Sunday, August 13, 2017

கிழக்கின் சுயநிர்ணயம்

கிழக்கின் சுயநிர்ணயம்

-முஸ்டீன்-
தோழர் எம்.ஆர் ஸ்டாலின் அவர்களின் உரையொன்றைத் தொகுத்து கிழக்கின் சுயநிர்ணயம் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கின்றார்கள். இப்போதுதான் அதைப்படிக்கக் கிடைத்தது. புத்தகம் கிடைத்தவுடனேயே அதைப் படிப்பதற்கான முக்கிய காரணி தோழர் ஸ்டாலினைப் பற்றி ஓரளவுக்கு எனக்குத் தெரியும். 2004 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் பிளவுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் நிலவிய பயங்கரம் கலந்த மௌனப்பெருவெளியில் தனித்து நின்று தற்துணிவோடு சிலர் தமது அக்கறையை வெளிப்படுத்தினார்கள். அந்த அக்கறையோடு 2005களின் நடுப்பகுதியில் நானும் இணைந்து கொண்டேன். 

அதன் பின்னரான எனது செயற்பாட்டுத்தளம் ஆயுதங்களோடு பின்னிப்பிணைந்து மரணத்தைப் சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டு அலைந்த நினைவுகளை இப்போது மீட்டுத் தருகின்றது. அந்த அலைச்சலில்தான் தோழர் ஸ்டாலினை கிழக்கு மக்களின் நலன்மீது எப்போதும் அபிமானங்கொண்ட ஒருவராக நேரில் சந்திக்கக் கிடைத்தது. அதற்கு முன்னரே எக்சில் சஞ்சிகை மூலம் அவர் எனக்குப் பரிச்சயமானவராக இருந்தார். அவரது நியாயத் தன்மைகளை நான் முதன் முதலில் நேரில் கண்டு வியந்து நின்றது இப்போதும் தித்திப்பான பொழுதுகளாய்த்தான் தெரிகின்றது. 

விடுதலைப்புலிகள்முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு  கிழக்கு விடுவிக்கப்பட்ட சூழ்நிலையில் கிழக்குவாழ் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின்  எதிர்கால இணக்கப்பாடான வாழ்க்கைக்கு என்னவிதமான செயற்பாட்டுத்தளமொன்றை நிறுவலாம் என்பதில் இவரோடு இணைந்து நான் பணியாற்றிய பொழுதுகளில்தான் வுஆஏP தலைமையுடன் எமது அணி சார்பாக ஓர் ஒப்பந்தத்தைச் செய்து கொள்வது என்று முடிவானது அது மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் மக்களுக்கான செயற்;பாட்டுத்தளத்தில் நிச்சயம் பெரிதும் சாதகமான பல விளைவுகளைத் தரும் என்ற நம்பிக்கையில் மேற்கொள்ளப்பட்ட சுயநலன்கள் கலக்காத முன்னெடுப்புகளாகும். அப்போது திரு சிவநேசத்துரை சந்திரகாந்தன் அரசியல் சாயம் கலக்காத ஒரு நல்ல மனிதராக இருந்தார். இங்கு ஒரு நல்ல மனிதராக இருந்தார் என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். 

ஐந்து சரத்துகளை உள்ளடக்கிய தாக அந்த ஓப்பந்தம் வடிவமைக்கப்பட்டது. ஒப்பந்தத்துக்கான முதல் மாதிரி வரைபை தோழர் யூ.எல்.எம்.நஜீப் வரைந்தார் பின்னர் அதை நான் மேம்பட்ட முழுமையான வடிவமாக மாற்றினேன் அதில் நியாமான சொற்பிரயோகங்களை பிரயோகிக்க எந்தவிதமான உள்ளரசியலுமற்ற தெளிவான மனநிலையில் தோழர் ஸ்டாலின் செயற்பட்டார். கிழக்க தனி மாகாண சபைத் தேர்தலை முதன்முதலில் சந்திக்கின்றது அதன் பிறகாவது கிழக்குக்கு விடிவு கிடைக்கும் அதன் பின்னராவது கிழக்குவாழ் மக்கள் தமது தனித்துவ சமய கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பேணி நிம்மதியான வாழ்வு வாழ வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில்தான் எல்லா விதமான செயற்பாடுகளிலும் தோழர் ஸ்டாலின் வெளிப்பட்டு நின்றார். ஒப்பந்தத்தில் 'கடந்து காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் துரதிஸ்டவசமானது' என்று ஒரு வசனத்தை நான் சேர்த்திருந்தேன், அந்த வசனத்தை மற்றயதரப்பு நபர் ஒருவர் நீக்கியிருந்தார் ஆனால் தோழர் ஸ்டாலின் வெட்டப்பட்ட அந்த வசனத்தைப் பார்த்துவிட்டு கட்டாயம் அதைச் சேர்க்க வேண்டும், கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது உண்மைதானே அந்த உண்மையை வெளிப்படுத்துவதில் தப்பில்லைதானே எனவே அதைக்கட்டாயம் சேர்த்த்துவிடுங்கள் என்றார் அவரது கையாலே வெட்டப்பட்ட அந்த வசனத்தை மீண்டும் எழுதினார் அவரது இந்த நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த நேர்மையை அவர் இன்று வரை விட்டுக் கொடுக்கவில்லை என்றும் விட்டுக்கொடுக்கவுமாட்டார். இவரது  இந்த நேர்மையும் கிழக்கு மக்களுக்கான தனித்துவங்களுடன் கூடிய எதிர்பார்ப்புகளுமே கிழக்கின் சுயநிர்ணயம் என்ற நூலில் பெரிதும் பிரதிபலிக்கின்றது. 

கிழக்கு கிழக்காக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று கிழக்கு மக்கள் எதிர்பார்ப்பதில் என்னதான் தப்பிருக்கின்றது என்பதை ஆதாரங்களுடன் கிழக்கு கிழக்காகத்தான் வரலாறு நெடுகிலும் இருந்திருக்கின்றது வடக்கின் வாலாக இருக்கவில்லை என்பதை இதைவிட அழகாகக் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கின்றேன். புலிகளின் தென் தமிழீழம் அதே புலிகளினால் சகோதரப்படுகொலைகளுக்குப் பின்னர் சிதைக்கப்பட்ட நிலையில் வெருகல் படுகொலை போன்ற யுத்தக் குற்ற அல்லது தண்டிக்கத் தக்க மனிதவிரோத செயற்பாடுகுள் அரங்கேறிய நிலையில் கிழக்கினைத் தொடர்ந்தும் வடதமிழீழத்தின் ஆளுகைக்குள் வைத்திருப்பதை மக்கள் எப்படி அங்கீகரிப்பர் அதனால்தான் இராணுவத்தால் வெகுவிரைவாகவே தென் தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுப் போயினர். அதன் பின்னர் கிழக்கு கிழக்காக விடிந்தது. அந்த விடியலை அனுபவிக்கவிடாமல் யாழ்மையத் தலைமைகள் இன்னும் முன்னெடுக்கும் அனைத்துவித முயற்சிகளையும் தோற்கடித்தால்தான் கிழக்கின் தனித்துவம் வெளிப்படையா நிலைபெறும் இந்த எதிர்பார்ப்பு பிரதேச வாதமல்ல யதார்த்தத்தின்பாற்பட்ட எதிர்பார்ப்பு அந்த எதிர்பார்ப்பை தோழர் ஸ்டாலின் அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றார். 

கிழக்கில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் இந்நூலைப்படிக்க வேண்டும் சிங்கள மக்களுக்கும் இச்செய்திகள் போய்ச் சேர வேண்டும் அப்போதுதான் எதிர்காலத்தில் ஒளிமயமான சமதான பூமியாக சச்சரவுகளின்றி கிழக்கு வாழும். சிங்களத்தில் மொழியாக்கப் பணிகளைச் செய்தால்தான் இது அம்மக்களையும் சென்றடையும். நிச்சயம் கிழக்குவாழ் சிங்கள மக்களின் மனதில் நல்லமாற்றம் ஒன்றை அது உருவாக்கும். இப்போதே இதைச் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யும் முயற்சிகளை முன்னெடுக்கலாம் என்று நினைக்கின்றேன்.

தோழர் ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த வாழத்துக்கள். இதை வெளியிட்டு வைத்த சிராஜ் மஸ்ஹூருக்கும் மனநிறைவான நன்றிகளும் பிரார்த்தனைகளும்.