Tuesday, January 5, 2016

நேர்மறை 15 கேள்விகளுக்கு அமல்ராஜ் பதில்கள்

தமிழ் மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் இடம்பெறும் நேர்மறை 15 கேள்விகளுக்கு அமல்ராஜ் அவர்களின் பதில்கள் 


01 உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
எண்ணம் போலவும், எழுத்து போலவும், ஊருக்கான நம் உபதேசம் போலவும் இம்மியளவாவது வாழவேண்டும் என தினமும் முயற்சித்துக்கோண்டிருப்பவன். நான் நல்லவன் என நானே நினைத்து அடிக்கடி சிரித்துக்கொள்ளும் சிறுபிள்ளை. யுத்தக்களத்திலும் சந்தோசமாக பட்டாம்பூச்சி பிடித்துக்கொண்டிருப்பவன்.

02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
இலக்கிய முரண்பாடுகளை எண்ணிவைத்திருப்பதில் கூட எனக்கு முரண்பாடு இருக்கிறது. அதனால் எண்ணுவதில்லை.

இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
3. அதிகம் வாசிக்கும் இளையவர்களுக்கும் நிறைய எழுதிய பெரியவர்களுக்கும் இடையில் நடக்கும் 'அறிவாளிப் போட்டி'யும் அதனால் வரும் 'pழிரடயசவைல உழஅpடநஒ' ஏற்படுத்தும் முரண்பாடுகளும். எட்டத்தில் நின்று அதை புதினம் பார்த்தால் நல்ல சோக்கா இருக்கும்!

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
நிறையப்பேர் எழுதியிருக்கிறார்கள். பட்டியலை எடுப்பாக சொல்ல வெளிக்கிட்டு இடையில் ஞாபகம் சறுக்கினால் உங்கள் இரண்டாம் கேள்விக்கு புதிய விடை கிடைத்துவிடும். அதனால், முக்கியமான ஒருவரை மட்டும் சொல்லிவிடுகிறேன். தெளிவத்தை ஜோசப்! எனது 'கருகிய காலத்தின் நாட்குறிப்புகள்' நூல் பற்றி வீரகேசரியில் அவர் எழுதிய பத்தியை வாசித்தபோது உரோமம் சிலிர்த்தது. இப்பொழுது இதை சொல்லிக்கொண்டிருக்கும் போதும்தான். இங்கே, அதே உரோமம்..!!

05. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
 பலரைப்பற்றி...... எழுத ஆசைதான்! குப்பையை அழகிய மெத்தையென்று நிலை-முரண் விவரணம் எல்லாம் அடித்துவிடத்தெரியாத என்னைப்போன்றவர்களுக்கு எதற்கையா இந்த வேலை?

06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
என் எழுத்துக்களை வாசித்தபின்னர்கூட குறட்டை விட்டு நின்மதியாக தூங்குகிறார்களே! அவர்களைத்தான்!!

இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
7. அண்மையில் ஈழத்தில் வெளிவந்த ஒரு கவிதைத் தொகுப்பு. அதை நேர்கோட்டில் எழுதி ஒரு கட்டுரைத்தொகுப்பாக போட்டிருக்கலாம் என்று தோன்றியது. கவிதையை தேடி தேடி தடவிக்கொண்டுபோய் கடைசியில் பின்அட்டையில் மோதி கீழே விழுந்ததுதான் மிச்சம்!

இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
8. ஜே கே இன் 'என் கொல்லைப்புறத்து காதலிகள்'. (அண்மைக்காலத்தில் வெளிவந்த நமது படைப்பாளிகளின் நூல்களுக்குள்..)

உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
9. யாத்ரா (காரணம் நான் கவிதைகளின் இரசிகன்)

உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
10. உண்மையான எழுத்து வணிகம் விசித்திரமானது. இங்கு உற்பத்திப்பொருளின் விலையை நுகர்வோனே தீர்மானிக்கவேண்டும்! சரி, சொல்லுங்கள், என்னுடைய ஒரு கவிதைக்கு எத்தனை டொலர்??

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
11. விதியாதர் சுராஜ் பிரசாத் (2001) இற்கு கொடுக்கப்பட்டிருந்தால், எதற்கு நம்ம சாருவிற்கு ஒருதடவையாவது கொடுத்துப்பார்க்கக்கூடாது என்று மட்டமாக யோசிப்பதோடு முடிந்துவிடும் நோபல்பரிசு பற்றிய எனது அறிவு. அவ்வளவுதான்! நோ மோ குவஷன்ஸ்!

உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
12. எந்த மொழியிலும் இன்னும் 'பாண்டித்தியம்' வரவில்லை! ஆமா, தமிழிலும்தான்!

முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
13. சிலர் எழுதுகிறார்கள். சிலர் கிறுக்குகிறார்கள். இன்னும் சிலர் வாந்தியெடுக்கிறார்கள். வாந்தியெடுப்பவன் நூற்றுக்கணக்கில் ஹிட்ஸ் அடிக்க நன்றாக எழுதுபவன் ஐந்து பத்து அவமானத்தோடு அந்த 'லொஜிக் முரண்'ஐப் பார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கிறான். நியமத்தின்படி, தரமான எழுத்துக்களை இணையத்தில் தேடி கண்டடைபவன் இணைய பாக்கியவான்.

உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
14. சுருக்கமாக.... 'பல்கலைக்கழகம்'!

எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
15. பிரயோசினமாக இலக்கியத்தில் எந்த ஆணியையுமே பிடுங்காமல் கொழும்பு தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் முதல் வரிசையில் வந்து அமர்ந்தபடி தாடியைத் தடவிக்கொடுக்கும் 'இலக்கியவாதி(கள்)' முகத்தில்.
அல்லது,
முஸ்டீன், கொஞ்சம் முகத்தைக் காட்டுங்கள். 'டிஸ்யூம்ம்..!'

No comments:

Post a Comment