அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-
பொதுவாக பெண்ணியம் பேசும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்வதையே நான் விரும்புவேன். காரணம் அங்கு நடக்கும் புளித்துப்போன அக்கப்போர்தான். ஒரே மாவை எத்தனை நாளைக்குத்தான் இடிப்பார்கள். எல்லா நாடுகளிலும் அதே மாவை இடித்து இடித்து உரலும் தேய்ந்து உலக்கையும் தேய்ந்துவிட்டது. ஆனால் பிரச்சினைக்குத் தீர்வுதான் கிட்டவில்லை. ஆணாதிக்கம் என்று இவர்கள் வரையறுக்கும் அனைத்துக்கும் அப்பால் பட்டவன் நான். அதற்குக் காரணம் நான் ஏற்றுக் கொண்டிருக்கும் இஸ்லாத்தின் அடிப்படைகளில் இருந்து என்னை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றமையினால் அப்படியொரு ஆதிக்கம் செலுத்தும் பிற்போக்குத்தனம் என்னிடமில்லை. அதனால் ஆணாதிக்கம் என்ற சொல்லைக் கேட்டாலே எனக்கு அலர்ஜியாகிவிட்டது. அதனால்தான் எனக்குப் பொருந்தாத அந்தச் சொல்லும் அந்தச் சொல் தாங்கி நிற்கும் அர்த்தமும் எனது வீட்டுச் சூழலில் செயலிழந்த மேட்டர்தான். அதற்கு நான் பதிலளிப்பதைவிட எனது மனைவி பதிலளிப்பதுதான் சரியானது.
சிலபேருக்குப் பெண்ணியம் என்றால் என்னவென்றே தெரியாது. பலரின் புரிதல் பெண்ணியம் என்றால் ஆண்களை எதிர்த்துப் பேசுவது அல்லது ஆண்களுக்குத் திட்டுவது என்றுதான் நினைத்துக் கொண்டு எழுதுகின்றார்கள் செயற்படுகின்றார்கள். அவர்களுக்குப் பெண்ணியம் என்ற விடயத்தில் தெளிவை ஏற்படுத்த ஹைலெவல் ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும். பெண்ணியக் கவிஞர் என்று அறியப் பட்டு விருதுகள் பல பெற்ற ஒருத்தி தன் கணவனை வைத்து இன்னொரு எழுத்தாளரின் மனைவியை படக்கையறைக்கு அழைத்த வரலாறெல்லாம் இன்னும் பேசப்படாமல் ஈரம் காயமல் அப்படியே இருக்கின்றது. அந்தளவுதான் இதன் புரிதல். பெருமூச்செரியும் அளவில்தான் பலர் இருக்கின்றார்கள். சிலர் விதிவிலக்கு. அவர்களிடம் நல்ல தெளிவும் தேடலும் மேம்பட்ட சிந்தனையும் ஒழுக்கமும் அமைதியும் ஆளுமையும் அறிவுப்புலமும் இருக்கின்றது. அவர்களின் கோபத்தில் ஒரு நியாயமும் நேர்மையும் இருக்கும். அப்படிப்பட்டவர்களைப் பேச வைத்துக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ம்ஹ் அதெல்லாம் எப்பவாவது நடப்பவை. பூரண சூரிய கிரகணம் போல அல்லது எல்லாக் கோள்களும் ஒரே நேர் கோட்டில் சந்தித்துக் கொள்வது போல.
ஊடறுவும் மலையகப் பெண்களும் இணைந்து ஒரு பெண்ணியச் சந்திப்பைச் செய்கின்றார்கள் அதில் என்னையும் கலந்து கொள்ளும்படி கேட்கின்றார்கள் என்று மனைவி என்னிடம் சொன்ன போது சிரித்துக் கொண்டேன். அவளின் ஆர்வத்திற்கும் விருப்பத்திற்கும் தடைபோடவோ அல்லது ஏதாவது ஒரு நொண்டிச் சாட்டைச் சொல்லிவிட்டு மெதுவாகக் கலன்று கொள்ளவோ நான் விரும்பவில்லை. போய் கொட்டகலயையும் பார்த்துவிட்டு வரலாம் என்றுதான் நினைத்தக் கொண்டேன்.
ஊடறு என்றால் றஞ்சி தான் எப்போதும் ஞாபகத்துக்கு வரும். றஞ்சி எப்படிப்பட்டவர் என்பதைத் தேட வைத்த பெருமை அனாரையே சாரும். தன்னுடைய கவிதையொன்றை யாரோ களவெடுத்து வேறுபெயரில் கொடுத்துவிட்டார்கள் அதை ரஞ்சி ஆய்வு செய்யாமல் அப்பெயரிலேயே நூலாக்கிவிட்டார் அது தகுமா முறையா என்று உலகில் உள்ள எல்லோரையும் அழைத்து றஞ்சிக்கு எதிராக நியாயம் கேட்டு நின்றபோதுதான். என்னடா நடக்கிறது இந்த உலகத்துல? என்று நானும் மெதுவாக மூக்கை நுளைத்துப் பார்த்தேன். ஒரு தவறு நடந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டாலும் அத்தவறுக்காக றஞ்சியையும் ஊடறுவையும் கெட்ட வார்த்தைகளால் திட்டுமளவுக்கு அனார் ஒன்றும் புனிதம் கிடையாது. திருடன்தான் ஒரு களவு குறித்து அதிகம் பதட்டப்படுவான். அந்தப் பதட்டம் அம்மனியிடம் பிரதிபலித்தது. அதனால் இந்த விடயத்தில் தமது விசுவாசத்தைக் காட்ட அனாருக்கு ஆதரவாக பலர் களத்தில் இறங்கினார்கள். அதில் ஒருவர் ஊடறு நாய்கள் என்று அதி உத்தமமாக வாழ்த்தி ஏசியிருந்தார். ஆயினும் இந்தச் சில்லறைப் பசங்களின் குதிப்பை ரஞ்சி கையாண்ட விதம் மிகப் புத்திசாதுர்யமிக்கது. தேர்ட் கிலாஸ் லெவலுக்கு அல்லது சேரிப்புர லெவலுக்கோ ரஞ்சி இறங்கிச் செல்லவில்லை. தன்பக்கத்தில் தவறு நிகழ்ந்திருக்கும் வாய்;ப்பை அழகாக வெளிப்படுத்தியிருந்தார். அந்த நேர்மை அவர்பால் மதிப்பை உண்டுபண்ணியதில் ஆச்சரியமில்லை. றஞ்சியை என்றுமே நான் சந்தித்தது கிடையாது. ஆனால் துடிப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நபர் என்பதும் எதையும் எதிர்கொள்ளும் துணிவுள்ள ஆள் என்பதும் எழுத்துக்கள் ஊடாக நான் புரிந்து வைத்திருந்த பிம்பம்.
நிகழ்வு கொட்டகலயில் நடக்கின்றது என்று ஒரு மாதத்திற்கு முதலே ரயிலுக்கு டிக்கட் புக் பண்ணி நாலாந்தம் ஈமெய்ல் பார்த்து பதிலளித்து கடைசியில் அழைப்பிதழின் மாதிரியைக் காட்டினாள் என் மனைவி. அதைப் படித்துப் பார்த்த பின்னர்தான் நிகழ்வில் பார்வையாளனாகக் கலந்துகொள்வதில் சந்தோசம் என்று தோன்றியது. அழைப்பிதழ் ஆண்களுக்கு எதிரானது இல்லை என்பதையும் பெண்கள் தரப்புப் பல்துறைசார் பங்களிப்புக்களையும் பதிவு செய்யக் கூடிய விதத்திலும் பெண்களை ஊக்குவிக்கும் விதத்திலும் அமைந்திருப்பதாகப் பட்டது. நிகழ்ச்சி நிரல் தரமாக அமைந்துவிட்டால் நிகழ்வு பாதிவெற்றியை உடனேயே பெற்றுவிடும். அப்படித்தான் இதுவும். நிறைய ஆளுமைகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. நல்ல தலைப்புக்கள். ஆற்றுநர்கள் தலைப்புக்களைத் தெரிவு செய்தார்களா அல்லது அவர்களுக்குத் தலைப்புக்கள் கொடுக்கப்பட்துவா என்பது தெரியாது. ஆயினும் பெறுமதி மிக்க பல தலைப்புக்களைப் பார்த்தபின்னர் ஏற்கனவே எனக்குள் நான் சிரித்துக்கொண்ட சிரிப்பு அர்த்தமிழந்து போனது. நல்லதொரு ஒழுங்குபடுத்தல் இருந்தது.
நிகழ்ச்சி நிரலில் யாரையும் பாராட்டும் நிகழ்வு பற்றியோ அல்லது பொன்னடை அணிவித்தல், பெண்ணியச் சேவைக்காகக் கௌரவித்தல் என்றோ ஒரு மேட்டர் இல்லாததைப் பார்த்த போதுதான் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. பெரும்பாலான நிகழ்வுகளில் ஆளையாள் மாறிமாறி முதுகு சொறிதல் நடக்கும் அல்லது வித்துவக் காய்ச்சலை நிரூபிப்பதற்காக உப்புச் சப்பில்லாத முகம் சுழிக்கச் செய்யும் கருத்துப் போர் என்ற தொனியில் மற்றவர்களை இழிவுபடுத்தல் நிகழும். அது குழாயடிச் சண்டை போல ச்சும்மா அப்பிடி இருக்கும். நல்லவேளை அப்படியொரு கன்றாவி நிகழ்ச்சி நிரலில் ஓரிடத்திலும் இருக்கவில்லை.
உரைகளைத் தொடர்ந்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலுக்கு வழிகோலும் விதத்தில் பதிவுகள் குறித்த விவாதமும் இணைக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட நிகழ்வுக்காக ஷாமிலாவுடன் துணைக்குச் செல்வதில் எனக்கு பரிபூரண திருப்தியும் சம்மதமும் இருந்தது. அதற்காக அவள் ஒரு மாதத்திற்கு முன்னரே ரயில் டிக்கட் புக் பண்ணியிருந்தாள்... ஆயினும்
தொடரும்...
நல்ல தொடக்கம் சகோதரர். சிக்காமல் பயணம் தொடங்கிவிட்டது. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்..
ReplyDeletethanks yogi
Deleteநல்ல தொடக்கம் சகோதரர். சிக்காமல் பயணம் தொடங்கிவிட்டது. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்..
ReplyDeleteபொதுவாக பெண்ணியம் பேசும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்வதையே நான் விரும்புவேன். காரணம் அங்கு நடக்கும் புளித்துப்போன அக்கப்போர்தான். ஒரே மாவை எத்தனை நாளைக்குத்தான் இடிப்பார்கள். எல்லா நாடுகளிலும் அதே மாவை இடித்து இடித்து உரலும் தேய்ந்து உலக்கையும் தேய்ந்துவிட்டது. ஆனால் பிரச்சினைக்குத் தீர்வுதான் கிட்டவில்லை. ஆணாதிக்கம் என்று இவர்கள் வரையறுக்கும் அனைத்துக்கும் அப்பால் பட்டவன் நான். அதற்குக் காரணம் நான் ஏற்றுக் கொண்டிருக்கும் இஸ்லாத்தின் அடிப்படைகளில் இருந்து என்னை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றமையினால் அப்படியொரு ஆதிக்கம் செலுத்தும் பிற்போக்குத்தனம் என்னிடமில்லை
ReplyDeletethanks
Delete