவில்லை, அந்த ஊர் அரசியல் வாதிகளின் கண்ணிலும் அவன் தோற்றவில்லை.

இருந்தாலும் அவன் இன்னும் ஓடிக் கொண்டிருக்கின்றான் என்றாவது ஒரு நாள் வெல்வேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு.

நேர்மறை 15 கேள்விகளுக்கு கே.எஸ்.சிவகுமாரன் பதில்கள்

தமிழ் மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் இடம்பெறும் நேர்மறை 15 கேள்விகளுக்கு எழுத்தாளர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்களின் பதில்கள்

உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
01.எழுத்து மூலம் மனுக்குலத்திற்கு என்னால் இயன்ற சேவையை செய்து வருபவன்.

நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
02. கருத்துரீதியாக யாருடனும் நான் முரண் படுவதில்லை . அது அது அவரவர் அபிபிராயம் என்று அமைதிகாண்பேன்.

இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
03. அவர்கள் முரண்பாடுகளில் நான் கவர்ச்சியைக் காண்பதில்லை.ஆயினும் அவர்கள் கூற்றுக்களைப்
 படித்ததும் எனக்குள் முறுவலித்துக் கொள்வேன்.சிலரின் அறியாமை  கண்டு மனம் வருந்துவது முண்டு.

உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
04.என்னைப்பற்றி நிறையப்பேர் திறன் ஆய்வாகவும், கண்டன விமர்சனமாகவும் எழுதி இருக்கிறார்கள். அவற்றைத்
தொகுத்து  நூலாக வெளியிட்டால் பின் வரும் சந்ததியினர் ஓரளவு என்னைக் கணிக்க உதவும் என நம்புகிறேன்.

நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
05.இலங்கையிலும், வெளி நாடுகளிலும் தமிழ், ஆங்கிலம்,
சிங்களம் ஆகிய மொழிகளில் எழுதுபவர்கள் பற்றியும், அவர்கள் படைப்புகள் பற்றியும் எழுதிருக்கிறேன். எனது 62 வருட இலக்கிய வாழ்வில் இவற்றின் தொகை  எண்ணில் அடங்கா.

யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
06. கற்று அறிந்த ஆய்வு அறிவாளர்களை மிகவும்  மதிக்கிறேன்.

இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
07. அப்படி ஒன்றும் இதுவரை தோன்றவில்லை.

இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
08.உலகப் பேர் அறிஞர்களின் புத்தகங்களை வாசிக்கும்போது
அவ்வ்வாறு தோன்றியது.

உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
09. இலங்கை இலக்கிய சஞ்சிகைகள் அனைத்தும் பிடிக்கும்.

உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
10. பொருளாதார மதிப்பு  ஆகக்கூடியதாக தமிழ் சிறுகதை ஒன்றின்   ஆங்கில ஆக்கத்துகாக கிடைத்தமை. வெளிநாட்டிலிருந்து கிடைத்தது. அதன் மதிப்பு ரூபாய் 25,000.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
11. நொபெல் பரிசு உட்பட எல்லாப் பரிசுகளிலும் ஓரளவு  உள்ளக அரசியல் கலந்து இருக்கும்.

உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
12. பாண்டிதியமென்று சொல்லாவிட்டலும்,ஓரளவு நல்ல அறிவு  ஆங்கிலம், தமிழ் மொழிகளில் மாத்திரம் உண்டு.

முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
13. முக நூல் மாத்திரமே எனக்குப் பரிச்சயம் அவற்றுள் பிற நாடுகளில் வாழும்   பெண் கவிஞர்கள் சிலர் எழுதும் கவிதைகளில் காணப் படும் தமிழ் அழகு என்னைப்பெரிதும் கவர்ந்து உள்ளது.

உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
14. குடும்பத்தில் என்னுடன் ,துணைவியார், இரு மகன்கள், அவர்கள்  துணைவியர், நான்கு பேரப் பிள்ளைகள் ஆகியோர் அடங்குவர்.

எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
15. என் மீது அப்பண்டமாக அவதூறு செய்துள்ள ஓரிருவர்  முகங்களில் ஓங்கிக்குத்த வேண்டும் என்று நினைத்தாலும் அவர்கள் அறியாமை  கண்டு வாளாதிருப்பேன்.

நேர்மறை 15 கேள்விகளுக்கு அமல்ராஜ் பதில்கள்

தமிழ் மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் இடம்பெறும் நேர்மறை 15 கேள்விகளுக்கு அமல்ராஜ் அவர்களின் பதில்கள் 


01 உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
எண்ணம் போலவும், எழுத்து போலவும், ஊருக்கான நம் உபதேசம் போலவும் இம்மியளவாவது வாழவேண்டும் என தினமும் முயற்சித்துக்கோண்டிருப்பவன். நான் நல்லவன் என நானே நினைத்து அடிக்கடி சிரித்துக்கொள்ளும் சிறுபிள்ளை. யுத்தக்களத்திலும் சந்தோசமாக பட்டாம்பூச்சி பிடித்துக்கொண்டிருப்பவன்.

02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
இலக்கிய முரண்பாடுகளை எண்ணிவைத்திருப்பதில் கூட எனக்கு முரண்பாடு இருக்கிறது. அதனால் எண்ணுவதில்லை.

இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
3. அதிகம் வாசிக்கும் இளையவர்களுக்கும் நிறைய எழுதிய பெரியவர்களுக்கும் இடையில் நடக்கும் 'அறிவாளிப் போட்டி'யும் அதனால் வரும் 'pழிரடயசவைல உழஅpடநஒ' ஏற்படுத்தும் முரண்பாடுகளும். எட்டத்தில் நின்று அதை புதினம் பார்த்தால் நல்ல சோக்கா இருக்கும்!

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
நிறையப்பேர் எழுதியிருக்கிறார்கள். பட்டியலை எடுப்பாக சொல்ல வெளிக்கிட்டு இடையில் ஞாபகம் சறுக்கினால் உங்கள் இரண்டாம் கேள்விக்கு புதிய விடை கிடைத்துவிடும். அதனால், முக்கியமான ஒருவரை மட்டும் சொல்லிவிடுகிறேன். தெளிவத்தை ஜோசப்! எனது 'கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்' நூல் பற்றி வீரகேசரியில் அவர் எழுதிய பத்தியை வாசித்தபோது உரோமம் சிலிர்த்தது. இப்பொழுது இதை சொல்லிக்கொண்டிருக்கும் போதும்தான். இங்கே, அதே உரோமம்..!!

05. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
 பலரைப்பற்றி...... எழுத ஆசைதான்! குப்பையை அழகிய மெத்தையென்று நிலை-முரண் விவரணம் எல்லாம் அடித்துவிடத்தெரியாத என்னைப்போன்றவர்களுக்கு எதற்கையா இந்த வேலை?

06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
என் எழுத்துக்களை வாசித்தபின்னர்கூட குறட்டை விட்டு நின்மதியாக தூங்குகிறார்களே! அவர்களைத்தான்!!

இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
7. அண்மையில் ஈழத்தில் வெளிவந்த ஒரு கவிதைத் தொகுப்பு. அதை நேர்கோட்டில் எழுதி ஒரு கட்டுரைத்தொகுப்பாக போட்டிருக்கலாம் என்று தோன்றியது. கவிதையை தேடி தேடி தடவிக்கொண்டுபோய் கடைசியில் பின்அட்டையில் மோதி கீழே விழுந்ததுதான் மிச்சம்!

இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
8. ஜே கே இன் 'என் கொல்லைப்புறத்து காதலிகள்'. (அண்மைக்காலத்தில் வெளிவந்த நமது படைப்பாளிகளின் நூல்களுக்குள்..)

உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
9. யாத்ரா (காரணம் நான் கவிதைகளின் இரசிகன்)

உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
10. உண்மையான எழுத்து வணிகம் விசித்திரமானது. இங்கு உற்பத்திப்பொருளின் விலையை நுகர்வோனே தீர்மானிக்கவேண்டும்! சரி, சொல்லுங்கள், என்னுடைய ஒரு கவிதைக்கு எத்தனை டொலர்??

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
11. விதியாதர் சுராஜ் பிரசாத் (2001) இற்கு கொடுக்கப்பட்டிருந்தால், எதற்கு நம்ம சாருவிற்கு ஒருதடவையாவது கொடுத்துப்பார்க்கக்கூடாது என்று மட்டமாக யோசிப்பதோடு முடிந்துவிடும் நோபல்பரிசு பற்றிய எனது அறிவு. அவ்வளவுதான்! நோ மோ குவஷன்ஸ்!

உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
12. எந்த மொழியிலும் இன்னும் 'பாண்டித்தியம்' வரவில்லை! ஆமா, தமிழிலும்தான்!

முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
13. சிலர் எழுதுகிறார்கள். சிலர் கிறுக்குகிறார்கள். இன்னும் சிலர் வாந்தியெடுக்கிறார்கள். வாந்தியெடுப்பவன் நூற்றுக்கணக்கில் ஹிட்ஸ் அடிக்க நன்றாக எழுதுபவன் ஐந்து பத்து அவமானத்தோடு அந்த 'லொஜிக் முரண்'ஐப் பார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறான். நியமத்தின்படி, தரமான எழுத்துக்களை இணையத்தில் தேடி கண்டடைபவன் இணைய பாக்கியவான்.

உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
14. சுருக்கமாக.... 'பல்கலைக்கழகம்'!

எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
15. பிரயோசினமாக இலக்கியத்தில் எந்த ஆணியையுமே பிடுங்காமல் கொழும்பு தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் முதல் வரிசையில் வந்து அமர்ந்தபடி தாடியைத் தடவிக்கொடுக்கும் 'இலக்கியவாதி(கள்)' முகத்தில்.
அல்லது,
முஸ்டீன், கொஞ்சம் முகத்தைக் காட்டுங்கள். 'டிஸ்யூம்ம்..!'

மனதிற் பட்டது - 08 - புகழும் புரிந்து கொள்ளுதலும்


தமிழ்மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்  - 08


தம்மைப் பிறர் புகழ வேண்டும் என்பது பொதுவாக மனிதர்களின் எதிர்பார்ப்பு. இது மனிதப் பண்பு இயல்யானது. ஆனால் சிலருக்கு அதுவே வியாதி. புகழுக்குரியன் தான் மட்டு;மதான் என்பது போல சீன் போட்டுக் கொண்டு இருப்பார்கள். அவர்களுடன் கதைக்கும் போது தம்மைப்பற்றி மட்டுமே கதைப்பர். தனது சாதனைகளை இழுத்துவிடுவதில் அவர்களுக்கு அப்படியொரு ஆத்ம திருப்தி. இத்தகையவர்களுக்கு முன்னால் பிறரைப் புகழும் போது பெரும்பாலும் பேச்சைத் திசை திருப்பி விடுவார்கள். அத்தகைய வியாதிக் காரர்கள் அழிந்து போவதும் இந்தப் புகழால்தான்.

எழுத்துலகைப் பொறுத்தமட்டில் எல்லோரது எழுத்துக்களும் புகழுக்குரியதாக இருக்காது ஆனால் தரமான எழுத்துக்கள் ஒருபோதும் அதற்குரிய மதிப்பிலிருந்து நீங்கிப் போகாது. அந்த யதார்த்தத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அன்னம் ஒரு போதும் காக்கையாகிட முடியாது. அது போல காக்கை ஒரு போதும் புறா ஆகிடவும் முடியாது. அன்னத்தால் அவ்வளவு உயரப் பறக்க முடியாது ஆனால் காக்கையால் முடியும். ஒரு பெருங் காற்றை எதிர்கொண்டு காக்கையால் பறக்க முடியாது ஆனால் புறாவினால் முடியும். ஆளுக்காள் இயல்பும் தரமும் வேறுபடும் அது போல ஒருகாகம் செத்துவிட்டால் ஒரு கூட்டமே திரண்டு குரல் கொடுக்கும். ஒரு புறாக் கூட்டம் செத்தாலும் கூட புறாக்கள் அப்படி ஒன்று சேர்ந்து துக்கம் அனுஷ்டிப்பதில்லை. 

அதிசயமாக புகழை விரும்பாத சிலர் இருக்கின்றார்கள். தன்பாட்டில் காரியமாற்றுவார்கள். வீணுக்காக யாரையும் எதற்குமிழுக்காதவர்கள். யாரிடமும் அவர்கள் புகழுக்காக ஏங்கி நிற்கமாட்டார்கள். அவர்கள் நியாயமாக தக்குச் சேரவேண்டிய ஒன்றுக்காகப் போராடும் குணமுடையவர்கள். தரமற்ற ஒன்றை வெறும் அடைவுகளுக்காகப் உயர்த்திப்பிடித்து பெயர் பெற வேண்டும் என்று அவர்கள் நினைக்கமாட்டார்கள். அவர்களுடைய தராசு கறாராக இருக்கும். இத்தகையவர்களால்தான் இலக்கியத்தின் தராதரம் ஓரளவுக்கு சரியாகப் பேணப்படுகின்றது.

இன்னும் சிலர் இருக்கின்றார்கள் அவர்களது வேலையே பிறருக்கு முதுகு சொரிவதுதான். அந்தச் சொரிதலின் உச்ச கட்டத்;தை இலகுவாகவ விளங்கப்படுத்த இப்படியோர் உதாரணத்தைச் சொல்ல முடியும். நேற்றுத்தான் கவிதை எழுதத் தொடங்கி இரண்டு கவிதைகள் எழுதியிருப்பார். அவரைப் போய் கவிச் சூரியன் என்றும் கவி சந்திரன் என்றும் கவித்தாரகை என்றும் போற்றிப் புகழ்ந்து விருது கொடுத்து பொன்னாடை போர்த்தி, தனது முகநூலில் நாலு வரியில் குறிப்பெழுதி, செல்பி உட்பட ஐந்தாறு போட்டோக்களை அப்டேட் செய்து கவிச் சக்கரவர்த்தியாக்கி விடுவார்கள். பதிலுக்கு அவர்கள் சும்மா இருப்பார்களா!! அவர்கள் ஆற்றும் எதிர்விணையோ ஐயகோ காண்பதற்குக் கோடிக் கண்கள் வேண்டும். 

இன்னும் சிலர் தம்மைப் புகழவும் தமது இருப்பை அடிக்கடி நிலைநிறுத்திக் கொள்ளவும் சிலரை வளர்த்தெடுப்பார்கள். தத்துப்பிள்ளைகளின்படைப்புக்களை பிறருக்குத் தரமானது என்று பரிந்துரைப்பார்கள். அடிக்கடி அவர்களின் பெயர்களையே சிறந்த இலக்கியவாதிகளுககு உதாரணமாக்கி விடுவார்கள். அவர்களின் படைப்புக்களை அடிக்குறிப்புடன் அனுப்பியும் வைப்பார்கள். அதை உரியவரின் காதுக்குக் கொண்டு போய்ச் சேர்த்து உனக்காக நான் என்னமாப் பாடுபடுகின்றேன் என்று பார்த்துக் கொள் என்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விடுவார்கள். இது ஆற்றாமையால் இயலாமையால் ஏற்படுகின்ற வருத்தம். அந்த வருத்தத்திற்கு மருந்தே அவர்கள் ஆகா ஓகோ என்றுபுகழப்படுவதுதான். 

தரமான ஒரு படைப்பை வாசித்து இன்புற சிலர் அனுப்பி வைப்பார்கள். அது வேறு விடயம். அத்தகையவர்கள் மேலேசொன்ன வருத்தக்காரர்களுக்கு மெலே இருக்கும் பந்தியில் சொல்லப்பட்ட நபர்கள் செய்யும் பணி. அதில் எத்தகைய எதிர்பார்ப்பும் இருக்காது. புள்ளி பெறும் திட்டமும் இருக்காது. 

இந்த விடயங்களைப் புரிந்து கொள்வதில்தான் சில விடயங்கள் தங்கியிருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொள்ளத் தவறும் பட்சத்தில் சொல்வதகொன்றும் இருப்பதில்லை.  சரியான இந்தப் புரிதல்தான் தரமான ஒரு இலக்கியவாதியின் அடையாளமாகக் கூட இருக்க முடியும். அந்தப் புரிதல் பல சித்து விளையாட்டுக்களில் இருந்து காப்பாற்றும். 

ஒரு புத்தகத்தைப் படித்தால் அது குறித்து ஒரு குறிப்பெழுதினால் என்ன என்று தோன்றும்போதே அது குறித்து எழுதிவிடுவோம். அதில் ரசனை இருக்கும் ஆனால் வெறுமனே வீம்புக்காக உசுப்பேற்றல் இருக்காது. எல்லாப் புத்தகங்களுக்கும் அப்படி எழுதத் தோன்றுவதில்லை. சிலது வெகு சிலதே நமது கவனத்தை ஈர்க்கும் அத்தகைய எழுத்தாளர்களுடன் நட்பைப் பேன மனது ஆவல் கொண்டிருக்கும். அந்த நட்பில் அழகான புரிதல் இருக்கும். எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. 

இஸ்லாமிய ஆட்சியின் மூன்றாவது அரசுத் தலைவராக வந்தவர் உமர் இப்னு கத்தாப் அவர்கள். அவர் ஒரு விடயம் சொன்னார்
'ஒருவன் உன்னை முகத்தில் புகழ்கின்றான் என்றால் நீ சுதாகரித்துக் கொள், முகத்தில் புகழ்பவனை நம்பாதே'
வஞ்சமிக்க அந்தப் புகழில் உண்மை இருக்காதுதானே. 

நேர்மறை 15 கேள்விகளுக்கு காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பதில்கள்

தமிழ் மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் இடம்பெறும் நேர்மறை 15 கேள்விகளுக்கு ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் பதில்கள் 

01.   உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
என்னிலும் சிறந்தவர்களுடன் என்னை ஒப்பிடும்பொழுது நானொரு சாதாரணனே

02.   நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
நான் யாருடனும் வலிந்து முரண்பட்டதில்லை. வீணே முரண்பட்டவர்களை விட்டதுமில்லை

03.   இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
பிறரிடையே எற்பட்ட முரண்பாடுகள் பற்றி எதுவும் கருத்துரைக்க நான் விரும்பவில்லை என்னுடன் முரண்பட்ட சில முக்கிய நிகழ்வுகளில், என்னிலும் சிறந்த அறிஞரான வித்துவான் எம்.ஏ,றகுமானுடன் அவர்களுடன் நடந்த யாப்பிலக்கணச் சமரைச் சொல்லலாம். அது பேராசிரியர் கா.சிவத்தம்பி பற்றி நானெழுதிய கட்டளைக் கலித்துறை பற்றியது. பல வாரங்கள் நவமணியில் தொடராக வெளிவந்தது, இறுதியில் அவர் தன் தவறை மறைமுகமாக ஏற்றுக்கொண்டார்

04.   உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
இதற்கான பதில் மிக நீளமானது, அவை இறைவன் நாடினால் விரைவில் நூலாக வெளிவரவுள்ளது. இதுவரையில் இறுதியாக பன்மொழிப் புலவர் சோ.பத்மநாதன்(சோ.ப) அவர்கள் எனது எல்லாள காவியத்திற்கு எழுதிய சாற்றுக்கவி பத்துக் கட்டளைக் கலித்துறைகள்

05.   நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
நிறையவே செய்துள்ளேன். இங்கு பதிவிட பத்திரிகை இடந்தரமாட்டா.

06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
முதவில் எனக்குத் தமிழ் கற்றுத்தந்த எனது தந்தையாரை அடுத்து என்னை இலக்கிய உலகுக்கு அறிமுகஞ்செய்து என்னை வளர்த்த ஐயா எஸ்.டி.சிவநாயகம் அவர்களை

07.   இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
என் இளமைக் காலத்தில் நானோரு தீவிர வாசகனாக இருந்தேன். அதனால்தான் எனக்கு வார்த்தைகள் வாலாயமாகின. அனைத்தும் இனித்தன. இப்போது என் வாசிப்பு குறுகிப் போனதால் கருத்துரைக்க இயலவில்லை.

08.   இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
அந்தக் காலத்தில் நா.பார்த்தசாரதியின் பொன்விலங்கு,

09.   உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
அப்போது யாத்ரா. இப்போது ஞானம்

10.   உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
அதனை மதிப்பிடுவது விற்பனையைப் பொறுத்ததாயின் நான் பல இலட்சங்களை இழந்துள்ளேன். சில நூல்களின் பிரதிகள் கூட என்னிடமில்லை. இருப்பினும் தமிழ் இலக்கிய உலகில் என் படைப்புக்களால் என் பெயர் பதிவாகி இருப்பது என்னளவில் விலைமதிப்பற்றது,

11.   இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்படாதிருந்தால் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிக்கும் அது கிடைத்திருக்காது. மேலும் விபரம் வேண்டியதில்லை.

12.   உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
பாண்டித்தியம் என்று சொல்ல எதிலும் இல்லை. சிறிது தமிழ் தெரியும்.

13.   முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
நல்லவையும் உண்டு. குப்பைகளும் உண்டு. தேர்ந்தெடுப்பது ஒவ்வொருவரதும் வேண்டுதலைப் பொறுத்தது, 'மணற்சோற்றில் கல்லாராய்வதானாலும் அதனிலும் திருத்தமுண்டு' என ஒரு அறிஞர் சொல்லி இருக்கின்றார்.

14.   உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
மனைவியுடன், மூன்று ஆண்கள், ஒரு பெண் என நான்கு மக்கள். நான்கு மருமக்கள், ஏழு பெண்கள் மூன்று ஆண்களுமாகப் பத்துப் பேரப்பிள்ளைகள்.

15.   எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
சிலரின் முகங்களில் மூக்குடையக்
குத்தியிருக்கின்றேன். கையாலல்ல. கவிதையால். அவை பலரறிந்த இரகசியம். அதில் ஒன்று பல ஆயிரம்பெயர் 'லைக்' பெற்றது. இப்போதைக்கு யாருமில்லை.

மனித வேட்டையும் புலனாய்வு இயக்கங்களும் - தொடர் - 07


தமிழ்மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்  - 07
உலகில் மனிமனைக் கொல்வதற்கென்றே பல ட்ரில்லியன் பணம் செலவு செய்யப்படுகின்றது. மனிதனை மனிதன் கொல்வதை ஒரு போதும் நிறுத்த  முடியாது. மனிதனை மனிதன் கொன்று கொண்டே இருப்பான் அதுதான் நியதி. அதை யாரால்தான் மாற்ற முடியும்? யாராலும் முடியாது. மனித உரிமைகளுக்கு எந்தப் பெறுமானமும் இல்லை. எல்லாம் வெறும் வாய்ப் பேச்சு மட்டுமே. 

ஒரு நாடு தனது அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வதற்காக பல மில்லியன் பேரைக் கொன்று குவிக்கும். அதற்குக் கணக்கு வழக்குக் கிடையாது. ஒரு நாட்டின் இறைமையைத் தக்க வைக்க அந்நாடு தனது மக்களையே லட்சக் கணக்கில் கொல்லும், ஒரு நாட்டின் தலைவன் தனது அதிகாரத்தைத் தக்க வைக்க ஆயிரக் கணக்கில் கொல்வான், ஓர் அமைப்பு, ஓர் இயக்கம், ஒரு குழு, ஒரு தனிமனிதன் என்று அனைத்துத் தரப்பும் தமது தேவைக்கேற்ப பிறமனிதர்களைக் கொன்று கொண்டேதான் இருப்பர். இந்த நியதியை யாரால் மாற்ற முடியும். 

நியாயத்துக்காகவும், அநியாயமாகவும், கொள்கைக்காகவும் அதல்லாமலும் கொலை இடம்பெற்றுக் கொண்டேதான் இருக்கும். சட்டம் ஒற்றைக் கண் குருடான காகம் மாதிரி ஒரு பக்கத்தைப் பார்ப்பதே இல்லை. ஒரேயொரு பக்கத்தை மட்டும் தனது வசதிக்கேற்ப பார்த்துக் கொள்கின்றது. 

ஆயுத உற்பத்தியாளன்தான் உலகின் கொடூரமான கொலையாளி, அந்தக் கொலையாளியின் வழிகாட்டலில்தான் இராணுவம் என்ற கொலைகார கூட்டம் மக்களைக் கொன்று குவிக்கும், போராட்டம், விடுதலை, சத்தியத்தைப் பாதுகாக்க என்று எந்தப் பக்கத்தை எடுத்தாலும் சரி, ஏன்! அநியாயமாகத் தீர்ப்புச் சொல்லும் நீதிபதி கூட ஒரு கொலைகாரன்தான். 

கொலைகளை நியாயப்படுத்தியவர்கள் தப்பித்துக் கொள்வார்கள், நியாயப்படுத்த முடியாதவர்கள் மாட்டிக் கொள்வார்கள். மனசாட்சி ஒரு போதும் சட்டத்திற்கு முன்னால் சத்தியமாவதில்லை. சாட்சிகள் மட்டும்தான் எப்போது சத்தியமாகும். அது பொய் சாட்சியாக இருந்தாலும்கூட

உலக நாடுகளின் சர்வதேசப் புலணாய்வுக் கட்டமைப்பையும் அவர்களின் இங்கு தளத்தையும் புரிந்து கொண்டால் மட்டுமே ஒரு கொலையை, அல்லது மனித குலத்துக்கு அச்சுருத்தல் தரும் மாபெரும் தாக்குதல்களை விளங்கிக் கொள்ள முடியுமாக இருக்கும். 

இஸ்ரேலின் மொசாட், அமெரிக்காவின் சீஐஏ, பிரிட்டனின் எம்16, பாகிஸ்தானின்  ஐஎஸ்ஐ, இந்தியாவின் ரோ, பிரான்சின் டீஜிஎஸ்ஈ, ரஸ்யாவின் எஸ்வீஆர்-ஆர்எப், போன்ற புலனாய்வுப் பேரியக்கங்களை விளங்கிக் கொண்டால்தான் உலகில் நடக்கும் மனித வேட்டைக்குப் பின்னால் புதைந்திருக்கும் உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும். 

ஓர் இலக்கியவாதி ஓர் எழுத்தாளன் கட்டாயம் இவற்றைத் தெரிந்திருக்க வேண்டும் இல்லாத போது ஒரு கவிதையால் கூட அவன் உண்மையைப் புறந்தள்ளி பொய்க்கு முன்னால் சரண் அடைந்து மனித குலத்துக்குத் துரோகமிழைத்திடக் கூடும். 

உலக மக்களை வாழ வைப்பதிலும் பார்க்க சாகடிப்பதற்கே பல நாடுகள் பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்கின்றன. சில மேற்கு நாடுகள் மனிதர்களைக் கொன்று குவிப்பதற்காக விற்கும் ஆயுத விற்பனையால் வரும் லாபப் பணத்தில்தான் மனித உரிமைகளையும் மனித விழுமியங்களையும் அற நெறிச் சட்டங்களையும் மனிதத்தையும் சுதந்திரத்தையும் பற்றிப் பேசுகின்றன. 

அல்குரஆன் ஒரு கதை சொல்கின்றது
மனிதனைப் படைப்பதற்கு முன்னர் இறைவன் வானவர்களைப் பார்த்துச் சொன்னான் 'நான் எனது பிரதிநிதியாக மனிதனை உலகில் படைக்கப் போகின்றேன்' அப்போது வானவர்கள் 'இறைவா இரத்தம் ஓட்டக் கூடிய மனிதனையா படைக்கப் போகிறாய்? உன்னை வணங்க நாங்கள் போதாதா? என்று பதிலுக்குக் கேட்டார்கள்.

இந்த உலகம் அழியும் வரை இனத்தால், மதத்தால், நிறத்தால், மொழியால் குலத்தால் கோத்திராத்தால் ஆளையாள் மாறிமாறி ஏதாவதொன்றைக் கொள்கையாக்கி கொலை செய்து கொண்டே இருப்பர்.

ஒரு கட்டத்தில் இதெல்லாம் புரிந்து கொள்ள ஞானம் தேவைப் படும்.

Saturday, January 2, 2016

நேர்மறை 15 கேள்விகளுக்கு எழுத்தாளர் சுதாராஜ் பதில்கள்


தமிழ் மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் இடம்பெறும் நேர்மறை 15 கேள்விகளுக்கு எழுத்தாளர் சுதாராஜ் அவர்களின் பதில்கள் 

1. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
ஆயிரம் டொலர் மனிதன்

2. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
முரண்பாடா.. அப்படி ஏதும் யாருடனும் இல்லையே.. (எஸ்கேப்!)

3. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளும் அதையொட்டிய வாக்குவாதங்களும் ஒருவித இலக்கிய ரசனையைத்தரும் புத்தாக்கங்களைப்போலவும், பொழுதுபோக்குக்குரிய வேடிக்கையான நிகழ்வுகளாகவும் உள்ளன.

4. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
இந்த ஒரு நிமிடத்துக்குள்; அவர்களையெல்லாம் நினைவெடுத்துக் குறிப்பிட்டுக் கூறமுடியவில்லை.

5. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
சில இலக்கிய நண்பர்களின் அன்பு வேண்டுகோளைத் தட்டமுடியாது அவர்களது படைப்புகளைப்பற்றி எழுதியிருக்கிறேன்.

6. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்?
காலமான சிரித்திரன் ஆசிரியர் சுந்தர் எனப்படும் திரு சிவஞானசுந்தரம் அவர்கள். அவர் எனது ஞானத்தந்தை.

7. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
ஓரிரு பக்கங்களை வாசிக்கும்போதே நல்ல புத்தகங்கள் உள்ளிளுத்துவிடும். மற்றவை ஒரு பக்கமாகப் போட வைத்துவிடும். அதனால், இதெல்லாம் ஒரு புத்தகமா எனச் சினப்படும் கட்டத்துக்குள் போனதில்லை.

8. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
எனது ஒவ்வொரு புத்தகங்களும் அச்சாகி வந்து முதன்முதலாகக் கையிலெடுத்து வாசிக்கும்போது!

9. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
மல்லிகை.

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
கதைக்கும் கவிதைக்கும் விலை போட்டால் யார் வாங்கி வாசிக்கப்போகிறார்கள்? அவை விலைமதிப்பற்றவை! (படைப்பவனுக்கும் வாசிப்பவனுக்குமுரிய இரு அர்த்தங்களிலும்.)

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
நல்ல விஷயம். பரிசு போதுமானளவு பெரிய தொகை. தமிழ் இலக்கியங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்பில்லையாதலால் இலக்கிய நணபர்களுக்கு (இங்குள்ள சில பரிசுகள் விருதுகளுக்கு நேரும் கதிபோல) போட்டுக் கொடுக்கும் சாத்தியமும் இல்லை!

12. உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
பாண்டித்தியம் இல்லை.. தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழிகளில் பரிச்சயம் உள்ளது.

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
புத்தகங்களைக் கையிலெடுத்து வாசிக்க விரும்பாத புதிய இளசுகளுக்கும் சில பெரிசுகளுக்கும் இடவும் தொடவும் படவும் வசதிப்படும் ஊடகம். சில படைப்புக்கள் சிறு பதிவுகளாக இருந்தாலும் நல்ல கருத்துக்களாகவும் ரசனைக்குரியதாகவும் போகிற போக்கில் வாசித்துவிடக்கூடியவையாகவும் உள்ளன. எதிர்காலத்தில் இவற்றினூடு புது இலக்கிய வடிவங்கள் பரிணமிக்கவும்கூடும். நூறு மலர்கள் மலரட்டும்! நல்லவை நிலைக்கும்.. அல்லவை போகும்!

14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
ஒரே ஒரு மனைவி. (கவனியுங்கள்.. ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு!), பிள்ளைகள்.. திருமணமாகிவிட்ட பெண்கள் இருவர், படித்துக்கொண்டிருக்கும் ஆண்கள் இருவர், பிள்ளைகளைப்போல அன்பும் ஆதரவும் கொண்ட மருமகன்கள் இருவர், பேரர்கள் இருவர்.

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
வேறு யாருக்கு? உங்களுடைய முகத்திற்தான்! இப்படி இடக்கு மடக்கான கேள்விகளைக் கேட்டுக் குழப்பிறீங்களேம்மா.. (என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா... ஸ்டைலில்!)

மனதில் பட்டது - 06 - மூத்த எழுத்தாளர்கள்


தமிழ்மிரர் பத்திரிகையின் இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்

எனக்குள் இன்னும் கனன்று கொண்டிருக்கும் ஒரு கேள்வி தான் இந்த மூத்த எழுத்தாளர் என்பது யார்? இந்த மூத்த கூட்டத்தை யார் தீர்மானிக்கின்றார்கள்?
வயது போன எல்லோரும் மூத்த எழுத்தாளர்களா? அப்படியென்றால் இள வயதுக்காரர்கள் இளைய எழுத்தாளர்கள் அப்படியா?

ஒருவர் எழுதத் தொடங்கியதில் இருந்து அதைக் கணிப்பதா அல்லது புத்தகம் வெளியிட்டதில் இருந்து அதைக் கணிப்பதா? அல்லது ஒரு எழுதிய எழுத்துக்களின் அளவைக் கொண்டு கணிப்பதா அல்லது எழுத்துக்களின் தரத்தைக் கொண்டு கணிப்பதா?

பொதுவாக வயது போனவர்கள்தான் மூத்தவர்கள். இதுதான் நடைமுறையில் இருக்கும் விடயம். அரசாங்கம் கூட 60வயது தாண்டினால் முதியவர்கள் அந்தஸ்துக் கொடுத்து எல்லாவற்றிலும் முன்னுரிமையும் அளிக்கின்றது. அப்படிப்பார்த்தால் 60 தாண்டியவர்கள் எல்லாம் சிரேஸ்ட பிரஜைகள் போல மூத்த எழுத்தார்கள் என்று எடுத்துக் கொண்டால் அங்கும் ஒரு பிரச்சினை இருக்கின்றது.

ஒருவர் தனது 16வது வயதில் எழுதத் தொடங்குகின்றார் எனின் 40 வயதாகும் போது அவரது எழுத்து அனுபவம் 24 வருடங்கள் அதே போல 30 வயதில் ஒருவர் எழுதத் தொடங்கினால் அவரது எழுத்து அனுபவம் 10 வருடங்கள்தான். இதில் யார் மூத்த எழுத்தாளர்.

ஒருவருக்கு வயது 75 அவரது வாழக்கையில் வெறுமனே பதினைந்து கதைகள்தான் எழுதி இருக்கின்றார். அதில் ஒரேயொரு கதைதான் உருப்படியானது, அனைத்தையும் சேர்த்து ஒரேயொரு தொகுதி போட்டிருக்கார் அதன் பின்னர் தனது இருப்பைக் காட்ட மறுபிரசுரம் வேறு. பின்னர் அவர் எழுத்து சூனியம் இப்போது இவர் மூத்த எழுத்தாளர் என்றும் இலக்கிய மேதை என்றும் சிறுகதை அறிஞர் என்றும் தன்னை அடையாளப்படுத்துகின்றார்.

இன்னொருவர் வயது வெறும் 40 தான் முப்பதுக்கு மேல் கதைகள் ரெண்டொரு நாவல் கவிதைகள் வேறு இப்படி எழுதித் தள்ளியிருக்கின்றார் புத்தகமான மூன்று அல்லது நான்கு தொகுதிகள்தான். ஒப்பீட்டளவில் நல்லகதைகள் அதிகம். முன்னயவரோடு ஒப்பிடும் போது எழுத்துலகத்தில் அவரது காலமும் வெகு குறைவு.

இன்னொருவர் மேற்சொன்ன இருவரைவிடவும் வயதில் குறைவு வெறும் 30தான் ஆயினும் 15ற்கு மேல் புத்தகங்கள் வெளியிட்டிருக்கின்றார்.  மொழிபெயர்ப்பு, ஆய்வு, கவிதை சிறுகதை, கட்டுரை என்று எழுத்து மயம் ஆனால் கனதி குறைந்த எழுத்து. குறிப்பிட்டுச் சொல்லும்படி பெரிதாக ஒன்றுமில்லை.
இவர்களில் யார் மூத்தவர்?

நானறிந்த ஒருவர் 45வயதில் மிக அன்மைக்காலமாக கவிதை எழுதத் தொடங்கியிருக்கின்றார். சுமாரான கவிதைகள்தான் அவருடைய நேர்காணல் ஒன்றை இணையத்தில் வாசிக்கக் கிடைத்தது. அதன் முதல் பகுதியில் மூத்த இலக்கியவாதிகள் தனது எழுத்துக்களைக் கண்டு கொள்வதில்லையென்றும், விமர்சிக்கவில்லையென்றும் ஆதங்கப்படுகின்றார். ஆயினும் தான் அதனைப் பற்றிக் கவலை கொள்ளாமல் தொடர்ந்தும் எழுதுவதாகச் சொல்கின்றார். இறுதியில் இளைய எழுத்தாளர்களுக்கு என்ன சொல்லப் போகின்றீர்கள் என்று ஒரு கேள்வி அதற்கு அவர் மூத்த இலக்கியவாதியாகப் பதில் வேறு...முடியல

தமிழ் சங்கத்தில் வடலியின் ஒரு சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழாவில் உமா வரதராஜன் மூத்த இலக்கியவாதிகள் என்ற விடயத்தில் அவதானிப்புக்குரிய கேள்விகள் சிலதை முன்வைத்துப் பேசியது எனக்கு நினைவிருக்கின்றது.

சிரேஷ்ட விரிவுரையாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் என்று நபர்களை அடையாளப்படுத்துவதற்கு ஒரு கால எல்லை, தராதரம், ஆளுமை வீச்சு, திறன் எனப் பல்வேறு விடயங்கள் தாக்கம் செலுத்துகின்றன. அது போல எழுத்துலகில் எது தாக்கம் செலுத்துகின்றது என்ற கேள்விக்கு கட்டாயம் பதில் காண வேண்டி இருக்கின்றது.

வாராவாரம் விருது கொடுத்து களைத்துப் போய் இருக்கும் இலக்கிய இயக்கங்கள் இந்த வகைப் பிரிப்பைச் செய்து ஒரு புத்தகமாகப் போட்டால் என்போன்ற நபர்களுக்கு ஆட்களைத் தேடிப்பிடித்து விளித்துப் பேச எவ்வளவு இலகுவாக இருக்கும்.
வாழ்க சிரேஷ்ட எழுத்தாளர்கள்
வாழ்க மூத்த எழுத்தாளர்கள்

மனதில் பட்டது - 05 - ஆரோக்கியமும் கலைத்துவமும்


தமிழ்மிரர் பத்திரிகையின் இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்

வாய்விட்டுச் சிரித்து மகிழும் சங்கதிகள் நிறைந்த உரையாடல் இலக்கியவாதிகளுக்கு மட்டுமே பெரிதும் அமைகின்ற ஒரு விடயம். தமிழ்மிரருக்காக இந்த இலக்கியப் பக்கத்தை ஆரம்பிக்க முன்னர் என்னோடு நெருக்கமாகப் பழகும் பலரிடம் ஆலோசனைகள் கேட்டேன். அத்துடன் சில நிகழ்வுகளையும் பறிமாறிக் கொண்டேன். அப்போதுதெல்லாம் சிரிக்க முடிந்தது அதுவும் வாய்விட்டு

இலக்கியப் பக்கத்தைக் கொஞ்சம் வித்தியாசமாச் செய்யலாம் என்று நினைக்கிறன். உங்களுக்கு எதாவது ஐடியா இருக்கா? எப்பிடிச் செஞ்சா நல்லா இருக்கும்? என்று கேட்டேன்

இலக்கியம் என்டு பேரப் போட்டுவிட்டு அப்பிடியே வெறுமையா விடுங்களம் அதவிட யாரால வித்தியாமாச் செய்ய முடியும். என்று பதில் சொன்னார்.
இதில் வெறும் சிரிப்பு மட்டுமல்ல இப்போது இலக்கியம் என்று படைக்கப்படும் பலதையும் கூர்ந்து நோக்கும் போது இலக்கியப் பக்கம் வெறுமையாக வந்தால்தான் சரியாக இருக்கும் என்றும் சிந்திக்கத் தோன்றியது. 
நேர்மறை என்று தலைப்பு வைத்ததே எதையும் நேர்மறையாக விளங்கிக்கொள்ள வேண்டும் எதிர்மறையாக விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே. வழமையான கேள்விகளில் இருந்து விலகி பஞ்ச் போல இருக்கும்படியாக எழுந்த 15 கேள்விகளையும் பலருக்கும் அனுப்பினேன். மிகச் சிலரைத் தவிர மற்றெல்லோரும் எதிர்மறையாகவே விளங்கிக் கொண்டார்கள். அக்கணத்தில் நேர்மறை என்பதுகூட அவர்களின் கண்களுக்குப் புலப்படவில்லை போலும். 

ஒரு கவிஞரிடமிருந்து இப்படி பதில் வந்தது.
மன்னிக்க வேண்டும் முஸ்டீன் இப்போது ஆரோக்கியமான கருத்தாடல்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றேன், அதனால் இப்போதைக்கு உங்கள் கேள்விகளுக்குப் பதில் தர முடியவில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்

அன்று வீட்டுக்கு வந்த ஒருவரிடம் இந்தவிடயத்தையும் சொன்னவுடன் தடாலடியாக அவர் 'என்னது!! ஆரோக்கியமாமா..ம்;ஹ்.. நல்லா மரக்கறிலயும், இறச்சி முட்ட பாலும் சாப்பிடச் சொல்லி இருக்கலாமே அது ஆரோக்கியமா இருக்குமென்டு'

எனது கதைகளையும் இன்னும் சிலதையும் வாசித்துவிட்டு ஒருவர் 'உங்கட கதைகள்ல கலைத்துவம் இல்ல வெறும் தகவல்கள்தான் இருக்கு, வெறும் தகவல்கள் கொண்ட ஆக்கம் இலக்கியமாகாது. அதனால கொஞ்சம் கலைத்துவமா எழுதுங்க அப்பதான் கலர்புல்லா இருக்கும்' என்றார். 
இக்கருத்தை நண்பரிடம் சொன்னபோது 'கலர்புல்லா இருக்கனும்னா கலைத்துவமா இருந்தாச் செரி வராது மல்டிலக் பெய்ன்ட்ல வாங்கி நல்லா அடிச்சாத்தான் கலர்புல்லா இருக்கும் என்டு நீங்க சொல்லியிரிக்கலாமே' என்றாரே பார்க்கலாம் 

இன்னொரு சந்தர்ப்பத்தில் ஒருவர் கேட்டார் 'என்னப்பா கேள்விகளால கசக்கிப்பிழியிரிங்கலாமே' அப்போது எனக்குப் பக்கத்தில் நின்ற நண்பர் அவர் பேசி முடிவதற்குள் 'ஓஹ் அதென்ன பெரிய விசயமா? கசக்கும் போது கொஞ்சம் கூடுதலாச் சுருங்கியிருந்தா வண்ணான்கிட்டக் குடுத்து நல்ல அயர்ன் ஒன்டு போட்டு எடுத்திடலாம்' என்றார். 

பல பொழுதுகளில் நம்மில் பலர் மோதவிகளாகக் கருதிக் கொண்டு செயற்படுவோம் அப்போது கொஞ்சம் சீரியசாகக் கருத்துச் சொல்லத் தோன்றும் அப்போது இப்படி விழும் பதில்கள்தான் நம்மைச் சற்று நிதானிக்க வைக்கின்றன. அப்பதில்கள் சில அடிப்படைகளையும் அசைத்துப் பார்க்க வல்லவை.

வாய்விட்டுச் சிரித்தா நோய்விட்டுப் போகுமாமே 
பிறகென்ன சிரிக்க வேண்டியதுதான்.