Friday, May 22, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 04 ...................ஊடறு + மலையகப் பெண்கள்



அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

ஷாமிலாவுக்கு மட்டுமல்ல எமக்கும் சேர்த்துத்தான் டீ வந்திருந்தது. அதைச் சுவைத்துக் கொண்டே சந்திரலேகா-கிங்ஸ்லி யின் காதல், கல்யாணம், சமுக ஈடுபாடு, பொதுச் சேவைகள், கல்வியியற் செயற்பாடுகள், மலையக மக்கள் என்று பலதையும் பேசிக் கொண்டிருந்தோம். சந்திரலேகாவைத் திருமணம் முடிப்பதற்கென்றே கிங்ஸ்லி அரசாங்கத் தொழிலுக்குச் சென்ற கதையைக் கேட்டு  சிரித்தே விட்டேன். அவர்களின் மகனும் மகளும் குட்டியனோடு ஐக்கியமாகி இருந்தார்கள். அவனும் நீண்ட நாள் பழகியவன் போல ஒருவரிடமிருந்து மற்றவரிடம் தாவிக் கொண்டிருந்தான். 

அந்தப் பிள்ளைகளை அவர்கள் வளர்த்திருக்கும் அழகே அவர்களின் குடும்வாழ்க்கையின் போக்கைச் சொல்லிச் சென்றது. ஊடறுவும் மலையகப் பெண்களும் இணைந்து நடாத்தும் பெண்ணிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் என்ற அழைப்பிதழ் பிரதிகள் மேசையில் கிடந்தன. இப்படியொரு நிகழ்வை  வெற்றிகரமாக நிகழ்த்த சந்திரலேகாவுக்கு உறுதுணையாக தோழர் கிங்ஸ்லி என்னமாதிரியான வகிபங்கைக் கைக்கொண்டிருப்பார் என்று மிக இலகுவாக விளங்கிக் கொள்ள முடியுமாக இருந்தது. அனைத்து ஏற்பாடுகளிலும் அவரின் துணை இரண்டறக் கலந்திருந்தது.

நிகழ்வின் போதும் அவதானித்தேன்.   கிங்ஸ்லி ஆளாய்ப் பறந்து பறந்து அனைத்தையும் கவணித்துக் கொண்டிருந்தார். அவரின் மாறாத புன்சிரிப்பும், சந்திரலேகாவின் அமைதியும் எடுப்பில்லாத பேச்சும் எல்லோரைம் கவர்ந்திருக்கும் என்று நம்புகின்றேன். இது இன்னும் சில ஜோடிகள் பற்றியும் பேச வேண்டும் அடுத்தடுத்த பகுதிகளில் பேசுவேன்.

ஊடறு இந்நிகழ்வைத் தொடர்ந்தும் செய்து வருகின்றது. அவற்றையெல்லாம் தூரத்தில் இருந்துதான் நான் பார்த்திருக்கின்றேன். ஆனால் அருகேயிருந்து பார்க்கும் போதுதான் றஞ்சியினதும் அவரின் தோழிகளினதும் உழைப்பின் கனதி எத்தகையது என்பதை விளங்கிக் கொள்ள முடியுமாக இருந்தது. பெண்களை வலுவூட்ட புத்துருவாக்க மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனையுடன் செயற்படும் நபர்களையும் பெண்ணிய எழுத்து என்று களத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் சோளக்காட்டுப் பொம்மைகளையும் இந்த மாதிரியான நிகழ்வுகளில்தான் ஒப்பு நோக்கிப் பார்த்துக் கொள்ள முடியுமாக இருக்கின்றது. 

பல பெண்ணிய நிகழ்வுகள் சிலரைக் கட்டமைத்துக் கொள்ளவும் அவர்களை பேராளுமைகளாக முன்னிறுத்திக் கொள்ளவுமே நடைபெறும், அதன்  பின்னால் குறுகிய நோக்கங்களைக் கொண்ட நிகழ்ச்சி நிரலுடன் சில ஆண்கள் இருப்பார்கள். அவர்களை விட்டால் வேறு ஆள் கிடையாது என்ற தோரணையில் ஆகாயத்திலும் பூமிக்குக் கீழும்தான் அவர்கள் பயணப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களின் கால் நிலத்தில் படவே படாது. ஆனால் இந்நிகழ்வில் அப்படிப்பட்ட நபர்களைச் சந்திக்கக் கிடைக்காது என்றே தோன்றியது. றஞ்சியின் மீது மதிப்பு அதிகரித்த அடுத்த பொழுது இது. றஞ்சி உட்பட ஏனையவர்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தியை சந்திரலேகா சொன்னபோது அவர்களைப் பார்த்துவிட்டடுத்தான் தூங்கச் செல்ல வேண்டும் என்று தோன்றியது. காலையில் எமது பயணம் மிக சொகுசானது என்பதால் பயணக் களைப்பு என்று ஒன்று இருக்கவில்லை. 

நள்ளிரவு வேலையில் றஞ்சி, ஓவியா, நர்மதா, ரஜணி, விஜயலட்சுமி, யோகி, புதியமாதவி என்று அனைவரும் வந்திறங்கினார்கள். ஓவியா மட்டுமே எனக்கு ஏற்கனவே அறிமுகம். 1990களில் வடமாகாண முஸ்லிம்கள் விடுலைப் புலிகளால் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டதை தமிழ்த் தேசியவாதிகள் எப்படிப் பார்க்கின்றார்கள் என்ற நேர்காணலுக்காக 2010ஆம் ஆண்டளவில் தோழர் கீற்று ரமேஸ் அவர்களின் துணையோடு ஓவியாவின் வீட்டிலேயே அந்நேர்காணலைப் பதிவு செய்தேன். தமிழ்த் தேசியவாதிகள் குறித்த தவறான புரிதலை அந்த ஆவணப்படத்தின் மூலம் ஓரளவு சீர் செய்ய முடியுமாக இருந்தது. அதற்குப் பின்னர் இன்றுதான் அவரைப் பார்க்கின்றேன். 

விடுதலைப் புலிகளின் இனச் சுத்திகரிப்பு என்ற வார்த்தைக்காக நீண்ட நேரம் பேசினோம். அது எப்படி இனச் சுத்திகரிப்பாகும் என்ற கேள்விக்கு திட்டமிட்டரீதியில் எப்படி வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்பதை தெளிவு படுத்தினேன். முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்ற கருத்துருவாக்கம் எங்கிருந்து வந்தது? அதைப் புலிகள் எப்படி முழுமையாக நம்பினார்கள்? என்பதையும் வரலாற்றில் புலிகள் தோற்றுப் போன மிக முக்கியமான இடங்களில் அதுவும் ஒன்று என்பதையும் தெளிவு படுத்தினேன். அதன்பின்னர்அந்த வெளியேற்றத்தைக் கண்டித்துப் பேசினார். தமிழகத்தில் சில விடயங்களைத் தீர்மானிக்கும் நபர்களில் உயர்ந்த இடத்திற்கு ஓவியாவை நகர்த்தியிருப்பதில் அவரின் இந்தப் போக்கும் ஒரு காரணியாக இருக்கக் கூடும். ஏனெனில் நிறைய மனிதர்கள் யார் யாரையோவெல்லாம் திருப்திப்படுத்துவதற்காகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். கருத்துச் சொல்வதில்கூட 

அனைத்தையும் அமைதியாகச் செவிமடுத்து பின்னர் தனக்குத் தோன்றும் சந்தேகங்களைக் கேள்விகளாகத் தொடுத்து முழுமையாகத் தெளிவடைந்த பின்னரே கருத்துரைக்கும் பண்பை ஓவியாவிடம் அதிகமாகவே காணலாம்.  ஏற்றுக்கொள்ளாத போது 'அப்படி இல்ல தோழர்' என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்வார். இது எனது புரிதலும் அவதானிப்பும்.

இணையவெளியில் பார்த்த லண்டாய் என்ற நூலுக்கூடாக விஜயலட்சுமியின் பெயர் மட்டும் அறிமுகம். புதியமாதவியின் பெயரும் எழுத்துக்களும் ஏற்கனவே அறிமுகம் அவரைத்தவிர. மற்றயவர்கள் யாருமே எனக்கு அறிமகமானவர்களாக இருக்கவில்லை. ஆனால் பாருங்கோ அப்போதும் றஞ்சியைப் பார்க்கக் கிடைக்கவில்லை. யார் யார் என்னென்ன பெயரால் அழைக்கப்படுகின்றார்கள் என்பதை மட்டும் அவதானித்துக் கொண்டிருந்தேன். எல்லோரினதும் அகத்தின் அழகை முகத்தில் பார்க்க முடியும் என்ற அடிப்படையில் அனைவரையும் ஓரளவுக்கு அவர்களின் இயல்பு எப்படி இருக்கும் என்றும் கணித்துக் கொண்டேன்.

அவர்கள் தமக்குள் உரையாடிக் கொண்டிருப்பவற்றுக்கு எனது செவிகளைத் தாரை வார்த்துவிட்டு நான் 'சால்வை வீரன்' என்ற எனது புதிய நாவலை டைப் பண்ணத் தொடங்கினேன். அவர்களின் உரையாடல் எனக்குச் சொன்னது ஒன்றேயொன்றுதான். பெண்ணியம் என்ற பெயரை வைத்துக் கொண்டு அவர்கள் பிழைப்பு நடாத்தவில்லை. அத்துடன் அதைப் பேசு பொருளாக்கி தம்மைக் கட்டமைத்துக் கொள்ளவுமில்லை, பெண்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் உரிமைகளைச் சரியாகப் பெற்றுக் கொடுப்பதற்கும் என்னென்ன செய்யலாம் என்பதையே கருவாகக் கொண்டிருந்தன. குறிப்பாக மதுரையில் இருந்து வந்த சட்டத்தரணி ரஜணியும் பம்பாயில் இருந்து வந்த புதிய மாதவியும் அன்றுதான் முதன் முறையாகச் சந்தித்துக் கொண்டார்கள். அவர்களின் உரையாடலை  தனியாகத் தொகுத்து எழுத வேண்டும். அந்த உரையாடலில் பெரும்பகுதி இன்னும் பசுமையாக நினைவிருக்கின்றது. ஒரு முன்மாதிரியாக ஒருபெண் தன்னை எப்படிக் கட்டமைக்கலாம் என்ற தொனியில் புதிய மாதவியின் கருத்துக்கள் தனித்துவமாகப் பிரதிபலித்தன. 

அப்படியே இருக்கும் போதுதான் வெளியே சென்று நிகழ்வு நடக்கும் மண்டபத்தைப் பார்த்துவிட்டு அப்போதுதான் திரும்பினார் றஞ்சியும் இன்னும் சிலரும். அறிமுகமாகிக் கொள்ளவும் நாலு வார்த்தை பேசிக் கொள்ளவும் கூட நேரம் வரவேண்டும். கை குலுக்கிக் கொண்டதோடு றஞ்சி இது முஸ்டீனாகத்தான் இருக்க வேண்டும்என்று நினைத்திருக்க வேண்டும், அவராகவே முஸ்டீன்..!! என்றார் நானும் ஆமாம் என்றதோடு அறிமுகம் முடிந்து போயிற்று. அவ்வளவு பயணக் களைப்போடும் எதையும் பொருட்படுத்தாமல் அனைத்தும் சரியாக இருக்கின்றதா என்ற இறுதிக்கட்ட ஒழுங்கு படுத்தலைச் செய்துவிட்டு வந்திருந்த றஞ்சிக்கு நிகழ்வு வெற்றிகரமாக முடிந்துவிட வேண்டும் என்ற எண்ணம்மட்டும்தான் ஓடியிருக்க வேண்டும். அந்த டென்ஷன் முகத்தில் தாராளமாகத் தெரிந்தது. காலை நிகழ்வை நினைத்துக் கொண்டு இருந்த கொஞ்ச வேலைகளையும் முடித்துவிட்டு அதிகாலை இரண்டு மணியளவில் தூங்கச் சென்றேன்.

காலையில் யோகி குட்டியனோடு பேசிக் கொள்ளும் சத்தம் கேட்டது. இன்னும் சிலரும் ஷாமிலாவோடு கதைத்துக் கொள்ளும் சத்தமும் கேட்டது. போர்வைக்குள் நான் ஒருவன் சுருண்டு படுத்துக் கொண்டிருப்பதை அவர்களில் யாருமே கவனிக்கவில்லை. அவர்கள் பாட்டுக்கு குட்டியனோடு கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். ஆனால் விஜயலட்சுமியின் பார்வைதான் கூர்மையானது போலும். நான் ஒரு ஜீவன் உறங்கிக் கொண்டிருப்பதை அவர்தான் அந்த இடத்தில் அறிவிப்புச்  செய்தார்.

முதல் நாள் நிகழ்வில் ஆண்களுக்கு அனுமதியில்லை என்றார்கள். ஆனாலும் ஒருவன் எந்த எதிர்ப்புமில்லாமல் அதில் கலந்து கொண்டிருந்தான்...

தொடரும்... 

No comments:

Post a Comment