Tuesday, January 5, 2016

நேர்மறை 15 கேள்விகளுக்கு நந்தினி சேவியர் பதில்கள்

தமிழ் மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் இடம்பெறும் நேர்மறை 15 கேள்விகளுக்கு எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்களின் பதில்கள்

1. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
இயல்புவாழ்வில் சுழலும் ஒரு சராசரி மனிதன் மகனாக,தந்தையாக, கணவனாக என்று அனைத்திற்குமப்பால் ஒரு வாசகனாக இலக்கியவாதியாக

2. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
எனது வாழ்வே முரண்பாட்டுக்குள்தான் இருக்கின்றது. எனவே முரண்பட்டவர்களுக்கு எண்ணிக்கையில்லை.

3. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
முற்போக்கு இலக்கியவாதிகளிடையே ரஷ்ய சீன முரண்பாடு வந்து நாங்கள் இரண்டாக உடைந்த போதும் நட்பை உடைக்காமல் ஒரே கொள்கையில் இயங்கிய நிகழ்வு எனக்கு பிடித்தது.

4. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
நான் இடது சாரி எழுத்தாளன். என்னைப் பலர் புறக்கணித்த போது பலர் என்னை அங்கீகரித்தார்கள். எதிரணி உட்பட, எனது எழுத்துக்கள் தனித்தொகுப்பாக வந்துள்ளது. அதில் பெயர் விபரங்கள் இருக்கின்றன.

5. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
புதிய எழுத்தார்களில் இருந்து எனது சமகால எழுத்தாளர்கள் வரை பலரைப்பற்றியும் பலரது படைப்புக்கள் பற்றியும். அத்துடன் எழுதுவதற்கு அப்படைப்பு என்னைக் கவர்ந்திருக்கவும் வேண்டும்.

6. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
பேச்சுக்கும் எழுத்துக்கும் வித்தியாசமின்றி வாழ்கின்ற எனது கொள்கைட்;கு முரண்பட்டவர்களை

7. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
ஒன்றா ரெண்டா எடுத்துச் சொல்ல.

8. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
நான் ஒரு இடதுசாரி, கலைத்துவமிக்க இடதுசாரி இலக்கியங்களை வாசிக்கும் போது இந்த உணர்வு ஏற்பட்டது. அதுவே என்னை எழுத உந்தித்தள்ளியது.

9. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
எனக்கு பிடித்தவைகள் எல்லாமே நின்று போய்விட்டன.

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
ஒரு படைப்பின் பணமதிப்பீட்டை விட அது எந்தளவுக்கு வாசகர்களிடம் சென்றடைதல் அல்லது அங்கிகாரம் பெறுதல்  என்பதில்தான் அதன் பெறுமதி தங்கியிருக்கின்றது.

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
பரிசை நோக்கிய எழுத்து என்னளவில் உடன்பாடற்றது. ஒரு குழுவினால் மட்டும்  படைப்பின் தரத்தை தீர்மானிக்க இயலாது. பரிசுகள் படைப்பாளனைத் திருப்திப்படுத்தவே வழங்கப்படுகின்றன.பரிசுபெறாத எத்தனையோ சிறந்த புத்தகங்கள் இருக்கின்றன. அது ஒரு நிதியுதவி;.

12. உங்களுக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
தமிழைத் தவிர வேறொன்றிலுமில்லை. பாண்டித்தியம் என்பது கேள்விக்குறி.

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
பலர் நோயாளிகள் என்பதை மறந்து எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். நான் ஒரு இருதய நோயாளி. பல எழுத்துக்களால் எந்நேரமும் நான்  பாதிக்கப்படலாம். சுதந்திரமான பல எழுத்து வீரர்களை அது உருவாக்கி இருக்கு.


14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
நான்,மனைவி, ஒரு மகள்-ஒரு மகனை அநியாயமாக இழந்திருக்ககிறேன். அந்த இழப்பில் இருந்து இன்னும் விடுபடவில்லை.

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
அதற்கு இந்த இரண்டு கைகளும் போதாது. அவ்வளவு பேருக்கு குத்த வேண்டிக் கிடக்கு.

No comments:

Post a Comment