அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-
ஒரு டீ க்காக தனது கணவனை அட்டைக்கடிக்குப் பலி கொடுக்கத் துணிந்த மனைவி பற்றி கட்டாயம் சொல்லியேயாக வேண்டும். இந்த இடத்தில் இரண்டு சவால்கள் ஒன்று குட்டியனைத் தூக்கிக் கொண்டு மலையேறுவது. அடுத்தது அட்டைகளில் இருந்து தப்பிப்பது. சந்திரலேகா முன்னால் இருந்த மலைப்பாதையைக் காட்டி 'இந்த வழியால் ஐந்து நிமிடம் நடந்தால் எமது வீடு' என்றார். அப்போதே எனக்குள் தயக்கம் மெலிதாகக் குடி கொண்டது.
மலையகத்தில் இரண்டு விடயங்களை ஒன்றுக்குப் பத்து முறை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். ஆட்டோவில் பயணிக்கும் முன்னர் அதற்கான காசு எவ்வளவு என்பதைத் தீர்க்கமாகப் பேசித் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அது ஆட்டோ என்று மட்டுமல்ல கட்டனம் தீர்மானிக்கப்பட்ட பஸ் போன்றவை தவிர ஏனைய அனைத்து வாகனங்களிலும் இந்த முன்னெச்சரிக்கை தேவை. அடுத்தது ஒருவரின் வீட்டுக்கு நடந்து செல்வதற்கு முன்னர் அதன் தூரம் குறித்து தெளிவாகவும் தீரவும் விசாரித்துக் கொள்ள வேண்டும்.
கொட்டகல ரயில்வே நிலையத்தில் இருந்து நாம் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்கு ஆட்டோவில்தான் செல்ல வேண்டும். ஷாமிலா செய்த முதல் காரியம் சிறீயிடம் ஆட்டோவுக்கு எவ்வளவு வரும் என்பதுதான். நூற்றியம்பது ரூபாய் என்றதும் இப்போது திருப்தி. ஆனாலும் நாம் வந்திறங்கிய இடமோ அந்தளவுக்கு தூரம் கிடையாது. ஆட்டோக்காரர் இருநூறு ரூபாய் என்றார். ஷாமிலாவுக்கு கோபம் வந்துவிட்டது. கொழும்பில் இருநூறு ரூபாய்க்கு ஐந்து கிலோமீட்டர்வரைப் பயணிப்போம். இதென்ன பகற்கொள்ளையாக இருக்கின்றது. நீங்கள் என்ன கொள்ளைக்காரரா என்று கேட்டுவிட்டு ஏன் இப்படி அநியாயமாக மற்றவர்களிடமிருந்து பணத்தைக் கறக்கின்றீர்கள், நாங்கள் இப்போது வந்த தூரம் ஒன்றரைக் கிலோமீட்டர் கூட இருக்காதே என்று தடாலடியாகக் கேட்டே விட்டாள். அவரும் இதனை எதிர்பார்க்கவில்லை பின்னர் ஏதோ பறவாயில்லை என்று 150 ரூபாவைக் கொடுத்துவிட்டு வந்தாள். கொழும்பு மாளிகாவத்தையில் இருக்கும் சண்டைக்காரிகள் போல இருந்தது அவளின் பேச்சு. அதற்கு மேல் ஏதாவது பேசினால் அறைவிழுந்தாலும் விழும் என்ற அச்சத்தில் ஆட்டோக்காரன் எதுவுமே பேசாமல் பறந்தான்.
ஏற்கனவே ஒரு முறை ஹட்டனில் ஒரு நண்பரின் திருமணத்திற்கு வந்த போது அங்கு மிக நெருக்கமாகப் பழகிவிட்ட இன்னொருவர் கட்டாயமாகத் தனது வீட்டுக்கு வரும்படி வருத்திக்கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்ன விதம் 'இங்கிட்டு கொஞ்ச தூரம் தான் ஒரு பத்துப் பதினஞ்சு நிமிசம் நடந்தா எங்கவூடு' என்றார். ஆனால் பரிதாபம் ஒன்றறை மணித்தியாலங்கள் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க மலையேறிப் பட்ட துன்பம் வாழ்வில் மறக்கவே முடியாதது. அது மாதிரி அஞ்சு நிமிசமோ இது என்று நான் வாய்விட்டே கேட்டுவிட்டேன். ஆனாலும் தோழர் கிங்ஸ்லி சிரித்துக் கொண்டே இது அப்படித் தூரமில்லை பயப்படவேண்டாம் என்றார். நடந்து பழகிய அவர்களுக்கு அதெல்லாம் பெரிய மேட்டரே கிடையாது. அதனால் இயல்பாக அது அவர்களுக்குச் சின்ன தூரம். பழக்கப்படாத நமக்கு அப்படியில்லையே. வயிறு வேறு காட்டு மரம் போல கட்டுக்கடங்காமல் ஓங்கி வளர்ந்து கொண்டிருக்கின்றது. இப்படியே போனால் தொப்பை நம்மை தலைகுப்புறப் புரட்டி விடுமோ என்ற அச்சம் வேறு. நடக்கத் தொடங்கிய கொஞ்சத்தில் தோழர் கிங்ஸ்லியுடன் குட்டியன் ஐக்கியமாக அவரே அவனைத் தூக்கிக் கொண்டார்.
அட்டைகளின் பால் மீண்டும் எனது கவனம் செல்ல, ஷாமிலாவை டீ வேகமாகத் துரத்திக் கொண்டிருந்தது. அவள் மலை, மழை, குளிர், அட்டை, குட்டியன், நான், என்று எதையுமே பொருட்படுத்தாமல் நடந்துகொண்டிருந்தாள். எனது தற்காப்பு முயற்சிகள் அனைத்தும் பொய்த்துப் போக எதிர்பார்த்தது போலவே எனது வலது காலின் கனுக்காலுக்கு மேலால் அத்தனை பாதுகாப்புகளையும் மீறி உடைத்துக் கொண்டு ஒரு அட்டை நுளைந்து அப்போதுதான் வாய் வைத்திருந்தது. அதை நான் நன்றாக உணர்ந்து கொண்டேன். குனிந்து பார்க்காமல் வேக வேகமாக மலையேறிக் கொண்டே நான் சொன்ன செய்தி அட்டை கடிக்கின்றது என்பதுதான் என்னுடன் கூடவே வந்தவர்கள் அதை நம்பியிருக்க வாய்ப்பில்லை, நடந்து கொண்டிருக்கும்போதே ஜந்து நுளைந்துவிட்டதைக் கணித்துக் கொண்டேன். நல்லவேளை சந்திரலேகாவின் வீட்டு முன்றலை நெருங்கியிருந்த நேரமது.
அட்டை சும்மா வாய் வைத்தால் கூட போதும் சின்னஞ்சிறிய ஊசித்துளை அளவுக்கு இருக்கும் அதன் பல் பதிந்த இடம் ஒரு வாரத்தில் கோனிப்பை தைக்கும் ஊசித்துளை அளவுக்கு வீங்கிப் பழுத்து அரிக்கத் தொடங்கிடும். எவ்வளவுதான் கட்டுப்படுத்தினாலும் சொரியாமல் இருக்க முடிவதில்லை. சொரிந்துவிட்டால் தொலைந்தோம். எப்படியும் அது முழுமையாகக் குணமாக ஆறு மாதங்கள் எடுக்கும். உப்புத் தண்ணீரை ஊற்றி அதுவாகக் கலன்று விழும்வரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நாமாகப் பிடுங்கி எறிந்தால் அந்தக் காயத்தின் வேதனை வருடக் கணக்கில் இருக்கும். 2008ல் அக்குரனையில் வைத்து வாங்கிய அட்டைக்கடியின் தளும்பு இன்றுவரையும் மறையவில்லை, அதற்குள் இன்னொரு கடியை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அது எனக்கு மட்டுமா அல்லது எல்லோருக்கும் இப்படித்தானா என்பது தெரியாது. (பெரியளவில் அட்டைக்கடி வாங்கிய யோகிதான் அது குறித்துக் கொஞ்சம் கூடுதலாக விபரிக்க வேண்டும்.)
மலையகத்து மக்கள் எப்படித்தான் இந்த மாபெரும் வில்லனை இலகுவாகச் சமாளித்து விடுகின்றார்களோ தெரியாது. அட்டைக்கடிக்குப் பலியாகி உயிரிழந்த செய்திகளை சில கதைகளிலும் கட்டுரைகளிலும் பத்திரிகைச் செய்திகளிலும் படித்திருக்கின்றேன். பாவம் இந்த மக்கள். உதிரத்தை உறுஞ்சும் அட்டைகளை வெற்றிகொன்ட மக்களால் உழைப்பை உறுஞ்சும் முதலாளி அட்டைகளினை இன்று வரையும் வெற்றி கொள்ள முடியாமல் தவிக்கின்றார்களே என்று எண்ணிய போது கவலையாக இருந்தது.
இந்தச் சிந்தனையைத்தான் அசைபோட்டபடி சந்திரலேகா, கிங்ஸ்லியின் வீட்டில் இருந்த சின்னஞ்சிறிய பெறுமதியான நூலகத்தையும் நோட்டமிட்டேன். முன்னறையில் கீதை, பைபிள், குர்ஆன் எல்லாம் இருந்தன. இன்னும் அவர்களின் இரண்டு பிள்ளைகளுக்கும் அவர்கள் எந்த சமயத்தைப் பின்பற்ற வேண்டும் எனச் சொல்லிக் கொடுக்கவில்லை அவர்கள் அனைத்தையும் படித்துத் தெரிந்து கொள்ளட்டும் பின்னர் தமக்கான சமயத்தைத் தேர்வு செய்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டதாக கிங்ஸ்லி சொல்லும் போது அவரை எண்ணிப் பெருமையாக இருந்தது.
அப்போது ஷாமிலா ஆவளுடன் எதிர்பார்த்திருந்த டீ வந்தது.
தொடரும்...
No comments:
Post a Comment