Thursday, March 24, 2016

புரொய்லர்களால் ஆளப்படும் உலமா சபையும் உலக அரசியலின் பின்புலமும்.

கொஞ்சம் நீண்ட கட்டுரை நேரமிருந்தால் படியுங்கள் ஏதாவது புரியும்...

புரொய்லர்களால் ஆளப்படும் உலமா சபையும்
உலக அரசியலின் பின்புலமும்.
-முஸ்டீன்-

உலக மக்கள் மொழி, மதம், இனம், கொள்கை என்ற பிரதான பிரிகோடுகளால் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இந்த உலகம் நாடுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொருவர்க்கும் நிறமும் கொடியும் கொடுக்கப்பட்டு தத்தமது தேசிய எண்ணக்கருவுக்குள் அனைவரும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். மனிதர் என்ற பொது அடையாளத்தில் இருந்து வேறுபட்டதாக அத்தேசியம் திணிக்கப்பட்டபோதே யார் உயர்ந்தவர் யார் தாழ்ந்தவர் யாரை யார் ஆள்வது என்ற விடயம் முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று. எல்லோரையும் மிகைத்து தானே வெற்றியாளனாகவும் தானே அனைத்தையும் தீர்மானிப்பவனாகவும் இருக்கின்ற உலகிற்கான பொது எதிரி உருவாகிய தருனமும் இதுதான். அதிகாரத்தைக் கையிலெடுத்து உலக இயங்கியலின் போக்கை அது எத்தகையதாக இருக்க வேண்டுமென்பதை வடிவமைக்கும் பொறுப்பை தமதாக்கிய சக்திகள் இன்னும் முழுமையாக உலக மக்களின் பார்வைக்கு வரவில்லை. இந்தப் புள்ளியில் இருந்துதான் நம் நாட்டில் நடக்கின்ற சில விடயதானங்களையும் பார்க்க வேண்டியிருக்கின்றது. 

ஒருவரின் பலவீனங்களில்தான் எதிரி தன்னைக் கட்டமைக்கின்றான் என்பது எனது அபிப்ராயம். எப்போது பலவீனங்கள் வெளிப்படுகின்றதோ அப்போதே தோல்விக்கான கால எல்லை நிர்னயிக்கப்படுகின்றது. கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து, பௌத்தம், யூதம், என்று அனைவரும் சமயக் கூறுகளுக்குள் ஒருவரை யொருவர் தழுவிக் கொண்டாலும் எதிரிகளாகவே பார்க்கின்ற ஒரு அம்சம் இருக்கின்றது அதை யாராலும் மறுதலிக்க முடியாது. அரிதான பொதுமனிதர்கள் சிலர் எல்லாச் சமய வட்டங்களுக்குள்ளும் இருப்பார்கள் அத்தகைய ஒரு பார்வையில்தான் இக்கட்டுரையை எழுத வேண்டியிருக்கின்றது. அத்துடன் பாலர் வகுப்புச் செல்லப்பிள்ளைக்கு பாடல் சொல்லிக் கொடுப்பது போல இக்கட்டுரை இருக்காது. இதன் கருத்துகளைப் புரிந்துகொள்ள கொஞ்சமாவது புத்தி இருக்கவேண்டும் குறைந்தபட்சம் மூளையாவது இயங்கு நிலையில் இருக்க வேண்டும். அப்படியில்லாதுவிட்டால் எனது கருத்துகள் மடையனின் புலம்பல்கள் போல தென்படுவதையும் சிலர் என்மீது பாய்வதையும் தவிர்க்க இயலாது.

யாருடைய அதிகார எல்லைக்குள்ளும் சரணடையாத ஒர் உலக மகா சக்தி இருக்கின்றதென்றால் அது சியோனிசம் மட்டுமே. அதை விஞ்சிய இன்னுமொரு சக்தி இன்னும் உருவாகவில்லை. அப்படியொரு சக்தி உருவாக சியோனிசம் இடமளிக்கவுமாது. உலகின் பொதுப் பிரச்சினை என்பது எதுவாக இருக்க வேண்டும் என்பதை அதுவே தீர்மானிக்கின்றது. இந்த அடிப்படையில்தான் போராட்ட இயக்கங்கள் உருவாவதும் அசுர வேகத்தில் அவை தமது பலத்தை யாரும் நம்பவியலாத வடிவில் வெளிப்படுத்துவதும் நாடுகள் தேசங்கள் அமைவதும் என்று பல விடயங்கள் நிகழ்கின்றன. தலிபான்கள், அல்காயிதா, ஒசாமாபின்லேடன், ஐஎஸ்ஐஎஸ், பயங்கரவாதச் செயற்பாடுகளில் மத முத்திரையுடன் இயங்கும் உலக இயக்கங்கள் என்று அந்தப் பார்வை மிகவும் ஆழமாகப் பார்க்கப்படவேண்டியது. அமைதியாக இருக்கும் பல நாடுகள் சீரழிந்து சின்னாபின்னமாகிப் போகும் அவலத்தின் பின்னால் இந்த அதிகாரத்தின் செயற்பாடு நிச்சயம். இருக்கும். உதாரணமாக எமதுநாட்டையே எடுத்துக் கொள்வோம். யாராவது உயர் அதிகாரத்தில் இருந்து இந்த நாட்டில் சர்வதேசப் பயங்கரவாத இயக்கங்களின் தொடர்பு இருக்கின்றது என்று பட்டியல் பிரகடனம் செய்யும் போது மக்களே விழித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அத்தகைய பிரகடனங்களில் பின்னால் இரண்டு அல்லது மூன்று வருட கால அவகாசத்தை எடுத்துக் கொண்டு திடீரென்று பூதம் வெளிப்படும் அப்போது மக்களுக்கு சிந்திப்பதற்கு அவகாசம் இருக்காது. மரணயங்களைப் பற்றிய பிரஸ்தாபம் மேலெழும். சம்பந்தமேயில்லாத இரண்டு தளங்களில் விழுகின்ற அடிக்குப் பின்னால் எல்லாவிதச் செயற்பாட்டாளர்களும் குழம்பிப் போய் நிற்கும் போது நாங்கள் சொன்னோம் தானே இப்படி நக்கும் என்று சிலர் சான்று பகர்வார்கள். அப்போது மக்களின் அவலம் மிகவும் கொடூரமாதாக இருக்கும். சரியான தலைமைத்தும் இல்லாத சமயக்குழுமமும் சரியான புரிதல் இல்லாத அரசியல் தலைவனும் இருந்தால் தேசத்தின் சந்துபொந்துகளில் எல்லாம் மரண ஓலம் கேட்கும். அதுதான் மேலே நான் சொன்ன அதிகார மையம் ஏற்படுத்தும் சந்தர்ப்பம் அல்லது விரிக்கும் வலை. அப்போது இம்பெறுகின்ற இடைவெளியில் அவ்வதிகாரவர்க்கம் வந்தமர்வதற்கான எல்லாவிதமான ஏற்பாடுகளையும் ஏலவே செய்திருக்கும். அதை மக்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள் அதற்கான சூழ்நிலை அவர்களுக்கு இருக்காது. ஆனால் மக்களின் ஒற்றுமை ஒன்றுமட்டுமே அந்த அதிகாரத்தை அயைாளம் காண உதவும்.

ஒற்றுமையாக இருக்க முடியாது நாம் பிரிந்து போவது ஒன்றுதான் தீர்வு என்ற முடிவுக்கு இருவர் வருது என்பதே இன்னொருவரின் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டுவிட்டார்கள் என்பதற்கான வெளிப்பாடுதான். அது தனிநபர்களுக்கிடையானதாக அல்லது இனக்குழுக்களுக்கிடையேயானதான, மதக்குழுக்கள் நாடுகளுக்கு இடையேயானதாகக் கூட இருக்கலாம். அதனால்தான் தமிழில் அழகான முதுமொழியொன்றுள்ளது 'ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்'. பிளவுறும் போதுதான் கூத்தாடியின் பிழைப்பு ஸ்திரமாகின்றது.

வடகொரியாவும் தென் கொரியாவும் தாம் ஒரே தேசமாக இணைந்து வாழ நினைத்தாலும் அது நடக்காது அங்குதான் சூத்திரதாரி இருக்கின்றான். அவன் இருபக்கமும் சமபங்கு வகிப்பான் யாராலும் புரிந்து கொள்ள முடியாதபடி. அப்படித்தான் செக் குடியரசும் ஸ்லோவாக்கியாவும் எக்காலத்திலும் இணைய முடியாது. யூதர்களை திட்டமிட்டு அழித்த பழைய வரலாறுகளையெல்லாம் இப்போதைக்கு இங்கு நோண்டிக் கொண்டிருக்க முடியாது. பிரித்தாளும் தந்திரம் ஒரு வகையில் உட்சபட்ச பழிவாங்கல்தான். 

உலகின் ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் உலக அரசியல் ஆதிக்க சக்தியின் ஏதோ ஒரு காரணம் தாக்கம் செலுத்துவதாக இருக்கும் அதை யாராலும் இனங்கண்டுகொள்ள முடியாது என்று கருதுவது முட்டாள்தனம். 

உலகில் நூற்றியறுபது  கோடி மக்கள் பின்பற்றுகின்ற இஸ்லாத்தில் சுன்னி - ஷீஆ என்று இரண்டு முக்கிய பிரிவுகள். ஒரு அரசியல் பிரிவாகத் தொடங்கிய ஷீஆ பிற்காலத்தில் ஸ்திரமான சமயப் பிரிவாக வலுப்பெற்றது. இப்போது தவிர்க்க வொனாத சக்தி. சுன்னிக்கள் பல்லாயிரம் இயக்கங்களாகவும், குழுக்களாகவும் பிரிந்து இப்போது கணக்கெடுக்கக் கடினமானகிளைகள் விட்டு அப்பிரிவு நிரந்தரமாயிற்று. அது போலவே ஷீயாக்களும் தமக்குள் பிரதான பன்னிரென்டு பிரிவுகளாகப் பிரிந்து அதிலும் பல்வேறு கொள்கையடிப்படையிலான குழுக்களாக மாறி வாழ்கின்றார்கள். நம் நாட்டையே எடுத்துக் கொள்ளுங்கள் இஹ்வான்களின் சிந்தனைப்புலத்தில் தோற்றம் பெற்ற தாருல் அர்க்கம் இரண்பட்டு இயங்கத் தொடங்கியதே அந்தப் பிரிவுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியில் எந்த சக்தி வந்தமரும் என்பது ஒருகட்டத்துக்குப் பின்னர் இரு தரப்புக்குமே விளங்காது. அதுபோலவே இந்நாட்டில் தௌஹீத் ஜமாத் பிரிவுகளுக்கு இடையே ஏற்படுகின்ற பிளவு. அது மிகவும் மோசமானது. முதலில் ஒரு தௌஹீத் ஜமாத் பின்னர் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பிளவுக்க ஏற்ப இங்கும் இரண்டு குழுக்கள் அதிலிருந்து மற்றுமொரு பிரிவு இப்படி அது மூன்றாக நான்காக உடைந்து செல்லும் போது வஹாபிசத்தை முன்னிறுத்தித் தயாரிக்கப்பட்ட மனித இனத்துக்கு எதிரான ஒரு சிந்தனையில் வெகு சொற்ப தொகையினர் வீழ்ந்து போவார்கள். அவர்கள் விட்ட இடைவெளியில் எல்லாம் வசதியாக எந்தெந்த அதிகாரத்தின் எச்சங்கள் வந்தமர்ந்தன என்று தெரியாமல் தங்களுக்குள் மோதிக்கொள்வார்கள். அப்போது வெளிப்படும் அச்சம் மிகவும் பயங்கரமானது. ஏனெனில் இத்தகைய பிரிவின் அந்தத்தில்தான் உலகபயங்கரவாதத்தின் தயாரிப்பாளன் கச்சிதமாக வந்து அமர்ந்து கொள்வான். அந்த அமர்வு மிகவும் பொல்லாதது. ஏனெனில் அச் சொற்ப தொகையினரின் மூளைகளை அவன் ஏலவே மொத்தமாகக் கொள்வனவு செய்திருப்பான். அவர்களுக்கு உயிர்பொருட்டாகவும் இருக்காது வெடித்துச் சிதறுவதில் சொர்க்கம் இருப்பதாக அப்போது அவன் நம்பியிருப்பான்.  அல்லாஹ் என்ற ஒருவனை ஏக கடவுளாகவும், முஹம்மது என்பவரை இறைவனின் இறுதி இறைத்தூதராவும் ஏற்றுக் கொண்ட அனைவரும் முஸ்லிம்களே. அது சுன்னி என்றாலும் சரி ஷீயா என்றாலும் சரி. என்ற பொதுத் தளத்தில் எல்லாவித முரண்பாடுகளுக்குமப்பால் முஸ்லிம் சமுகம் வராதுவிட்டால் எலக அளவில் ஏற்படப் போகும் கொந்தளிப்பில் நின்று தாக்குப் பிடிப்பது இலகுவாக இருக்காது. (ஜம்இய்யதுல் உலமாவில் அங்கம் வகிக்கும் ஆலிம்களை புரொய்லர் என்று சித்தரித்ததற்கும் இங்கு சொல்லப்பட்ட விடயங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா என்று யாராயினும் கேள்விகேட்பார்களாயின் அவர்களுக்கு நான் சொல்லும் ஒற்றைப் பதில் சிந்தித்துப்பாருங்கள் என்பது என்பதுதான். ஏனெனில் நெருக்கடி நேரத்தில்தான் பலவீனம் அதுவாகவே வெளிப்பட்டு நிற்கும்)

வரலாற்றைத் திரும்பிப் பார்க்கின்ற போது சுன்னி சீயா பிளவில் ஆட்சியதிகாரத்தை யார் தக்க வைப்பது என்பதில்தான் இவ்விரண்டு குழுக்களினதும் முரண்பாடும் போராட்டமும் போட்டியும் இருந்திருக்கின்றது. இந்தப் பிரிவினையை சரியாகப் பயன்படுத்திக் கொண்டது சியோனிசம் மட்டும்தான். ஏனெனில் கிலாபத் என்ற ஓர் அரசுக் கோட்பாடும், உம்மத் என்ற ஒரே மக்கள் என்ற கோட்பாடும் எப்போதும் தனது இருப்புக்குச் சவாலானது என்பதற்காக அதைச் சிதைப்பதில் சியோனிசம் எத்தகைய பாத்திரத்தை உலக அரங்கில் வகித்திருக்கின்றது என்பதை ஓர் ஆய்வாளன் மிக எளிதாகக் கண்டு கொள்வான். 

1700ஆம் ஆண்டுகளில் இமாம் முஹம்மதிப்னு அப்துல் வஹாப் அவர்களின் வருகைக்குப் பின்னர் தோற்றம் பெற்ற சுன்னிக்களின் இஸ்லாமிய எழுச்சியும் தூய்மைவாதமும் ஏகத்துவ வாதமும் 1950 களிலேயே வஹாபிசம் என்ற ஒரு Brand ஆக உற்பத்தி செய்யப்பட்டு உலகெலாம் விற்பனைக்கு வந்த போது அது முஸ்லிம்களில் உள்ள சகல குழுக்களோடும் முரண்பட்டே நின்றது. முஸ்லிம் என்ற ஒற்றுமை எங்கெல்லாம் சிதைக்கப்பட்டிருக்கின்றதோ அங்கெல்லாம் வஹாபிசம் விற்பனை செய்யப்பட்டிருக்கும். அது போலவே இவர்களோடு நேரடி முரண்பட்ட குழுவான ஷீஆக்களில்தூய்மையான இஸ்லாத்திலிருந்து அதிக தூரத்தில் இருந்த குழுக்களும் ஷீயாக்கள் என்ற பொதுப் பெயரோடு வஹாபிசத்துக்குப் போட்டியாக சந்தைக்கு வந்த போதுதான் பள்ளிவாயல்கள் தோறும் இரத்தம் ஓடத் தொடங்கிற்று. இதற்கான உலகின் பரீட்சார்த்த களமாக பாகிஸ்தானே பயன்படுத்தப்பட்டது. பின்னர் இந்தியா, இப்போது ஈராக் சிரியா யெமன் மேலே சொன்னது போல இந்த வஹாபிசம் இந்தியாவின் தமிழ்நாட்டையும் இலங்கையையும் எப்படி சிதைக்கும் என்பதை பொருத்திருந்து பாருங்கள். ஏனெனில் ஜம்இய்யதுல் உலமா என்ற பொறுப்புவாய்ந்த அமைப்பு இப்பிளவுகளைச்சரியாக இங்கு வழிநடாத்தி ஒருமுகப்படுத்தாவிட்டால் விட்டால் வருகின்ற இழப்புக்கு பின்னர் சமாதனம் சொல்ல வார்த்தைகள் கிடைக்காது. அதுபோலவே இந்தியாவின் தமிழ்நாட்டுக்கும். இதே செய்தியைத்தான் சொல்ல முடியும். பிளவுகளின் பின்னால் உள்ள பயங்கரம் அத்தகையது. 

இப்போது உலக அரங்கில் எடுத்துக் கொள்ளுங்கள் சுன்னிக்கள் எப்படி தமது பிடியை இன்னொருவருக்கு விட்டார்களோ அது போல ஷீயாக்களும் தமது பிடியை அதே நபரிடம் விட்டுவிட்டார்கள். இனி இந்த இரு திறத்தாரும் நினைத்தால்கூட ஒன்று சேர முடியாது. வடகொரியா தென்கொரியா போல. இனி எஞ்சியிருப்பதெல்லாம் போட்டி ஒன்றுதான். அதுவும் எதிரியாகக் கட்டமைத்துக் கொண்டு அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்ளும் பயங்கரப் போட்டியாக அது உருவெடுக்கும். அதற்காக என்ன விலை கொடுக்கவும் இரு திறத்தாரும் தயாராகவே இருப்பார்கள். அப்போது அவர்கள் தாம் வணங்கும் அல்லாஹ்வையும் தாம் பின்பற்றும் முஹம்மது நபியையும் வசதியாக மறந்து விட்டிருப்பார்கள். பாகிஸ்தானிய மக்கள் இன்றுவரையும் அதன் வலியை அனுபவிக்கின்றார்கள். ஆனால் இந்தியாவும் ஏனைய மேற்கு சக்திகளும் அர்த்தப்படுத்தும் பயங்கரவாதம் வெறுமனே தனது நலன்களுக்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டவை. 

1979 ஆம் ஆண்டு இமாம் குமைனி தலைமையில் ஏற்பட்ட ஈரானிய இஸ்லாமியப் புரட்சி என்பது உலக அளவில் சில மாற்றங்களைச் செய்தது.  ஷாஹ் ரிழா முஹம்மத் பஹ்லவியின் தோல்வி என்பது அமெரிக்காவினதும் சியோனிசத்தினதும் தோல்வியாக இருந்தது. அதன் பிற்பாடு அமரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் ஏற்றுக் கொண்ட வரைபுகள் எல்லாம் இப்போதைய நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள உதவி செய்பனவாகவே இருக்கின்றமை விஷேடமானது. சியோனிசத்தின் கோட்டையாகத் திகழ்ந்த ஈரானின் பிடி விடுபட்ட போது அடுத்த கட்டத்திற்குத் தயாரான சியோனிசம் ஈராக்கையும் சவுதி அரேபியாவையும் இலக்கு வைத்து வெற்றியும் பெற்றது. அதன் எதிரொலிதான் ஈரான் ஈராக் யுத்தம். அரபுகளுக்கும் பாரசீகர்களுக்கும் இடையேயான யுத்தமாக அது வடிவமைக்கப்பட்டது. சத்தாம் ஹூஸைன் அமெரிக்காவின் கயிற்றை முழுமையாக விழுங்கியிருந்தார். அந்தக் கயிறு சியோனிஸ்ட்டுகளின் தயாரிப்பு. அந்த யுத்தத்தைத் தொடக்கி வைத்த சத்தாம் 'அன பதலுல் காதிசிய்யா...' என்றுதான் தொடங்கினார். புரிந்து கொள்வதற்காக தமிழில் இப்படிச் சொல்லலாம். 'நான் காதிசிய்யப் போர் வீரன். மஜூசிகள் என்ற நெருப்பு வணங்கிகளுக்கு எதிராகப் போராடப் போகின்றேன்' அன்று தொடங்கிய யுத்தத்தில் அரபுகள் பாரசீகர்களுக்கு எதிராக அணி திரண்டார்கள். குவைத் வெளிவிவகார அமைச்சர் நேரடியாக ஈராக் சென்று சதாமின் கரங்களைப் பிடித்து உயர்திச் சொன்னார் 'நாம் எமது சகோதரனுடன் என்றும் இருப்போம்'  அந்தப் பிரதி முழுமையாக சியோனிசத்தின் தயாரிப்பு அமெரிக்காதான் விநியோகஸ்தர். நுகர்வோர்தான் பாவம். அரபிகள் தோற்ற முதலாவது சந்தர்ப்பமல்ல அது.  

அதன் பின்னர் நடந்தவைகளை உலகே அறியும். அந்த மாபெரும் அத்தியாயத்தின் திருத்திய புதிய பதிப்புதான் சுன்னிக்களுக்கும் ஷீஆக்களுக்கும் இடையேயான உலக அளவிலான பிரகடனப்படுத்தப்படாத போர். அந்தப் போரின் பிரதான படையனியாக புதிய வகையறா (Brand) ஒன்றை நிலைநிறுத்த விரும்பியதன் விளைவுதான் வஹாபிகள். வஹாபிகள் என்ற பொறிக்குள் சிக்குண்டிருக்கும் நபர்களுக்கு தமக்குப் பின்னால் இருக்கின்ற மகா பணபலம் பொருந்திய அனுசரனையாளர்கள் கொடைவள்ளல்களாக மட்டுமே தெரிவதுதான் இதன் அவதானிப்புக்குரிய விடயம். (உதாரணத்திற்கு நம் நாட்டில் தௌஹீத் என்ற ஏகத்துவக் கொள்கை பேசுபவர்கள் உண்மையிலேயே அப்பாவிகள். அவர்களுக்கு இன்னும் வஹாபிசம் என்ற படு பயங்கரமான பண்டத்தின் நீண்ட கயிற்றில் கட்டப்பட்டிருப்பது சத்தியமாகத் தெரியாது. அதை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு இன்னும் அறிவுப் பக்குவத்தை அவர்கள் அடையவில்லையென்பது துக்ககரமானது. எனவே இங்குள்ள ஏகத்துவக் கொள்கைச் சகோதரர்கள் முட்டாள்தனமாக என்மீது பாய வர வேண்டாம்)

இப்போது அமெரிக்கா மத்திய கிழக்கில் எத்தகைய பாத்திரத்தை வகிக்கின்றது என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. அது போன்று புரட்சிக்குப் பின்னரான ஈரான் சியோனிசத்தைக் கையால்வதிலும் அமெரிக்கா அதிகாரத்தையும் ரஸ்ய அதிகாரத்தையும் கையாள்வதிலும் எத்தகைய போக்கினைக்  கடைப்பிடிக்கின்றது என்பதையும் கொஞ்சம் ஆழமாகப் பார்க்க வேண்டும். எல்லாவற்றிற்குப் பின்னாலும் மறைந்திருக்கும் ராஜதந்திரம் அவிழ்க்கப்படாத மந்திர முடிச்சாக ஒரு போதும் இருக்கப் போவதில்லை.

இப்போது ஓடிக் கொண்டிருக்கும் அமெரிக்கத் தயாரிப்பான ஐஎஸ்ஐஎஸ் திரைப்படத்தின் இறுதி இலக்கு துருக்கியாகத்தான் இருக்கும். பொறுத்திருந்து பாருங்கள். ஏனெனில் துருக்கிவழி தனது உலக வளங்களைப் பயன்படுத்த ஒரு நெட்வேர்க் இருக்கின்றது. பத்துஹல்லா குலானின் கையாட்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அதுபோலவே ஐஎஸ் இறுதி இலக்காக ஏன் துருக்கியைக் கொள்ளும் என்பதிலும் அதன்வழி துருக்கிக்கு சர்வதேச அளவில் ஏற்படுத்தவிளையும் நெருக்கடி எத்தகையது என்பது தொடர்பிலும் நீண்ட கட்டுரை எழுத வேண்டும். 

ஆட்சியதிகாரத்தை இழக்கத் தயாரில்லாத மனிதர்கள் எத்தகைய பாத்திரங்களையெல்லாம் எடுப்பார்கள் என்பதற்கு நமது நாட்டில் நமது கண்முன்னே அழகிய உதாரணம் இருக்கின்றது. சவுதி அரேபியா அதற்கு விதிவிலக்காகுமா? அல்லது ஈரான்தான் விதிவிலக்காகுமா?

தற்போது இந்த இரு நாடுகளுக்கிடையேயும் இடம்பெறுகின்ற அதிகாரப் போட்டி என்பது இத்தனை நாளும் இப்போது போல வெளிப்படையானதாக இருக்கவில்லை. இனிவரும் காலங்களில் அதன் பிரதி பலிப்புக்களை உலகின் மூலை முடுக்கெங்கும் கண்டுகொள்ள முடியும் என்று என்னால் உறுதியாக ஆருடம்கூற முடியும்.

இலங்கை பல்லின சமய மற்றும் சமூகச் சூழலினைக் கொண்ட நாடு. இங்குள்ள சிறுபான்மை முஸ்லிம்களின் தவிர்க்கவொனாத ஒரு மையமாகத்திகழ்வது ஜம்இய்யதுல் உலமா. நடுநிலமையானதும் நிதானமானதுமான போக்கைக் கடைப்பிடித்து இந்நாட்டு முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டிய மாபெரும் பொறுப்பும் இந்த உலமா சபையிடம்தான் இருக்கின்றது. அறிஞர்கள் குழாமினால் வழிநடாத்தப்பட வேண்டிய இந்தச் சபை சில புரொய்லர் கோழிகளால் வழிநடாத்தப்படுவதுதான் துரதிஸ்டம். ஏனெனில் அமுல்படுத்தப்படுகின்ற முடிவுகளைப் பார்ககின்ற போது சானியடித்த சுவர் போலத்தான் அவர்களின் சானக்கியம் இருக்கின்றது.  இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற நபர்கள் தம்மை சரியான இஸ்லாமிய கோட்பாடுகளுக்குள் முன்னிறுத்திக் கொண்டு தமது சுற்றுச்சூழலைப் புரிந்து கொண்டுதான் செயற்படுகின்றார்களா? என்ற கேள்வி எனக்குள் எழுகின்றது. 

முரண்பாடுகளைக் கையால்வதில் இவர்கள் வரலாறு நெடுகிலும் தவறு விட்டே வந்திருக்கின்றார்கள். தூய இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்ட கோட்பாட்டளர்களான காதியானிகளையும், வஹ்ததுல் வுஜூத் மற்றம் இதர கொள்கையாளர்களுக்கு இலவச விளம்பரம் பெற்றுக் கொடுத்து அவர்களின் இருப்பை உறுதிப்படுத்தியதும் இதே உலமா சபைதான். சிறு செடியாக நின்ற அப்துர் ரவுப் அவர்களை அசைக்கமுடியாத விருட்சமாக மாற்றியதும் இவர்களேதான். எதிர்த்தல் எதிர்ப்பைப் பிரகடனப்படுத்தல் என்பதில் எடுக்கப்படும் சிறுபிள்ளைத்தனமான முடிவுகள்தான் பல வில்லங்கங்களை விதைக்கச் செய்கின்றது. சவுதி அரேபியாவை ஷரிஆ சட்டத்தின் பாற்பட்ட ஒரு இஸ்லாமிய நாடாகப் பிரகடனப்படுத்தும் அறியாமையும், ரிசானா நபீக் என்ற அபலைப் பெண்ணின் பட்டவர்த்தனமான கொலையை நியாயப்படுத்தி அது இஸ்லாமிய தண்டனைதான் என்று சப்பைக்கட்டுக்கட்டி அவர்கள் விட்ட அறிக்கையும்தான் இவர்களின் பலவீனங்களை வெளிப்படுத்திய அன்மைக்காலத் தருணங்கள். அத்துடன் சிங்கள பேரினவாத சக்திகள் ஹலால் என்ற ஒரு விடயத்தைத் தூக்கிப்பிடித்த போது தமது முட்டாள்தனத்தின் அதி உச்சத்தை தெளிவாகப் படம் போட்டுக் காட்டினார்கள். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மற்றுமோர் அதிகார மையம் தலையெடுத்ததும் வேறு கதை. அது அப்படியே இருக்க...

புர்கா நிகாப் பற்றிய பேச்சுகள் ”கோனிபில்லா” என்ற எள்ளளுடன் பொதுத்தளத்தில் ஊடகங்கள் மீது பிரயோகிக்கப்படும் வார்த்தைகள் ஒருகட்டத்தில் சட்ட வடிவம் பெறும்போது எல்லாவற்றையும் அவிழ்த்தெறியும் சந்தர்ப்பை ஏற்படுத்தும் அப்போது உலமா சபை கையைப் பிசைந்து கொண்டு நிற்கும். அத்தகைய நிலைக்கு மக்களைக் கொண்டுவந்து நிறுத்தி விடாதீர்கள்என்பதுதான் எனது எதிர்பார்ப்பு. வெறும் ஊகங்களால் பிதற்றுவதாகக் கருதி எளிதாகக் கடந்துபோக வேண்டாம். ஏனெனில் இது எச்சரிக்கையாளனின் குரல்.

இப்போது ஷீஆக்களுக்கு எதிரான போர்ப்பிரகடனம் ஒன்றைச் செய்யுமளவுக்கு சர்வதேச அரசியல் ஒழுங்கின் தாக்கம் உலமா சபையின் நிகழ்ச்சி நிரலிலும் பிரதிபலிக்கின்றமை நிச்சயமாக ஆரோக்கியமான அம்சமாக இருக்கப் போவதில்லை. மேலே சொல்லப்பட்ட செய்திகளில் வெளிப்படையாகச் சொல்லாமல் சொல்லப்பட்டிருக்கின்ற செய்திகளை உலமாக்கள் அதாவது அறிஞர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் ஆனால் புரொய்லர்கள் புரிந்து கொள்ளுமா என்பதில்தான் சந்தேகம் இருக்கின்றது.

அன்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாப் பிராந்தியத்தின் உலமா சபை ஷீயாக்களுக்கு எதிராக விட்டிருக்கும் அறிக்கையின் பத்து அம்சங்களினதும் சுருக்கம் இதோ. 
01.ஷீஆக்கள் வழங்கும் உதவிகள்,தொழில் பயிற்சிகள்,கல்வி வழிகாட்டல்கள் முஸ்லிம்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்
02.மன்பஊல் ஹூதா அறபு கல்லூரி ஷீஆக்கொள்கையில் இருத்து சுத்தப்படுத்தப்பட்டு தூய்மையான இஸ்லாமிய கொள்கையின் அடிப்படையில் நிருவகிக்கப்பட வேண்டும் 
03.இப்பிரதேசத்தில் வாழும் ஷீஆக்கள் தமது கொள்கைகளை விட்டு தூய்மையான இஸ்லாமிய கொள்கையின் பால் வரவேண்டும் 
04.நமது பிரதேச முஸ்லிம் பாடசாலைகளில் கடமை புரியும் ஷீஆ கொள்கையை சார்ந்த ஆசிரியர்கள் பிற மதத்தவர்களின் பாடசாலைகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் 
05. சுன்னி முஸ்லிம்களாகிய நாம் ஷீஆக்களுடன் திருமன உறவுகளை முற்றாக தவிர்க்க வேண்டும் 
06. ஷீஆக் கொள்கையை போதிக்கும் அறபு கல்லூரியில் கற்கும் எமது பிரதேச மாணவ,மாணவிகளை உடனடியாக அங்கி இருத்து விலக்கி சுன்னி மத்ரசாக்களில் சேர்க்க வேண்டும்
07. ஷீஆக்கொள்கை இந்நாட்டு முஸ்லிம்களினது பிரச்சினையாகும். அதை ஒழிப்பதற்கு அனைத்து முஸ்லிம்களும் ஒத்தழைக்க வேண்டும்.
08. மீராவோடையில் உள்ள கொமைனி வீதியின் பெயர் மாற்ற கோ.ப.மே பிரதேச சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் 
09. உலமா சபை கல்குடா கிளை மற்றும் மீராவோடை பள்ளி வாயல் நிருவாகம் இனைத்து ஒரு குறிப்பிட்ட கால எல்லையை ஷீஆக்களுக்கு வழங்கும் அதற்குள் அவர்கள் தமது கொள்கையை பகிரங்மாக விட்டுவிட வேண்டும். ,ல்லாவிட்டால் அவர்களினதும் குடும்பத்தினரதும் பிரேதம் சுன்னி மையவாடியில் அடக்கப்படமாட்டாது. 
10.ஷீஆக்களின் விழாக்கள்,கூட்டங்கள் மாநாடுகளை அனைத்து முஸ்லிம்களும் புறக்கணிக்க வேண்டும் எனவும் அங்கு கல்வி கற்பிக்கும் சுன்னிகளாக தம்மை அடையாளப்படுத்துகின்ற உலமாக்கள்,ஆசிரியர்கள் அங்கிருத்து உடனடியாக வெளியேறி ஷீஆக்களுக்கு எதிரான போராட்டத்தில் இணைதல்

 இதைப் பார்க்கின்றபோது அதில் குறிப்பிடப்பட்டுள்ள பத்துப் பிரகடனங்களும் சிறுபிள்ளைத்தனமானவை. இலங்கையின் அரசியல் அமைப்பு யாருக்கும் விருப்பமான மதத்தைக் கொள்கையைப் பின்பற்ற அதைப் போதிக்க உரித்துடையவர்களாகவே இலங்கைப் பிரஜைகளுக்குச் சுதந்திரமளித்துள்ளது. அல்லாஹ் அல்லாத கடவுளர்களை வணங்கும் மக்கள் தொகை அதிகம் இருக்கும் இந்நாட்டில் எந்தவொரு கொள்கையையும் யார்மீதும் திணிக்க அதிகாரம் இருக்கின்றதா என்பது கேள்விக்குரியது. அது சரியான கொள்கையா பிழையான கொள்கையா என்பதெல்லாம் அடுத்த பட்சம்தான். ஒருவரின் கொள்கைமீது அத்துமீறிச் தினிப்பைச் செய்கின்ற அதிகாரத்தை கல்குடா ஜம்இய்யதுல் உலமாவுக்கு யார் கொடுத்தது? இஸ்லாம் போதிக்கும் சகிப்புத் தன்மை என்பது எங்கே போனது? சவுதி எப்படி 'சலபி' சிந்தனை நாடோ அது போல ஈரான் ஷீஆ சிந்தனை நாடு இந்த நாட்டில் பெரும்பான்மை முஸ்லிம்கள் 'கலப்' சிந்தனையுள்ளவர்கள் இதில் என்ன இருக்கின்றது?

அல்குர்ஆன் தெளிவாக எதிரிகளாகப் பிரகடணப்படுத்திய யூதர்களுக்கு எதிராக ஒரு அறிக்கை விடாத உலமா சபை ஏன் அவசர அவசரமாக இப்படியொரு பிரகடனத்தைச் செய்ய வேண்டும்.
இஸ்லாத்திலிருந்து வெகுதூரத்திற்குச் சென்றுவிட்ட போராக்கள் விடயத்தில் காக்கப்படும் மௌனம் எதைச் சொல்கின்றது?

மொத்தத்தில் அனுராதபுர மாநாடு உட்பட பரவாலாக மேற்கொள்ளப்படும் இப்பிரச்சார நடவடிக்கையின்  அனுசரனையாளர்கள் பற்றி ஜம்இய்யதுல் உலமா வெளிப்படுத்துமா?

ஜம்இய்யதுல் உலமா இந்நாட்டின் சகவாழ்வுக்கு விடுக்கும் அச்சுருத்தலாக இதை எதிர்காலம் பதிவு செய்து அபாயகரமான செய்தியைக் கொடுத்துவிடுவதுடன்; உமர் அலியின் ஏத்தாலை போன்று இலங்கையில் விரைவில் ஒரு ஷீயாக் கிராமத்தின் உதயத்திற்கு மணியடித்திருக்கின்றார்கள்.

கல்லை வணங்குபவனின் சுதந்திரத்தைக் கூட பறிப்பதற்கு இஸ்லாம் ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கவில்லை அப்படியிருக்கும் போது இந்தப் போர்ப்பிரகடனம் இஸ்லாத்தின் பார்வையில் எத்தகையது அதுவும் இலங்கை போன்ற சிறுபான்மைச் சூழலில் விளக்கம் தருமா உலமா சபை.

இந்தக் கேள்விகள் கருத்துக்கள் அனைத்தையும் அப்படியே தொடர்பின்றி ஒரு முறை வாசித்துப் பார்த்தால் அந்த மாக்களுக்கு ஏதாவது புரியக் கூடும்.

கொள்கைகளும கோட்பாடுகளும் சிந்தனைகளும் செயற்பாடுகளும் இயங்கங்களும் அமைப்புக்களும் குழுக்களும் மனிதர் ஓரணியில் இணைப்பதற்கான மூலோபாயத்தில் இயங்குனவல்ல. மாறாக அவை மனிதர்களைப் பிரித்துக் கூறுபோட்டுவிடுதல் என்ற ஒற்றை அம்சத்தையே அடிப்படையாகக் கொண்டு இயங்கும்.

மிகுதி பகுதி இரண்டில் பாருங்கள்...


1 comment:

 1. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதி ஒருவரை அண்மையில் சந்திக்கக் கிடைத்தது. பல விடயங்கள் சம்பந்தமாக உரையாடினோம்.

  மீராவோடை, ஓட்டாமாவடி பிரதேசங்களில் அண்மைக் காலமாக ஷியா-சுன்னி பிரச்சினை பூதாகாரமாக எழுப்பப்பட்டு வருகிறது, இதனால் முஸ்லிம் சமூகம் பிளவுபடுகிறது; இதற்கு ஏதாவது செய்யக் கூடாதா...? என்று கேட்டேன்.

  அதற்கு அவர் அளித்த பதில்:

  "இப்பகுதியில் இஸ்லாமியப் புரட்சி ஆதரவாளர்கள் பலர் இருந்ததை அறிவேன், அதில் ஒரு ஆறு ஏழு பேர் தாம் ஷியாக்களாக காட்டிக் கொண்டாலும் அதனை வெளியில் சொல்லத் தயங்கினர். இது ஒரு பிரச்சினையாக இருக்கவும் இல்லை. இருபது வருடங்கள் கடந்தும் அந்த ஆறு, ஏழு 12, 14 என்று ஆகவுமில்லை.

  இப்போது சிலர் பணத்தை வாங்கிக் கொண்டு தேவை இல்லாமல், அவர்களுக்கு எதிராக மாநாடுகள் நடத்தப் போய் சும்மா இருந்தவர்களை சீண்டி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

  இப்போது அவர்கள் ஒரு சமூகமாக இறுகிவிட்டார்கள், நாங்கள் ஷியாக்கள் தான் என்று பயமில்லாமல் கூறுகின்றார்கள்.

  பள்ளிக்குள் அனுமதிக்காதீர்கள், மையவாடியில் இடம் கொடுக்காதீர்கள் என்றெல்லாம் தீர்மானம் நிறைவேற்றப் போய், அவர்கள் இப்போது தமக்கென பள்ளிவாசல் வேண்டும், மையவாடி வேண்டும் என்றெல்லாம் கேட்கத் துவங்கி விட்டார்கள்.

  இந்த நாட்டில் தாம் விரும்பிய மார்க்கத்தைப் பின்பற்றலாம் என்று அரசியல் யாப்பில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்க, அதில் தலையிடுவது அடிப்படை மனித உரிமை மீறல் என்பது எங்கட ஆக்களுக்கு தெரியாமல் இருக்கிறது; இந்த அடிப்படையில் அவர்கள் கோர்ட்டுக்குப் போனால், அவர்களுக்கு சார்பாக அமையும் என்பது நம்மட ஆக்களுக்கு புரியுதில்ல" என்றார்.

  இது சம்பந்தமாக தான் ஜமிய்யதுல் உலமா தலைவருடனும் உரையாடியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  ReplyDelete