Thursday, November 12, 2015

சாகித்ய விருதுக் குளறுபடி

சாகித்ய விருதுக் குளறுபடி 
மனத்தில் பட்டது - 04

சாகித்ய விருதுகளில் பல்வேறு குளறுபடிகள் இன்று நேற்றல்ல நெடுநாள் தொடரும் ஒரு விடயம். ஆங்காங்கே புகைந்துகொண்டிருக்கும் தில்லாலங்கடி வேலைகளை யாராவது மொத்தமாகப் போட்டு உடைக்க மாட்டார்களா என்று நியாயமாகச் சிந்திக்கும் உள்ளங்கள் இன்னும் குமுறிக் கொண்டே இருக்கின்றன. அந்தக் குமுறல் அர்த்தமிழந்து போகாது. ஒரு நாள் பிரளமாகும் அப்போது எல்லா உடைசல்களும் தெளிவாகத் தெரியத்தான் வரும்.
இம்முறை கிழக்கு மாகாண சபைக்கான சாகித்திய விருதுகளிலும் அதே குளறுபடிகள் இருப்பதாகத் தெரிகின்றது. விருது என்பது திறமைக்கானது. அது முகத்தாட்சனைக்கு அல்லது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டுத்தான் கொடுக்கப்பட வேண்டும். தெரிவில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். விருதுக்கான நூல்களைத் தெரியும் நடுவர்கள் ஒன்றாக இருந்து கலந்துரையாடி முடிவுகளை எடு;க்க வேண்டும். எந்த அடிப்படையில் விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டது என்பதை நடுவர்கள் பொது மன்றிற்குக் கொண்டு வர வேண்டும். தெரிவுக்கு முன்னர் நடுவர்களைப் பகிரங்கப் படுத்துவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன ஆயினும் முடிவுகள் வெளியாகும் தருனத்தில் நடுவர்களைப் பகிரங்கப்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்க வேண்டும். முடிவுகள் ஒற்றைத் தன்மை வாய்ந்ததாக இல்லாமல் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டதாக இருத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படல் வேண்டும்.
பெரும்பாலும் நீதி என்பதை விருதுக்கு நூல்களைத் தெரிவு செய்யும் நபர்கள் தவறவிட்டுவிடுகின்றார்கள். அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகள், இன மத வேறுபாடுகள் என்பன தெரிவில் தாக்கம் செலுத்துவதை கடந்தகால பல்வேறு முடிவுகள் பாலர் வகுப்புப் பிள்ளைக்குப் போதிப்பது போலத் தெளிவாகப் போதிக்கின்றன. இதெல்லாம் ஏன் என்று கேள்வி கேட்டால் பதில் கிடைக்காமல் போகும் என்றா நினைக்கின்றீர்கள்?
இந்த விடயங்களை எல்லாம் புலனாய்வு செய்துதான் விமர்சிக்க வேண்டும் என்பதில்லை. அப்படிச் செய்யும் போது பல நடுவர்கள் நடுத்தெருக்கு கொண்டுவரப்பட்டு கடுஞ்சொற்களால் பந்தாடப்படுவார்கள். அந்தத் தகவல்களைத் தேடி எடுப்பது உன்று அவ்வளவு கஷ்டமான விடயமும் கிடையாது. 
பல பொழுதுகளில் விருதுக்கான புத்தகளைத் தெரிவு செய்வதற்காகப் பணிக்கப்படும் நடுவர்கள் அதற்குத் தகுதியானவர்களாக இருப்பதில்லை. அவர்களின் இலக்கிய அறிவு, வாசிப்பு வீதம், தேடல், சிந்தனை வீரியம், புரிந்து கொள்ளும் தன்மை, எல்லாவற்றையும் தாண்டி நீதியாகச் செயற்படும் பண்பு என்பன எல்லாம் கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். 
தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட இரண்டு இனக் குழுமங்களும் மூன்று மதப்பிரிவினரும் இலக்கியம் படைக்கின்றார்கள். தமிழ் மொழியின் இலக்கியத் தரத்தை தூக்கி நிறுத்துவது சிறந்த படைப்புத்தான். அப்படிப்பட்ட சிறந்த படைப்பாளனுக்கே விருது போய்ச் சேர வேண்டும். அதைவிடுத்து இன வேறுபாடும் மத வேறுபாடும் விருதில் தாக்கம் செலுத்தக் கூடாது. அப்படித் தாக்கம் செலுத்தினால் அது தாய்த் தமிழுக்குத்தான் இழுக்கு. தரமற்ற படைப்புக்கு விருதினைப் பரிந்துரை செய்யும் நபர்கள் தாய்த் தமிழின் மீது தினிக்கும் அவமானத்தைப் பயந்து கொள்ளட்டும். வரலாறு தெளிவான நீரோடை போன்றது குப்பைகளை ஒருநாள் கரையில் ஒதுவிடும். அப்படி இல்லாவிட்டால் புரூட்டஸ் நீயுமா என்ற கதையெல்லாம் காலம்தாண்டி நூற்றாண்டுகள் கடந்து நம்மை வந்து சேர்ந்திருக்காது. 
தரமற்ற ஒரேயொரு நாவல் போட்டிக்கு வந்தால் அதற்கு எப்படி விருது கொடுப்பது? தரமான படைப்பென்றால் யாரும் முடிவுகளை விமர்சிக்கப் போவதில்லை தரம் கெட்டுப்போகும் போதுதான் விமர்சனமே எழுகின்றது. அந்த விமர்கங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியது உரிய அதிகாரிகளின் பொறுப்பு. அவர்கள் அவ்வளவு எளிதில் தமது பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. 
இம்முறை கிழக்கு மாகாணசபை சாகித்திய விருதுத் தெரிவிலும் பல்வேறு குளப்பகௌ; கலந்திருப்பதாகத் தெரிகின்றது. உத்தியோகபூர்வ முடிவுகள் எதைச் சொல்கின்றன என்று கருத்துக்கள் பதிவு செய்யப்படுதல் வேண்டும் இதற்காக புலனாய்வு செய்யும் நிர்பந்தத்தை கிழக்கு மாகாண கலைகலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சு ஏற்படுத்தாது என்று நம்புகின்றேன். அத்துடன் திறந்த வெளியை நாங்கள் வைத்திருக்கின்றோம். தாராளமாக எழுதுங்கள்.

1 comment:

  1. அக்கினிச்சுவாசம் இறுவட்டு 2015 இல் வெளிவந்தது என்பது தவறு என நினைக்கிறேன்

    04/11/2020
    Ramzy

    ReplyDelete