Saturday, January 2, 2016

நேர்மறை 15 கேள்விகளுக்கு எழுத்தாளர் சுதாராஜ் பதில்கள்


தமிழ் மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் இடம்பெறும் நேர்மறை 15 கேள்விகளுக்கு எழுத்தாளர் சுதாராஜ் அவர்களின் பதில்கள் 

1. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
ஆயிரம் டொலர் மனிதன்

2. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
முரண்பாடா.. அப்படி ஏதும் யாருடனும் இல்லையே.. (எஸ்கேப்!)

3. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளும் அதையொட்டிய வாக்குவாதங்களும் ஒருவித இலக்கிய ரசனையைத்தரும் புத்தாக்கங்களைப்போலவும், பொழுதுபோக்குக்குரிய வேடிக்கையான நிகழ்வுகளாகவும் உள்ளன.

4. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
இந்த ஒரு நிமிடத்துக்குள்; அவர்களையெல்லாம் நினைவெடுத்துக் குறிப்பிட்டுக் கூறமுடியவில்லை.

5. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
சில இலக்கிய நண்பர்களின் அன்பு வேண்டுகோளைத் தட்டமுடியாது அவர்களது படைப்புகளைப்பற்றி எழுதியிருக்கிறேன்.

6. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்?
காலமான சிரித்திரன் ஆசிரியர் சுந்தர் எனப்படும் திரு சிவஞானசுந்தரம் அவர்கள். அவர் எனது ஞானத்தந்தை.

7. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
ஓரிரு பக்கங்களை வாசிக்கும்போதே நல்ல புத்தகங்கள் உள்ளிளுத்துவிடும். மற்றவை ஒரு பக்கமாகப் போட வைத்துவிடும். அதனால், இதெல்லாம் ஒரு புத்தகமா எனச் சினப்படும் கட்டத்துக்குள் போனதில்லை.

8. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
எனது ஒவ்வொரு புத்தகங்களும் அச்சாகி வந்து முதன்முதலாகக் கையிலெடுத்து வாசிக்கும்போது!

9. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
மல்லிகை.

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
கதைக்கும் கவிதைக்கும் விலை போட்டால் யார் வாங்கி வாசிக்கப்போகிறார்கள்? அவை விலைமதிப்பற்றவை! (படைப்பவனுக்கும் வாசிப்பவனுக்குமுரிய இரு அர்த்தங்களிலும்.)

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
நல்ல விஷயம். பரிசு போதுமானளவு பெரிய தொகை. தமிழ் இலக்கியங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்பில்லையாதலால் இலக்கிய நணபர்களுக்கு (இங்குள்ள சில பரிசுகள் விருதுகளுக்கு நேரும் கதிபோல) போட்டுக் கொடுக்கும் சாத்தியமும் இல்லை!

12. உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
பாண்டித்தியம் இல்லை.. தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழிகளில் பரிச்சயம் உள்ளது.

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
புத்தகங்களைக் கையிலெடுத்து வாசிக்க விரும்பாத புதிய இளசுகளுக்கும் சில பெரிசுகளுக்கும் இடவும் தொடவும் படவும் வசதிப்படும் ஊடகம். சில படைப்புக்கள் சிறு பதிவுகளாக இருந்தாலும் நல்ல கருத்துக்களாகவும் ரசனைக்குரியதாகவும் போகிற போக்கில் வாசித்துவிடக்கூடியவையாகவும் உள்ளன. எதிர்காலத்தில் இவற்றினூடு புது இலக்கிய வடிவங்கள் பரிணமிக்கவும்கூடும். நூறு மலர்கள் மலரட்டும்! நல்லவை நிலைக்கும்.. அல்லவை போகும்!

14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
ஒரே ஒரு மனைவி. (கவனியுங்கள்.. ஒண்ணே ஒண்ணு.. கண்ணே கண்ணு!), பிள்ளைகள்.. திருமணமாகிவிட்ட பெண்கள் இருவர், படித்துக்கொண்டிருக்கும் ஆண்கள் இருவர், பிள்ளைகளைப்போல அன்பும் ஆதரவும் கொண்ட மருமகன்கள் இருவர், பேரர்கள் இருவர்.

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
வேறு யாருக்கு? உங்களுடைய முகத்திற்தான்! இப்படி இடக்கு மடக்கான கேள்விகளைக் கேட்டுக் குழப்பிறீங்களேம்மா.. (என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா... ஸ்டைலில்!)

No comments:

Post a Comment