Saturday, June 18, 2016

மனதிற்பட்டது - 21 - பார்வை அரசியல்

(தமிழ் மிரர் பத்திரிகையில் எழுதும் தொடர் பத்தி)

பார்வை அரசியல்

ஒரு மனிதனுக்கு மிக முக்கியமானது மூளை ஆயினும் அதை விட முக்கியமானது பார்வை. மூளை இல்லாத பல மனிதர்கள் இயல்பாக வாழ்ந்துவிட்டுச் செல்ல, முளையுள்ள பார்வையற்ற ஒருவன் மிகுந்த அவஸ்தைகளுடன் வாழ்கின்ற பல உதாரணங்களை நாம்கடந்து வந்திருப்போம்.

ஓர் ஓவியத்துக்குக்கூட உயிர் கொடுப்பது அதன் கண்கள்தான். அதனால்தான் மொனாலிசாவின் பார்வை வசீகரத்துக்கு முன்னால் லியானாடொ டாவின்சி நம்மை முட்டி போட வைக்கின்றார். சீகிரிய ஓவியங்களிலும் சரி அஜந்தா ஓவியங்களிலும் சரி அங்கு தீட்டப்பட்டுள்ள அழகிய பெண்களின் முகத்தில் வசீகர ஒளியைப் பாய்ச்சுவது அவர்களின் கண்கள்தான். ஆண்களைக் கிறங்கடிப்பதற்கென்றே பெண் ஓவியங்களில் மயக்கும் பார்வையை நம் மூதாதையர் காலத்தில் தீட்டியிருக்கின்றார்கள் போலும். பண்டைய கால சிலை சிற்பங்களிலும் கூட இதே போன்ற வசீகரப் பார்வையை நாம் காண முடிகின்றது. 

அன்மையில் முகநூலில் தனது பக்கத்தில் காப்பியக்கோ டொக்டர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன்  ஒவியங்களுக்கு வெண்பாக்களை எழுதினார். அவர் தேர்தெடுத்த ஓவியங்களின் பார்வைதான் என்னைக் கூர்ந்து கவனிக்கச் செய்தன. காப்பியக் கோ அப்பார்வைகளைக் கூர்ந்து கவனித்தால் இன்னும் ஆயிரம் வெண்பாக்களை எழுதிலிட முடியும். அது போல கவிஞர் சோலைக்கிளி அப்பெண்களின் கண்களைப் பார்த்தால் அப்பார்வைகளின் வசீகரத்தை முன்னிறுத்தி மண் மனக்க ஓராயிரம் கவிதைகளைப் படைத்துவிடுவார். ஏனெனில் பார்வை அத்தகைய ஈர்க்கும் செழுமைமிகு அரியற் தன்மை கொண்டது. 

கண் ஜாடை காட்டுவதுதான் பார்வை அரசியலில் வாளின் கூர்மையொத்தது. வார்த்தைகளைச் செலவு செய்யாது பார்வைகளால் மட்டுமே ஒரு பெரும் உரையாடலைச் செய்து முடிக்க உலகில் இரண்டு தரப்பினால்தான் முடியும். முதல் வகையினர் புலனாய்வுக் காரர்கள், இரண்டாவது காதலர்கள். பல சந்தர்ப்பங்களில் வார்த்தைப் பிரயோகம் சிக்கலைத் தோற்றுவித்துவிடுவதால் இரு தரப்பினரும் பார்வைகளால்தான் தமது காரியத்தை கன கச்சிதமாக முடித்துக் கொள்வார்கள். அது வெகு சுதந்திரமாக. அலைபாயும் பார்வைகளும் நுண்திறன் மிக்க கண்களும்தான் இவர்களின் நம்பிக்கைமிகு ஆயுதம்.

குடிகாரன் ஒரு சாராயக் கடையைக் கடந்து போகும் போது பார்க்கும் ஒரு பார்வையை அவதானித்துப் பாருங்கள் அதில் தொக்கி நிற்கும் தவிப்பும் வாஞ்சையும் அவன் மீது ஒரு போதும் கோபத்தை உண்டு பன்னாது. அது போலவே குடிப்பதற்குப் பணமில்லையே என்று ஏக்கத்துடன் மதுக்கடையைப் பார்க்கும் ஒருவனின் பார்வையில் தொக்கி நிற்கும் தவிப்பு நம்மையும் அவன் பக்கம் ஈர்த்து அவன் மீது கழிவிரக்கம் கொள்ளச் செய்துவிடும். வெறும் பார்வை என்று அவ்வளவு எளிதில் அவற்றைக் கடந்து சென்றுவிட முடியாது.

இந்தப் பத்திரிகையின் ஓர் இளவயதுப் பிரதம ஆசிரியர் மதன் அவர்களின் கண்கள் குறித்து உமாவரதராஜன் தனது அவதானிப்பை ஒரு குறிப்பில் தொட்டிருந்தார். பிரச்சினைகளைச் சமாளிக்க அந்தப் பார்வையிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே விடயங்கள் இருக்கின்றன. அந்தப் பார்வையில் தொனிக்கும் அரசியல் மிகவும் சக்தி வாய்ந்தது. அதனால்தான் இத்தனை விரைவாக அந்தப் பார்வை பலதையும் மிக இலகுவாக வெற்றி கொண்டு தனித்துவமாகத் தன்னை ஸ்திரப்படுத்தியிருக்கின்றது. 

ஆணுக்கும் பெண்ணுக்குமான பார்வை அரசியல் பற்றி தோழி யோகி சந்துரு ஒரு கருத்தை வரைந்திருந்தாள். அதை அப்படியே உங்கள் பார்வைக்குத் தருகின்றேன்.  

ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான பார்வையரசியலில் ஒரு பெண்ணே அந்த அரசியலின் முடிவினையும் ஓட்டத்தையும் நிர்ணயிக்கிறாள். பார்வையை உள்வாங்குதல்,
பார்வையை நிராகரித்தல், 
பார்வையை தவிர்த்தல், 
பார்வையில் கேள்வி எழுப்புதல், பார்வையில் ஆச்சரியத்தை வெளிபடுத்துதல், 
பார்வையில் எச்சரித்தல், 
பார்வையில் குழப்பம் வெளிபடுத்துதல், பார்வையில் சம்மதம் தெரிவித்தல், பார்வையில் மறுத்தல் 
என அத்தனையும் அந்த இருபாலரும் வௌ;வேறு இடத்தில் இருந்துக்கொண்டு
பார்வையில் அரசியல் நடத்துகிறார்கள். ஆனால், அந்த அரசியலின் முடிவு
எப்போதும் பெண்ணிடமே மண்டியிட்டு கிடக்கிறது. ஆண் பெண்ணின் பார்வை அரசியலில் பல முறை தோல்வியைத்தழுவி சில நேரம் வெற்றியும் கொள்கிறான்

No comments:

Post a Comment