Wednesday, March 18, 2015

முஸ்லிம்களின் தனித்துவ ஊடகக் கனவு செரண்டிப் தொலைக்காட்சியை முன்னிறுத்தியும் இன்னும் சிலவற்றை உள்வாங்கியும்.

முஸ்லிம்களுக்கான தனித்துவ ஊடகம் என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டத்தில் இருந்த ஒருகாலத்தில் அதையே லட்சியமாகக் கொண்டு திரிந்தவர்களில் நானும் ஒருவன். பத்திரிகை வானொலி தொலைக்காட்சி பலமானதொரு இணையதளம் என்று விரிந்து சென்ற எதிர்பார்ப்புகள் ஆயிரமாயிரம் திட்டங்கள் எல்லாமே இப்போதும் வளச்சியின் போக்கிலேயே ஆரோக்கியமாக எதிர்பார்ப்புகளாக மட்டும் அப்படியே இருக்கின்றன. ஆயினும் காலம் செல்லச் செல்ல உலகில் இயல்பாய் இடம்பெறும் மாற்றங்கள் சில விடயங்களை அப்படியே வலுவிழக்கச் செய்துது பிரிதோர் கோணத்தில் அத்தேவைகளை நிறைவேற்றிச் செல்வதையே இப்போதும் நிதர்சனமாகக் காண்கின்றேன். 

நமக்கான தனித்துவ ஊடகம் என்ற கொள்கையைக் கொக்கரிக்காத முஸ்லிம் ஊடகவியலாளர்களே கிடையாது, சிலர் ஏறும் மேடைகளில் எல்லாம் இத்தேவை குறித்து வெறுமனே பேசுபவர்களாகவே இருந்து வந்தததையும் அவதானித்து இருக்கின்றேன். அரசியல் வாதிகளின் கொடும்பிடிக்குள்ளும், தஃவா என்ற போர்வையில் குழாயடிச் சண்டை போடும் இஸ்லாமிய இயக்க வெறியர்களின் யாவாரத்திலும் ஒரு பங்குப் பிரிவாக இவ்வூடகத் தேவை சிக்கிக் கொண்டு குற்றுயிரும் குறையுயிருமாக அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த போது இப்போது அப்பிரமாண்டத் தேவையில் அதிரடி மாற்றங்கள் பல இடம்பெற்று வருகின்றமை மிகவும் வருந்தத் தக்க விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தி விடுமோ என்ற ஏக்கம் அன்மைக்காலமாக அதிகரித்துள்ளது.

முஸ்லிம் இயக்கங்களைப் பொறுத்தவரைக்கும் அவை தமக்காகக் கீறிக் கொண்டுள்ள குறுகிய வட்டத்திற்குள்ளிருந்து வெளியில் வரத் தயாரில்லை. அல்லாவின் பாதையில் செல்வதும், தீனில் முக்திநிலையடைவதும், பித்அத்துகளை ஒழித்து தூய இஸ்லாமாக்கலும், கிலாபத்தை ஏற்படுத்தலும் அவர்கள் கீறிக் கொண்டுள்ள சிறுவட்டத்தினுள் ஜோராக நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அங்கு யாவாரம் களைகட்டி பலதசாப்தங்கள் கழிந்துவிட்டன. இன்னும் பல தசாப்தங்களுக்கு இவர்கள் இதையேதான் செய்து கொண்டிருப்பார்கள் அதனால் அவர்களை அப்படியே அவர்கள் பாட்டில் அவர்களது யாவாரத்தில் கவனம் செலுத்தும்படி மெல்லமாய் விட்டுவிட்டு நகர்வோம்.

முஸ்லிம் ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரையில் பொழப்பு கெட்டுப் போகாத வண்ணமொரு தேவைப்பாடு இப்போதும் இருக்கின்றது. தனித்துவ ஊடகத் தேவை என்ற பிரமாண்டமாக இருந்த கனவுகளை கண்ணைக் கட்டி தலையைச் சுற்றிக் காட்டில் விட்டவர்களும் இவர்கள்தான். கிடைக்கின்ற வாய்ப்புகளை சில்லறைத்தனங்களால் நிராசையாக்கிவர்களும் இவர்கள்தான். தம்மைப் பிரமாண்டமாகக் கட்டமைத்துக் கொண்டு எவ்விதமான மேம்படுத்தலுமின்றி இன்றும் பிரமாண்டங்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவராசிகள். ஊடகத் தேவை என்ற விடயத்தில் இந்த ஜீவராசிகளைத் தவிர்த்துவிட்டுச் செல்ல முடியாத இக்கட்டுகுள் இருப்பதையும் வருத்தத்துடன் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். ஒழுக்கமில்லாத இஸ்லாமில்லாத மதுவுக்கும் மாதுவுக்கும் பின்னால் பலநாள் பட்டினியில் நாக்கைத் தொங்கப் போட்டுக் கோண்டு அழையும் தெரு நாய்களுக்கு ஒப்பாக இவர்களில் பலரின் தனிப்பட்ட பரிதாபகரமான நிலையில்தான் இவர்களை வைத்து இஸ்லாமிய தனித்துவ ஊடகத்தேவையை நிறைவு செய்தல் வேண்டும்  என்ற துரதிஷ்டத்தை அவ்வளவு எளிதில் கடந்து போக முடியாதுதான் எனினும் அதுதான் நமது விதி. 

விடுதலைப் புலிகள் அரசோச்சிய காலத்தில் முஸ்லிம்களின் ஊடகத் தேவை என்பது மிகவும் அத்தியவசியத் தேவையாகக் காணப்பட்டமையை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். இலங்கையில் உள்ள தினசரிப் பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்தால் இந்த உண்மையை மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு சில சம்பவங்களைச் சொல்கின்றேன் அவற்றைத் தேடிப் பாருங்கள் 

01. 1985 ஏப்ரல் 29ஆம் திகதி வாழைச்சேனை – மூக்கர்கல் எனும் பிரதேசத்தில் வைத்து போஸ்ட் மாஸ்டர் முகைதீன் அப்துல் காதர், சீனிமுகம்மது சேகு இஸ்மாயீல் உட்பட்ட எட்டு முஸ்லிம்கள் கடத்தப்பட்டு தமிழ்விடுதலை ஆயுத இயக்கம் ஒன்றினால் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். (அவ்வியக்க ஊறுப்பினர்கள் பின்னாளில் விடுதலைப் புலிகளானார்கள்)

02. காத்தான்குடி, அக்கரைப்பற்று, ஏறாவூர்ப் படுகொலைகள் நிகழ்ந்த 1990 ஆகஸ்ட் 03, 04, 12 திகதிய விடயங்கள்.

03. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் திட்டமிட்டு படிப்படியாக 1990 ஒக்டோபர் 18 ஆம் திகதியிலிருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டமை

04. அழிஞ்சிப் பொத்தானை மற்றும் பள்ளித்திடலில் 1992 ஏப்ரல் 29 மற்றும் ஆகஸ்ட் 12 ஆகிய திகதிகளில் நிகழ்ந்த விடயங்கள்

05. போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்த காலத்தில் 2002 ஆம் ஆண்டு கிண்ணியா, மூதூர், வாழைச்சேனைப் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் அப்பட்டமாக நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், துன்புறுத்தல்கள், கடையெரிப்பு சம்பவங்கள் இதில் உச்சகட்டமடைந்த ஜூன் 27,28,29ஆம் திகதிகளில் நிகழ்ந்த விடயங்கள்

இவை வெறும் உதாரணத்துக்காக சொல்லப்பட்ட மாபெரும் சம்பவங்கள். இவை குறித்து அப்போதைய தினசரிகள் எதிலும் முழுமையாக உண்மையான நேர்மையான பதிவுகள் இருக்காது. தலைப்புச் செய்தியாக, ஆசியர் தலையங்கமாக மாறியிருக்க வேண்டிய விடயங்கள் ஆனால் அவை புறந்தள்ளப்பட்டிருக்கும். புறந்தள்ளியது வேற்றுக் கிரக வாசிகள் கிடையாது, தமிழ் மொழியையே பேசும் சகோதர இனம்தான். அப்போது சிதைக்கப்பட்ட நம்பிக்கைகளின் மீது மீளவும் பையப் பைய எழும் நல்லுறவுகள் இப்போது ஊடகத் தேவையில் செலுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் தர்க்கமாக சில விடயங்களையே இங்கு பகிர்ந்து கொள்ள இருந்தேன். 

செரண்டிப் தொலைக் காட்சியை முன்னிறுத்தி அந்த அறிவிப்பைச் செய்த போது பல நண்பர்கள் பலவிதமான விடயங்களையும் தனிப்பட்ட ரீதியில் பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் சிலர் மொத்தத்தில் இதை எழுதாமலேயே விடலாமே என்றார்கள். அதை ஏற்றுக் கொண்டாலும் நீண்ட யோசனையின் பின் சிலகுறிப்புக்களை மட்டும் அதுவும் வெறும் ஆதங்கத்தினை மட்டும் வெளிப்படுத்த விளைகின்றேன். அதற்கு எனக்கு உரிமையிருக்கின்றது என்பதால். அதுமட்டுமல்ல இந்த ஊடகக் கனவைச் இன்னும் உயிர்ப்புடன் சுமந்து இருப்பதால் அது குறித்து நான் எழுதத் தகுதியுடையோன்தான் என்று நம்புகின்றேன்.

எமது நூற்றாண்டு காலத்தவம் என்ற நாமத்தோடு இலங்கையின் முதலாவது முஸ்லிம் தொலைக்காட்சியாக பரிணமிக்கின்றது செரண்டிப் தொலைக்காட்சி என்ற விடயத்தை அறிந்த போது மிகவும் அகமகிழ்ந்தேன். டான் ரீவிதான் செரண்டிப் ரீவியாக மாறி இருக்கின்றது என்று இன்னுமொரு தகவல் வந்த போது யாரோ சொல்லி அதை ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் இல்லாததால் உண்மையைக் கண்டறிய நானே களத்தில் குதித்தேன். நேரடியாக அனைவரோடும் தொடர்புபட்டேன், டான் ரீவியின் நிறுவனர் குகன் ஐயா குறித்து ஏலவே பதியப் பெற்றிருந்த தகவல்கள் கொஞ்சம் நெருடலாகத் தெரிந்தது. ஆயினும் அவருடன் நெருக்கமான தொடர்புகள் எனக்கு இருக்கவில்லை. அதனால் யாரோ சொல்லும் தகவல்களை வைத்து அவரை எடை போடவும் முடியவில்லை அவர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக இருந்து பின்னர் புலிகளின் எதிரியாகி பின்னர் சவுதி அரேபியாவின் ஒரு செல்வந்தரின் ஒரு மில்லியன் யூரோ பங்களிப்புடன் தன்னை மீண்டும் கட்டமைக்கத் துவங்கி பின்னர் இந்தியாவைத் தளமாகக் கொண்டு இயங்கி  புலியெதிர்ப்பை முதலீடாக்கி இருக்கின்றார் என்று அவரிடமே சம்பளம் பெற்றுக் கொண்டு பணியாற்றும்  பஹாதின் அறிவிப்பை புறந்தள்ளவும் முடியாத பொழுதில்தான் செரண்டிப் தொலைக்காட்சி என்ற முஸ்லிம் குழந்தை அவருக்குப் பிறக்கின்றது. அதுவும் செற்லைட் குழந்தை. அவரின் கேபிள் நெற்வேர்க்கில் மட்டுமே நடைபயிலும் தன்மையைக் கொண்டது. அது பெரிய பிரச்சினையில்லை டிஜிட்டல் ஊடக உலகில் இன்னும் சில வருடங்களில் நாம் அனைவரும் சஞ்சரிக்கப் போகின்றோம். ஆனால் இங்கு எழுகின்ற முதல் சிக்கலுக்குரிய கேள்வி ஓர் அலைவரிசையை உருவாக்கி அதற்குப் பிரதானியாக நம்பிக்கைக்குரிய ஒருவரை நியமித்த பின்னர் அதே நம்பிக்கைக்குரிய நபர் தருகின்ற சிக்கலான தகவலை அடிப்படையாக வைத்து நாம் எடைபோடும் விடயம் என்ன என்பதுதான் இங்கு முக்கியமானது.

ஒரு பென்ட்ரைவ் கூட சொந்தமாக இல்லாத நிலையில் உலகில் இயங்கும் ஒரோயொரு தொலைக்காட்சி செரண்டிப் தொலைக்காட்சிதான். இப்படிப்பட்ட ஏழ்மை நிலையில் உத்தியோகபூர்வமாக ஒருமுறை நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இரண்டு முறை அங்குரார்ப்பண விழாக்களை நடாத்திய துரதிஷ்டமும் இத்தொலைக்காட்சியயே சாரும். ஊடகத்துறையில் கத்துக்குட்டிகளாக இருக்கும் நான்கு பேரை வைத்துக் கொண்டு வெற்றி நடைபோடும் செரண்டிப் இதுவரையில் தனது லட்சியங்கள் எதையுமே அடையவில்லை. எந்த இடத்தில் ஆரம்பித்ததோ அதே இடத்தில்தான் இன்னும் நின்று நூற்றாண்டுகாலத் தவமென்று புலம்பிக் கொண்டிருக்கின்றது. 

இந்தப் புலம்பல் முஸ்லிம்களுக்கான உண்மையான ஒரு தொலைக்காட்சியின் வருகையைச் செல்லாக்காசாக்கி பலவீனப்படுத்தி விடுமோ என்று எண்ணும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கின்றது.  நிகழ்ச்சி வடிவமைப்பாளர்கள், சிறந்த தயாரிப்பாளர்கள், கவர்ச்சிகரமான ஈர்ப்புமிக்க தொகுப்பாளர்களும் வழங்குனர்களும் இல்லாமல் ஒரு தொலைக்காட்சியை வெற்றிகரமாகக் கொண்டு நடாத்த முடியாது எனும் பாடத்தை இன்னும் செரண்டிப் ரீவி கற்றுக்கொள்ளவில்லை. செரண்டிப் ரீவி தன்னைத் தரமாகக் கட்டமைக்கவில்லையென்றால் இந்தத் துரதிஷ்டம் தொடரும். அதே நேரம் முஸ்லிம் தொலைக்காட்சி பற்றிய எம்போன்றவர்களின் அவாவில் அது மண்ணள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கும். போசாக்கற்ற குழந்தை போன்ற நிலையிருந்து விடுபட்டு ஆரோக்கியமான பாதையில் செரண்டிப் நடைபோட போட வேண்டும் என்துதான் என் போன்றவர்களின் எதிர்பார்ப்பு.

இலங்கையில் மட்டும்தான் முஸ்லிம்களுக்குப் பல தேசியத் தலைவர்கள் இருக்கின்றார்கள் மாடு, மரம், மயில், குதிரை, கழுதை என்று எல்லாமே தேசியத் தலைகள்தான். அப்படிப்பட்ட ஒரு தேசியத் தலைதான் ரிசாத் பதியுதீன். இந்தத் தேசியத் தலைக்கு ஒழுங்காக அரசியலே செய்யத் தெரியவில்லை அதற்குள் ஊடகத்தைக் கொண்டு நடாத்தும் வலிமை இருப்பதாக நான் நினைக்கவில்லை. முஸ்லிம்களுக்கான ஊடகத்தை நிறுவுதல் என்ற மாபெரும் கனவை நனவாக்குவதற்கு உழைத்தல் என்ற உயரியமுயற்சியை நான் மலினப்படுத்த விரும்பவில்லை. அது எல்லோரினதும் கடமை. அந்தக் கடமையைச் செய்யும் மனிதன் யார் என்ற கேள்விக்கப்பால் அவரை ஆதரிக்க வேண்டியது தார்மீகக் கடன். இது அப்படியே இருக்கட்டும். ரிசாத் பதியுதீனின் அரசியல் அதிகாரத்திற்கு சில விடயங்கள் இலகுவாக வசப்பட்டுப் போயின. அந்த அடிப்படையில் செரண்டிப் என்ற பெயரில் தினசரிப் பத்திரிகை வானொலியோடு குகன் ஐயாவின் தொலைக்காட்சியும் இணைந்து கொண்டது. 

அன்றைய அங்குரார்ப்பன நிகழ்விற்கும் ஒரு பார்வையாளனாக நான் சென்றிருந்தபோது சின்னப் பிள்ளையாக இருக்கும் காலத்தில் சிரட்டையால் மணல் அப்பம் சுட்டு குஞ்சூடு விளையாடியது ஞாபகத்துக்கு வந்தது. அன்றைய தினம் செரண்டிப் ரீவி இரண்டாவது முறையாக அங்குராப்பனம் செய்து வைக்கப்பட்ட அதிசயம் நிகழ்ந்தது. கட்சிப் பத்திரிகையும் வானொலியும் தொலைக்காட்சியுமல்ல முஸ்லிம் சமுகத்தின் எதிர்பார்ப்பு என்பதை அவர் தெளிவாக விளங்கிக் கொண்டு பணிகளை ஆரம்பித்திருந்தால் நாங்கள் ஏன் விமர்சிக்கப் போகின்றோம்.  வெறுமனே பொருளாதார உதவி வழங்குனராக மட்டுமே ரிசாத் நின்று கொண்டிருந்தால் ஓரளவுக்கு இப்போதுவரையும் கண்மண் தெரியாமல் புலங்கிக் கொண்டிருக்கும் வேசை வீட்டு வெற்றிலைப்பெட்டியாக இந்த ஊடகக் கனவு சிதைந்து போயிருக்காது. வெறுமனே பணம் மட்டும் எல்லாவற்றையும் முழுமைப்படுத்திவிடும் என்பது தப்பானது. அதை ரிசாத் மட்டுமல்ல இதில் சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும். 

தேவையில்லை என்று தவிர்ந்து கொள்வதால் செரண்டிப் தொலைக்காட்சியை முன்னிறுத்தி இடம்பெற்ற பணத்தை மட்டுமே எதிர்பார்ப்பாகக் கொண்ட முஸ்லிம் தொலைக்காட்சி என்ற சீரழிவுகளையும் கழிசடைத் தனத்தையும் எழுதாமல் தவிர்ந்து கொள்கின்றேன். 

முதல் இதழை வெளியிட்ட பின்னர் காணாமல் போய் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் மீண்டும் வெளிவரத் தொடங்கியிருக்கும் முஸ்லிம்களுக்கான செரண்டிப் தினசரிப் பத்திரிகை இனித் தொடர்ந்து வரும் என்ற நம்பிக்கை துளிர்விட்டபோது எக்ஸ்பிரஸ் நியுஸ் பேப்பர்ஸ் நிறுவன வீரகேசரி பத்திரகையின் முஸ்லிம்களுக்கான சகோதர பத்திரிகையான விடிவெள்ளி வார இதழ் தடபுடலாக தினசரியாகிப் போனது. ஊடகப் போட்டி என்பது அப்படித்தானே. விடிவெள்ளி முஸ்லிம் காப்பாளர்களைக் கொண்டிருந்தாலும் அது முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்த குழந்தையில்லையே என்ற ஆதங்கத்தை முன்வைக்கும் பலரையும் சந்தித்துவிட்டேன். அதே போல செரண்டிப் அரசியல்வாதியின் ஊதுகுழல் என்ற வாதத்தையுடையோரையும் சந்தித்துவிட்டேன். 

ஆக மொத்தத்தில் இன்னும் முஸ்லிம்களுக்கான தனித்துவ ஊடகத் தேவை நிறைவு செய்யப்படாமல் அப்படியே கனவாக இருக்கின்றது இவர்கள் எல்லோரும் அதைக் கலைத்துவிடாமல் இருந்தால் சரி. 

தூய்மையற்ற எந்தவொரு செயல்பாடும் இறுதியில் தோற்றுத்தான் போகும்.