Saturday, March 5, 2016

மனதிற்பட்டது -19 - உயிர் காக்க உதவுதல்

உயிர் காக்க உதவுதல்

படைப்பாளிகள் கலைஞர்கள் இலக்கியவாதிகள் என்று அதுசார்ந்த எல்லாச் சொற்களையும் இங்கே சேர்த்துக் கொள்ளுங்கள். அத்தகைய மனிதர்கள் ஒரு துன்பத்தில் வீழுகின்ற போது அல்லது அவஸ்தை தரும் சுகயீனத்தால் கடுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு உயர் வாழப் போராடிக் கொண்டிருக்கும் போது பொதுவாகக் கண்டுகொள்ளப் படுவதில்லை. அவர்களின் மரணச் செய்தி வந்தால் ஓர் இரங்கல் கவிதை அல்லது ஒரு குறிப்பு அல்லது அவருடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தைப் பதிவேற்றுவதுடன் சக இலக்கியவாதிகளின் கடமை முடிந்துவிடுகின்றது என்பதுதான் இன்றைய உண்மை.

மற்றவர்களின் துயர் போக்கும் அளவுக்கு ஓர் இலக்கியவாதி பொருதாரத்தில் தன்னிறைவு பெற்றவனில்லை என்பதும் மறுக்க முடியாத மறுபக்க உண்மை. அவனால் முடிந்த உச்ச உதவி எழுதுவது மட்டும்தான். ஆனாலும் அதையும் தாண்டி அவனுக்கிருக்கும் தொடர்புபுகள் எதையும் சாதிக்கவல்ல வல்லமை கொண்டவை. 

ஒரு படைப்பாளி அல்லல் பட்டுக் கொண்டிருக்கின்றான் என்றால் அவனுக்கு உதவ இந்த இரச இயந்திரத்தில் வழிகள் பெரும்பாலும் பிரத்தியேகமாக இல்லை. அதற்காக இதைக் கண்டுகொள்ளமல் விட்டுவிடவும் முடியாது. அதற்காக என்ன செய்யலாம்? ஒரு கலைஞனின் வறுமையைத் தாண்டி அவனது உடல் நலன் சார்ந்தும் வதைத்த படி இருக்கும் லட்சங்களில் தேவைப்படும் சுகாதாரத் தேவைகளை நிறைவேற்ற உத்தரவாதத்தை எந்த வகையில் செய்வது.

ஒரு இலக்கிய நண்பனுக்கு உதவுதல் என்ற எண்ணக்கருவில் அர்ப்பணிப்போடும் விளம்பரங்கள் இன்றியும் செயற்படுகின்ற தோழமைகள் அறவே இல்லை என்று சொல்லமுடியாது. அத்தகைய சிலரை நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றோம். தன்னால் ஒரு உதவியுமே செய்ய முடியாதே என்ற ஆற்றமையின் வெளிப்பாடுகள்தான் ஆறுதலாக நாலு வார்த்தை சொல்வது. அதை வெளிப்படுத்தப் பக்குவம் இருப்பது போல அத்தகைய தருனங்களில் அதை உள்வாங்கிக் கொள்ளவும் நாம் பக்குவப்பட்டிருக்க வேண்டும். 

எழுத்து இந்நாட்டில் யாரையும் சீமானாக்கவில்லை. அதற்காக எழுத்தைக் கைவிட்டவர்கள் அல்லது தனக்கு ஆறுதலாக இருக்கும் எழுத்தைக் கைவிட்டவர்கள் என்று யாரும் கிடையாது. எல்லாவற்றையும் பொறுத்தபடியும் தாங்கிக் கொண்டபடியும் நம'மையெல்லாம் தாண்டி இருக்கின்ற மாபெரும் சக்தியிடம் அனைத்தையும் பொறுப்புச் சாற்றிவிட்டுக் கடந்து செல்கின்ற பக்குவம் வாய்க்கப்பெற்றவர்கள் உண்மையில் கொடுத்துவைத்தவர்கள். 

ஒரு படைப்பாளி படுக்கையில் கிடக்கும் காட்சியைக் காண்பதுதான் மிகவும் மனவேதனை தரக்கூடிய அம்சம். அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. சுகயீனம் என்பது இயற்கையானது. அது யாரை எப்போது எந்தவடிவில் ஆக்கிரமித்து உறவாடும் என்று சொல்ல முடியாது. அந்த உறவை வெற்றிகொண்டு மீண்டு வருதல் என்பதுதான் சவால்மிக்க மகத்தான வெற்றி. ஏனெனில் மீள முடியாத வெற்றிகொள்ள முடியாத ஒன்று மரணம் மட்டுமே. அத்தகைய மரணத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்ற கடுஞ்சுகயீனத்திலிருந்து மீள்வது மகத்தான வெற்றிதானே.

இன்றைய காலகட்டத்தில் மிகவும் லாபம்தரும் தொழில்களில் மருத்துவமும் ஒன்று. அதனால்தான் சுகயீனமடைந்த பொருளாதாரப் பலமற்ற ஒரு சீவன் அதை எதிர்கொண்டு மீண்டெழுதல் என்பது சாத்தியமிக்கதல்ல என்ற உணர்வை வெகுசாதாரணமாக நமக்குள் விதைத்துவிடுகின்றது. 

எத்தனை இலக்கியவாதில் நம்மைவிட்டுப் போய்விட்டார்கள். அவர்களில் எத்தனை பேரை நாம் இன்றும் நினைவுகூர்கின்றோம் என்பதெல்லாம் ஓர் இலக்கியவாதியைப் பொறுத்தமட்டில் மிக முக்கியமான விடயமாகும். அதைத் தீர்மானிப்பது இவனது நடத்தைதான். மென்மையான போக்கு என்பது எப்போதுமே எல்லோரையும் ஈர்க்கவல்லது. ஒரு அழகான புன்னகை போல. அதிலும் ஆணின் புன்னகையைவிட ஒரு பெண்ணின் புன்னகை ஈர்ப்புக் கூடியது என்பதும் இயற்கைதானே.

எனவேதான் எழுத்தில் புரட்சி சொண்டிருக்கும் பலரையும் மென்மை ஆக்கிரமித்துக் கொள்ள அவரா இவர் என்று வியப்பு நெற்றி சுருங்க வைக்கின்றது. அந்த மென்மை தனது பிரச்சினையை மற்றவர்களிடம் சொல்லக் கூட தயங்க வைக்கும். 

நமது ஓர் இலக்கிய நண்பரின் துன்பத்தில் நாமும் பங்கெடுப்போம் குறைந்து நலன் விசாரித்து அவருக்கு ஆறுதலாய் நான்கு வார்த்தைகளேனும் சொல்வோம்.
கவிஞர் மஜீத் - 0775 009 463
மக்கள் வங்கி அக்கரைப்பற்றுக் கிளை – 063 2001 8002 2795

No comments:

Post a Comment