Tuesday, May 26, 2015

ஸர்மிளா ஸெய்யித் புரட்ட நினைக்கும் மலை - 01

-முஸ்டீன் -
பகுதி 01


வரலாறு நெடுகிலும் சிந்தனைச் சிக்கல்களும் குழப்பங்களும் மிகத்தாரளமாகவே ஏற்பட்டு வந்திருக்கின்றன. அதன் பொருட்டு எதிர்ப்பும் வெறுப்பும் குரோதமும் உச்சகட்டமாகக் கொலையும் கூட நடந்திருப்பதை வரலாற்றின் பல்வேறு காலகட்ட நிலைகளில் நாம் கண்டு கொள்ள முடியும். இந்த எதிர்ப்புகளால் நிலைகுழைந்து சிதைந்து போனவர்களும் அந்த எதிப்புகளுக்கு எதிராகப் போராடி தம்மைத் தக்க வைத்துக் கொண்டவர்களும் எதிர்க்க முடியாமல்  தம்மை எதிர்ப்பவர்களின் எதிரிகளின்தான் பாதுகாப்பும் பற்றும் என எதிரியின் எதிரி நண்பன் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அவர்களின் நிழலில் சரணாகி அடைந்தவர்களும் என்று இப்பட்டியல் நீளும்.

பொதுவாக ஒரு கருத்தைப் புரிந்து கொள்ளல் அல்லது புரிந்து கொள்ளாமை என்பதில்தான் முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன. தஸ்லிமாவின் இஸ்லாமிய விரோதக் போக்கினை என்னால் அங்கீகரிக்க முடியாது  ஆனாலும் இதற்கு அப்பால் சில விடயங்களுக்காக தஸ்லீமா நஸ்ரினுக்கு நான் ஆதரவு தெரிவிக்கின்றேன். அவள் புரட்சிகரமான பெண் என்பதற்ககாக மட்டுமல்ல அவள் ஒரு சமுகப் போராளி. அதற்காக அது அவளின் எல்லாவித சில்லறைத்தனமான செயந்பாடுகளையும் ஆரதரிப்பதாகவோ, அல்லது ஏற்றுக் கொள்வதாகவோ ஆகாது.அவளின் போராட்டத்தின் மூலகாரணி எப்படியெல்லாம் மாறிமாறித் தோற்றம் பெற்றது என்பதிலும்தான் நான் கவனம் செலுத்துகின்றேன்.

காரணம் உலகில் விபச்சாரத்தை வெற்றிகரமான நிறுவன மயப்பபட்ட லாபம் தரும் தொழிலாகச் செய்துகொண்டிருப்பதில் முன்னணியில் இருப்பவர்கள் பBங்காளிகள்தான். அரபு நாடுகள் இதற்கு மிகத் தெளிவான சான்றுகளை நமக்கு முன்னால் பரப்பி வைத்திருக்கின்றன. தஸ்லீமா என்ற பெண்ணின் முதல் எதிர்ப்பு இங்கிருந்துதான் தோற்றம் பெற்றது. வேறு பெண்களை வைத்து விபச்சாரம் செய்யும் ஆண் தனது மனைவி தனக்கு மட்டுமே உண்மையாக இருக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக நிற்கிறானே என்பதில் தான் அவளது ஆத்திரம் எல்லையற்றுப் பாய்ந்தது. தனது எதிர்ப்பை கணவனில் இருந்து தொடங்குகின்றாள். அவள் எதிர்ப்பதற்கு தேர்வு செய்த வழிமுறையில் ஒரு முஸ்லிமாக பிழைவிட்டிருந்தாலும் அவளது ஆத்திரமும் கோபமும் எதிர்ப்பும் நியாயமானவை. தீமையைத் தீமையால் அகற்ற முடியாது என்பது இஸ்லாத்தின் நோக்கு. அவளுக்கு எதிராகப் பாய்ந்த மக்கள் கூட்டம் இஸ்லாத்தைத் தமக்குப் பாதுகாப்பான கவசமாக போர்த்திக் கொண்டார்கள். ஆயினும் இஸ்லாத்தைக் கவசமாகப் போர்த்திக் கொண்ட எதிர்ப்பாளர்கள்  இஸ்லாம் நெருங்கவே வேண்டாம் என்று எச்சரித்த விபச்சாரத்தையும் அதற்கு பக்கபலமாக நிற்பவர்களையும் வசதியாக மறந்து போனார்கள். 

பத்வா கொடுப்பதிலும் பத்வா கொடுத்தே பிரச்சினைகளைப் பெரிது படுத்திவிடுவதிலும் உலகெங்கும் முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபோலவே இருப்பதாக நான் உணர்கின்றேன். (அப்துல் ரவுப் என்று ஒருவர் எல்லாமே அல்லாஹ்தான் என்ற கொள்கையைப் பேசி வந்த காலத்தில் அவருக்கெதிராக முர்த்தத் என்றும் காபிர் என்றும் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிவட்டான் என்றும் பத்வா கொடுத்தே அவரைப் பெரிய ஆளாக மாற்றியது ஜம்இய்யதுல் உலமா சபைதான். இன்று அப்துர் ரவுப் என்ற பெருவிருட்சத்தை பத்வா கொடுத்தவர்களால் நெருங்க முடியுமா? ) தஸ்லீமாவையும் அப்படித்தான் பத்வா கொடுத்து பெரியாளாக்கிவிட்டார்கள். ஆயினும் அவள் தனது எதிர்ப்பில் மிக உறுதியாக நின்றாள். இன்றுகூட அதில் அசைக்கமுடியாத வீரியத்துடன் நிற்கின்றாள். 

தனக்கு ஆதரவுக்கு ஒரு குரலுமே இல்லையென்ற போது அவள் தஞ்சமடைந்த முகாம் இஸ்லாத்தின் எதிரிகளினுடையது அவர்களும் அவளைப் பலம்பெற வைத்தார்கள் தமது எதிர்ப்பின் மிகப்பெரும்  முதலீடாக அவளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆயினும் தஸ்லீமா பலவிடயங்களில் இன்றும் உறுதியாக நிற்கின்றாள். சிலவிடயங்களில் அவள் சோரம் போகவே இல்லை. அவளது போராட்டத்தின் நியாயமும் புரிந்து கொள்ளப்படவே இல்லை. 

எதிர்ப்புகள் கூடக் கூட அவளது கோபம் எல்லை கடந்தது. அவளைக் கட்டுப்படுத்த பத்வாக்களால் முடியவில்லை. அதுபோலவே அவளது கருத்துக்களும்  தவறாகவே வியாக்கியானம் செய்யப்பட்டது. உதாரணமாக அல்குர்ஆன் பெண்களுக்கு வறையரை செய்யும் விடயங்களில் புதிய பார்வைகள் தேவை. பழைய பார்வைகள் திருத்தப்பட வேண்டும் பெண் குறித்த அல்குர்ஆனின் கருத்துக்களுக்கு புதிய விரிந்த மாற்றுக் கோணத்தில் விரிவுரைகள் இப்போது அவசியம் என்ற விடயம் கூட குர்ஆனைத் திருத்த வேண்டும் தஸ்லிமா சொல்கின்றார் என்று பரப்புரை செய்யப்பட்டது. 

தஸ்லிமாவை இஸ்லாத்துக்கு விரோதமாகச் செயற்பட வைத்ததே முஸ்லிம் சமுகம்தான். இன்று தான் ஒரு முஸ்லிம் அல்ல என்றும் நாஸ்திக வாதி என்றும் சொல்லுமளவுக்கு நிலமைகளைச் சிக்கலாக்கியது மார்க்க அறிஞர்கள் என்று சொல்லிக்  கொள்ளும் சில முட்டாள்கள்தான். தஸ்லிமாவின் உள்ளத்தை அறிந்தவர்கள் யாரும் கிடையாது. அந்த உள்ளத்தில் மறந்து கிடப்பவற்றையும்  அதன் சரியான நிலைப்பாட்டையும் நனற்றாக அறிந்தவன் ஒருவனே. அவன்தான் தஸ்லிமா  மறுதலிக்கும்  ஏக இறைவனான அல்லாஹ். இந்தக் குறிப்போடு சர்மிளா செய்யதின் விடயத்திற்கு வருவோம். 

தஸ்லிமாவையும் சர்மிலாவையும் ஒப்பிட முடியாது. அப்படி ஒப்பிட்டு வரும் அனைத்து எழுத்துக்களையும் நான் மறுதலிக்கின்றேன். காரணம் இருவருக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கின்றது, ஆனால் பிரச்சனைகள் அவர்களை நோக்கி திருப்பப் பட்ட விதத்தில் ஒற்றுமை இருக்கின்றது. அதுபோலவே அவர்கள் எதிர் கொண்ட விதமும். 
தஸ்லிமா புரட்ட நினைத்த மலையை அவளால் புரட்ட முடியாது போயிற்று. அது போல சர்மிளா புரட்ட நினைக்கும் மலை??

தொடரும் ...

2 comments:

  1. எழுத்தாளர் என்டால் எதுவானாலும் எழத முடியுமோ? இவர்கள் இருவறும் இறுதி வரை தங்களது உயிருக்கு அஞ்சி, முஸ்லிம்களை விட்டும் தூரமாக வாழ வேண்டும். அது இந்த உலகத்தில் அவர்கள் மீது அல்லாஹ் தஆலா கொடுத்த பெரிய தண்டனை.

    ReplyDelete
  2. அது உங்கள் பார்வை. எதிர்க் கருத்து வலுவாக மறுக்கும்படி இருந்தால் அதைத் தாரளமாக முன்வையுங்கள்.
    நீங்கள் மனிதனாக மட்டும் நின்று யோசியுங்கள்.
    கடவுளாகமாறி யோசிக்க வேண்டாம்.

    ReplyDelete