துப்பாக்கி முத்தங்கள்
நம்நாட்டுக்கு கறைபடிந்து போன ஒரு துப்பாக்கி வரலாறு இரு;கின்றது. அந்த வரலாற்றை மீளப்புரட்டினால் குரோதமும் அச்சமும் மிக முக்கிய இரு காரணிகளாக இருக்கும். ஜேவிபி சுமந்த துப்பாக்கி, தமிழ் ஈழ விடுதலை இயக்கங்கள் சுமந்த துப்பாக்கி, குறிப்பாக விடுதலைப்புலிகள், பாதாள உலகக் குழுக்கள் சுமந்த துப்பாக்கி, அடுத்தது அரசாங்கம் சுமந்த துப்பாக்கி.
இந்தப் துப்பாக்கிகள் என்ன செய்து கிழித்தன என்று ஆய்வு செய்யப்போனால் ஒரு நடுநிலமையாளனுக்கு பல்லாயிரம் தொன் எடை கொண்ட சுமைதான் உள்ளத்தினுள்ளேறும். இறுதியில் கொஞ்சம் கண்ணீரும் ஒரு பெருமூச்சும் வெளியேறும்.
நம் நாட்டின் எத்தனை பொக்கிசங்களை இந்நத் துப்பாக்கிகள் சிதைத்துச் சூரையாடி இருக்கின்றன. பழைய வரலாற்றில் வாள்களும் அம்புகளும் ஈட்டிகளும் நஞ்சும் செய்த அதே விளையாட்டுக்களை நவீன காலத்தில் துப்பாக்கிகள் செய்து கொண்டிருக்கின்றன.
இப்போது யுத்தம் என்ற கொடிய அத்தியாயம் ஏதோவொருவகையில் முடிவுக்கு வந்துவிட்டது. யுத்தம் முடிவுக்கு வருதல் என்றாலே அங்கு கண்ணீரும், அங்கச் சிதைவும், வகைதொகையில்லாத மரணங்களும், காரணம் கற்பிக்க முடியாத அல்லது நியாயப்படுத்த முடியாத பல்லாயிரம் அழிவுகளும் இடம்பெறுதல் என்பதும் தவிர்க்கவியலாததுதானே.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர்தான் பல்வேறு துப்பாக்கிகள் மௌனம் காக்கின்றன. இல்லாவிட்டால் பேனை பிடித்த பலருக்கும் தினம் தினம் நாம் இறுதி அஞ்சலி செலுத்த நேரிட்டிருக்கும்.
குறித்த நபரின் எழுத்தால் தமது தரப்புக்கு ஏற்படும் அச்சுருத்தலால் ஏற்படுகின்ற குரோதமும், அந்த எழுத்துக்கள் ஏற்படுத்தும் தாக்கங்களின் மூலம் ஏற்படும் அதிர்வுகளின் மீதுகொண்ட அச்சமும் துப்பாக்கி மூலம்தான் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன.
புலனாய்வு குறித்தும் அல்லது புலனாய்வுக்காரனின் விசாரனை குறித்தும் ஹொலிவுட் படங்கள் அளவுக்கு நாவல் நாவலாக எழுத முடியும். அந்த விசாரனைகள் பெரும்பாலும் மரணத்தை நோக்கி அழைத்துச் செல்வதாகவே இருக்கும். உண்மைகளைப் பெற்றுக் கொண்ட பின்னர் உயிரோடு விடப்பட்ட நபர்கள் மிகவும் குறைவுதான். உண்மைகள் கிடைக்கவே கிடைக்காது அல்லது இனிப் பிரயோசனமில்லை என்ற தீர்மானத்திற்கு விசாரனை செய்பவன் வருகின்ற போது பெரும்பாலும் இறுதி முத்தமிடுவது துப்பாக்கியாகத்தான் இருக்கும். எதிர்வினை குறைவு என்றால் இறுதி அடக்கத்திற்குப் பிரேதம் கிடைக்கும் தேவையில்லாத மண்டைக்குத்து என்றால் அக்கினியோடு சங்கமம். இறுதிவரை அவர் காணாமல் போன நபர்தான்.
இதற்கு உலகில் உள்ள மாபெரும் ஜனநாயகநாடுகள், மனித சுதந்திரத்தை முழுமையாகப் போசிக்கும் நாடுகள் என்று எதுவுமே விதிவிலக்கல்ல. நியாயத்தையும் தர்மத்தையும் சிரித்தபடி பேசிக்கொண்டுதானே எல்லாதவித அக்கிரமங்களையும் அதிகார வர்க்கம் செய்துகொண்டிருக்கின்றது. அதை எவ்வகையிலேனும் தடுத்துவிட தனிமனிதர்களால் ஒருகாலத்தில் முடியாது.
இந்தக் கட்டமைக்குள் இருந்து நியாயம் பேசுமளவுக்கு என்று மனிதம் விழித்துக் கொள்கின்றதோ அன்றே அவனுக்கும் இறுதி முத்தம் துப்பாக்கியால்தான். ஆனாலும் மிகவும் அபூர்வமாக சிலர் தம்மைத் தற்காத்துக் கொள்வார்கள். எல்லாவித மரண வலயங்களிலிருந்தும் தப்பித்து உயிரைத் தவிர பெயர் புகழ் மானம் கௌரவம் செல்வம் அனைத்தையும் இழந்து உண்மைகளை மட்டும் தங்களுக்குள் பத்திரமாகப் பதுக்கி வைத்திருப்பார்கள். அத்தகையவர்களால்தான் பல்வேறு மர்ம முடிச்சுக்கள் மெதுமெதுவாக அவிழும். அவை நம்பமுடியாதவைதான் ஆயினும் உண்மை.
தன்னைத் தற்காத்துக் கொண்;டு மிகவும் கவனமாக ஒரு பத்திரிகையாளனோ அல்லது எழுத்தாளனோ செயற்படுதல் என்பது அவனும் ஓரு புலனாய்வுக்காரனின் தரத்துக்குத் தன்னைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும். இது அரசியல்வாதி, சட்டத்தரணி, வர்த்தகன், என்று எல்லேலாருக்கும் பொருந்தும்
ஏனெனில் துப்பாக்கி முத்தமிடத் துணிந்தால் எந்தத் தராதரத்தையும் அளவீடு செய்வதில்லை.
No comments:
Post a Comment