Sunday, May 31, 2015

ஸர்மிளா ஸெய்யித் புரட்ட நினைக்கும் மலை - 02

-முஸ்டீன்-

என்னைப் பொறுத்தவரைக்கும் மனதிற் பட்டதை அப்படியே வெளிப்படுத்திக் கொண்டு சென்று கொண்டே இருப்பேன். முதலாவது பகுதி பதிவேற்றப்பட்ட பின்னர் வந்து குவிந்த உள்பெட்டித் தகவல்கள் மற்றும் மின்னஞ்சல்களையும் கவனமாகப் படிக்கின்றேன். அவரவரது தராதரத்திற்கு ஏற்ற வார்த்தைப்பிரயோகங்களோடு வந்திருந்த அனைத்தையும் படித்தேன் கேள்விகள் அனைத்திற்கும் தெரிந்தளவு இறுதியில் பதிலளிப்பேன்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரோடு சம்பந்தப்படுத்தி தேர்தல் ஒன்றினை இலக்கு வைத்து அச்சிடப்பட்ட பெருந்தொகை துண்டுப் பிரசுரங்களைக் கைப்பற்றிய போதுதான் சர்மிளா என்ற பெண்ணின் பெயரே எனக்குத் தெரிய வந்தது. அதன் பின்னர்தான் அவர் யார் என்ற தேடுதலைத் செய்யவேண்டியேற்பட்டது. பின்னர் ஒரு கட்டத்தோடு அதை நிறுத்திக் கொண்டேன். ஒருவரின் தனிப்பட்ட வாழ்வு மற்றும் தெரிவுகள் என்பன அவரவர் சுதந்திரத்தின்பாற்பட்டது. பிறரின் குறைகளை துருவித் துருவி ஆராய எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. எனது சமயம் அப்படித்தான் எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றது. குறித்தவிடயத்தைக் குறித்த அரசியல்வாதியின் கவனத்திற்குச் சாடைமாடையாகக் கொண்டுவந்ததோடு அதை விட்டுவிட்டேன். ஒரு ஆணைப் பழிவாங்க அவனை ஒரு பெண்ணுடன் சம்பந்தப்படுத்தியும் ஒரு பெண்ணைப் பழிவாங்க நினைத்தால் அவள் நடத்தை கெட்டவள் என்றும் முத்திரைகுத்தி ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிட்டாலே போதும் அதை அப்படியே நம்புவதற்கு ஆயிரத்தெட்டு முட்டாள்கள் இந்தச் சமூகத்தில் இருக்கின்றார்கள். அதை அப்படியே  திட்டவட்டமான ஆய்வு முடிவாகப் பரப்புரை செய்ய பல புத்திஜீவிகள் இருக்கின்றார்கள். அநாமோதயத் துண்டுப் பிரசுரம் அடிப்பவனுக்கும் அச்சந்தர்ப்பத்தில் இஸ்லாம் ஞாபகம் வருவதில்லை, படித்துவிட்டுக் கதைபரப்புவனுக்கும் ஞாபகம் வருவதில்லை. 

எனது பார்வையில் சர்மிளா என்பவள் எல்லாப் பெண்களையும் போல சாதாரணமானவள் கிடையாது. அவளுக்குள் ஒரு தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அந்தத் தீயை அவளுக்குள் மூட்டியது யாரென்பது தெரியாது. ஆனால் அதை அனைந்துவிடாமல் உக்கிரம் பெறச் செய்தது கொண்டிருப்பது இந்தச் சமுதாயம்தான் என்பதும் அவள் பெற்ற அனுபவங்களும் படிப்பினைகளும் அதற்குத் துணை செய்து கொண்டிருக்கின்றன என்பதும் தெளிவு. அத்தீயில் நியாயமும் இருந்தது, கோபமும் இருந்தது, புரட்சியும் இருந்தது, சில புரிதல் கோளாறுகளும் இருக்கவே செய்தன. 


  • அவளுக்குள் உறைந்து கிடக்கும் நியாயங்களை அங்கீகரிக்க வேண்டியிருக்கின்றது.
  • அவளுக்குள் பொங்கிக் கொண்டிருக்கும் கோபத்தைத் தனிக்க வேண்டியிருக்கின்றது.
  • அவளது புரட்சி நியாயமானதாயின் அதற்குத் துணை செய்ய வேண்டியிருக்கின்றது,
  • அவளது புரிதல் கோளாறுகளை நிதானமாகச் செம்மைப்படுத்த வேண்டியிருக்கின்றது.

இதையெல்லாம் விட்டுவிட்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று  சர்மிளா விடயத்தில் எதையும் செய்ய முடியாது. இது வரைக்குமான அனைத்து நகர்வுகளும் இப்படித்தான் உணர்வு மேலீட்டால் போதிய தயார்படுத்தல் இன்றியும் புத்திக்கு ஓய்வு கொடுத்தும் உணச்சிவசப்படுதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் நகர்த்தப்பட்டிருக்கின்றன என்பதை நியாயமான முறையில் பக்கச் சார்பின்றி உற்று நோக்கும் யாவரும் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

சர்மிளாவின் முகநூல் பதிவுகள், நேர்காணல்கள், கவிதைகள், நாவல் மற்றும் அவள் குறித்த இன்னபிற எழுத்துக்கள் அனைத்தையும் கருத்திற் கொண்டே இக்கட்டுரை வரையப்படுகின்றது. சர்மிளாவின் எழுத்துக்களில் இருந்தே நான் எனக்கு தேவையான பல எடுகோள்களை எடுத்துக் கொள்கின்றேன். சாதாரணமான மற்றும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களால் பதியப்பட்ட பின்னூட்டங்களையும் கவனத்திற் கொண்டுதான் கவனமாக எழுத வேண்டியிருக்கின்றது. ஏனெனில் யாருக்கும் பரிவட்டம் பிடிக்கவோ யாரையும் காலில் போட்டு மிதிக்கவோ எந்தத் தேவையும் எனக்கில்லை. எனக்கு நியாயம் என்று தோன்றிய கருத்துக்களை நான் வெளிப்படுத்துவதை யாராலும் தடுத்துவிட முடியாது. 

சாதாரணமாக எல்லாப் பெண்களையும் போல சர்மிளா இல்லை என்பதால்தான் தனது செயற்பாட்டுத் தளத்தைத் திருமணவாழ்க்கை எவ்விதத்திலும் பாதித்துவிடாமல் இருக்க அவள் போராடியிருப்பதாகவே தெரிகின்றது.  சொந்த வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் அனுபவங்கள் ஆகியவற்றின் வீச்சு எழுத்துக்களில் பிரதிபலிப்பதை மிக எளிதாகவே அவதானிக்க முடியும். அது நல்ல அறிகுறிதான் ஆயினும் புரிதல்தான் சங்கடங்களைத் தோற்றுவித்து எதிர்ப்பாளர்களையும் சம்பாதித்துக் கொடுக்கின்றது.  

இந்தச் சமுதாயத்தில் உள்ள சிலரின் கடுமையான எதிர்ப்புகள் இன்னுமின்னும் பல கவிதைகளை எழுதும் வாய்ப்பினைத்தான் சர்மிளாவுக்கு அளித்துள்ளன. மொத்தத்தில் கண்மூடித்தனமான எதிர்ப்பு அவளை இன்னும் வேகமாக இயங்கச் செய்ததுவேயன்றி சோர்வடையச் செய்யவில்லை.

இந்த எதிர்ப்புகள் தோற்றம் பெறப் பிரதான காரணம் எது?
பி.பி.சி க்கு அளித்த பேட்டிஎங்கே முரண்பாட்டினை விதைக்கின்து?

தொடரும்...

No comments:

Post a Comment