Saturday, May 30, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 07 .............ஊடறு + மலையகப் பெண்கள்


அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-


எப்படியும் அவர்கள் வந்திருப்பார்கள். அவர்கள் வராமல் இந்த நாட்டில் ஒரு நிகழ்வு நடந்துவிடுமா என்ன! அவர்களை அடையாளப்படுத்திக் கொள்வது இங்கு அவ்வளவு கஷ்டமாக இருக்காது. பார்வையால் அலசிக் கொண்டிருக்கும் போதே கண்ணில் பட்ட ஒருவர் சந்தேகத்தையும் சேர்த்தே விதைத்தார். நிச்சயமாக அவர் அவர்களில் ஒருவாராகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே குட்டியனை பாரதித் தம்பியிடம் கொடுத்துவிட்டு அவரை நெருங்கினேன். ஏற்கனவே அவர் எனது கையில் இருந்த புத்தகத்தை வேறு யாரிடமாவது அவதானித்து இருக்க வேண்டும். உடனே உடைந்த தமிழில் இது என்ன புத்தகம் என்று கேட்டார். 


நான் சிங்களத்திலேயே அவருக்கு இது 2012ஆம் ஆண்டு கிழக்குமாகாணசபை சாஹித்திய பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதி என்றேன். எனக்கும் வாசிக்க நல்ல ஆசை நான் தமிழ் படிப்பேன் என்று அட்டையில் இருந்த ஹராங்குட்டி என்ற பெயரை மிகவும் சிரமப்பட்டு எழுத்துக்கூட்டி பிழையாகவே வாசித்தார். அத்தோடு அவர் மொழி பெயர்ப்புக்களைச் செய்யும் நபராகவும் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார். நானும் அதை நம்பியது போலப் பேசிக் கொண்டிருந்தேன். அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதி தனக்கு அவசியம் வேண்டும் என்றும் ஒரு பிரதியைத் தனக்கு அவசியம் தர வேண்டும் என்றும் கேட்டார். அப்படி அவரைக் கேட்கத் தூண்டியது ஒரு தலையைக் குறி வைக்கும் துப்பாக்கியை கொண்ட அட்டைப்படம்தான் என்பதைப் புரிந்து கொள்ள எனக்குக் கஷ்டமாக இருக்கவில்லை. மேலதிகமாக அவரும் குழம்பி பிழையான செய்தியைக் கொடுத்து மேலிடத்தையும் குழப்பிவிடக் கூடாது என்றுதான் அரச சாகித்திய விருது பெற்றது என்று ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன். அது அவரைத் திருப்திப்டுத்தியிருக்கவும் கூடும். கடைசி வரையும் அவர் எந்தப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பிடாவிட்டாலும் தேசியப் புலனாய்வுப் பிரிவின் அங்கத்தவர் என்பதை பிரிதோர் வகையில் நான் அறிந்து கொண்டேன். 

பாதுகாப்புக்காகப் பொலிசார் கோரப்படுமிடத்து அவர்கள் அன்மையில் இருக்கும் பொலிஸ் நிலையத்திலிருந்து கடமைக்குப் வருவார்கள். அதுவும் சும்மா ஆயுதம் ஏதுமின்றி காக்கிச் சீறுடையில் அவர்களை அலட்டிக் கொள்ளவே தேவையில்லை. புள்ளப்பூச்சிக்குச் சமானம் அவர்கள் ஆனால் சிவில் உடையில் வருவார்களே அவர்கள்தான் சிலவிடயங்களைத் தீர்மானிக்கும் சக்திகளாக இயங்குபவர்கள். இப்படியான நிகழ்வுகள் குறிப்பாக தமிழர்கள் ஒன்று சேரும் நிகழ்வுகள் அதிலும் விஷேஷமாக வெளிநாட்டிலிருந்து வருகைதரும் தமிழர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் அதிலும் அதிவிஷேஷமாக தமிழ் நாட்டிலிருந்து தமிழ்த் தேசியவாதிகள் யாரேனும் பங்கு கொள்ளும் நிகழ்வுகள் இந்நாட்டில் யுத்தம் முடிந்த பின்னரும் மிக நுணுக்கமாகக் கண்கானிக்கப்படும் சூழ்நிலை இருப்பது புலனாய்வுப் பிரிவைப் பொறுத்தவரைக்கும் முன்னனெச்சரிக்கையான விடயமாகக் கருதப்பட்டாலும் சுதந்திரத்தில் தலையீடு செய்வதைத் தவிர்க்க ஏது வழி என்று ஒரு நியாயமான ஜீவன் சிந்திப்பதில் தப்பில்லை என்று நினைக்கின்றேன். 

சில வேளை மொழித் தேர்ச்சியின்மை காரணமாக தகவல்களைப் பிழையாக விளங்கி தவறான புரிதலோடு செய்தியை புலனாய்வுப் பிரிவிற்குக் கொடுத்துவிட்டால் வேண்டாத இன்னல்களை பங்கேற்பாளர்கள் எதிர்கொள்ள நேரிடும் அவலம் ஏற்படும். நல்ல வேளை அதிர்ஷ்டவசமாக அப்படியான எதிர்மறை விளைவுகள் இறுதி வரை நடக்கவில்லை.வந்திருந்த புலனாய்வுக் காரர் இது இந்நாட்டின் இறைமைக்குப் பாதகம்இல்லாதது என்று நற்சான்றிதழ் கொடுத்திருப்பார் போலும். ஆயினும் அவர் கொண்டு சென்ற எனது சிறுகதை; தொகுதி புலனாய்வுக் காரர்களைப் பற்றிய புதிய செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும்... அவர் மீண்டும் என்னைத் தேடி நிச்சயம் வருவார் அல்லது அவர் சார்ந்த எவரேனும்...

வந்திருந்தவர்கள் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீது பரிவு கொண்டவர்கள், இறுதி யுத்தத்தையும் அதன் போதான மனித அழிவையும் விமர்சித்தவர்கள் என்பதால் எனக்குள் சின்னதாய் ஒரு லைக் ஓடிக் கொண்டே இருந்தது. அதற்குக் காரணம் இந்நிகழ்வு முடிந்த பின்னர் யாழ்ப்பாணம் உட்பட்ட யுத்தப் பிரதேசங்களுக்கு ஒரு வெளிநாட்டு விருந்தினர்கள் ஒரு விசிட் செல்ல இருப்பது பற்றி அறியக் கிடைத்ததுதான். எனக்குத் தெரிந்த எல்லைகளுக்குள் இந்த நிகழ்வு பெண்களை வலுவூட்டுவதற்கும் பெண்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதுமான நோக்கங்களைக் கொண்டது. என்பதைத் தெளிபடுத்தும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தேன். எத்தனை வகையான பிரச்சினைகளை எதிர் கொண்டு மீண்டுவிட்டோம் என்கிற மனவுறுதியில் இதில் எப்படியான பார்வைகள் ஊடறுக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துக் கொள்வதொன்றும் கஷ்டமாக இருக்கவில்லை. 

அந்த இக்கட்டான சூழ் நிலைக்குள் லறீனா அப்துல் ஹக் அவர்களின் மகன் றாஷித் என்னிடம் அங்கிள் வாங்களே கடைக்குப் பெயிட்டு வருவோம் என்றான். அவன் சரியான புத்திசாலி அவனுக்குப் பல்வேறு காரணங்களைச் சொல்லி சில கேள்விகளையும் கேட்க அனைத்துக்கும் பதில் அளித்துவிட்டு 'வாங்களே போவம்' என்றான். இப்போது வேண்டாம் என்று அவனைச் சமாளிக்க போதுமாகிவிட்டது. என்றாலும்  சிறிது நேரத்தின் பின் அந்நிகழ்வைப் பற்றி யோசிக்கும் போது குழந்தையுள்ளம் அப்படித்தான் இருக்கும் அவனுடன் போய் வந்திருக்கலாம் என்று தோன்றியது. என்ன ஒரு பள்ளம் இறங்கி மீண்டும் அதே மேட்டைக் கடக்க வேண்டும். பதினான்கு கிலோ கிராமுடைய குட்டியனையும் தூக்கிக் கொண்டு. இறங்கிவிடலாம்தான் ஆனால் மீண்டும் ஏற வேண்டுமே. 

லறீனாவைப் சிஸ்டர் எப்படித்தான் இவனைச் சமாளிக்கின்றாவோ என்றுதான் எண்ணத் தோன்றியது. கல்வித்துறையில் மிக முக்கியமான இடத்திற்கு எப்போதோ வந்திருக்க வேண்டிய தரமான மிகப் பொருத்தமான நபர்தான் லறீனா. ஆயினும் என்ன செய்வது சிலரின் நேர்மையற்ற செயற்பாடுகள் அவவை நீண்ட அலைச்சலுக்கும் உளைச்சலுக்கும் ஆளாக்கியது எனக்கும் புரியும். அந்தத் தகவல்களை ஒரு மூன்றாம் நபர் அறிவிக்கும் போது நமக்கள்ளும் வேதனை குடிகொள்ளும். பேராசியர் மௌன குரு ஒரு முறை மனம்விட்டுக் கேட்டே விட்டார் 'இந்தப் புள்ளயின்ற ஆளுமைய இன்னும் பயன்படுத்தாம ஏன் மிஸ் பன்றீங்க' என்று. ஆனாலும் சிலருக்கு அந்த நியாயம் உறைக்கக் காலம் வேண்டும். அது வரைக்கும் சந்தர்ப்பமும் காத்திருக்க வேண்டும். இத்தனைக்கும் அனைத்தையும் தாண்டி அவவின் முயற்சியும் நம்பிக்கையும் இன்னும்வீண்போகாகமல் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. ஊடறு சரியான நபர்களைத்தான் இனங்கண்டு கொண்டிருக்கின்றது என்பதை இந்த இடத்தில் பெருமையோடு ஏற்றுக் கொண்டுதானாக வேண்டும். 

உள்ளே ஓவியா பேசிக் கொண்டிருக்கும் போது லறீனாவின் சுட்டி மகள் கேட்ட கேள்வி 'இவங்க ஏன் தமிழையும்இங்கிலீசையும் கலந்து கலந்து மிக்ஸ் பண்ணிப் பேசுறாங்க?' என்பதுதான். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப்பார்த்துவிட்டு தனது தாயிடம் கேட்ட அதே கேள்வியை ஏற்கனவே முகநூலில் சகோதரி பதிவிட்டிருந்தார். இந்தக் கேள்விக்கு தமிழ் நாட்டுத் தமிழர்கள்தான் பதில் தரவேண்டும். நர்மதா எனக்கு இக்கேள்விக்கு அளித்த விளக்கம் என்னளவில் ஓரளவு திருப்திதான் ஆனால் அதுபோதவில்லை. அழகு தமிழில் இந்தியந் தொலைக்காட்சிகளில் சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பார்ப்பது குதிரைக் கொம்பு போலத்தான். பல்வேறு மொழிகளுக்குள் ஆங்கிலம் பொதுவாகப் பேசு மொழியாவது தவிர்க்கவொனாதது என்ற அடிப்படைக்குள் இந்தியர்கள் மூழ்கி நீண்ட நாட்கள் என்பதை பலரும் புரிந்து கொள்வார்கள். ஆனால் அதன் தாக்கம் தனித்தமிழ் மொழிமூலமான இந்த நிகழ்விலும் மிகச் சாதாரனமாகப் பிரதிபலிக்கத்தான் செய்கின்றது. 

நதாவோடு பேசிக் கொண்டிருக்கும் போதுதான் அந்தக் கொய்யாப்பழம் எனது கண்ணில் பட்டது.
தொடரும்...

No comments:

Post a Comment