Saturday, March 5, 2016

மனதிற் பட்டது - 17 சுதந்திரம்


இன்றோடு சரியாக நாம் சுதந்திரமடைந்து அறுபத்தெட்டு வருடங்கள் முடிந்து அறுபத்தொன்பதாவது வருடம் ஆரம்பிக்கின்றது. அடுத்த பெப்ரவரி 04ஆம் திகதி 69வது சுதந்திரதினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடும் போது நேற்றைய தினத்தினை எண்ணிப் பார்ப்பது குறைவுதான். 

நமது நாடு ஒருமித்துக் கொண்டாட வேண்டியதொரு தினமென்றால் அது சுதந்திர தினம் மட்டும்தான். தேசியமும் தேச பக்தியும் வெளிப்படுத்தப்படும் நாளாக இந்தத் தினம் இயல்பாக அமைதல் வேண்டும். அவ்வாறு அமைவதால் ஏற்படுகின்ற ஒரேயொரு உணர்வு இது எமது நாடு இது நமது நாடு என்பதாகும். 
தமீழம் என்றொரு நாடு வடக்கையும் கிழக்கையும் இணைத்து உருவாகும் என்ற கனவை தமிழ் பேசும் இனத்தில் ஒரு பகுதியினர் கண்டுகொண்டிருந்த போது தேசிய தினக் கொண்டாட்டம் என்பது சிங்களவர்களுக்கானது என்ற மனநிலைதான் இருந்தது. 

இலங்கைப் பாராளுமன்றில் அங்கம் வகிக்கின்ற ஒருவர் அல்லது அரசாங்கத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு வாழ்க்கையைத் தள்ளும் ஒருவர் வடக்கு கிழக்கில் தேசியக் கொடியான சிங்கக் கொடிக்குக் தலை வணங்குதல் தேச துரோகக் குற்றமாகக் கணிக்கப்பட்டது. யுத்தகாலம் காலம் என்பதால் துப்பாக்கிகள்தான் அனைத்தையும் தீர்மானித்தன. தமிழ் பேசும் மற்ற இனமான வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டவர்களும் சரி கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்களும் சரி சுதந்திர தினத்தில் அவ்வவு அக்கறையுள்ளவர்களாக இருக்கவில்லை. மொத்தத்தில் ஒருமித்த தேசபக்தியை கடந்தகாலத் தேசிய தினங்கள் வெளிப்படுத்தியிருக்கவில்லை. 

சிங்கள மக்களோடு இணைந்து வாழ்ந்த தமிழ் பேசும் மக்கள் அனைவரதும் தேசிய தினக் கொண்டாட்டம் தொடர்பிலான மனோநிலை வேறுபட்டதாகவே இருந்தது, இந்த இருவித நிலைப்பாடுகளுக்குமான காரணத்தினைப் புரிந்து கொள்வது என்பது அவ்வளவு கடினமானதல்ல. ஆனால் இப்போது நிலைமைகள் வேறுபட்டுச் செல்கின்றன.  

யுத்தம் முடிந்த கையோடு முஸ்லிம் மக்களின் தேசத்தின் மீதான காதலை பரவலாக அவதானிக்க முடிந்தது. அது போல தனிநாட்டுக் கோரிக்கை கைவிடப்பட்ட நிலையல் தமிழ்தேசியக் கூட்டமைப்பு புலிக்கொடியை மறந்துவிட்டு சிங்கக் கொடிக்குத் தலைவணங்கிய போதுகூட சலசலப்பு ஏற்படத் தவறவில்லை. அந்தச் சலசலப்பொன்றே போதும் தேசியதினம் தேசியக் கொடி தொடர்பிலான அம்மக்களின் மனோநிலையினைப் புரிந்து கொள்வதற்கு.

மிக முக்கியமான இன்னொரு விடயத்தையும் நாம் அவதானித்தாக வேண்டும். தேச பக்தி என்பது யாரையும் யாரும் திருப்திப்படுத்தும் வகையைச் சார்ந்தது அல்ல. அது ஒரு மனிதனின் இதயத்தின் ஆழத்திலிருந்து இயல்பாக வரவேண்டும்.  அவன் எந்த மொழியினனாக இருப்பினும் எந்த மதத்தினனாயினும், எந்த இனத்தினனாயினும் சரியே. ஆனால் தேசபக்தி வெளிப்பாடு என்பது ஒரு நிரூபிப்பு எல்லைக்குள் நின்று இன்னும் விடுபடவில்லை. அவ்வாறு விடுபடாதவரைக்கும் தேசத்தின் மீதான உண்மையான காதலை நாம் காணமுடியாது. 

தேசம் சிங்கள மக்களுக்கு மட்டுமானது என்ற கருத்தியல் முன்னெடுக்கப்படும் காலமெல்லாம் தேச பக்தி என்பதும் கேள்விக்குறியானதாகவே மாறிக் கொண்டிருக்கும். ஒரு சின்னஞ்சிறிய குழுஅதைச் செய்துpடப் போதுமானது. என்று சுதந்திரம் பெற்றோமோ அன்றிலிருந்து அப்படியானதொரு சிறிய குழு இருந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த நாட்டில் ஏற்படும் இனக்கலவரங்கள் எல்லாமே இத்தகைய சின்னஞ்சிறிய குழுக்களின் கருத்தியல் தளத்தில் இருந்து பிறந்தனவே. 

அத்தகைய சின்னஞ்சிறிய குழுக்களை ஒவ்வொரு காலத்திற்கும் வவேறுவிதமான ஆனால் ஒரே சிந்தனையைக் கொண்ட தலைவர்கள் வழிநடாத்துவார்கள். அதை உரிமையோடு தடுத்துநிறுத்தி தேசியம் என்ற அம்சத்தைத் துணிந்து நிலைநிறுத்த அரசுகளால் முடியவில்லைதான் மென்மையான போக்கினால் கடந்து போகவே விரும்புவதை வெளிப்படையாகப் பார்க்கலாம்.

இப்போது தேசியக் கொடியில் இருந்து பிடுங்கப்பட்ட சிங்கம் ஏந்திய வாளோடு சிங்கலே என்று அச்சுருத்தி நிற்கும் போது கேள்விக்குள்ளாகி நிற்பது தேசபக்திதான் என்பதைப் பலர் புரிந்து கொள்வதில்லை. 

சிதைத்துவிடுவதில்தான் தமக்கான இருப்பு இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம் என்று அசைவற்று நிற்கின்றதோ அன்றுதான் உண்மையான தேசிய தினமும் தேசியக் கொடிக்கான உளமார்ந்த கௌரவமும் கிடைத்து காதல் சொட்டும் தேச பக்தியும் வெளிப்படும். 

அதுவரைக்கும் எல்லாமே காற்றில் சுதந்திரமாக சும்மா ஆடிக் கொண்டுதான் இருக்கும்.

No comments:

Post a Comment