Tuesday, January 5, 2016

மனதிற் பட்டது - 12 - சட்டத்தரணி தவராசா மனிதம் கொண்ட பேரியக்கம் - 01


தமிழ்மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்  - 12
சட்டத்தரணி தவராசா 
மனிதம் கொண்ட பேரியக்கம் - 01

சட்டத்தரணிகளில் வெகு சிலரைத்தான் எனக்குப் பிடிக்கும். பெயர் குறிப்பிடுவதாக இருந்தால் சட்டத்தரணி ரவுப், சட்டத்தரணி காண்டீபன், சட்டத்தரணி மர்சூம் மௌலானா, சட்டத்தரணி ராஜகுலேந்திரா, சட்டத்தரணி சுகந்தி ராஜகுலேந்திரா,  சட்டத்தரணி ரூமி, இப்படி இன்னும் சிலரை மட்டுமே.   பல சட்டத்தரணிகளைப் பிடிக்காமல் போவதற்கு  நிறையக் காரணங்கள் இருக்கின்றன.

 10.01.1952ஆம் ஆண்டு புங்குடுதீவில் பிறந்து சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று 1981 முதல் அவர் முக்கியமான நபராக அடையாளப்படுத்தப்படக் காரணம் அவரது தைரியமும் மனிதாபிமானமும்தான். எதற்குமஞ்சாத தைரியசாலிகளையும் எதையும் எதிர் கொள்ளும் நெஞ்சுரமிக்கவர்களையும் மிக விரைவிலேயே எனக்குப் பிடித்துப் போகும். அதிலும் குறிப்பாக உண்மைக்காகப் போராடுதல் என்பது மிக முக்கியமான விடயம். 

ஒரு கட்டத்தில் தவராசா என்ற பெயர் ஒர மீட்பரின் ஸ்தானத்தில் முகாமிட்டிருந்ததையும் நான் அறிவேன். பலருக்குள்ளும் அந்நம்பிக்கை துளிர்விடக் காரணம் யாராலும் திட்டமிட்டுக் கற்பிக்கப்பட்டதல்ல அது இயல்பாக உருவாகி விட்;;டிருந்தது. சிலவிடயங்கள் அப்படித்தான் அற்புதமான கவிதை போல மனதில் இடம்பிடித்துவிடும், கவிதை ரசிகனாக இராத போதும். 

தவராசா என்ற பெயர் எப்போதுமே எனக்குள் சிம்மாசனமிட்டிருந்த பெயர். வே.சு.கருணாகரண் அவர்கள் எழுதிய கனவுகளும் நினைவுகளும் புத்தக வெளியீட்டுவிழாவில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட போது நான் புத்தகத்தின் திறனாய்வுரைக்காக அழைக்கப்பட்டிருந்தேன். அப்போதுதான் அவரை முதன் முதலாக நேரடியாகக் காண்கின்றேன்.  ஒரே மேடையில் அவருடன் அமர்ந்திருப்பது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. கைகுலுக்கிக் கதைப்பதற்குக்கூட நான் பின்வாங்கினேன். மிகவும் மதிக்கும் ஒருவர் நமக்கு நேரெதிர் தோன்றுகையில் அப்படியே உரைந்து போய் இருப்பது இயல்புதானே. அதனாலேயே மேடையில் அமர்வதை பெரும்பாலும் தவிர்த்துக் கொண்டேன். 

நாம் அதிகம் நேசிக்கும் இலக்கியப் படைப்பாளியை நேரடியாக நமக்கு முன்னால் காண்கின்ற போது இரண்டு அடி தள்ளிக் கால்கள் தாமாகப் பின்னகருமே அத்தகைய மரியாதைக்கு முன்னால் வார்த்தைகள் மௌனமாக மெய்சிலிர்த்து எமக்குள் குடிகொள்ளும் அமைதிக்கு முன் நாம் சரணடைந்திருப்போம். மனதில் பெருமிதம் மட்டுமே நிறைந்திருக்கும். அத்தகைய உணர்வுதான் சட்டத்தரணி தவராசாவைக் கண்ட போதும் ஏற்பட்டது.

எல்லாவற்றுக்குமப்பால் தமிழர்களுக்குத் தலைமையை வழங்குமளவுக்குப் புதைந்து கிடக்கும் ஆளுமையை வெளிக்காட்டித் தம்பட்டமடித்து ஆரவாரிக்கத் தெரியாத அமைதியான சுபாவம் அவருக்கு எங்கிருந்து வந்தது என்று நான் எப்போதும் யோசிப்பதுண்டு. 

அவரது சிந்தனைகளையும் அவரது அறிவையும் நல்லெண்ணங்களையும் ஏன் இந்த சமுதாயம் முழுமையாகப் பயன்படுத்தத் தெரியாது அமைதியாகக் கடந்து போகின்றது என்பது இன்னும் புரியாத புதிர்தான். இப்போதுள்ள அரசியல் சக்கரத்தின் ஆர்ப்பாட்டமிக்க சுழலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் மிக நிதானமாகப் பயணப்படும் அவருக்குச் செங்கம்பளம் விரிக்க இளைஞர் குழாம் தயாராக வேண்டும். 

நாம் எத்தனையோ பேரைக் கடந்து போகின்றோம். ஆனால் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும் ஆகர்சனம் வெகு சொற்பமான சிலருக்குத்தான் வாய்க்கும். அந்த ஈர்ப்பும் ஆகர்சனமும் அவர்களின் தூய்மையான உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்து வெளிப்பட்டு நம்மைக் கவர்ந்து சொக்கச் செய்வதாகும். அதில் போலியோ அல்லது நடிப்பு கலந்த பிரமாண்டத்தைக் கற்பிக்கும் செயற்கையான எதுவுமோ கலந்திருக்காது. அத்தகையவர்கள் எதற்காகவும் எவருக்குப் பின்னாலும் வலிந்து செல்லமாட்டார்கள். காலம் அவர்களை நமக்கு அடையாளங்காட்டும் அப்போது அவர்களின் கரங்களைப் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டும். அச்சந்தர்ப்பத்தைத் தவறவிட்டால் நாமே நஷ்டவாளிகள். 

தரமான மனிதர்களின் தலைமைக்குக் கீழ் நாமெல்லாம் நடைபயிலும் போது நம் நெஞ்சில் உட்காரும் திமிருக்கு ஒரு மதிப்பீடு இருக்காது. அந்த முறுக்கு நம்மை நெஞ்சை நிமிர்த்தியபடி எதுவானாலும் எதிர்கொள்ள உந்தித் தள்ளும். வரலாறு சில இடங்களில் அடிக்கோடிடப்பட்டு எழுதப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களைப் பார்த்தால் அனைவரும் வாழவேண்டும் என்ற அடிப்படை எண்ணத்தால் புடம்போடப்பட்ட தலைமைகளின் செயற்பாடுகளால் விளைந்த விளைச்சலை சகல மக்களும் அனுபவிக்கும் தருணங்களாகத்தான் இருக்கும்.No comments:

Post a Comment