தமிழ் மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் இடம்பெறும் நேர்மறை 15 கேள்விகளுக்கு எஸ். எழில் வேந்தன் அவர்களின் பதில்கள்
• உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
1.பிழைக்கத் தெரியாத, எளிதில் ஏமாற்றப்படக்கூடிய, சுயபுராணம் பாடத் தெரியாத ஒருவன்
• நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
2. முரண்பாடு இல்லாத வாழ்க்கையே இல்லை. நிறையப் பேருடன்.
• இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
3. நீலாவணன் – அண்ணல் வெண்பாச் சமர். இக்கால இலக்கியவாதிகளுக்கு அதுபற்றித் தெரியுமோ நானறியேன்.
• உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
4. பலர் தொட்டுச் சென்றிருக்கிறார்கள். மல்லிகை அட்டைப்படத்தில் என்னைப்பற்றி எழுத ஆவல்கொண்ட அதன் ஆசிரியர் யார் எழுதினால் விரும்புவீர்களெனக் கேட்டார். அஷ்ரப் ஷிஹாப்தீன் என்றேன். என் ராசி. பத்திரிகை வெளிவருவதே நின்றுவிட்டது.
• நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
5. கவிஞர்களான மகாகவி, என் தந்தையார் நீலாவணன், சேரன், முகத்தார் ஜேசுரத்தினம், பேராசிரியர் சபா ஜெயராசா, எனப்பலரைப் பற்றி எழுதியிருக்கிறேன்.. ஒலிபரப்புப் பற்றி, வானொலி நாடக நூல்கள் பற்றியும் எழுதியுள்ளேன். எழுதப் பல விஷயங்கள் உள்ளன. என் சோம்பேறித் தனத்தால் தாமதமாகிக்கொண்டே போகிறது.
• யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
6. என் தந்தையாரை.
• இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
7.வேண்டாமே. சொன்னால் எனக்கு நெருக்கமான பலரின் நட்பை இழந்துவிடுவேன்.
• இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
8. பழையவர்கள் பலர் உள்ளனர். சமகாலத்தில் இலங்கையில் உமா வரதராஜன், யோ. கர்ணன், அகிலன் , அஷ்ரப் ஷிஹாப்தீன் , முஸ்டீன் (முகஸ்துதிக்காக அல்ல) ஆகியோரின் எழுத்துகள் பிடிக்கும். ஒன்றுக்கொன்று வித்தியாசமான படைப்புகளென்பதால் தனியே ஒன்றை மட்டும் சொல்ல மனது மறுக்கிறது.
• உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
9. ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்து வந்த தீபம். இப்போது அப்படியொன்று வருகிறதா? என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை.
• உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
10. இலக்கியங்களுக்கான பொருளாதார மதிப்பு கொடுப்பவரின் மனதையும், மடியையும் பொறுத்தது. என் தந்தை (நீலாவணன்) கவிதையொன்றுக்கு பத்திரிகைகள் அப்போது கொடுத்த சன்மானம் 15 ரூபாய். எனது முதலாவது மெல்லிசைப் பாடலுக்கு ஒருவர் 400 ரூபா கொடுத்தார். என் சம்பளமே அப்போது 450 ரூபாய்தான்.
விலைகூறி விற்க இலக்கியம் ஒன்றும் கடைச் சரக்கல்ல. இதுநாள் வரை நான் ஒன்றுக்கும் விலை வைக்கவில்லை. ஆகவும் மோசமான கொடுப்பனவுகளைத் திருப்பிக் கொடுத்துள்ளேன். புண்ணியமாவது கிடைக்குமென்ற எதிர்பார்ப்பில்.
• இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
11. தமிழ் இலக்கியங்களுக்கு நோபல் பரிசா? சர்வதேச விருதுகளுக்குச் சந்தைப்படுத்தல் அவசியமென்கிறார்கள். அச்சிட்ட 500 புத்தகங்களை விற்கவே நமது இலக்கியவாதிகள் மூச்சு வாங்குகிறார்கள். இதில் சந்தைப்படுத்தலா?
• உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
12. பாண்டித்தியமென்றில்லாவிட்டாலும் தமிழ் ஓரளவு உண்டு., ஆங்கிலம் சிங்களம் (சரியாக)மொழிபெயர்க்கும் அளவுக்குண்டு.
• முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
13 இணையம் நம்மால் அடைய முடியாத சில நல்ல எழுத்துகளையும் எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்துள்ளதை ஒப்புக்கொண்டேயாகவேண்டும்.
• உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
14. ஒரு மனம், இரு மணம், மூன்று குழந்தைகள், நன்கு சகோதரங்கள்.
• எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
15. என் இரு கைகள் போதாது என்பதால் அவர் – அவர்கள் தப்பித்தார்கள். பிழைத்துப் போகட்டும்.
மோசடி இலக்கியவாதிகள் முகத்தில் குத்தாது விட்ட எனக்கு நானே குத்திக்கொள்ள விருப்பம்.
No comments:
Post a Comment