தமிழ்மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர் - 09
இந்தப் பெயருக்கு உரிய நபர் சர்வதேச விருதுபெற்றவரோ அல்லது தடையின்றி வாய்ப்புகள் கிடைத்து நிறைவாகச் சாதித்தவரோ கிடையாது. அத்துடன் பெயர் பெற்ற பல புத்தகங்கள் வெளியிட்ட எழுத்தாளரோ கூடக் கிடையாது. அதனால் உங்களில் பலரும அவரைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
1984ஆம் ஆண்டு வாழைச்சேனை யில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த நஜிமிலாஹி ஊடகத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு இயங்கிய ஒரு இள ரத்தம். அதற்காக கொழும்பு ஊடகக் கல்லூரியில் சேர்ந்து கற்கையைப் பூர்த்தி செய்தார். 2007 என்றுதான் ஞாபகம், அப்போது அவர் தனது கற்கைக்காக ஒருவரை நேர்காணல் செய்து அதை வீடியோவாகப் பதிவு செய்து பூரணப்படுத்தி ஒப்படைக்க வேண்டும். அதற்காக நேர்காணப்படும் நபராக நஜிமிலாஹி என்னைத் தெரிவு செய்திருந்தார். அவ்வளவு வேலைப்பலுவுக்கு மத்தியிலும் அவரின் அழைப்புக்காகப் பதில் அளித்தேன். ஏன் என்னைத் தெரிவு செய்தார் என்பது இப்போது வரையும் எனக்குத் தெரியாது.
அந்த இளைஞனுக்கு ஊடகக் கற்கையைப் பூர்த்தி செய்தளவுக்கு அவனது ஆசை எதிர்பார்ப்பு மற்றும் தகுதிக்கு ஏற்ப வாய்ப்பு என்று எதுவுமே திருப்திகரமாக அமையவில்லை. அதற்காக அவன் சும்மா இருக்கவுமில்லை. ஒரு தொலைக்காட்சியின் காலைச் செய்திப் பத்திரிகைக் கண்ணோட்டத்தை அளிக்கை செய்தான். பின்னர் நவமனி பத்திரிகையில் பணியாற்றினான். இந்தப் பத்திரிகையில் பணியாற்றிய காலம்தான் மிக முக்கியமான காலம் என்று நான் கருதுகின்றேன்.
நவமனி பத்திரிகையின் ஆசிரியர் மறைந்த மர்ஹூம் அஸ்ஹர் அவர்களின் மீது கொண்ட மதிப்பும் கொள்கைப் பிடிப்பும் அவரின் மறைவோடு அங்கிருந்து அவனை வெளியேறச் செய்தது. இலங்கை முஸ்லிம்களுக்கான ஒரு தினசரிப் பத்திரிகை என்ற அவரின் கனவை தனது கனவாகச் சுமப்பதில் அவன் திருப்தி கண்டான். இறுதி நேரத்தில் அஸ்ஹர் அவர்கள் மரணிப்பதற்கு முன்னர் பல விடயங்களை நஜிமிலாஹியுடன் பகிர்ந்து கொண்டதாக அறியக் கிடைத்தது. அவை மிகவும் கசப்பான செய்திகள் என்பதால் இதுவரைக்கும் வெளிவரவில்லை என்று நினைக்கின்றேன்.
பின்னர் ஒரு அரசியற் கட்சியோடு இணைந்து அக்கட்சியின் ஊடகப் பிரிவில் பொறுப்புவாய்ந்த ஒருவனாகப் பணியாற்றி மாற்றம் என்ற பத்திரிகையை ஆசிரியராக இருந்து வெளியிட்டு வைத்த நஜிமிலாஹியால் அந்தப் பத்திரிகையினை ஐந்து இதழ்களுக்கு மேல் வெளியிட முடியாமல் போனது.
சிறிது காலம் கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப் பிரிவில் பணிபுரிந்த போது அவனில் ஒரு தெளிவை என்னால் அவதானிக்க முடிந்தது. ஒரு திறமையுள்ள இளைஞனை இந்தக் காலம் எப்படியெல்லாம் பந்தாடுகின்ற என்பதற்கும் கனவுகளை அடைந்து கொள்வற்காக எப்படியெல்லாம் பாடுபட வேண்டும் என்தற்கும் இந்த இளைஞன் ஒரு நல்ல உதாரணம்.
தனது கனவுகள் கைகூடவில்லையென்பதற்காக அவன் அமைதியாக வாளாவிருக்கவில்லை. ஒரு அரசியல் பாத்திரத்தினையும் கையிலெடுத்துப் பார்த்துத் தோல்வி கண்டான். இப்போதைய நடைமுறை அரசியல் கொள்கைகளுக்கும் லட்சிய புருசர்களுக்கும் சாதகமான முடிவைத்தராது என்பதை அப்போது அவன் புரிந்து கொண்டிருக்கக் கூடும்.
துடிப்புள்ள ஒரு இளைஞனுக்கு வாய்ப்பளிக்க யாராவது தயாராக இருந்து அத்தகைய இளைஞனைத் தேடிக் கொண்டிருப்பீர்களாயின் நான் நஜிமிலாஹி என்ற இளைஞனைப் பரிந்துரை செய்வேன்.
அவன் பிறந்த ஊருக்கு இன்னும் அவனைப் பயன்படுத்தத் தெரியவில்லை. அந்த ஊரில் உள்ள பெரியவர்களுக்கும் அவனது திறமையைப் பயன்படுத்திக் கொள்ளத் தோன்றவில்லை, அந்த ஊர் அரசியல் வாதிகளின் கண்ணிலும் அவன் தோற்றவில்லை.
இருந்தாலும் அவன் இன்னும் ஓடிக் கொண்டிருக்கின்றான் என்றாவது ஒரு நாள் வெல்வேன் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு.
No comments:
Post a Comment