Tuesday, January 5, 2016

மனதிற் பட்டது - 08 - புகழும் புரிந்து கொள்ளுதலும்


தமிழ்மிரர் பத்திரிகையின் வெள்ளிக்கிழமை இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்  - 08


தம்மைப் பிறர் புகழ வேண்டும் என்பது பொதுவாக மனிதர்களின் எதிர்பார்ப்பு. இது மனிதப் பண்பு இயல்யானது. ஆனால் சிலருக்கு அதுவே வியாதி. புகழுக்குரியன் தான் மட்டு;மதான் என்பது போல சீன் போட்டுக் கொண்டு இருப்பார்கள். அவர்களுடன் கதைக்கும் போது தம்மைப்பற்றி மட்டுமே கதைப்பர். தனது சாதனைகளை இழுத்துவிடுவதில் அவர்களுக்கு அப்படியொரு ஆத்ம திருப்தி. இத்தகையவர்களுக்கு முன்னால் பிறரைப் புகழும் போது பெரும்பாலும் பேச்சைத் திசை திருப்பி விடுவார்கள். அத்தகைய வியாதிக் காரர்கள் அழிந்து போவதும் இந்தப் புகழால்தான்.

எழுத்துலகைப் பொறுத்தமட்டில் எல்லோரது எழுத்துக்களும் புகழுக்குரியதாக இருக்காது ஆனால் தரமான எழுத்துக்கள் ஒருபோதும் அதற்குரிய மதிப்பிலிருந்து நீங்கிப் போகாது. அந்த யதார்த்தத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அன்னம் ஒரு போதும் காக்கையாகிட முடியாது. அது போல காக்கை ஒரு போதும் புறா ஆகிடவும் முடியாது. அன்னத்தால் அவ்வளவு உயரப் பறக்க முடியாது ஆனால் காக்கையால் முடியும். ஒரு பெருங் காற்றை எதிர்கொண்டு காக்கையால் பறக்க முடியாது ஆனால் புறாவினால் முடியும். ஆளுக்காள் இயல்பும் தரமும் வேறுபடும் அது போல ஒருகாகம் செத்துவிட்டால் ஒரு கூட்டமே திரண்டு குரல் கொடுக்கும். ஒரு புறாக் கூட்டம் செத்தாலும் கூட புறாக்கள் அப்படி ஒன்று சேர்ந்து துக்கம் அனுஷ்டிப்பதில்லை. 

அதிசயமாக புகழை விரும்பாத சிலர் இருக்கின்றார்கள். தன்பாட்டில் காரியமாற்றுவார்கள். வீணுக்காக யாரையும் எதற்குமிழுக்காதவர்கள். யாரிடமும் அவர்கள் புகழுக்காக ஏங்கி நிற்கமாட்டார்கள். அவர்கள் நியாயமாக தக்குச் சேரவேண்டிய ஒன்றுக்காகப் போராடும் குணமுடையவர்கள். தரமற்ற ஒன்றை வெறும் அடைவுகளுக்காகப் உயர்த்திப்பிடித்து பெயர் பெற வேண்டும் என்று அவர்கள் நினைக்கமாட்டார்கள். அவர்களுடைய தராசு கறாராக இருக்கும். இத்தகையவர்களால்தான் இலக்கியத்தின் தராதரம் ஓரளவுக்கு சரியாகப் பேணப்படுகின்றது.

இன்னும் சிலர் இருக்கின்றார்கள் அவர்களது வேலையே பிறருக்கு முதுகு சொரிவதுதான். அந்தச் சொரிதலின் உச்ச கட்டத்;தை இலகுவாகவ விளங்கப்படுத்த இப்படியோர் உதாரணத்தைச் சொல்ல முடியும். நேற்றுத்தான் கவிதை எழுதத் தொடங்கி இரண்டு கவிதைகள் எழுதியிருப்பார். அவரைப் போய் கவிச் சூரியன் என்றும் கவி சந்திரன் என்றும் கவித்தாரகை என்றும் போற்றிப் புகழ்ந்து விருது கொடுத்து பொன்னாடை போர்த்தி, தனது முகநூலில் நாலு வரியில் குறிப்பெழுதி, செல்பி உட்பட ஐந்தாறு போட்டோக்களை அப்டேட் செய்து கவிச் சக்கரவர்த்தியாக்கி விடுவார்கள். பதிலுக்கு அவர்கள் சும்மா இருப்பார்களா!! அவர்கள் ஆற்றும் எதிர்விணையோ ஐயகோ காண்பதற்குக் கோடிக் கண்கள் வேண்டும். 

இன்னும் சிலர் தம்மைப் புகழவும் தமது இருப்பை அடிக்கடி நிலைநிறுத்திக் கொள்ளவும் சிலரை வளர்த்தெடுப்பார்கள். தத்துப்பிள்ளைகளின்படைப்புக்களை பிறருக்குத் தரமானது என்று பரிந்துரைப்பார்கள். அடிக்கடி அவர்களின் பெயர்களையே சிறந்த இலக்கியவாதிகளுககு உதாரணமாக்கி விடுவார்கள். அவர்களின் படைப்புக்களை அடிக்குறிப்புடன் அனுப்பியும் வைப்பார்கள். அதை உரியவரின் காதுக்குக் கொண்டு போய்ச் சேர்த்து உனக்காக நான் என்னமாப் பாடுபடுகின்றேன் என்று பார்த்துக் கொள் என்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விடுவார்கள். இது ஆற்றாமையால் இயலாமையால் ஏற்படுகின்ற வருத்தம். அந்த வருத்தத்திற்கு மருந்தே அவர்கள் ஆகா ஓகோ என்றுபுகழப்படுவதுதான். 

தரமான ஒரு படைப்பை வாசித்து இன்புற சிலர் அனுப்பி வைப்பார்கள். அது வேறு விடயம். அத்தகையவர்கள் மேலேசொன்ன வருத்தக்காரர்களுக்கு மெலே இருக்கும் பந்தியில் சொல்லப்பட்ட நபர்கள் செய்யும் பணி. அதில் எத்தகைய எதிர்பார்ப்பும் இருக்காது. புள்ளி பெறும் திட்டமும் இருக்காது. 

இந்த விடயங்களைப் புரிந்து கொள்வதில்தான் சில விடயங்கள் தங்கியிருக்கின்றன. அவற்றைப் புரிந்து கொள்ளத் தவறும் பட்சத்தில் சொல்வதகொன்றும் இருப்பதில்லை.  சரியான இந்தப் புரிதல்தான் தரமான ஒரு இலக்கியவாதியின் அடையாளமாகக் கூட இருக்க முடியும். அந்தப் புரிதல் பல சித்து விளையாட்டுக்களில் இருந்து காப்பாற்றும். 

ஒரு புத்தகத்தைப் படித்தால் அது குறித்து ஒரு குறிப்பெழுதினால் என்ன என்று தோன்றும்போதே அது குறித்து எழுதிவிடுவோம். அதில் ரசனை இருக்கும் ஆனால் வெறுமனே வீம்புக்காக உசுப்பேற்றல் இருக்காது. எல்லாப் புத்தகங்களுக்கும் அப்படி எழுதத் தோன்றுவதில்லை. சிலது வெகு சிலதே நமது கவனத்தை ஈர்க்கும் அத்தகைய எழுத்தாளர்களுடன் நட்பைப் பேன மனது ஆவல் கொண்டிருக்கும். அந்த நட்பில் அழகான புரிதல் இருக்கும். எந்த எதிர்பார்ப்பும் இருக்காது. 

இஸ்லாமிய ஆட்சியின் மூன்றாவது அரசுத் தலைவராக வந்தவர் உமர் இப்னு கத்தாப் அவர்கள். அவர் ஒரு விடயம் சொன்னார்
'ஒருவன் உன்னை முகத்தில் புகழ்கின்றான் என்றால் நீ சுதாகரித்துக் கொள், முகத்தில் புகழ்பவனை நம்பாதே'
வஞ்சமிக்க அந்தப் புகழில் உண்மை இருக்காதுதானே. 

No comments:

Post a Comment