Tuesday, October 21, 2014

புத்தகத் திருடனும் அல் அஸூமத்தும்

புத்தகத் திருடனும் அல் அஸூமத்தும்

வாசிக சாலையில் புத்தகம் திருடும் போது ஏற்படுகின்ற பயத்தை விட வாசித்து முடித்த பின்னர் மீண்டும் அதை உரிய இடத்தில் இருந்த மாதிரியே வைக்கும் போதுதான் உடல் நடுங்கும். அப்படித் திருடி வாசித்த அனுபவங்களைத் தனியாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். 

சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்னர் 1994 களில் மள்வானை அல்முபாறக் மத்திய கல்லூரியில் கல்வி  கற்கையில் ஒரு தீவிர வாசிப்பு மாணவனாக இருக்கும் போது மள்வானை பொது வாசிகசாலையில் உமர் முக்தாரையும் பிலாலையும் திருடினேன். உமர் முக்தார் பெரிதாயும் பிலால் சின்னதாயும் இருந்ததால் முதலில் பிலாலைப் படித்து முடித்தேன். பிலால் மூலமே கவிஞர் அல் அஸூமத் என்ற மொழிபெயர்ப்பாளனைத் தெரியும். ஒரு வெள்ளிக்கிழமை மாலை நேரம் திருடிய பிலாலைப் படித்துமுடித்தேன். அப்போதெல்லாம் நினைக்கவில்லை என்றாவது ஒரு நாள் அல்அஸூமத் என்ற பெரிய மனிதனை மிக நெருக்கமாக நான் சந்திப்பேன் என்று.

எனது ஆசான் ப.ஆப்டீன் அவர்களுக்கூடாகவே அல் அஸூமத் என்ற கதாசிரியன்  எனக்கு அறிமுகம். அதாவது அவரின் கதைகளை எனக்கு அறிமுகுப்படுத்தியதே ஆப்டீன் சேர்தான். பின்னர் நான் தேடி வாங்கிப்படித்தது வெள்ளைமரம், எனது வீட்டில் வைத்து எனக்கு அவரே அன்பளிப்புச் செய்தது ஆயன்னையம்மாதாய். வெள்ளைமரத்தின் கதைகள் இப்போது ஞாபகத்தில் இல்லை ஆனாலும் பிலால் இன்னும் ஞாபகத்தில் அப்படியே முழுமையாக...

பிலாலுக்கு இன்னொரு கதையும் இருக்கின்றது, 2002ஆம் ஆண்டு ஜாமிய்யா நளீமிய்யாவின் மாணவனாக இருக்கும் போதுதான் வெள்ளை மரத்தைக் காசு கொடுத்து வாங்கினேன் அதே காலப்பிரிவில் அரும்பு எனும் அறிவியல் சஞ்சிகையின் ஆசிரியரான ஹாபிஸ் இஸ்ஸதீன் சேர் அவர்களுடன் நல்லதோர் உறவு இருந்தது. தர்கா நகருக்கு அடிக்கடி சென்று அவரைச் சந்தித்துக் கொள்வேன். அப்போது அவர் பிலாலின் ஒரு புதிய பிரதியை அன்பளிப்புச் செய்தார். பிலாலை மீண்டும் படித்து முடித்த போது அல் அஸூமத் பற்றி  ஹாபிஸ் சேர் சொன்ன சில செய்திகளே மனதில் மிகைத்து நின்றன. அப்போது நான் அவருக்காகப் பிரார்த்தித்தேன். கண்களை மூடியபடி மனதால்.. அது மிகவும் ஆத்மார்த்தமானது. எதிர்பார்ப்புகளேதுமற்றது, நான் ஒரு முறை கூட கண்களால் கண்டிராத ஒரு படைப்பாளிக்காகவும் ஒரு நல்ல மனிதனுக்காகவும்.

மேற்சொன்னவை தவிர அவரின் ஏனைய படைப்புக்கள் எதையும் இதுவரையும் படிக்கும் வாய்ப்புகளேதும் கிடைக்கவில்லை. மிக அன்மையில்தான் ஒரு நண்பர் அஸூமத்தின் கவிதைகளை விதந்துரைத்தார். இனி அதையும் தேடிப்படிக்க வேண்டும். விரைவில் அவரது எழுத்துக்கள் அத்தனையையும் படித்துவிட்டுத்தான் ஒரு முழுமையான பதிவைச் செய்ய வேண்டும் என்று நாடியிருக்கின்றேன். அதற்கான ஒரு சின்னஞ்சிறு குறிப்பாக இது இருந்துவிட்டுப் போகட்டும் .

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் ஒரு நிகழ்வுக்காக வந்திருந்த அவரை அவர் என்று தெரியாமல் நான் அவதானித்துக் கொண்டிருந்தேன். மிக அமைதியாக தெரிந்தவர்களையும் தெரியாதவர்களையும் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையைப் பிரயோகித்தபடி ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டிருந்தார் எனக்கு முன்னால். அதெப்படி அவருக்கு அறிமுகமில்லாதவர்களையும் பார்த்துப் புன்னகைத்தார் என்பது உனக்குத் தெரியும் என்று யாராவது என்னைக் கேட்கக் கூடும், அதாவது  அவருக்கு அறிமுகமேயில்லாத என்னையும் பார்த்து ஒரு புன்னகை பரிசளித்தாரே அது போதாதா!!

அவரது நடவடிக்கைகள் அவரது அமைதியைப் பறைசாற்றி நின்ற போதுதான் அவர் அல் அஸூமத் என்பது பின்னர் தெரியவந்தது. அவரோடு சலாம் சொல்லி கை குழுக்கிக் கொள்ளவும் கட்டித்தழுவி  முசாபஃஹா செய்து கொள்ளவும் வேண்டும் போல இருந்தது ஆனால் அதற்கான வாய்ப்பு அப்போது கிடைக்கவில்லை. நிகழ்வு முடிவதற்கு முன்னரே நான் கிளம்பிவிடவேண்டி நேரிட்டதால்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி அஷ்ரப் ஸிஹாப்தீன் நாநாவுடன் செய்த பிரயாணத்தின் போது ஆயன்னையம்மாதாயை  முழுமையாக வாசித்துவிட்டு சில கதைகள் குறித்து கருத்தாடலும் செய்தேன். அஸூமத்தின் படைப்புலகுக்கு அப்பால் அவர் மிகவும் சுவாரஸ்யமிக்கவர் என்பதையும் நகைச்சுவைப்பேர்வழி என்பதையும் அஸ்ரப் ஷிஹாப்தீன் பகிர்ந்து கொண்ட கதைகளில் இருந்து புரிந்து கொண்டேன். அவரது ஆளுமையை விதந்துரைத்தபோது  அல் அஸூமத் அவர்களின் மீதான பிடிப்பு பன்மடங்காகியது. அதே போல அஸூமத் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பெருமையாகப் பேசிய அஸ்ரப் ஷிஹாப்தீன் மீதும் அபிமானம் அதிகரித்தது. இது இப்படியிருக்க ஒருவர் இல்லாத இடத்தில் அவரை மட்டந்தட்டி இழிவாகக் கதைத்து மேடை கிடைக்கும் போது திட்டித் தீர்த்துத் திரியும் எங்களூர் உலகத் தரம்வாய்ந்த படைப்பாளியின் கோமாளித் தனங்கள்தான் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன.

அல் அஸூமத் அவர்களின் எழுத்துக்கள் மீதான எனது ரசனைக் குறிப்பை முன் வைக்க நாடும் போதெல்லாம் அதைத் தடுத்து நிறுத்திய காரணி ஒன்றே ஒன்றுதான். 

அல் அஸூமத் என்ற மூத்த படைப்பாளியைப்பற்றி  இப்பதான் இரண்டு மூன்று எழுத்துக்களையெழுதிய கிறுக்கன் எழுத முடியுமா? எப்படியெழுவதுவது என்பதுதான்.

நபிகளாரின் வாழ்கைச் சரிதையை மையமாகக் கொண்டு புத்தாக்கமாக நடாத்தப்பட்ட போட்டியில் முதற்பரிசு பெற்றுள்ளார். நபிகளாரின் வாழ்வைச் சுவைபட முழுமையாக எழுத பல்லாயிரம் விசயங்களில் நமக்கத் தெளிவிருக்க வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே நபிகளாரை எழுத முடியும். சும்மா மாயாஜாலம் காட்டும் வார்த்தை விளையாட்டுகளால் அதைச் செய்ய முடியாது. அதற்கு சரக்கிருக்க வேண்டும். அது ஒரு சர்வதேசப் போட்டி என்று நினைக்கின்றேன். இந்தியாவில்தான் நடாத்தினார்கள், பத்திரிகையில் விளம்பரத்தைப் பார்க்க மட்டுமே என்னால் முடிந்தது. பேனை பிடித்து நபிகளாரைப் பற்றி எழுதுமளவுக்கு நம்மிடம் சரக்கில்லை அப்படியிருக்க நபிகளாரையே எழுதி முதற்பரிசு பெற்றவரின் எழுத்துக்களைப்பற்றி நான்... எப்படி??

ஆனாலும் சில கட்டங்களில் சில விடயங்களை எழுதித்தானாகவேண்டும் என்று  மனதை அரித்தக் கொண்டிருக்கும் சமாச்சாரத்தை எழுதி முடித்துவிட்டால்தான் திருப்தி. நீண்ட காலம் திருப்பிக் கொடுக்கப்படாத கடனை அடைத்தது போல மனதில் ஒரு நிம்மதி. மனதிற்குள் போட்டு அவஸ்தைப் பட்டுக் கொண்டிருப்பதை விட எழுதிப் போடுவது என்ற தீர்மானித்த பின்னர் யார் என்ன சொன்னாலும் பறவாயில்லை என்று கிறுக்கப்படுவதே இது.

ஆயன்னையம்மாதாய்

முதற்கதை குழந்தைகள் உலகத்தில் தொடங்குகின்றது. எல்லாவற்றையும் புரிந்து கொண்ட பெரியம னிதர்களால் அவ்வளவு எளிதில் குழந்தைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போகும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. மழை மொழியால் விடுக்கப்படும் சவால் இலகுவானதுதான் ஆனால் இலகுவில் வெற்றிகொள்ளப்பட முடியாதது. நிதாமான புரிதல் மட்டும்தான் நமக்கு உதவக்கூடும் என்பதை சொல்லுவதுடன் குழந்தைகள் என்ற சிறிய மனிதர்கள் எப்போதும் அன்பினால் மட்டுமே ஆராதிக்கப்படவேண்டும், நமது ஆத்திரமும் கோபமும் வேகமும் அங்கு எடுபடாது. ஒருகட்டத்துக்குமேல் நாம் நமது பொறுமையை இழந்துவிட்டுக் கத்தும் போதுகூ மழலை மொழி மாறாது அதன் கொஞ்சுதலும் கெஞ்சுதலும் கூட

இறுதிக் கதை நம்நாட்டின் ஒரு கால கட்டத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது. வெளிநாட்டுச் சென்ட்டும் சேர்ட்டும் இப்போது ஓரளவுக்கு தூமாகிப் போன நிலையில் காலம் மாறிவிட்டது. ஆயினும் இன்னும் சில இடங்களில் அந்த எதிர்பார்ப்புகள் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. அரபு மண்ணில் உழைக்கச் சென்று அவர்கள் படும் கஸ்டங்களும் துன்பங்களும் இன்னும் மாறாமல் அப்படியேதான் இருக்கின்றன. அவர்களின் கஸ்டங்கள் இன்னும் பெரிதாக நமது மொழிச் சூழலிலும் இலக்கியச் சூழலிலும் பதியப்படாததன் விளைவுகளே என்று கூட எண்ணத் தோன்றுகின்றது. 

துப்பாக்கி அச்சுருத்தலால் நானும் நாட்டைவிட்டோடி பாலைமண்ணில் ஒரு வருடம் கிடந்த அனுபவத்தையும் எழுதிப்போடலாம் என்று நினைவூட்டியதும் இந்தக் கதைதான். நான் தொழிலுக்காகச் செல்லாததால் அனுபவம் மிகவும் குறைவு, ஆயினும் தொழிலுக்குச் சென்று அங்கு பலரும் அனுபவிக்கும் நரக வேதனைகளை ஓரளவு அறிந்திருக்கிறேன் இனித்தான் அதைச் செய்ய வேண்டும். யுத்தத்தால்  புலம்பெயர் மக்களின் கதைகள் வந்தளவுக்கு வாழ்வதற்காகவும் ஒரு வேளைச் சோற்றுக்காகவும் தாய்மண்ணைவிட்டும் தூக்கி வீசப்படும் பல்லாயிரம் பேரின் கதைகள் நமக்கு முன்னால் கிடக்கின்றன அவை நமது இலக்கியப் பரப்பில் தாராளமாகப் ஏதாவதோர் இலக்கிய வடிவிலட பண்ணப்படவேண்டும் என்பதை உணர்த்தியதே கதையின் வெற்றிதான். ஒன்றில் இருந்துதானே மற்றொன்று பிறக்கின்றது.

மொழி பற்றிச் சொல்லியேயாக வேண்டும். பேச்சு மொழியை அப்படியே அச்சொட்டாகக் கொண்டு வந்திருக்கறார். முகநூலில் பேஸ்கிதாபு மஹல்லா என்று ஒரு பக்கம் இருக்கின்றது. மிகவும் சுவாரஸ்யமாக சமுகப் பிரச்சினைகளை பேச்சு மொழியில் எழுதி நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார்கள். அதில் உள்ள பதிவுகளைப் படிக்கும் போது அஸூமத்தின் சில கதைகளில் லாவகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள பேச்சு மொழிதான் ஞாபகத்துக்கு வருகின்றது. அந்த மொழி ரசனையும் முகபாவனையையும் அப்படியே நம்மீது அள்ளிவீசி நம்மைத் தனக்குள் ஈர்த்துக் கொள்கின்றது. அந்தந்தக் கதைகளுக்குரிய பிரதேசம் சார் மொழிப்பிரயோகம் பிரமாதம்.

மலைநாட்டு மக்களின் வாழ்க்கைச் சுவடுகள் இங்கு பத்திரமாகப் பிதியப்பட்டிருக்கின்றது. மலை நாட்டுக்கு விஜயம் செய்யும் போதெல்லாம் என் மனதில் குடிகொள்ளும் இனம் புரியாத வேதனையை அஸூமத்தின் கதைகளைப் படிக்கும் போதும் அனுவித்ததை மனதில் ஒரு கனதி குடிகொண்டதைச் சொல்லியாக வேண்டும். பொதுவாக மலையகம் பற்றிய கதைகள் படிக்கின்றபோது குறைந்த வருமானம் பெறும் அது போல மிகவும் துன்பகரமான கஷ்டமான வாழ்வை அனுபவிக்கும் அந்த மக்கள் ஏன் மதுபானப் பாவனைக்குள் மீட்கமுடியாத அடிமைகளாகத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்ற எனனது கேள்விக்கு பதில் கிடைக்குமா என்று அவாவுற்றிருக்கின்றேன். அதற்கான பதில் இத்தொகுதியிலும் எனக்கு கிடைக்கவில்லை. அந்த மக்களின் வாழ்வை நினைத்துப் பார்ப்பதே மிகவும் துக்ககரமானது, அதற்குள் இனவன்மம் தலை தூக்கும் போது இன்னும் துன்பம். மிக சுலபமாக பிடிகொடுக்காத கபடிவீரன் போல கதாசிரியன் புகுந்து விளையாடி இருப்பதாய் நான் உனர்கின்றேன்.

யுத்தம் பற்றிய புரிதல் மிகவும் வேறுபட்டது. யுத்த பூமியைக் களமாகக் கொண்டு கதைகள் மலிந்து வந்துவிட்டன. சில நின்று நிலைக்க பல அமைதியாகிவிட்டன. இந்திய அமைதிப்படையின் ஆக்கிரமிப்புகால புலிகளின் யுத்தம் பற்றிய வித்தியாசமான தோரனையில் பின்னப்பட்ட கதை அவதானிப்புக்குரியது. நான் நினைக்கின்றேன் பலருக்கும் அது அவ்வளவு எளிதில் விளங்காது. மூன்று முறை வௌ;வேறு ரசனைக்குரியவனாகவும் சிந்தனைக்குரியவனாகவும் இருந்து படித்த போது கொஞ்சம் புரிந்த மாதிரி. தளதா மாளிகைக் குண்டு வெடிப்பு பற்றியும் அதற்குள்ளால் நகரும் உயிரோட்டமான செய்தியும் நம்மை நிதானிக்கச் செய்யும் விசயமாகத்தான் இருக்கின்றது.

அடுத்தது கண்களைக் கலங்கச் செய்து விழியோரமாய் ஒரு சொட்டுக் கண்ணீரை எட்டிப்பார்க்க வைப்பது தாயும் தாயின் பாசமும் பற்றிய அவரது கதைகள். அவை மிகவும் ஆழமாக பல செய்திகளைச் சொல்லிச் செல்கின்றன. ஹைலைட்டே ஆயன்னையம்மாதாய். அந்தத்தாய் மரணித்த போது எனது வீட்டில் மையத்துவிழுந்தமாதிரி ஒரு உணர்வு. எல்லாச் செயற்பாடுகளும் அரசில் தன்மை வாய்ந்தவை என்று யாரோ எழுதியது. இங்கும் அவதானிப்புப் பெறுகின்றது. ஒவ்வொரு காலப் பொழுதிலும் இனக்குழுமங்களுக்கிடையில் அடிப்படையேயில்லாது வெறும் உணர்ச்சி வேகத்தில் வெடிக்கும் பிரச்சினைகள் வடுவாக மாறும் கலவரங்களாய் பரிணப்பது என்பதை நாம் கண்கூடாகப் பல்வேறு நிலைகளில் கண்டு தொலைத்திருக்கின்றோம். அப்போதெல்லாம் தேவை அந்நேரத்தில் கொதித்தெழும் அர்த்தமற்ற உணர்வுப் பிரவாகத்தை சாதுரியமாகத் தடுத்துவிடக் கூடிய ஒரு ஆளுமைதான். அது ஒரு சொல்லாலும் நடக்கும் சில வசனங்களாலும் சாத்தியப்படும், அப்படி ஆளுமைமிக்கதொரு தாயைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றியது அன்மையில் அளுத்கமயில் அரங்கேறி கோரத் தாண்டவமாடிய இனவாதப் பேய்க்கு  கடிவாளமிட ஆளுமைமிக்கதொரு சிங்களத் தாயோ அல்லது ஒரு சிங்களக் குடிமகனோ இல்லாமல் போய்விட்டானே என்பதுதான். ஒரு தாயின் வார்த்தைகளுக்கு முன்னால் பல விடயங்கள் மௌனித்துப் போகின்றன. அதைக் கேட்பவன் மனிதனாகவும் இருக்க வேண்டும்.

அஸூமத்தின் கதைகளில் நிறைய மனிதர்கள் வாழ்கின்றார்கள். மனிதத்தை அவர்கள் உயிர்ப்போடு வைத்திருக்க உதவுவதாகப் படுகின்றது. இப்போது இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் மூலமாக அல் அஸூமத் அவர்களுடன் இணைந்து ஒன்றாகச் செயற்படும் வண்ணம் அமைந்த சந்தர்ப்பங்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டு அல்அஸூமத்தின் கவிதைகள் நாவல் உட்பட அனைத்தையும் முழுமையாகப் படித்துவிட்டு இன்னுமோர் பதிவைச் செய்ய இறைவன் எனக்கு அவகாசத்தையும் ஓய்வையும் தரவேண்டும் என்ற பிரார்த்தனையோடும் அஸூமத் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறி விடைபெற முன்னர் ஒரு குறிப்பு

பாடசாலைக் காலத்தைப் போல இப்போதெல்லாம்
நான் புத்தகங்களைத் திருடுவதில்லை
காரணம்
எனக்கு வாசிகசாலைப் பக்கமே செல்லக்கிடைப்பதில்லை.

No comments:

Post a Comment