Saturday, March 5, 2016

நேர் மறை 15 கேள்விகளுக்கு மேமன்கவி பதில்கள்

1.உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
    இத்தனை காலமும் வாழ்ந்தும் எதையும் சாதிக்காத மனிதன்.

2.நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
    பலருடன். அப்பட்டியல் காலத்திற்குக் காலம் மாறுகிறது.  தனிப்பட்ட முறையிலல்ல.       கருத்துகளால் பலருடன் முரண்பட்டும் முரண்பட்டுக் கொண்டுமிருக்கிறேன்.

3.இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
   வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டது என பல இலக்கியவாதிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வாசிப்புப் பழக்கம் குறையவில்லை. வாசிக்கும் முறைமை மாறிவிட்டது. இந்த முரண்பாடு எனக்கு ரசிக்கதக்கதாக இருக்கிறது.

4.உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார் யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
   பலர் பல விதமாக எழுதி இருக்கிறார்கள். அது நீண்ட பட்டியல். என்னைப் பற்றி எழுதப்பட்டவைகளை விட, , என் படைப்புகளைப் பற்றி எழுதப்பட்டவைதான். எனக்குப் பிடித்தவை. எழுத்துக்களைப் பற்றி நான் கொண்டிருக்கும் கருத்து நிலையிலிருந்து அவை மாறுப்பட்டவையாக இருப்பினும் கூட.

5.நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
  பலரைப் பற்றி எழுதி இருக்கிறேன்.  அவை தனிமனித புகழ் பாடும் எழுத்துக்களல்ல. அவர்களின் எழுத்துக்கள் மீதான விமர்சனப் பார்வையினைக் கொண்டவை. அவர்கள்; எனது நண்பர்களாயினும் கூட.

6.யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
   மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, என் தமிழ் ஆசான் எம். அஸ்ரப்கான். அமரர் கவிஞர் ஈழவாணன்.

7.இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
  எழுதப்படும் அச்சடிக்கப்படும்  எல்லாமே புத்தகங்கள் அல்ல. ஒரு புத்தகத்தில் பேசப்படும் விடயத்தைப் பற்றிச்  சிறிதளவேனும் புரிதலற்ற படைப்புகளின் முதல் பக்கம் வாசித்ததுமே அப்படித் தோன்றுவதுண்டு.

8.இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
சிலதைப் படிக்கும் போது என்னை அறியாமலே பொறாமை உணர்ச்சி எனக்குள் எழுகிறது. இந்த மாதிரி நம்மால் எழுத முடியவில்லையே என்ற ஆதங்கம் ஏற்படுவதுண்டு. அத்தகைய புத்தகங்களை வாசிக்கும் பொழுதெலாம் இது அல்லவா புத்தகம் என்ற உணர்வு ஏற்படுவதுண்டு.. அப்புத்தகம் கொண்டிருக்கும் கருத்தியலில் முற்றும் முழுதுமாக எனக்கு உடன்பாடு இல்லாதப் பொழுதும்.

9.உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
   மல்லிகை

10.உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
   எல்லோருடையப் படைப்புகளும் விலை மதிக்க முடியாதவை. அவற்றுக்கு விலை நிர்ணயிக்க முடியாது. ஆனால் தரம் நிர்ணயிக்கப்படலாம். அப்படைப்பை வாசிக்கும் வாசக நிலையின் கருத்தியலுக்கேற்ப.

11.இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
   மேலைத்தேயக் கருத்தியலை உள்நிலையாக் கொண்ட தேர்வு முறைமையால் உலக தளத்தில் (கவனிக்க தரத்தில் அல்ல) பல்வேறு அறிவுத்துறைச் சார்ந்த ஆளுமைகளுக்கு  விருது வழங்கும் திட்டம்.

12.உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
  தமிழ், மேமன், உருது, ஆங்கிலம,; சிங்களம், குஜராத்தி,  இவற்றில் எல்லாம்  எனக்கு பாண்டித்தியம் அல்ல. பரிச்சயம் உண்டு

13.முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்து கிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
  அவை தவிர்க்க முடியாதவை. அவற்றின் தரம், தரமின்மையை காலம் நிர்ணயிக்கும்.

14.உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
    வாப்பா(மர்ஹூம்), உம்மா, மனைவி, இரு பெண் பிள்ளைகள், மூன்று பேரன்கள், ஒரு பேத்தி, இருமருமகன்கள்,  இன்னுப் பலர்.

15.எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
    என் முகத்தில்தான் . நான் தவறு செய்யும் பொழுது.

No comments:

Post a Comment