Saturday, March 5, 2016

மனதிற்பட்டது - 15 பாராளுமன்றும் பாலியல் தொல்லையும் மிஸ்டர் பிரசிடன்ட் உங்களின் கவனத்திற்கு

பாராளுமன்றும் பாலியல் தொல்லையும்
மிஸ்டர் பிரசிடன்ட் உங்களின் கவனத்திற்கு

பெண்கள் அழகானவர்கள். அந்த அழகில் இழையோடும் மென்மையும் நளினமும் புன்னகையும் எத்தகைய சண்டித்தனத்தையும் சாந்தமாக்கிவிடும். அதனால்தான் பெண்களில் கண்குளிர்ச்சி இருப்பதாக முகம்மது நபிகள் சொன்னார்கள். அப்படிப்பட்ட அழகான பெண்களை ரசிக்கத் தோன்றுவது மனித இயல்பு. அது வெறுமனே ரசனையோடு மட்டும் சென்றுவிட்டால் பாதகமில்லை. அந்த ரசனைக்கு செயற்பாட்டு வடிவம் கொடுக்க முனையும் போதுதான் பிரச்சினை உருவெடுக்கின்றது. ஆகவேதான் அழகான பெண்களை திரும்பிப் பார்க்கும் மனித இயல்புக்கு முகம்மது நபிகள் (அல்லாஹ்வின் சாந்தி அவர் மீது உண்டாகட்டும்) அழகாக ஒரு விடயத்தைச் சொன்னார்கள் 'முதல் பார்வை உனக்குரியது அதற்கடுத்த பார்வைக் உனக்குரியதல்ல அது சாத்தானுக்குரியது' ஆகவே திரும்பத் திரும்பப் பார்க்காதே என்று நயமாகச் சொல்கின்றது.

பெண்களின் வசீகரம் என்பது வெறுமனே தோல் நிறத்திலோ அல்லது அலங்காரத்திலோ கிடையாது அதையும் தாண்டி அது மையங் கொண்டிருக்கும் புள்ளி மிக முக்கியமானது. அதனால்தான் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் என்று புனித வேதமான உலகப் பொது மறை அல்குர்ஆன் மனிதர்கள் அனைவரையும் பார்த்துச் சொல்கின்றது. ஏனெனில் பார்வைக்கு அத்தனை பலம் இருக்கின்றது. அந்தப் பார்வை எல்லை மீறுகின்ற போது காமப் பிசாசு விழித்துக் கொள்கின்றது பாலியல் வன்மமும் பலாத்காரமும் வயது வித்தியாசமின்றி அரங்கேறுகின்றது.

எமது முழு நாட்டையும் அந்த பாலியல் வியாதி ஆட்கொண்டு எல்லா அடிப்படைகளையம் தகர்த்து தந்தையர்களையும் காமுகர்களாக்கி, சின்னக் குழந்தைகளையும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி, சிறுமிகளையும் வன்புனர்வுக்குட்படுத்தி உயிரைப் பறித்து, யுவதிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பாலியல் சேட்டைகளாக உருவெடுத்து மொத்தத்தில் பெண்களையே துரத்திக் கொண்டிருக்கும் பிசாசாக மாறிவிட்டது. இப்போது அந்தப் பிசாசு நாட்டை ஆளும் பாராளுமன்ற வளாகத்தில் மையங்கொண்டிருக்கின்றது.

இது ஒன்றும் ஆச்சரியமான விடயம் கிடையாது, இத்தனை நாளும் தெருவில் திரிந்த அந்தப் பிசாசு சுதந்திர வர்த்தக வலயங்களிலும் ஆடைத் தொழிற்சாலைகளிலும் வேலை பார்க்கும் அபலைப் பெண்களைத் துரத்தி பின்னர் பாடசாலை வளாகத்தில் ஆசிரியர்களாலே பின்பற்றப்பட்டு வைத்தியசாலைகளில் ஊட்டச் சத்து அளிக்கப்பட்டு தனியார் அரச நிருவனங்களில் என்று பெண்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் அவர்களைத் துரத்தி இன்புற்று எல்லா இடங்களையும் வியாபித்து இறுதியாக பாராளுமன்றில் தஞ்சமடைந்திருக்கின்றது.

இனியும் பாலியல் சேட்டை, வன்புனர்வு, அல்லது ஆபாசமான பேச்சு என்பன குறித்து பாராளுமன்றம் கவனம் செலுத்தவில்லையானால் இந்த நாட்டை அது உருக்குலைத்துவிடும். இந்தத் தேசத்தில் தன்டனைக்காகக் காத்திருக்கும் வழக்குகளில் இருபது வீதத்திற்கும் மேல் பாலியல் வன்மம் சம்பந்தப்பட்ட வழக்குகளாகவே இருக்கும். வருடாவருடம் அத்தகைய குற்றவாளிகளின் தொகை அதிகரித்து வந்த போதுகூட இது தொடர்பில் போதிய கவனம் செலுத்த எமது நாட்டு அரசாங்கத்துக்கு நேரமிருக்கவில்லை.

கை நிறையப் பணமும் கவர்ச்சிகரமான விலையுயர்ந்த வாகனமும் இருந்துவிட்டால் போதும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று திரியும் ஒரு இளைஞர் கூட்டம் இந்ந நாட்டில் வசிக்கின்றது. அவர்களின் பாலியல் மோகமும் பெண்களை இச்சையைத் தனிக்கும் போகப் பொருளாகவே மட்டும் பயன்படுத்தும் கேவலமும் பெரும்பாலும் சட்டத்திற்கு முன்னோ அல்லது செய்தியாகவோ வருவதில்லை அதற்குக் காரணம் அவ்விளைஞர் கூட்டத்தின் யோக்கிவான்களான தந்தைகள் பாராளுமன்றின் அதிகாரக் கதிரைகளில் ஒய்யாரமாக வீற்றிருப்பதுதான். 

எந்தவொரு பெருங்குற்றத்தையும் பணம் மௌனிக்கச் செய்யும் துரதிஸ்டம் என்று நீங்கி சட்டமும் நீதியும் எல்லோருக்கும் பொதுவானது என்ற நிலை தோன்றுகின்றதோ அது வரைக்கும் இந்த அவலத்தில் இருந்து இந்நாட்டைக்காக்க யாராலும் முடியாது. 

பாராளுமன்ற உறுப்பினரான பெண்களுக்கே இந்த நாட்டில் பாலியல் தொல்லையில் இருந்து பாதுகாப்பில்லை என்றால் அது சொல்லும் செய்தி மிக முக்கியமானது. ஏனெனில் அங்கு தொல்லை கொடுக்கும் காமுகன் சாதாரண அன்றாடங்காய்ச்சி கிடையாது, ஒரு கூலித் தொழிலாளியும் கிடையாது, சட்டம் இலகுவாகத் தண்டிக்கும் அல்லது பொலிசார் பிடறியைப் பிடித்துத் தள்ளிச் செலுமளவுக்கு அல்லது சட்டைக் குளரைப் முறுக்கிப் பிடித்து இழுத்துச் செல்லும் அளவுக்குத் தண்டிக்க இலகுவான நபரோ கிடையாது. மாறாக கையில் விலங்கு மாட்டியதும் பல்லுத் தெரிய சிரித்தபடி கைகளைக் உயர்த்திக் காண்பித்து கமெராவுக்கு போஸ் கொடுக்கும் வகையினராகும் இவர்களிடமிருந்து பொலிசார் கூட ரெண்டடி தள்ளியேதான் இருப்பார்கள்.

மாடுகளையும் கால்நடைகளையும் காப்பதற்காக பிரயத்தனம் எடுக்கும் மிஸ்டர் பிரசிடன்ட் இதை உங்களின் கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம். பெண்களை காமப் பிசாசுகளிடமிருந்து பாதுகாருங்கள். குறைந்தபட்சம் புத்தர் சொல்லியபடி காமே சுமிச்சாச்சாரா வேரமணி சிக்காபதங் சமாதியாமி என்ற பன்சில் பத பஹ வில் ஒன்றான உபதேசத்தில் படிப்பினை பெற்று புத்தத்தின் வழியேனும் நாட்டை வழிநாடாத்தக் கட்டளையிடுங்கள்
எப்போது யார் வீட்டில் அப்பிசாசு அமரும் என்று யாருக்கும் தெரியாதுதானே!

No comments:

Post a Comment