01. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
ஏமாற்றிப் பிழைக்கத் தெரியாததால் எங்களுரில் வாழும் பல்லாயிரம் புத்தி ஜீவிகளுக்குள் ஒரு முட்டாள் நான்.
02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
முரண்பாடு முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். என்னோடு நானே முரண் பட்டிருக்கிறேன். இந்த இலட்சணத்தில் பிறருடன் முரண்படுவதை கேட்கவும் வேண்டுமா?
03. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
முனையூருல இரண்டு கிளிகள் இருந்திச்சாம். ஓன்று ஆண்கிளி மற்றையது பெண்கிளி. ஆண்கிளி தன்னைத் திட்டியதாக பெண்கிளிபோய் பொலிசுல முறைப்பாடு செய்திச்சாம். கூப்பிட்டு விசாரித்த பொலிஸ் காரர் இறுதியில் பெண்கிளியைப் பார்த்து சொன்னாராம் 'உனக்கும் வாய் இருக்குதான திட்டித் தொலயன்' அதைக்கேட்ட பெண்கிளி சொல்லிச்சாம் ஆணாதிக்கம்...ஆணாதிக்கம்...ஆணாதிக்கம்...
04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
நண்பர்கள் என்றெல்லாம் சொல்லமுடியாது. அவர்கள் எனக்கு முன்னோடிகள். ஓடையூரான், அஷ்ரப் ஷிஹாப்தீன், சோலைக்கிளி இன்னும் பலர்
05. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
அஷ்ரப் பற்றி எழுதினேன். ஆதற்காக கைக்கு விலங்கு மட்டும்தான் மாட்டவில்லை. ஊர் அரசியல் வாதிகளைப்பற்றி எழுதினேன். அதற்காக கொடும்பாவி எரித்தனர்.
06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
எல்லாவற்றிலும் என்னைவிடத் திறமை காட்டும் என் குழந்தைகளைத்தான்.
07. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
அரச பாடப் புத்தகங்களை.
08. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
ஓவியர் ஆதிமூலத்தின் ..between the line…
09. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
மூன்றாவது மனிதன்.
10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்குஇ சிறுகதைக்குஇ ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
கவிதையாகட்டும்,சிறுகதையாகட்டும்,வேறு எதுவாகட்டும் ஒரு நூல் வெளியிட்டால் 50,000 நஷ்டம்.
11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
அதவிடுங்க எட்டாதபழம் புளிக்கும்.
12. உங்களுக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
மௌன மொழியில்
13. முகநூல்இ வலைப்பூஇ இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
fast food
14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
நாங்கள் நான்குபேர், எங்களைச்சுற்றி நாற்பதுபேர். கோழி,குருவி,கொக்கு,காகம்...மாடு,ஆடு,அணில்...அப்பப்ப வந்து செல்லும் வண்ணத்துப் பூச்சி..
15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
வட்டம் அமைத்துக்கொண்டு சுழட்சிமுறையில் விருதுகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும் அனைவருக்கும்
No comments:
Post a Comment