Thursday, November 12, 2015

நேர் மறை 15 கேள்விகளுக்கு ஆர்.எம்.நௌசாத் (தீரன்) பதில்கள்


தமிழ்மிரர் 06 நவம்பர் 2015

01. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?


என் பட்டோலைகளை  மீசானில்  போட்டுள்ளேன். காலம் மறு தட்டில்  படிக் கற்களை வைத்துக் கொண்டிருக்கிறது. எடை போட தாமதமாகும்


02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?

ஒரே ஒருவருடன்.... நபசுல் அம்மாராவுடன் மட்டுமே.


03. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
இலக்கிய மேடைகளில்  அவர்களின்  ஓரங்க ஈரங்க நாடகக்  கூத்துக்கள் என்னை  மிகவும்  கவர்வதுண்டு,

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
இதற்குப் பிறகு  எழதவே  மாட்டார்களா.!!!

05. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
விரல் விட்டு எண்ணி விடலாம்

06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
தீரன் என்ற உள் மனிதனை

07. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
நட்டுமை நாவலை  வாசிக்கும் போது 

08. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
நட்டுமை நாவலை  வாசிக்கும் போது

09. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
தூது

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
சாகித்திய விருதுக்காக  ரூபா 55000- தந்தார்கள்

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
நாய்க்கு  ஏன்  தோல் தேங்காய்..?

12. உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
பழங்கால  சுரியானி  மொழியில்..

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
ஒவ்வொரு  இணையக்  கடையாக ஏறி ஒன்றும்  வாங்கப் பிடிக்காமல் இறங்கிக் கொண்டிருக்கிறேன் ..

14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
சரியாக கேட்டீர்கள் ஐந்தாறு  வரிகளில் என்று-  ஆறே பேர்தாம். நான்-- மனைவி- மூன்று பிள்ளைகள்—ஒரு  வரிப் பூனைகுட்டி

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
தானே  அச்சடித்த தனது  நூல் வெளியீட்டு  விழா  அழைப்பிதழில் தன பெயருக்கு முன்னால்   பிரபல எழுத்தாளர் என்ற அடைமொழி சேர்த்தவனை  இப்போதும்  தேடிக் கொண்டிருக்கிறேன் ...

சாகித்ய விருதுக் குளறுபடி

சாகித்ய விருதுக் குளறுபடி 
மனத்தில் பட்டது - 04

சாகித்ய விருதுகளில் பல்வேறு குளறுபடிகள் இன்று நேற்றல்ல நெடுநாள் தொடரும் ஒரு விடயம். ஆங்காங்கே புகைந்துகொண்டிருக்கும் தில்லாலங்கடி வேலைகளை யாராவது மொத்தமாகப் போட்டு உடைக்க மாட்டார்களா என்று நியாயமாகச் சிந்திக்கும் உள்ளங்கள் இன்னும் குமுறிக் கொண்டே இருக்கின்றன. அந்தக் குமுறல் அர்த்தமிழந்து போகாது. ஒரு நாள் பிரளமாகும் அப்போது எல்லா உடைசல்களும் தெளிவாகத் தெரியத்தான் வரும்.
இம்முறை கிழக்கு மாகாண சபைக்கான சாகித்திய விருதுகளிலும் அதே குளறுபடிகள் இருப்பதாகத் தெரிகின்றது. விருது என்பது திறமைக்கானது. அது முகத்தாட்சனைக்கு அல்லது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டுத்தான் கொடுக்கப்பட வேண்டும். தெரிவில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். விருதுக்கான நூல்களைத் தெரியும் நடுவர்கள் ஒன்றாக இருந்து கலந்துரையாடி முடிவுகளை எடு;க்க வேண்டும். எந்த அடிப்படையில் விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டது என்பதை நடுவர்கள் பொது மன்றிற்குக் கொண்டு வர வேண்டும். தெரிவுக்கு முன்னர் நடுவர்களைப் பகிரங்கப் படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன ஆயினும் முடிவுகள் வெளியாகும் தருனத்தில் நடுவர்களைப் பகிரங்கப்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்க வேண்டும். முடிவுகள் ஒற்றைத் தன்மை வாய்ந்ததாக இல்லாமல் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டதாக இருத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படல் வேண்டும்.
பெரும்பாலும் நீதி என்பதை விருதுக்கு நூல்களைத் தெரிவு செய்யும் நபர்கள் தவறவிட்டுவிடுகின்றார்கள். அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகள், இன மத வேறுபாடுகள் என்பன தெரிவில் தாக்கம் செலுத்துவதை கடந்தகால பல்வேறு முடிவுகள் பாலர் வகுப்புப் பிள்ளைக்குப் போதிப்பது போலத் தெளிவாகப் போதிக்கின்றன. இதெல்லாம் ஏன் என்று கேள்வி கேட்டால் பதில் கிடைக்காமல் போகும் என்றா நினைக்கின்றீர்கள்?
இந்த விடயங்களை எல்லாம் புலனாய்வு செய்துதான் விமர்சிக்க வேண்டும் என்பதில்லை. அப்படிச் செய்யும் போது பல நடுவர்கள் நடுத்தெருக்கு கொண்டுவரப்பட்டு கடுஞ்சொற்களால் பந்தாடப்படுவார்கள். அந்தத் தகவல்களைத் தேடி எடுப்பது உன்று அவ்வளவு கஷ்டமான விடயமும் கிடையாது. 
பல பொழுதுகளில் விருதுக்கான புத்தகளைத் தெரிவு செய்வதற்காகப் பணிக்கப்படும் நடுவர்கள் அதற்குத் தகுதியானவர்களாக இருப்பதில்லை. அவர்களின் இலக்கிய அறிவு, வாசிப்பு வீதம், தேடல், சிந்தனை வீரியம், புரிந்து கொள்ளும் தன்மை, எல்லாவற்றையும் தாண்டி நீதியாகச் செயற்படும் பண்பு என்பன எல்லாம் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். 
தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட இரண்டு இனக் குழுமங்களும் மூன்று மதப்பிரிவினரும் இலக்கியம் படைக்கின்றார்கள். தமிழ் மொழியின் இலக்கியத் தரத்தை தூக்கி நிறுத்துவது சிறந்த படைப்புத்தான். அப்படிப்பட்ட சிறந்த படைப்பாளனுக்கே விருது போய்ச் சேர வேண்டும். அதைவிடுத்து இன வேறுபாடும் மத வேறுபாடும் விருதில் தாக்கம் செலுத்தக் கூடாது. அப்படித் தாக்கம் செலுத்தினால் அது தாய்த் தமிழுக்குத்தான் இழுக்கு. தரமற்ற படைப்புக்கு விருதினைப் பரிந்துரை செய்யும் நபர்கள் தாய்த் தமிழின் மீது தினிக்கும் அவமானத்தைப் பயந்து கொள்ளட்டும். வரலாறு தெளிவான நீரோடை போன்றது குப்பைகளை ஒருநாள் கரையில் ஒதுவிடும். அப்படி இல்லாவிட்டால் புரூட்டஸ் நீயுமா என்ற கதையெல்லாம் காலம்தாண்டி நூற்றாண்டுகள் கடந்து நம்மை வந்து சேர்ந்திருக்காது. 
தரமற்ற ஒரேயொரு நாவல் போட்டிக்கு வந்தால் அதற்கு எப்படி விருது கொடுப்பது? தரமான படைப்பென்றால் யாரும் முடிவுகளை விமர்சிக்கப் போவதில்லை தரம் கெட்டுப்போகும் போதுதான் விமர்சனமே எழுகின்றது. அந்த விமர்கங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியது உரிய அதிகாரிகளின் பொறுப்பு. அவர்கள் அவ்வளவு எளிதில் தமது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. 
இம்முறை கிழக்கு மாகாணசபை சாகித்திய விருதுத் தெரிவிலும் பல்வேறு குளப்பகௌ; கலந்திருப்பதாகத் தெரிகின்றது. உத்தியோகபூர்வ முடிவுகள் எதைச் சொல்கின்றன என்று கருத்துக்கள் பதிவு செய்யப்படுதல் வேண்டும் இதற்காக புலனாய்வு செய்யும் நிர்பந்தத்தை கிழக்கு மாகாண கலைகலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சு ஏற்படுத்தாது என்று நம்புகின்றேன். அத்துடன் திறந்த வெளியை நாங்கள் வைத்திருக்கின்றோம். தாராளமாக எழுதுங்கள்.

அக்கினிச் சுவாசம் - நினைவுகள் - தொடர் 01

அக்கினிச் சுவாசம்
நினைவுகள் - தொடர் 01
2002ஆம் ஆண்டு ஜாமியா நளீமிய்யாவில் நான் இரண்டாம் வருட மாணவன். இந்த வருடம் எனது தந்தையின் ஞாபகார்த்தமாக ஒரு அமைப்பைத் தோற்றுவிக்கும் போது எனக்கு வயது 19 தான். ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து இரண்டு வருடங்கள் கழித்து விழுந்த விதைதான் அக்கினிச் சுவாசம் என்ற பாடல் அல்பம்.
2015 செப்தம்பர் 24ஆம் திகதியோடு எமது முதலாவது படைப்பான அக்கினிச் சுவாசம் பாடல் அல்பம் வெளி வந்து பதினொரு வருடங்கள் ஆகிவிட்டது. நேற்று போல இருக்கின்றது.
இதில் பல நபர்களை நினைவுகூர வேண்டி இருக்கின்றது அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் பதிவு செய்வதுதான் இப்போதைக்கு நாம் செய்யும் நன்றிக்கடன். அத்துடன் இந்தப் படைப்புக்காக நாம் பட்ட அனுபவங்களை அப்படியே பதிவு செய்யவும் முயல்கின்றோம். அது இனிமையானதோ அல்லது கசப்பானதோ உள்ளதை உள்ளபடி எமது இந்த உழைப்பில் தோள் கொடுத்த ‪சூ‎முதற்_பிரிவினர்‬
01. அஷ்ஷெய்ஹ் ரஹ்மான் ஹசன் மற்றும் ட்ரிம் ஆர்ட்ஸ் நிறுவனம்
02. அஷ்ஷெய்ஹ் அஜ்வத் அலி
03. அஷ்ஷெய்ஹ் நுஸைர் நௌபர்
04. மூமினா ஆப்தீன்
05. பாரிஸ் நாநா
06. எஸ்.பி.ராஜன் மற்றும் சீ.சுதர்சன் (ப்ரண்ட்ஸ் இசைக்குழு)
07. நஜ்முந்நிஸா ஆப்தீன்
08. ஜூமானா அலி அக்பர்
09. காலித் ஹாஜியார்
10. அஷ்ஷெய்ஹ் பஸ்ரி
‪சூ‎இரண்டாவது_பிரிவினர்‬
11. அஷ்ஷெய்ஹ் முஹம்மத் - மருதமுனை
12. சலீம் ஹாஜியார்
13. ஹஸன் சேர்
14. இர்ஷாத் ஏ காதர்
15. மள்வானை தாருல் அர்கம்
16. இஜ்லான் சேர்
17. இஸ்மத் நாநா
18. மீள்பார்வை பத்திரிகை நண்பர்கள் - ரவுப் ஸெய்ன்இ சிராஜ் மஷூர்இ அஸார்
19. டொக்டர் ஸைபுல் இஸ்லாம்
20. றஹீம் நாநா – காத்தான்குடி வாஹினி ஸ்ரூடியோ
21. றியால்தீன் ஓட்டமாவடி
22. முகைதீன் குட்டி இஸ்மாயீல்
23. அஷ்ஷெய்ஹ் அல்தாப் பாரூக் மற்றும் குடும்பத்தினர்
24. ஏ.எம். பரீத் காவத்தமுனை
‪சூ‎மூன்றாவது_பிரிவினர்‬
25. நவ்சாத் பாஸா அக்கரைப்பற்று (முஸ்லிம் குரல்)
26. பஹீமா ஜஹான்
27. பைசல் அய்யூப்
28. பாலைநகர் ஜிப்ரி
29. முபாரிஸ்
30. சுபா
31. பிரியா மூர்த்தி
32. அஷ்ஷெய்ஹ் ஹாபிஸ்
33. அஸ்மின்
34. அஷ்ரப் சேர்
35. மஸீதா
36. பர்வீன்
37. சபா பானு
38. சப்னா பானு
39. எம் . ஐ .எம் .றியால் மற்றும் ஓட்டமாவடி டீ ஏ சகோதரர்கள்
40. அஷ்ஷெய்ஹ் இல்லியாஸ்
41. கொழும்பு ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கச் செயலாளர் (2004)
42. எனது வகுப்புத் தோழர்கள் (ஜாமியா நளீமிய்யா – 2000ஃ2007)
‪சூ‎நான்காவது_பிரிவினர்‬
43. அஷ்ரப் சிஹாப்தீன்
44. எஸ்.நளீம்
45. முல்லை முஸ்ரிபா
46. ரவுப் ஹஸீர்
47. எம்.கே.எம்.ஸகீப்
48. எம்.பௌசர்
49. அஷ்ஷெய்ஹ் ஏ.பீ.எம்.இத்ரீஸ்
50. சேகு இஸ்ஸதீன் - முன்னாள் ஊடகப் பிரதியமைச்சர்
51. அஷ்ஷெய் அகார் முஹம்மத் மற்றும் ஜாமியா நளீமிய்யா நிருவாகம்
52. மர்ஹூம் அன்வர் இஸ்மாயீல் எம்பி
53. முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்
பதினொரு வருடங்களுக்கு முந்திய ஞாபகங்களில் இருந்து இவற்றைத் தொகுத்து இருக்கின்றேன். பெரும்பாலும் விடுபாடுகள் இருக்க வாய்ப்பில்லை இருப்பினும் யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களையும் நிச்சயம்இணைத்துக் கொள்வேன்.

Thursday, November 5, 2015

அஷ்ரப் சிஹாப்தீனுடன் ஒரு நிமிடம்


றேர் மறை 15 கேள்விகள்

01. உங்களைப் பற்றியஉங்களின் மதிப்பீடுஎன்ன?
எனது பலவீனங்களைப் புரிந்து வைத்திருக்கிறேன்.

02. நீங்கள் எத்தனைபேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
நமக்குநாமேமுரண்பட்டுக்கொள்ளும் போதுஆங்காங்கேசிலருடன் அவ்வப்போதுமுரண் பட்டுக்கொள்ளவேண்டித்தான் இருக்கிறது. ஆனால் எத்தனைபேர் என்றுகணக்குச் சொல்லமுடியவில்லை.

03. இலக்கியவாதிகளுக்கிடையேயானமுரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்தநிகழ்வுஎது? 
இலக்கியவாதிகளுக்கிடையிலான முரண்பாடுகள் கவரும் விதமாகவா இருக்கிறது?

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர்விபரங்களுடன்?
ஏன்னைப் பற்றித் தனியேயாரும் எழுதியதுகிடையாது. எனதுஅறபுச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூலான'ஒருசுறங்கைப் பேரீச்சம் பழங்கள்'தொகுதிக்குமதிப்புரைவழங்கியசகோதரிலரீனாஅப்துல் ஹக் அதில் ஒருபகுதியில் என்னைப் பற்றியும் எழுதியுள்ளார். அதையேஎனதுஅறிமுகத்தையாராவதுகேட்டால் அனுப்பியும் வைக்கிறேன்.

05. நீங்கள் யார் யாரைப் பற்றிஅல்லதுபடைப்புக்களைப் பற்றிஎழுதியிருக்கின்றீர்கள்?
'யாத்ரா'சஞ்சிகைகளைப் பார்த்தீர்களானால் பலரைப் பற்றியும் நான் எழுதியிருப்பதைக் காணலாம். அதுபட்டியல் வரும். யுhத்ராவைஒலிச் சஞ்சிகையாகமாற்றியபிறகும் கூட அதில் சிலரைநேர்கண்டிருக்கிறேன். இப்போதும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் இலக்கியமஞ்சரிநிகழ்ச்சியிலும் இலக்கியவாதிகளைநேர் கண்டு (அவர்களைப் பற்றியமுக்கியவிபரங்களை) ஒலிபரப்பிவருகிறேன்.தவிரபலரது நூல்களைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். புட்டியல் தரவ hய்ப்புமில்லை,அவற்றைநான் குறித்துவைத்துக் கொள்வதுமில்லை.

06. யாரைமிகவும் மதிக்கின்றீர்கள்?
தன்னையேஎல்லோரும் புகழவேண்டும்,தான் சொல்வதேவேதவாக்கு,நான் எழுதுவதே இலக்கியம்,என்னுடையசிஷ்யக் குஞ்சுகளே சிறந்தவர்கள்,மாலையும் மரியாதைக்கும் பொருத்தமுள்ளவன் நான் மட்டுமேஎன்றெல்லாம் நினைக்கும் குப்பைமனிதர்களைத் தவிரமற்றவர்கள் அனைவரையும் பிடிக்கும்.

07. இதெல்லாம் ஒருபுத்தகமாஎன்றுஎதைவாசிக்கும் போதுதோன்றியது?
ஒருபுத்தகத்தைப் பற்றித்தான் கேட்கிறீர்கள். என்னிடம் அவ்வாறானபுத்தகங்கள் ஒருகும்பம் கிடக்குது. அவற்றையாருக்கும் வாசிக்கக் கொடுக்கும் எண்ணம் கூட எனக்குக் கிடையாது.

08. இதுவல்லவோபுத்தகம் என்றுஎதைவாசிக்கும் போதுதோன்றியது?
எச்.ஏ.எல். கிரெய்க் எழுதி - அல் அஸூமத் மொழிபெயர்த்த'பிலால்'

09. உங்களுக்குப் பிடித்த இலக்கியசஞ்சிகை?
எனக்குப் பிடித்த இலக்கியசஞ்சிகையாத்ரா!

10. உங்கள் எழுத்தின் பொருளாதாரமதிப்புஎன்ன? ஒருகவிதைக்கு,சிறுகதைக்கு,ஆய்வுக்குஅல்லதுவேறேதுமொருபடைப்புக்கானவிலைஎன்ன? 
எனக்கு இலக்கியத்தைப் பொருளாதாரரீதியாகமதிப்பிடத் தெரியவில்லை.

11. இலக்கியத்துக்கானநோபல் பரிசுபற்றியதங்களின் அபிப்பிராயம்?
நோபல் பரிசுக்குப் பின்னும் அரசியல் என்றஒன்று இருந்தாலும் தெரிவுசெய்யப்படுபவைமோசமானவைஎன்றுசொல்லமுடியாதுஎன்றுஎண்ணுகிறேன்.

12. உங்களுக்குஎன்னென்னமொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
எனக்குஒருமொழியிலுமேபாண்டித்தியம் கிடையாது.

13. முகநூல்,வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
கிள்ளி எடுக்கவும்! அள்ளி வீசவும்!

14. உங்களின் குடும்பம் பற்றிமிகச் சுருக்கமாகஐந்தாறுவரிகளில்?
நான்,மனைவி,மகள், இரு மகன்கள்,மருமகன்!

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்தவேண்டும் என்றுதோன்றும்?
ஒரு சில முகங்கள் இருக்கின்றன. குத்தினால் ஏழுமுறை கையைக் கழுவிக் கொள்ளலாம்தான். ஆனால் காலமெல்லாம் நினைவில் வந்து அருவருப்புத் தரும் என்பதால் சும்மா இருக்கிறேன்.

மனதிற்பட்டது - 03 - நல்ல சிந்தனையும் அழகிய கற்பனையும்

நல்ல சிந்தனையும் அழகிய கற்பனையும்
(தமிழ் மிரர் இலக்கியப் பக்கத்தில் தொடராய் வரும் பத்தியெழுத்து: 30 oct 2015)

யாத்ரா சஞ்சிகையின் இறுதியாக வந்த இதழில் நவீன கவிதைகள் எழுதுவதற்குப் பயன்படும் சில சொற்களை அட்டவனைப்படுத்தி வழிகாட்டியிருந்தார்கள். அதைப்பார்த்துவிட்டு நான் வாய்விட்டுச் சிரித்தேன், எல்லோராலும் அதைப் பார்த்துச் சிரிக்க முடியாது. சிலருக்கு அதைப் பார்த்ததும் மூக்கும் கண்களும் சிவந்திருக்கும். இதை எழுதியவன் ரெத்த வாந்தியெடுத்துச் சாவட்டும் என்று சாபமும் விட்டிருப்பார்கள். குறிப்பாகப் பெண்ணியக் கவிதை என்று வாந்தியெடுக்கும் சில அம்மணிகள்.

எல்லோருக்கும் எழுத்துச் சுதந்திரம் இருக்கின்றது. அவரவர் இஷ்டப்படி எது வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் அது டயறியாக இருந்தால் நல்லது. அப்போதுதான் யாரும் அதைப் புரட்டிப்பார்க்க மாட்டார்கள். ஆனால் பொதுமக்கள் உலாவும் வெளிக்கு அது வந்துவிட்டால் அதற்கான பார்வையும் புரிதலும் வேறுபட்டவை. அதனாலேயே பிறர் வாசிக்க வேண்டும் என்ற நினைப்போடு எழுதும் நபர்கள் தமது எழுத்தில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். 

யாருக்கும் விளங்காவிட்டால் அதுதான் நவீன மண்ணாங்கட்டி. அந்த மண்ணாங்கட்டியை கவிதை என்றோ கருத்து என்றோ அடையாளப்படுத்தி முகநூலில் தொங்கவிட்டு முதல் லைக் மற்றும் முதல் கொமெண்ட் ஆகியவற்றைத் தாமே இட்டுக் கொண்டு பெருமைப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை போலத் தெரிகின்றது. இந்தக் கொடுமையெல்லாம் பார்க்க வேண்டாம் என்றுதான் பல வல்லவர்கள் நேரகாலத்தோடு போய்ச் சேர்ந்துவிட்டார்கள். 

எழுத்து வல்லமை என்பது மிக முக்கியமான அம்சம். சிலருக்கு நல்ல சிந்தனை வசப்பட்டிருக்கும். அந்தச் சிந்தனைக் கவர்ச்சி நம்மை ஈர்ப்போடு வாசிக்கத் தூண்டும். நமக்குள் அந்த எழுத்து பல்வேறு உணர்வுகளைத் தட்டியெழுப்பும். நமது சிந்தனையைத் தூண்டிவிடும். ஒரு பிரளயத்தை உண்டுபன்னி நம்மையெல்லாம் அள்ளிச் செல்லும். அந்த எழுத்தில் தொனிக்கும் தூய்மை நம்மைச் சுத்தப்படுத்துவது போன்ற பணியைச் செய்யும். அது அவ்வளவு எளிதில் அமைந்துவிடுவதுமில்லை. அப்படியானவர்கள் உலகின் பக்கமிருந்து எதனையும் எதிர்பார்ப்பதுமில்லை. அமைதியான தெளிவான நதிபோல அது ஓடிக் கொண்டே இருக்கும். ஓர் ஆன்மீகத் தளத்தில் தியானத்தில் இருந்து வெளியேறியது போன்ற உணர்வை வெகு இயல்பாக ஏற்படுத்தி விட்டிருக்கும்.

சிலரின் எழுத்தில் இருக்கும் கற்பனை நம்மை அதிசயிக்கச் செய்யும். இப்படியெல்லாம் கற்பனை செய்ய முடியுமா என்று நம்மை ஆர்வத்தோடு தன் பின்னால் கட்டியிழுத்துச் செல்லும். அதன் லயிப்பில் நாம் அமிழ்ந்து போவோம். அவ்வெழுத்துக்கள் பரவசமூட்டி இன்புறச் செய்யும். அந்த இன்பம் சிறகடித்துப் பறக்க வைக்கும் எழுத்திக் கோர்வை அழகுக்குள் நாமும் சிக்குண்டு சின்னாபின்னமாகிப் போய்விடுவோம். அந்தக் கற்பனை பழரசம் அருந்துவது போன்ற உணர்வையும் ஒரு மாயைக்குள் சிக்கிப் போராடி வெளியேறியது போன்ற தோற்றத்தையும் வெகு இயல்பாக உருவாக்கி விட்டிருக்கும். குடும்பத்தோடு போன ஒரு நாள் உல்லாசப் பயணம் போல.

எழுத்து அவரவர் குணவியல்போடு ஒன்றித்து எழுவது. மிகச் சிலருக்கே நல்ல சிந்தனையும் அழகிய கற்பனையும் வாய்க்கப்பெற்ற எழுத்து கை கூடும். அவர்கள் முற்றிலும் வித்தியாசமானவர்கள். சில்லறைத் தனமான எழுத்து அசிங்கங்களிலில் இருந்து விலகிப் பாதை அமைத்துக் கொண்டவர்களாக இருப்பர். அவர்கள் மலிவு விலைக்குள் ஒரு போதும் சிக்கிக் கொள்ளவே மாட்டார்கள். தம்மைத்தாமே புகழ்ந்து தள்ளவோ அல்லது தமது ஸ்தானம் எத்தகையது என்பதை பிறர்க்குப் பாடம் நடாத்திப் பதிய வைக்கவோ முயல மாட்டார்கள். அவர்களிடம் புன்னகை இருக்கும், சிரிப்பும் இருக்கும் ஆனால் பல்லுத் தெரியும் இழிப்பு இருக்காது. 

தரமான ஒரு படைப்பு யாரிடமும் சிபாரிசுக்காக அலையாமல் காலத்தைவென்று நிலைத்து நிற்கும். யாருடைய காழ்புனர்வும் பொறாமையும் அதன் ஸ்தானத்தை மழுங்கடித்திடாது. கிறிஸ்துவுக்கு முன்னர் எத்தனையோ நூற்றாண்டுகள் முந்திய ஏதோவோர் மொழியில் எழுதப்பட்ட எத்தனை புத்தகங்களை இப்போது நாம் அழகு தமிழில் படிக்கவில்லையா!!

நல்ல சிந்தனையும் அழகிய கற்பனையும் எப்போதும் வாழும்.

சோ.பத்மநாதனுடன் ஒரு நிமிடம்


நேர்மறை 15 கேள்விகளுக்கான அவரின் பதில்கள்

1. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
நான் பேர்னாட் ஷோவின் ரசிகன்.  அவரை ஒரு நிருபர் கேட்டார்.  உலகில் மிக முக்கியமான மூவரைச் சொல்லுங்கள் என்று .  ஷோ சொன்னார்: முதலாவது சேர்ச்சில், இரண்டாவது ஸ்டாலின், மூன்றாமவர் பேரைச் சொல்லத் தன்னடக்கம் தடுக்கிறது!'.

2. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
இது எதிர்மறையாக கேள்வி.   இளம் வயதில் அரச சேவையில்  - மேலதிகாரிகளோடு முரண்பட்டிருக்கிறேன்.  வயதாக ஆக முரண்படாமல் இணக்கமாக சமூகத்தில் பழகக் கற்றிருக்கிறேன்.

3. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது? 
மஹாகவியும் முருகையனும் செய்த 'கவிதைச் சமர்' நினைவில் நிற்கிறது.  'மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்' என்று வெங்கட் சாமிநாதன் எழுதியதற்கு எம்.ஏ.நுஃமான் எழுதிய மறுப்பு பிரசித்தமானது.  ஒரு காலத்தில் எங்கள் போர்கள் காணிகளின் எல்லை (வேலி)களில் நடந்தன.  அந்தப் பயிற்சி இன்று காணி பிடுங்கும் படையினரோடு மோத மக்களுக்கு உதவுகிறது.


4. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
கல்வயல் குமாரசாமி மல்லிகை முகங்களுக்கு எழுதினார். கந்தையா ஸ்ரீகணேசன் ஞானத்தில்  நீண்டதொரு கட்டுரை எழுதியிருக்கிறார். கோகிலா மகேந்திரன் பல சந்தர்ப்பங்களில் பேசியும் எழுதியும் உள்ளார். பேராசிரியர் சிவலிங்கராஜா அமரர்கள் ஏ.ஜே.கனகரத்தினா, கவிஞர் க.சச்சிதானந்தன்,  பேராசிரியர் மௌனகுரு, ஓவியர் ஆசை இராசையா,  கவிஞர்கள் ஜெயசீலன், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், இ.சு.முரளீதரன், பா.மகாலிங்கசிவம் என வரிசை நீளும்.

5. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
குழந்தை ம.சண்முகலிங்கம், செங்கை ஆழியான், முருகையன், நீலவாணன், சத்தியசீலன் ஆகியோர் படைப்புலகம் பற்றி எழுதியிருக்கிறேன்.

6. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்?
கி.ராஜநாராயணன், அ.முத்துலிங்கம், இருவரையும் உச்சிமேற்கொள்கிறேன்.

7. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
அப்டித் தோன்றியதில்லை.

8. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
Chinua Achebe  இன்“Things Fall Apart”, Antoine Saint- Exuperi எழுதிய 'குட்டி இளவரசன்' ஆகிய நூல்களை வாசிக்கும்போது அந்த உணர்வு ஏற்பட்டதுண்டு.

9. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
ஏனக்குப் பிடித்த சஞ்சிகைகள் அற்பாயுசில் நின்றுவிடுகின்றன.

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமொரு படைப்புக்கான விலை என்ன? 
இந்த நாட்டில் எழுத்துக்கு ஏது பொருளாதார மதிப்பு? 'கவிதை காலித்தால் ஊரென்ன காசா கொடுக்கிறது?' என்று பாடினார் மஹாகவி

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்? 
ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் போன்ற மொழிகளில் ஒரு படைப்பு வந்தால் நோபெல் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.  இந்நிலைமை சரியல்ல.

12. உங்களுக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
தமிழ், ஆங்கிலம், ஓரளவு சிங்களம், கொஞ்சம் ஃப்ரெஞ்ச்

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
'துழரசயெடளைஅ ளை டுவைநசயவரசந in ய hரசசல' என்பர். ஊடகங்களில் அவசரம் இருக்கும் அளவுக்கு ஆழம் இல்லை.  'இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும்' படைக்கிறார்கள்.  புறநடைகள் இருக்கலாம்.  முகநூலின் வருகையோடு நம் எழுத்தாளர்கள் போராளிகளாகிவிட்டார்கள்.

14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
இல்லத்தை நிர்வகிக்கும் மனைவி, வளர்ந்து ஆளாகிவிட்ட மக்கள் நால்வர், கடைக்குட்டி பெண்.  ஆண்களுள் ஒருவர் மட்டும் இலங்கையில்.

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
ஓங்கிக் குத்துவதால் கை தான் வலிக்கும்.

மனதிற்பட்டது - 02 - ப.ஆப்டீன் என்ற பேரமைதி

(தமிழ் மிரர் இலக்கியப் பக்கத்தில் தொடராய் வரும் பத்தியெழுத்து: 23 நவம்பர் 2015)


இருபது வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் ஆங்கிலப்பாடம் படிப்பித்து இலக்கிய ஆர்வமுள்ள மாணவர்களைத் தட்டிக் கொடுத்து, நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்து, வாசிக்க வைத்து, வாசித்தவைகளை ஒரு மாலைப் பொழுதில் அமர்ந்து கலந்தரையாடி இலக்கியத்தை விதைத்தவர் ப.ஆப்டீன்.

இலக்கியமும் விதை போன்றதுதான். நிலமறிந்து விதைத்துவிட்டால் மட்டும் போதாது, முளைவிடும் கலப்பகுதியில் அவற்றைத் திறம்படப் பராமரிக்கவும் வேண்டும். நல்ல அறுவடை வேண்டுமானால் விசக்கிருமிகள், கெட்ட புழுக்கள், கொடிய பூச்சிகள் போன்றவற்றின் கொடிய தாக்குதல்களில் இருந்து கண்ணும் கருத்துமாக பாதுகாப்பாக்கவும் வேண்டும். அப்படிப் பாதுகாப்பாளனாகச் செயற்படுபவன் காரிய கெட்டிக்காரனாகவும் இருக்கவும் வேண்டும். நல்ல திறம் படைத்தவனாக இருக்கவும் வேண்டும். அப்படித் திறம் படைத்த ஒருவராகத்தான் ப.ஆப்டீன் வாழ்ந்தார்.

படைப்பிலக்கியவாதியின் திறம் என்பது வெறும் எழுத்தால் மட்டும் தீர்மானிக்கப்படுவதன்று. அவனது இயல்பு மற்றும் குணாம்சங்கள் அதில் கூடுதல் தாக்கம் செலுத்தும். மற்றவர்களுடன் அவன் பழகும் விதம் நடந்துகொள்ளும் விதம் சக படைப்பாளியைக் கையாலும் விதம் என்று எல்லாமும்தான் அவனது திறத்தின் கனதியைத் தீர்மானிக்கின்றன. 1937 நவம்பர் 11ஆம் திகதி பிறந்த ப. ஆப்டீன் அவர்கள் இராவின் ராகங்கள(1987);, நாம் பயணித்த புகைவண்டி(2002),கொங்கானி(2014) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் கருக் கொண்ட மேகங்கள்(1999), மலையூற்றுக்கள் ஆகிய நாவல்களையும் பேராசிரியர் நந்தியும் மலையகமும் என்ற ஆய்வையும் தந்தவர். இத்தனையையும் தந்துவிட்டு அவர் அமைதியாகவே இருந்தார். அவரது அமைதியும் அடக்கமும்தான் அவர்மீது அளவிலாத பற்றை நம் மீது ஏற்படுத்துகின்றன.

ஆர்ப்பாட்டமுள்ள இலக்கியக் கலகக் காரர்கள் பலருக்கு ப.ஆப்டீனைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் ஆப்டீனைப் பற்றியோ அல்லது அவரது படைப்பிலக்கியம் பற்றியோ தேடி அல்லது பேசிக் கூட இருக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களெல்லாம் இப்போது ஆகாயத்திலேயோ அல்லது பூமிக்கடியிலயோ இருந்து நவீன இலக்கியம் படைத்துக் கொண்டிருப்பார்கள், அல்லது யாரைப்பற்றியாவது குறைகழுவிக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட இலக்கிய ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆர்ப்பரிப்புக்களையெல்லாம் தாண்டி அவர்களின் மாபெரும், அதிசிறந்த அதி அற்புதமான என்ற சான்றிதழ்களுக்காக காத்திருக்காது ஓதுங்கிக் கொண்டவர்களில் ஆப்டீன் சேரும் ஒருவர். 

ஆப்டீன் சேரிடம் ஆங்கிலமும் இலக்கியமும் பயின்றவன் நான். சப்தமிட்டு எதற்காககவும் அதட்டத் தெரியாதவர். மள்வானையில் யதாமா பாடசாலைதான் எங்கள் இலக்கியத் தோட்டம். அங்கு அவர் இலக்கியத்தை எமக்குள் விதைத்து  சிறந்த அறுவடைக்காகக் பராமரித்தார். நீர்கொழும்பைச் சேர்ந்த ரிஸ்வான் என்பவர் ஆப்டீன் சேரின் ஆசிர்வாதத்துடன் ஒரு கவிதைத் தொகுதியை 2000மாம் ஆண்டுகளில் வெளியிட்டார். நான் கொஞ்சம் தாமதம். 
காசுக்குப் பறக்கும் கலாபூஞ்சனங்களுக்கு இடையே காலம் தாழ்த்தி அவரது திறமைக்கும் ஆற்றலுக்குமாக 2012ஆம் ஆண்டுதான் கலாபூசணம் விருது அவரைச் சேர்ந்து பெருமைபெற்றது. அவர் எந்தச் சால்வைக்காகவும் ஓடவுமில்லை பாயவுமில்லை. யாரையும் காக்காய் பிடித்து இலக்கியத் தம்பட்டம் அடித்துக் கொள்ளவுமில்லை. அவர் பாட்டில் அவர் பணியைச் செய்தார். இப்போது அவருக்காக நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்கின்றோம். 

மலாய் சமுகத்தின் வரலாற்றை மையப்படுத்தி ஒரு நாவலை எழுதும் முயற்சியில் இறுதித் தருனத்தில் அவர் ஈபட்டிருந்தாகவும் தகவல் கிடைக்கின்றது, அத்துடன் இன்னும் சில சிறுகதைகளும் குறு நாவல்களும் புத்தக வடிவம் பெறாமல் இருக்கின்றன. அவற்றைப் பதிப்பிப்பதோடு அவர் தமிழ் இலக்கிய உலகுக்குச் செய்த பங்களிப்பின் பெறுமதியை வரலாற்றில் பதிவு செய்வதுமே அவருக்கு எழுத்துலகில் நாம் செய்ய முடியுமான சிறிய உபகாரம்.

எதிர்வரும் 25ஆம் திகதி காலை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் அவருக்கான ஒரு நினைவுக்கூட்டம் நடாத்த இருப்பதாக மேமன் கவி தந்த தகவலையும் இங்கு பதிவு செய்து கொண்டு அவரின் மறுவுலக வாழ்க்கையின் ஈடேற்றத்திற்காகப் பிரார்த்திக்கிறேன்.