Thursday, January 21, 2016

ஒரு போட்டோவும் ஒரு குறிப்பும்




நான் ஜாமியா நளீமிய்யாவில் மாணவனாக இருக்கும் போது புகைப்படம் பிடிப்பது கூடுமா கூடாதா  என்று சவுதி அரேபிய அறிஞர் பின்பாஸ் அவர்களின் கருத்து ஒன்றை ஓர் அரபுச் சஞ்சிகையில் வாசித்தேன். ஆனாலும் அதை முழுமையாகப் படித்து முடிக்கவில்லை காரணம் பெரும்பாலும் கூடாது என்ற தொனியில்தான் அவர் கருத்து போய்க் கொண்டிருந்தது. ஆச்சரியம் என்னவென்றால் கட்டம் கட்டப்பட்ட அந்தக் கருத்துக்கு மேலே கண்ணில் குத்தும் வண்ணம் அவருடைய புகைப்படம் இருந்தது. இறுதியில் அவர் கூடும் என்றாரா கூடாது என்றாரா என்பது எனக்குத் தெரியாது (யாராவது தௌஹீத்வாதிகள் பின்பாஸ் அவர்களின் போட்டோ தொடர்பான இறுதி முடிவு என்ன என்பதை முடிந்தால் அறிவிக்கட்டும்) 

விமர்சன ரீதியாக எதையும் நோக்கும் எண்ணத்தை எனக்குள் விதைத்த பல்வேறு சந்தர்;பங்களில் இதுவும் ஒன்று. போட்டோ பிடிப்பது கூடுமா கூடாதா என்று வாதிக்கும் ஒருவர் காரணகாரியங்களை விளக்கமாகக் கூறு முயலுகையில் அவரது புகைப்படத்தையும் சேர்த்தே பிரசுரித்திருப்பது கவனிக்கவேண்டியதொன்று. அங்கு விரிவுரையொன்றும் அவசியமில்லை. குறித்த அறிஞரின் புகைப்படம் இருக்கின்றதென்றால் அது கூடும் என்றேதான் அர்த்தம். இப்படித்தான் இஸ்லாம் குறித்த நிறைய விடயங்கள் விவாதிக்கப்படுகின்றன. பின்பாஸ் அவர்கள் போட்டோ பிடிப்பது கூடாது என்று பத்வா கொடுத்திருந்தால் அது நகைப்புக்குரியது. அது போல அவசியப்படும் போது மட்டும் போட்டோ பிடிப்பதில் தப்பில்லையென்றால் குறித்த கருத்தில் அவரது போட்டோவுக்கான எந்த அவசியப்பாடும் இல்லை, அதுவும் தேவையற்றது. சரி அது அப்படியே இருக்கட்டும் சவுதி அரேபியாவில் பெய்யும் மழைக்கு இலங்கையில் குடை பிடிக்கும் கூட்டத்தின் பிரச்சினை அது.

இன்றைய சூழல் மிகவும் வேகமானது. சமுக வலைத்தளங்கள் என்ற மெகா மாஸ்டர் ப்ளானுக்குள் உலகின் பெரும்பகுதி மக்கள் சிக்கிக் கொண்டுள்ள காலம். அந்த மெகா மாஸ்டர் ப்ளானுக்குள் சமுகவலைத்தளங்கள் குறிப்பாக முகநூல் பெரும்பெரும் போராளிகளை இலவசமாக நமக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லப்போனால் மார்க்கப் பிரச்சாரத்திற்கென்றே அவதாரம் எடுத்த முப்திகள் கூட்டம், பத்வா வங்கிகள், ஹராம் ஹலால் வங்கிகள், அடுத்த வீட்டுப் பிரச்சனைகளைக் கண்டு கண்ணீர் வடித்துக் கதறும் அவ்லியாக் குஞ்சுகள் என்று அந்தப் பட்டியல் நீளும்.

சரி இனி போட்டோ பிரச்சினைக்கு வருவோம். அன்மையில் தாரிக் ரமழான் அவர்கள் இலங்கைக்கு வந்தார்கள் அவருடன் சேர்ந் நின்று ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள யாருக்குத்தான் விருப்பமிருக்காது. தற்கால இஸ்லாமிய உலகின் முக்கியமான சிந்தனையாளர்களுள் அவரும் ஒருவர். அந்த அடிப்படையில் ஒரு இஸ்லாமிய ஆளுமையுடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்வது தப்புமில்லைதானே. அதன்பிரகாரம் சகோதரி லறீனா அப்துல் ஹக் தாரிக் ரமழான் அவர்களுடன் நின்று ஒரு போட்டோ எடுத்து முகநூலின் முகப்புப்படமாகப் போட்டிருந்தார். அதன் பிறகுதான் சனியன் எல்லாம் ஒன்று சேர்ந்து மிஸ்டு கோல் கொடுக்க ஆரம்பித்தன. 

பத்வா வங்கிகள் புதிய அறிவிப்புக்களைச் செய்தன. இன்பொக்ஸ்; பேர்வழிகள் அட்வைஸ் அட்வைஸ்ஆகப் பண்ணித் தொலைத்தார்கள். பன்னிக் கூட்டமெல்லாம் நாய்க்குடிலுக்குள் கூடி நஜீஸ் பற்றியும் ஹராம் ஹலால் பற்றியும் வாதிக்கத் தொடங்கின. 

இயக்கப் பிசாசுகளுக்கு அன்றுதான் புது பூஸ்ட்டர் கிடைத்தமாதிரி, இந்தக் கருத்தாடல்களைப் பார்த்து கடுப்பேறி ரம்போ மாதிரி  ஒரு பெரிய துப்பாக்கியத் தூக்கிட்டுக் கிளம்புவமா என்று யோசித்த போதுதான் இப்போதைக்கு இதை எழுதுவதில்லை என்று பல மாதங்கள் தள்ளி வைத்துவிட்டு அவற்றையெல்லாம் மறந்துவிட்டு அமைதியாக இப்போது  எழுதிக் கொண்டிருக்கின்றேன். சும்மாவே நமக்கு வாய் சரியில்ல அதற்குள் இந்த நிகழ்வும் இணைந்து கொண்டால் பிரச்சினையொன்று உருவாகி நிச்சயம் அது வேறு தளமொன்றினை நோக்கி நகர்ந்து விடும் என்பதால் தான் அந்த லீவு.

சரி போட்டோ பிடிப்பது கூடுமா? கூடாதா? இந்த இஸ்லாமிய தஃவா இயக்கப் புரோக்கர்கள் என்ன சொல்கின்றார்கள்? அவனவன் நடிகரோடும் நடிகையோடும் ஏன் நாயோடும் எருமையோடும் கழுதையோடும் நின்று போட்டோபிடித்து போடும் போதெல்லாம் இவர்கள் எங்கே போனார்கள்? எவனோ ஒரு அரபிக்காரன் கொடுத்த பணத்தில் ஒரு கிணறுக் குஞ்சையும் அடி பைப்பையும் கக்கூசையும் கட்டி அதற்கு திறப்பு விழா வேறு வைத்து படம்படமா பிடித்துத்தள்ளி வந்த காசுக்குக் கணக்குக் காட்டுறான், ஆடுமாட அறுத்து இரத்தமும் சதையுமா பேனர் வைத்து போட்டோவாப் பிடித்துத் தள்ளுகிறான் ஏழை எளியதுகளன் கியூவில வைத்து ஒரு பார்சல் இறைச்சியக் குடுத்து வெக்கமில்லாமப் படமெடுத்து காசு கொடுத்தவனுக்கு விசுவாசத்தோட அனுப்பி வைக்கின்றான் இதையெல்லாம் பண்ணிக் கொண்டும் அவற்றில் ஏதோவொரு விதத்தில் பங்கு பற்றிக் கொண்டும் கேட்பதற்கு ஆள் இல்லாத தெனாவட்டுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பூஞ்சனம் பிடித்த புச்சிக் கொட்டைகள் கருத்துச் சொல்லவும் பத்வா கொடுக்கவும் இன்பொக்ஸ் அட்வைஸ் பண்ணவும் கிளம்பியிருப்பதுதான் வேடிக்கை.

இஸ்லாமிய ஆடைவிழுமியங்களுக்குள் நின்று விலாகாது இன்று வரையும் கல்வியிலும் தனது தொடர் முயற்சிகளைச் செய்து கலாநிதிக் கற்கையை ஆரம்பித்திருக்கும் சகோதரி லறீனா அப்துல் ஹக் என்ற ஆளுமைக்கு முன்னால் தீவிர வாசிப்பாளிக்கு முன்னால் ஒரு ஆய்வாளருக்கு முன்னால் எந்தப் பிடிமானத்துடன் நீங்கள் போய் நிற்கப் போகின்றீர்கள்?

நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் தவளை பிராண்ட் இஸ்லாத்திற்கு அப்பால் நின்று சிந்தித்தும் எழுதியும் கொண்டுமிருக்கும் சகோதரிக்கு முன்னால் நீங்கள் சீரிய சரியான கருத்துக்களோடு போய் நில்லுங்கள் அவர் அதைச் செவிமடுப்பார். அதை விட்டு விட்டு காட்டுக் கூச்சல் போட்டு மிம்பர் மேடைகளில் பலாய் கழுவும் அறைவேக்காட்டுத்தனத்தை நிறுத்துங்கள் இல்லாவிட்டால் நிறுத்த வேண்டி வரும். ஏனெனில் மார்க்கத்தில் தெளிவில்லாமல் நான் எழுதவரவில்லை. நபிகளார் போதித்த மார்க்கத்தையும் அதன்பிரகாரம் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களையும் தேடிக்கொண்டிருக்கும் எமக்கு அத்தகையவர்களை மதிக்கவும் தெரியும் போலிகளை தோலுரித்துத் தொங்கவிடவும் தெரியும்.

சரி இப்ப சொல்லுங்க போட்டோ பிடிப்பது கூடுமா கூடாதா?

No comments:

Post a Comment