Tuesday, May 19, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 02 ..................... ஊடறு + மலையகப் பெண்கள்


அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

ஒருமாதத்துக்கு முதல் ஷாமிலா டிக்கட் புக் பண்ணி வைத்திருந்தாலும் கடைசி நான்கு நாட்களும்தான் முஸ்லிம் விதவைப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் - காழி நீதிமன்றங்களை முன்னிறுத்தி என்ற தலைப்பில கட்டுரைக்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். அதுவும் குட்டியன் கொடுக்கும் அதிக பட்சத் தொந்தரவுகளையும் தாண்டி அவனையும் அரவனைத்து  என்னையும் அனுசரித்து அவள் போராடிக் கொண்டிருப்பதைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அப்போது அவளுக்குச் செய்ய முடியுமான ஒரே உதவி குட்டினைத் தூக்கிக் கொண்டு வெளியே உலாப் போவதுதான். எப்படியோ பாடசாலை வேலைகளையும் கவனித்து இன்னபிற விடயங்களையும் முடித்து தகவல்களைச் சேகரித்து கட்டுரையையும் டைப் செய்து முடித்து விட்டிருந்தாள். குழந்தை வளர்ப்பில் சமபாதி இருவருக்கும் இருக்க வேண்டும் என்பதில் நான் கண்டிப்பானவன். என்னுடைய பொறுப்புக்களைச் செய்யுமாறு யாரும் வகுப்பெடுக்கவில்லை. ஆயினும் நான் என்பங்கைச் சரியாகச் செய்கின்றேன். அநேகமான ஆண்கள் அதைச் செய்வதில்லை அதனால் பெண் ஆணோடு முரண்படும் சந்தர்ப்பங்கள் தோற்றம் பெறுகின்றன.

கட்டுரை தயார் படுத்தலில் என் பங்கிற்கு எதையாவது செய்ய வேண்டாமா! என்று அனைத்தும் முடிந்த பிற்பாடு கட்டுரையில்  எழுத்துப் பிழை பார்த்து வசனங்களை ஒழுங்குபடுத்தி ஒரு நேர்த்தியான பிரதியாக்கி பீடிஎப் வடிவில் கொடுக்கும் இலகுவான பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன். ஆயினும் ஒரு தமிழ் வாத்தியின் கட்டுரையில் திருத்துவதற்கென்று ஒரு எழுத்துப் பிழையும் எனக்குக் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் தலைப்பில் குற்றம் கண்டு பிடித்தேன். விதவைப் பெண்கள் என்பது பிழை என்றேன். எப்படி? என்று கேட்டாள். விதவை என்றாலே பெண்தானே ஆணுக்கு தபுதாரன் என்ற சொல் இருக்கும் போது விதவைப் பெண் என்று பாவிக்கத் தேவையில்லைதானே விதவை என்றாலே போதும் அது பெண்தான் என்று சொன்னதும் எந்தப் பிசிரும் இல்லாமல் அதை உடனேயே ஏற்றுக் கொண்டு நியாயப்பபடுத்தாமல் கட்டுரையில் இந்தப் பிழை  வந்திருக்கும் இடங்களைத் திருத்தச் சொன்னாள். அப்பாடா இப்படியாவது உதவினோமே என்று சந்தோசப் பட்டுக் கொண்டேன்.  ஆனாலும் அழைப்பிதழில் விதவைப் பெண்கள் என்றுதான் அச்சாகி இருந்தது. அதை யாருமே கண்டு கொள்ளவில்லை போலும். 

நிறையக் கணவன் மனைவிகளுக்கிடையில் விரிசல் தோன்றுவதற்குக் காரணம் எல்லாவற்றையும் அவரவர் தரப்பில் நின்று நியாயப்படுத்தி முடிப்பதுதான். நியாயப்படுத்தும் போது யாரும் தம்மை விட்டுக்கொடுப்பதில்லை. அதனாலேயே பிரச்சினைகள் பூதாகரமாகிப் போகும். ஏற்றுக் கொள்ளும் போதும் ஒரு புன்சிரிப்போடு முரணைக் கடந்து செல்லும் போதும் அன்பும் அமைதியும் மதிப்பும்தான் மேவிநிற்கும். இது குடும்ப வாழ்க்கையில் மட்டுமல்ல பொதுவெளியில் குறிப்பாக இலக்கிய வெளி, சிந்தனைகளையும் கருத்துக்களையும் முன்வைப்பவர்கள் என்று எல்லோருக்கும் பொருந்தும். சிலருக்குச் சம்மட்டியடி கொடுத்தால்தான் சிலவிடயங்கள் புரியும். அப்படிப்பட்டவர்களுக்கு ஹிட்லரின் துப்பாக்கி போல எனது பேனை கருனையின்றி மாறிச் செயற்படும். மற்றபடி எனது பேனைக்கு இயேசு நாதரின் சாந்தமும் முஹம்மது நபியின் பொறுமையும் இருக்கின்றது.

ஷாமிலாவின் கட்டுரையினை வாசிக்கும் போது  அவளது ஆளுமையின் இன்னொரு பக்கத்தை என்னால் தரிசிக்க முடியுமாக இருந்தது. இஸ்லாத்தின் பெயரில் இப்போது இருக்கும் சிஸ்டம் பச்சப் பிழை என்று ஆணித்தரமாக நிறுவி இருந்தாள். பல கருத்துக்கள் நிச்சயம் மார்க்கத்தளத்தில் நீண்ட விவாதத்தை உண்டுபண்ணக் கூடியவையாகவும் பெண்ணியச் சந்திப்பில் வித்தியாசமான கருத்துரைப்பாகவும் இருக்கும் என்று தோன்றியது. ஷாமிலாவுக்குள்ள தைரியத்தை அந்தப் பிரதியில் பார்க்க முடியுமாக இருந்தது. பலர் விமர்சனத்துக்குப் பயந்து கருத்துரைப்பதே இல்லை. சிலர் மட்டும்தான் எதற்காகவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் வாதிப்பார்கள். தமது கருத்துக்களை ஆணித்தரமாக நிறுவுவார்கள். கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல் பெண்களை மிக இலகுவாக இப்போதுள்ள இணையச் சூழலில் அவமானப்படுத்தித் திருப்திப்படும்  சில்லறைகள் மலிந்து கிடக்கின்றார்கள். இஸ்லாத்தை அரைகுறையாக விளங்கிக் கொண்டு கூப்பாடு போடும் கார்ட்போர்ட் மௌலவிகளால்தான் அதிக பிரச்சனையே. 

பயணப்படும் அன்றுக் காலைதான் கட்டுரையைப் பிரின்ட் எடுக்க முடிந்தது. நிகழ்வுக்கு முதல் நாள் இரவுதான் ஷாமிலாவால் கட்டுரையை ஒருமுறை நேரம் வைத்து வாசித்துப்பார்க்க முடிந்தது. எல்லாவற்றையும் கடைசி நேரத்தில்தான் மாங்குமாங்கு என்று பாடுபட்டுச் செய்யும் ஷாமிலா எப்படியோ அதை நேர்த்தியாகச் செய்து முடிப்பாள். கற்பித்தல் முறைகளில் புதிய ஒழுங்குகளைச் செருகிவிடுவதற்காக விடியவிடிய இருந்து மாணவர்களுக்காகக் கற்பித்தல் சாதனங்களை அர்ப்பணிப்போடு தயார் செய்யும் பல சந்தர்ப்பங்களை நான் அவதானித்து இருக்கின்றேன். அதற்காக அவள் தனது பொறுப்புக்களில் இருந்து விடுபட்டது கிடையாது. அப்படித்தான் இந்த நிகழ்வுக்கும் அவள் தயாராகி இருந்தாள். 

புறப்படுவதற்கு முன்னரே குட்டியன் மீதுள்ள பற்றினால் லுணுகலை சிறீ காலநிலை குறித்தும் எடுத்துவர வேண்டிய ஆடைகள் குறித்தும் அறிவித்து விட்டமையால் ஷாமிலா அதற்கான ஏற்பாடுகளைச் செவ்வனே செய்து முடித்திருந்தாள். சிறீ சொன்ன செய்தியோடு நான் ஆடிப்போனேன். மலையகம் என்றால் குளிருக்கும் அட்டைக்கும்தான் நான் அதிகம் பயப்படுவேன். என்னமோ தெரியாது பாம்புக்கே பயமில்லை ஆனால் ஒற்றை விரலால் நசுக்கிக் கொன்றுவிடக் கூடிய சின்னஞ்சிறு ஜந்துவான அட்டைக்கு மட்டும் அப்படியொரு பயமிருந்தது. அது போலத்தான் எவ்வளவு சூட்டையும் தாங்கிக் கொள்வேன் ஆனால் குளிர் என்றால் கொஞ்சம் கஷ்டம்தான். 

கொட்டகல ரயில் நிலையத்தில் பெருமழையில் மிக இதமான குளிர் வருடிச் செல்ல மகன் எனது கரங்களில் சுருண்டு ஆழத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனது நித்திரை குழையாமலேயே எமக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். எந்த ஆர்ப்பாட்டமுமில்லாமல் சந்திரலேகா மற்றும் அவரது கணவர் கிங்ஸ்லி ஆகியோர் கொட்டும் மழையிலும் எமக்கான பகல் போசனத்தைக் கொண்டு வந்து தந்துவிட்டுப் போனார்கள். 

மாலையான போது ஒவ்வொரு அதிதிகளும் மெல்ல மெல்ல வந்து சேர்ந்தார்கள். சரோஜா சிவச் சந்திரன், அவரது மகன் பாரதி சுகன்யா, லாவன்யா இன்னும் அறிமுகமற்ற பலர். அவர்களில் பலரோடு முதல் சந்திப்பே அதுதான். சரோஜா சிவச் சந்திரனின் எளிமையும், தம்பி பாரதியின் அமைதியும் பற்றி நானும் ஷாமிலாவும் பேசிக் கொண்டோம். இயல்பான குணவியல்பு கொண்ட பலரையும் பற்றி ஷாமிலா என்னிடம் விதந்து கூறிக் கொண்டிருந்தார்.

டீ குடிக்காவிட்டால் ஷாமிலாவுக்கு இருப்பே கொள்ளாது. சூரியன் மறைந்து கொண்டிருக்கும் போது சந்திரலேகா தமது வீட்டுக்குச் சென்றுவர அழைத்த போது ஷாமிலா கேட்ட முதல் கேள்வி டீ கிடைக்குமா என்பதுதான். மழை பெய்து ஓய்ந்திரு;ககின்றது. அட்டைகள் எல்லாம் வெளியே வந்து யார் மீது தாவலாம் என்று காத்திருக்கும் போது இவள் என்னை இக்கட்டில் மாட்டி விடுவாளோ என்றுதான் அச்சமாக இருந்தது. புதிய சுவாத்திய நிலைக்கு பழக்கப்படாத குட்டியன் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தான். அவனை அலேக்காகத் தூக்கிச் சுமக்க என்னால்தான் முடியும் என்பதால் ஷாமிலா அவனைப் பற்றி யோசிக்காமல் அந்த டீ யைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஒரு மலைமேடு ஏறினால் சந்திரலேகாவின் வீடு ஆனாலும் அந்த அட்டைகள்...
தொடரும்...

No comments:

Post a Comment