தமிழ்மிரர் பத்திரிகையின் இலக்கியப் பக்கத்தில் எழுதும் தொடர்
எனக்குள் இன்னும் கனன்று கொண்டிருக்கும் ஒரு கேள்வி தான் இந்த மூத்த எழுத்தாளர் என்பது யார்? இந்த மூத்த கூட்டத்தை யார் தீர்மானிக்கின்றார்கள்?
வயது போன எல்லோரும் மூத்த எழுத்தாளர்களா? அப்படியென்றால் இள வயதுக்காரர்கள் இளைய எழுத்தாளர்கள் அப்படியா?
ஒருவர் எழுதத் தொடங்கியதில் இருந்து அதைக் கணிப்பதா அல்லது புத்தகம் வெளியிட்டதில் இருந்து அதைக் கணிப்பதா? அல்லது ஒரு எழுதிய எழுத்துக்களின் அளவைக் கொண்டு கணிப்பதா அல்லது எழுத்துக்களின் தரத்தைக் கொண்டு கணிப்பதா?
பொதுவாக வயது போனவர்கள்தான் மூத்தவர்கள். இதுதான் நடைமுறையில் இருக்கும் விடயம். அரசாங்கம் கூட 60வயது தாண்டினால் முதியவர்கள் அந்தஸ்துக் கொடுத்து எல்லாவற்றிலும் முன்னுரிமையும் அளிக்கின்றது. அப்படிப்பார்த்தால் 60 தாண்டியவர்கள் எல்லாம் சிரேஸ்ட பிரஜைகள் போல மூத்த எழுத்தார்கள் என்று எடுத்துக் கொண்டால் அங்கும் ஒரு பிரச்சினை இருக்கின்றது.
ஒருவர் தனது 16வது வயதில் எழுதத் தொடங்குகின்றார் எனின் 40 வயதாகும் போது அவரது எழுத்து அனுபவம் 24 வருடங்கள் அதே போல 30 வயதில் ஒருவர் எழுதத் தொடங்கினால் அவரது எழுத்து அனுபவம் 10 வருடங்கள்தான். இதில் யார் மூத்த எழுத்தாளர்.
ஒருவருக்கு வயது 75 அவரது வாழக்கையில் வெறுமனே பதினைந்து கதைகள்தான் எழுதி இருக்கின்றார். அதில் ஒரேயொரு கதைதான் உருப்படியானது, அனைத்தையும் சேர்த்து ஒரேயொரு தொகுதி போட்டிருக்கார் அதன் பின்னர் தனது இருப்பைக் காட்ட மறுபிரசுரம் வேறு. பின்னர் அவர் எழுத்து சூனியம் இப்போது இவர் மூத்த எழுத்தாளர் என்றும் இலக்கிய மேதை என்றும் சிறுகதை அறிஞர் என்றும் தன்னை அடையாளப்படுத்துகின்றார்.
இன்னொருவர் வயது வெறும் 40 தான் முப்பதுக்கு மேல் கதைகள் ரெண்டொரு நாவல் கவிதைகள் வேறு இப்படி எழுதித் தள்ளியிருக்கின்றார் புத்தகமான மூன்று அல்லது நான்கு தொகுதிகள்தான். ஒப்பீட்டளவில் நல்லகதைகள் அதிகம். முன்னயவரோடு ஒப்பிடும் போது எழுத்துலகத்தில் அவரது காலமும் வெகு குறைவு.
இன்னொருவர் மேற்சொன்ன இருவரைவிடவும் வயதில் குறைவு வெறும் 30தான் ஆயினும் 15ற்கு மேல் புத்தகங்கள் வெளியிட்டிருக்கின்றார். மொழிபெயர்ப்பு, ஆய்வு, கவிதை சிறுகதை, கட்டுரை என்று எழுத்து மயம் ஆனால் கனதி குறைந்த எழுத்து. குறிப்பிட்டுச் சொல்லும்படி பெரிதாக ஒன்றுமில்லை.
இவர்களில் யார் மூத்தவர்?
நானறிந்த ஒருவர் 45வயதில் மிக அன்மைக்காலமாக கவிதை எழுதத் தொடங்கியிருக்கின்றார். சுமாரான கவிதைகள்தான் அவருடைய நேர்காணல் ஒன்றை இணையத்தில் வாசிக்கக் கிடைத்தது. அதன் முதல் பகுதியில் மூத்த இலக்கியவாதிகள் தனது எழுத்துக்களைக் கண்டு கொள்வதில்லையென்றும், விமர்சிக்கவில்லையென்றும் ஆதங்கப்படுகின்றார். ஆயினும் தான் அதனைப் பற்றிக் கவலை கொள்ளாமல் தொடர்ந்தும் எழுதுவதாகச் சொல்கின்றார். இறுதியில் இளைய எழுத்தாளர்களுக்கு என்ன சொல்லப் போகின்றீர்கள் என்று ஒரு கேள்வி அதற்கு அவர் மூத்த இலக்கியவாதியாகப் பதில் வேறு...முடியல
தமிழ் சங்கத்தில் வடலியின் ஒரு சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழாவில் உமா வரதராஜன் மூத்த இலக்கியவாதிகள் என்ற விடயத்தில் அவதானிப்புக்குரிய கேள்விகள் சிலதை முன்வைத்துப் பேசியது எனக்கு நினைவிருக்கின்றது.
சிரேஷ்ட விரிவுரையாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் என்று நபர்களை அடையாளப்படுத்துவதற்கு ஒரு கால எல்லை, தராதரம், ஆளுமை வீச்சு, திறன் எனப் பல்வேறு விடயங்கள் தாக்கம் செலுத்துகின்றன. அது போல எழுத்துலகில் எது தாக்கம் செலுத்துகின்றது என்ற கேள்விக்கு கட்டாயம் பதில் காண வேண்டி இருக்கின்றது.
வாராவாரம் விருது கொடுத்து களைத்துப் போய் இருக்கும் இலக்கிய இயக்கங்கள் இந்த வகைப் பிரிப்பைச் செய்து ஒரு புத்தகமாகப் போட்டால் என்போன்ற நபர்களுக்கு ஆட்களைத் தேடிப்பிடித்து விளித்துப் பேச எவ்வளவு இலகுவாக இருக்கும்.
வாழ்க சிரேஷ்ட எழுத்தாளர்கள்
வாழ்க மூத்த எழுத்தாளர்கள்
No comments:
Post a Comment