Saturday, June 18, 2016

மனதில் பட்டது -22 - கவிஞர் மஜீத் போட்ட விதை


கவிஞர் மஜீத் போட்ட விதை

இலங்கையில் வெளிவருகின்ற எல்லாப் பத்திரிகைகளும் தன்னில் இலக்கியப் பக்கங்களைச் சுமந்தே வருகின்றன. இலக்கியவாதிகளினதும் எழுத்தாளர்களினதும் பங்களிப்பில்லாமல் அப்பக்கங்களை அலங்கரிப்பதென்பது சிரமமான காரியம். ஏதாவதொன்றைப் போட்டு பக்கத்தை நிறைத்துவிடுதல் என்ற நிலைப்பாட்டிலிருந்து கவனத்தையீர்க்கும் வண்ணம் சிறப்பானதைச் செய்தல் என்பதுதான் தனித்துவமானது. 

அதுபோலவே ஓர் எழுத்தாளன் உப்புச் சப்பில்லாமல் எழுதுவதென்பது தன் எழுத்து குறித்த சுயமதிப்பீட்டைத் தூரத்தே எறிந்துவிட்டு செயற்படுகையில்மட்டும்தான் நிகழக்கூடியது. அவன் தனது பெறுமதியைப் பற்றிக் கவலைப்படாமல் காரியமாற்றுகையில் அவனது எழுத்தும் பெறுமதி மிக்க தளத்தை நோக்கி நகர முடியாதுதான்.

எழுத்தாளர்களைப் பயன்படுத்தும் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் அவர்களுக்கான ஊதியத்தைக் கொடுத்துக் கௌரவப்படுத்துவதில் பெரும்பாலும் கள்ளமௌனம் காப்பது புதியவிடயமுயல்ல. அத்தகைய ஊதியத்தால் அவன் தனது தேவைகளை முழுமையாக நிவர்த்திசெய்து தன்னிறைவு காண்பதுமில்லை. ஏதோ அத்தொகை என்பது எழுத்துக்கான சின்னஞ்சிறிய அகக்குளிர்ச்சி அவ்வளவுதான்.

இதே எழுத்தாளன் ஒரு துயரில் விழுகின்ற போது இப்பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் அவனுக்காகக் கைகொடுக்கக் களத்தில் நிற்பதுமில்லை. கண்டுகொள்வதுமில்லை.
ஆனால் மனிதம் மிகுந்த ஒருவன் இவ்விடயத்தில் பொடுபோக்காகஇருக்க மாட்டான். அவன் ஒரு சிறுசஞ்சிகையைச் நட்டப்பட்டு நட்டப்பட்டுச் செய்பவனாக இருப்பினும் சரியே!

அக்கறைப்பற்றைச் சேர்ந்த கவிஞர் மஜீத் சுகயீனப் பட்டு படுத்த படுக்கையாக இருக்கையில் அவரின் அவலமிகு சோகக் குரல் என் செவிகளில் விழுந்த போது ஒரு விதை எனக்குள் விதைக்கப்பட்டது. ஒரு கலைஞன் ஓர் எழுத்தாளன் ஓர் இலக்கியவாதி மீளாத் துயரில் வீழ்கையில் அவனுக்கு உதவி செய்ய நம்மிடம் ஒரு குழுமச் செற்பாடு ஏன் இல்லாமல் போனது என்பதுதான். 
அவ்வகையானதொரு செயற்பாட்டுத் தளத்தை ஏன் எம்மால் உருவாக்க முடியவில்லை? தமிழ் மிரர் உருவாக்கியிருக்கும் இவ்விலக்கியப் பக்கத்தினூடாக ஏன் நாம் இப்பணியை முன்னெடுக்கக் கூடாது என்று தோன்றுகின்றது. 

ஏனைய பத்திரிகைகளின் இலக்கியப் பக்கங்கள் போலவும் இல்லாமல் எழுத்தாளர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் ஒரு விடிவை உறுதிப்படுத்தும் செயற்றிட்டமொன்றை நாம் ஏன் முன்னனெடுக்கக் கூடாது என்று தொடங்கியிருக்கும் இச்சிந்தனை ஒரு விதைதான். அதை இன்றே விதைப்போம் அது முளைக்கும் இலைவிடும் கிளைவிட்டு ஓங்கி வளரும் விழுதிறக்கி தன்னை ஸ்திரப்படுத்தும். பூக்கும் காய்க்கும் பழுக்கும் அப்போதுதான் நாம் அனைவரும் அதன் கீழ் ஒன்று கூடுவோம் அதன் பழங்களைச் சுவைப்போம். தேவைப்படுவோருக்கும் பகிர்ந்தளிப்போம். ஓர் இலக்கியவாதிக்குப் பிரச்சினையெனில் நாம் முதல் அணியில் இருக்கும் நபர்களாக மாற இது மிகவும் துணை செய்யும். 

பிராந்திய ரீதியாக இதனை உருவாக்கி தேசிய ரீதியில் ஒரு வலையமைப்பாகவே இதனைத் திட்டமிடுவோம். எந்தவொரு நீண்ட பயணமும் ஒரு எட்டிலிருந்துதான் ஆரம்பிக்கும். அந்த முதல் எட்டு சிறியதுதான் அதற்காக அதைக் குறைத்துமதிப்பிட முடியாதுதானே. 

இலக்கியவாதிகளுக்கான ஒரு முதலீட்டுத் திட்டத்தையும் சேமிப்புத்திட்டத்தையும் ஆரம்பித்து அதற்கூடாக இலக்கியவாதிகள் எதிர்கொள்ளும் அவசர பொருளாதாரத் தேவையை நிவர்த்தி செய்ய ஒரு பொறிமுறையை நாம் உருவாக்க முடியும். எதிர்காலத்தில் இது குறித்த பரவாலான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்போம். எந்தவொரு நல்ல காரியத்தையும் அவ்வளவு எளிதில் செயற்படுத்த முடியாதுதானே.

இந்த மார்ச் மாதம் இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்காக பெருந்தொகைப் பணத்தேவையுடன் எதிர்பாhர்ப்புகளை மட்டும் சுமந்து நிற்கும் கவிஞர் மஜீத் அவர்கட்டு எம்மால் எவ்வகையில் உதவ முடியும் என்று இப்போதைக்குச் சிந்திப்போம்.  உதவக் கூடியவர்களுக்கு பரிந்துரை செய்வோம். தமிழுக்கு சேவை செய்த ஒரு கவிஞனைக் காப்பாற்ற முடிந்ததைச் செய்வோம்.
கவிஞர் மஜீத் - 0775 009 463
மக்கள் வங்கி அக்கரைப்பற்றுக் கிளை – 063 2001 8002 2795

No comments:

Post a Comment