Tuesday, January 5, 2016

நேர்மறை 15 கேள்விகளுக்கு காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பதில்கள்

தமிழ் மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் இடம்பெறும் நேர்மறை 15 கேள்விகளுக்கு ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் பதில்கள் 

01.   உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
என்னிலும் சிறந்தவர்களுடன் என்னை ஒப்பிடும்பொழுது நானொரு சாதாரணனே

02.   நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
நான் யாருடனும் வலிந்து முரண்பட்டதில்லை. வீணே முரண்பட்டவர்களை விட்டதுமில்லை

03.   இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
பிறரிடையே எற்பட்ட முரண்பாடுகள் பற்றி எதுவும் கருத்துரைக்க நான் விரும்பவில்லை என்னுடன் முரண்பட்ட சில முக்கிய நிகழ்வுகளில், என்னிலும் சிறந்த அறிஞரான வித்துவான் எம்.ஏ,றகுமானுடன் அவர்களுடன் நடந்த யாப்பிலக்கணச் சமரைச் சொல்லலாம். அது பேராசிரியர் கா.சிவத்தம்பி பற்றி நானெழுதிய கட்டளைக் கலித்துறை பற்றியது. பல வாரங்கள் நவமணியில் தொடராக வெளிவந்தது, இறுதியில் அவர் தன் தவறை மறைமுகமாக ஏற்றுக்கொண்டார்

04.   உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
இதற்கான பதில் மிக நீளமானது, அவை இறைவன் நாடினால் விரைவில் நூலாக வெளிவரவுள்ளது. இதுவரையில் இறுதியாக பன்மொழிப் புலவர் சோ.பத்மநாதன்(சோ.ப) அவர்கள் எனது எல்லாள காவியத்திற்கு எழுதிய சாற்றுக்கவி பத்துக் கட்டளைக் கலித்துறைகள்

05.   நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
நிறையவே செய்துள்ளேன். இங்கு பதிவிட பத்திரிகை இடந்தரமாட்டா.

06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
முதவில் எனக்குத் தமிழ் கற்றுத்தந்த எனது தந்தையாரை அடுத்து என்னை இலக்கிய உலகுக்கு அறிமுகஞ்செய்து என்னை வளர்த்த ஐயா எஸ்.டி.சிவநாயகம் அவர்களை

07.   இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
என் இளமைக் காலத்தில் நானோரு தீவிர வாசகனாக இருந்தேன். அதனால்தான் எனக்கு வார்த்தைகள் வாலாயமாகின. அனைத்தும் இனித்தன. இப்போது என் வாசிப்பு குறுகிப் போனதால் கருத்துரைக்க இயலவில்லை.

08.   இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
அந்தக் காலத்தில் நா.பார்த்தசாரதியின் பொன்விலங்கு,

09.   உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
அப்போது யாத்ரா. இப்போது ஞானம்

10.   உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
அதனை மதிப்பிடுவது விற்பனையைப் பொறுத்ததாயின் நான் பல இலட்சங்களை இழந்துள்ளேன். சில நூல்களின் பிரதிகள் கூட என்னிடமில்லை. இருப்பினும் தமிழ் இலக்கிய உலகில் என் படைப்புக்களால் என் பெயர் பதிவாகி இருப்பது என்னளவில் விலைமதிப்பற்றது,

11.   இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்படாதிருந்தால் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிக்கும் அது கிடைத்திருக்காது. மேலும் விபரம் வேண்டியதில்லை.

12.   உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
பாண்டித்தியம் என்று சொல்ல எதிலும் இல்லை. சிறிது தமிழ் தெரியும்.

13.   முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
நல்லவையும் உண்டு. குப்பைகளும் உண்டு. தேர்ந்தெடுப்பது ஒவ்வொருவரதும் வேண்டுதலைப் பொறுத்தது, 'மணற்சோற்றில் கல்லாராய்வதானாலும் அதனிலும் திருத்தமுண்டு' என ஒரு அறிஞர் சொல்லி இருக்கின்றார்.

14.   உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
மனைவியுடன், மூன்று ஆண்கள், ஒரு பெண் என நான்கு மக்கள். நான்கு மருமக்கள், ஏழு பெண்கள் மூன்று ஆண்களுமாகப் பத்துப் பேரப்பிள்ளைகள்.

15.   எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
சிலரின் முகங்களில் மூக்குடையக்
குத்தியிருக்கின்றேன். கையாலல்ல. கவிதையால். அவை பலரறிந்த இரகசியம். அதில் ஒன்று பல ஆயிரம்பெயர் 'லைக்' பெற்றது. இப்போதைக்கு யாருமில்லை.

No comments:

Post a Comment