Tuesday, January 5, 2016

மனித வேட்டையும் புலனாய்வு இயக்கங்களும் - தொடர் - 07


தமிழ்மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்  - 07
உலகில் மனிமனைக் கொல்வதற்கென்றே பல ட்ரில்லியன் பணம் செலவு செய்யப்படுகின்றது. மனிதனை மனிதன் கொல்வதை ஒரு போதும் நிறுத்த  முடியாது. மனிதனை மனிதன் கொன்று கொண்டே இருப்பான் அதுதான் நியதி. அதை யாரால்தான் மாற்ற முடியும்? யாராலும் முடியாது. மனித உரிமைகளுக்கு எந்தப் பெறுமானமும் இல்லை. எல்லாம் வெறும் வாய்ப் பேச்சு மட்டுமே. 

ஒரு நாடு தனது அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வதற்காக பல மில்லியன் பேரைக் கொன்று குவிக்கும். அதற்குக் கணக்கு வழக்குக் கிடையாது. ஒரு நாட்டின் இறைமையைத் தக்க வைக்க அந்நாடு தனது மக்களையே லட்சக் கணக்கில் கொல்லும், ஒரு நாட்டின் தலைவன் தனது அதிகாரத்தைத் தக்க வைக்க ஆயிரக் கணக்கில் கொல்வான், ஓர் அமைப்பு, ஓர் இயக்கம், ஒரு குழு, ஒரு தனிமனிதன் என்று அனைத்துத் தரப்பும் தமது தேவைக்கேற்ப பிறமனிதர்களைக் கொன்று கொண்டேதான் இருப்பர். இந்த நியதியை யாரால் மாற்ற முடியும். 

நியாயத்துக்காகவும், அநியாயமாகவும், கொள்கைக்காகவும் அதல்லாமலும் கொலை இடம்பெற்றுக் கொண்டேதான் இருக்கும். சட்டம் ஒற்றைக் கண் குருடான காகம் மாதிரி ஒரு பக்கத்தைப் பார்ப்பதே இல்லை. ஒரேயொரு பக்கத்தை மட்டும் தனது வசதிக்கேற்ப பார்த்துக் கொள்கின்றது. 

ஆயுத உற்பத்தியாளன்தான் உலகின் கொடூரமான கொலையாளி, அந்தக் கொலையாளியின் வழிகாட்டலில்தான் இராணுவம் என்ற கொலைகார கூட்டம் மக்களைக் கொன்று குவிக்கும், போராட்டம், விடுதலை, சத்தியத்தைப் பாதுகாக்க என்று எந்தப் பக்கத்தை எடுத்தாலும் சரி, ஏன்! அநியாயமாகத் தீர்ப்புச் சொல்லும் நீதிபதி கூட ஒரு கொலைகாரன்தான். 

கொலைகளை நியாயப்படுத்தியவர்கள் தப்பித்துக் கொள்வார்கள், நியாயப்படுத்த முடியாதவர்கள் மாட்டிக் கொள்வார்கள். மனசாட்சி ஒரு போதும் சட்டத்திற்கு முன்னால் சத்தியமாவதில்லை. சாட்சிகள் மட்டும்தான் எப்போது சத்தியமாகும். அது பொய் சாட்சியாக இருந்தாலும்கூட

உலக நாடுகளின் சர்வதேசப் புலணாய்வுக் கட்டமைப்பையும் அவர்களின் இங்கு தளத்தையும் புரிந்து கொண்டால் மட்டுமே ஒரு கொலையை, அல்லது மனித குலத்துக்கு அச்சுருத்தல் தரும் மாபெரும் தாக்குதல்களை விளங்கிக் கொள்ள முடியுமாக இருக்கும். 

இஸ்ரேலின் மொசாட், அமெரிக்காவின் சீஐஏ, பிரிட்டனின் எம்16, பாகிஸ்தானின்  ஐஎஸ்ஐ, இந்தியாவின் ரோ, பிரான்சின் டீஜிஎஸ்ஈ, ரஸ்யாவின் எஸ்வீஆர்-ஆர்எப், போன்ற புலனாய்வுப் பேரியக்கங்களை விளங்கிக் கொண்டால்தான் உலகில் நடக்கும் மனித வேட்டைக்குப் பின்னால் புதைந்திருக்கும் உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும். 

ஓர் இலக்கியவாதி ஓர் எழுத்தாளன் கட்டாயம் இவற்றைத் தெரிந்திருக்க வேண்டும் இல்லாத போது ஒரு கவிதையால் கூட அவன் உண்மையைப் புறந்தள்ளி பொய்க்கு முன்னால் சரண் அடைந்து மனித குலத்துக்குத் துரோகமிழைத்திடக் கூடும். 

உலக மக்களை வாழ வைப்பதிலும் பார்க்க சாகடிப்பதற்கே பல நாடுகள் பெருந்தொகைப் பணத்தைச் செலவு செய்கின்றன. சில மேற்கு நாடுகள் மனிதர்களைக் கொன்று குவிப்பதற்காக விற்கும் ஆயுத விற்பனையால் வரும் லாபப் பணத்தில்தான் மனித உரிமைகளையும் மனித விழுமியங்களையும் அற நெறிச் சட்டங்களையும் மனிதத்தையும் சுதந்திரத்தையும் பற்றிப் பேசுகின்றன. 

அல்குரஆன் ஒரு கதை சொல்கின்றது
மனிதனைப் படைப்பதற்கு முன்னர் இறைவன் வானவர்களைப் பார்த்துச் சொன்னான் 'நான் எனது பிரதிநிதியாக மனிதனை உலகில் படைக்கப் போகின்றேன்' அப்போது வானவர்கள் 'இறைவா இரத்தம் ஓட்டக் கூடிய மனிதனையா படைக்கப் போகிறாய்? உன்னை வணங்க நாங்கள் போதாதா? என்று பதிலுக்குக் கேட்டார்கள்.

இந்த உலகம் அழியும் வரை இனத்தால், மதத்தால், நிறத்தால், மொழியால் குலத்தால் கோத்திராத்தால் ஆளையாள் மாறிமாறி ஏதாவதொன்றைக் கொள்கையாக்கி கொலை செய்து கொண்டே இருப்பர்.

ஒரு கட்டத்தில் இதெல்லாம் புரிந்து கொள்ள ஞானம் தேவைப் படும்.

No comments:

Post a Comment