Thursday, November 5, 2015

மனதிற்பட்டது - 03 - நல்ல சிந்தனையும் அழகிய கற்பனையும்

நல்ல சிந்தனையும் அழகிய கற்பனையும்
(தமிழ் மிரர் இலக்கியப் பக்கத்தில் தொடராய் வரும் பத்தியெழுத்து: 30 oct 2015)

யாத்ரா சஞ்சிகையின் இறுதியாக வந்த இதழில் நவீன கவிதைகள் எழுதுவதற்குப் பயன்படும் சில சொற்களை அட்டவனைப்படுத்தி வழிகாட்டியிருந்தார்கள். அதைப்பார்த்துவிட்டு நான் வாய்விட்டுச் சிரித்தேன், எல்லோராலும் அதைப் பார்த்துச் சிரிக்க முடியாது. சிலருக்கு அதைப் பார்த்ததும் மூக்கும் கண்களும் சிவந்திருக்கும். இதை எழுதியவன் ரெத்த வாந்தியெடுத்துச் சாவட்டும் என்று சாபமும் விட்டிருப்பார்கள். குறிப்பாகப் பெண்ணியக் கவிதை என்று வாந்தியெடுக்கும் சில அம்மணிகள்.

எல்லோருக்கும் எழுத்துச் சுதந்திரம் இருக்கின்றது. அவரவர் இஷ்டப்படி எது வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் அது டயறியாக இருந்தால் நல்லது. அப்போதுதான் யாரும் அதைப் புரட்டிப்பார்க்க மாட்டார்கள். ஆனால் பொதுமக்கள் உலாவும் வெளிக்கு அது வந்துவிட்டால் அதற்கான பார்வையும் புரிதலும் வேறுபட்டவை. அதனாலேயே பிறர் வாசிக்க வேண்டும் என்ற நினைப்போடு எழுதும் நபர்கள் தமது எழுத்தில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். 

யாருக்கும் விளங்காவிட்டால் அதுதான் நவீன மண்ணாங்கட்டி. அந்த மண்ணாங்கட்டியை கவிதை என்றோ கருத்து என்றோ அடையாளப்படுத்தி முகநூலில் தொங்கவிட்டு முதல் லைக் மற்றும் முதல் கொமெண்ட் ஆகியவற்றைத் தாமே இட்டுக் கொண்டு பெருமைப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை போலத் தெரிகின்றது. இந்தக் கொடுமையெல்லாம் பார்க்க வேண்டாம் என்றுதான் பல வல்லவர்கள் நேரகாலத்தோடு போய்ச் சேர்ந்துவிட்டார்கள். 

எழுத்து வல்லமை என்பது மிக முக்கியமான அம்சம். சிலருக்கு நல்ல சிந்தனை வசப்பட்டிருக்கும். அந்தச் சிந்தனைக் கவர்ச்சி நம்மை ஈர்ப்போடு வாசிக்கத் தூண்டும். நமக்குள் அந்த எழுத்து பல்வேறு உணர்வுகளைத் தட்டியெழுப்பும். நமது சிந்தனையைத் தூண்டிவிடும். ஒரு பிரளயத்தை உண்டுபன்னி நம்மையெல்லாம் அள்ளிச் செல்லும். அந்த எழுத்தில் தொனிக்கும் தூய்மை நம்மைச் சுத்தப்படுத்துவது போன்ற பணியைச் செய்யும். அது அவ்வளவு எளிதில் அமைந்துவிடுவதுமில்லை. அப்படியானவர்கள் உலகின் பக்கமிருந்து எதனையும் எதிர்பார்ப்பதுமில்லை. அமைதியான தெளிவான நதிபோல அது ஓடிக் கொண்டே இருக்கும். ஓர் ஆன்மீகத் தளத்தில் தியானத்தில் இருந்து வெளியேறியது போன்ற உணர்வை வெகு இயல்பாக ஏற்படுத்தி விட்டிருக்கும்.

சிலரின் எழுத்தில் இருக்கும் கற்பனை நம்மை அதிசயிக்கச் செய்யும். இப்படியெல்லாம் கற்பனை செய்ய முடியுமா என்று நம்மை ஆர்வத்தோடு தன் பின்னால் கட்டியிழுத்துச் செல்லும். அதன் லயிப்பில் நாம் அமிழ்ந்து போவோம். அவ்வெழுத்துக்கள் பரவசமூட்டி இன்புறச் செய்யும். அந்த இன்பம் சிறகடித்துப் பறக்க வைக்கும் எழுத்திக் கோர்வை அழகுக்குள் நாமும் சிக்குண்டு சின்னாபின்னமாகிப் போய்விடுவோம். அந்தக் கற்பனை பழரசம் அருந்துவது போன்ற உணர்வையும் ஒரு மாயைக்குள் சிக்கிப் போராடி வெளியேறியது போன்ற தோற்றத்தையும் வெகு இயல்பாக உருவாக்கி விட்டிருக்கும். குடும்பத்தோடு போன ஒரு நாள் உல்லாசப் பயணம் போல.

எழுத்து அவரவர் குணவியல்போடு ஒன்றித்து எழுவது. மிகச் சிலருக்கே நல்ல சிந்தனையும் அழகிய கற்பனையும் வாய்க்கப்பெற்ற எழுத்து கை கூடும். அவர்கள் முற்றிலும் வித்தியாசமானவர்கள். சில்லறைத் தனமான எழுத்து அசிங்கங்களிலில் இருந்து விலகிப் பாதை அமைத்துக் கொண்டவர்களாக இருப்பர். அவர்கள் மலிவு விலைக்குள் ஒரு போதும் சிக்கிக் கொள்ளவே மாட்டார்கள். தம்மைத்தாமே புகழ்ந்து தள்ளவோ அல்லது தமது ஸ்தானம் எத்தகையது என்பதை பிறர்க்குப் பாடம் நடாத்திப் பதிய வைக்கவோ முயல மாட்டார்கள். அவர்களிடம் புன்னகை இருக்கும், சிரிப்பும் இருக்கும் ஆனால் பல்லுத் தெரியும் இழிப்பு இருக்காது. 

தரமான ஒரு படைப்பு யாரிடமும் சிபாரிசுக்காக அலையாமல் காலத்தைவென்று நிலைத்து நிற்கும். யாருடைய காழ்புனர்வும் பொறாமையும் அதன் ஸ்தானத்தை மழுங்கடித்திடாது. கிறிஸ்துவுக்கு முன்னர் எத்தனையோ நூற்றாண்டுகள் முந்திய ஏதோவோர் மொழியில் எழுதப்பட்ட எத்தனை புத்தகங்களை இப்போது நாம் அழகு தமிழில் படிக்கவில்லையா!!

நல்ல சிந்தனையும் அழகிய கற்பனையும் எப்போதும் வாழும்.

No comments:

Post a Comment