Saturday, May 23, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 05 ............... .ஊடறு + மலையகப் பெண்கள்


அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

முதல் நாள் நிகழ்வில் ஆண்களுக்கு அனுமதியில்லை என்றார்கள். ஆனாலும் குட்டியன் கொஞ்ச நேரம் நிகழ்வில் கலந்து கொண்டான் அவனை எப்படி அனுமதித்தார்களோ தெரியவில்லை. ஆனாலும் அவன் புத்திசாலி தடையை மீறிக் கலந்துகொண்டான் பாருங்கள். இடைக்கிடையே மைக் போட்ட ஒழுங்கற்ற சப்தம் அவனுக்குப் பிடிக்கவில்லை போலும் பின்னர் குட்டியன் என்னுடனேயே ஐக்கியமாகி விட்டான். உள்ளே அவர்கள் பேசிக் கொள்வது என்ன என்பது வெளியே உலாத்தித் திரிந்த எனக்கு நன்றாகவே கேட்டது. மேலே இருந்து பார்க்கும் போது நாங்கள் காலையில் நடந்து வந்தது நினைவிற்கு வந்தது.

காலை இதமான குளிரில் ஒரு கிலோ மீட்டர் வரையில் நடந்து வந்திருந்தாலும் பெரிய களைப்பு ஒன்றும் இருக்கவில்லை. புதிய மாதவியும் ஷாமிலாவும் எதையெதையோவெல்லாம் கதைத்துக் கொண்டு வந்தார்கள். நர்மதா குட்டியனைத் தூக்கிக் கொண்டு அவ்வளவு தூரம் இயல்பாக நடந்து கொண்டிருந்தார். அந்தக் கொஞ்ச நேரம்தான் கதைத்துக் கொள்ளக் கிடைத்தது. அதற்குள் எவ்வளவு விசயங்களைப் பரிமாறிக் கொள்ளவது? ஒரு நிகழ்வில் கிடைக்கும் பெரிய பயன் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்வதும் கருத்துக்களையும் சிந்தனைகளையும் மனம்விட்டுப் பரிமாறிக் கொள்வதும்தான். அது அவ்வளவு எளிதில் வாய்க்காது. பெண்ணியச் சிந்தனை என்பது தொடர்பில் எனக்கு இன்னொரு பக்கத்தை யோசிக்கவும் செயற்படவும் அதன் பங்காளனாய் நின்று பாதிக்கப்பட்ட பெண்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய வலிமையையும் ஏதோவோர் உணர்வு என்னுள் செய்து கொண்டிருந்தது.

பலம் - பலவீனம் என்ற விடயமும் இயல்பு என்று ஒரு விடயமும் இருக்கின்றது. பலம் பலவீனத்தை மாற்றிக் கொள்ள முடியும். தொடர்தேச்சையான முயற்சி அதற்கு கை கொடுக்கும். ஆனால் இயல்பை மாற்ற முடியாது. அது இயற்கையால் வருவது. ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ள பலம் பலவீனம் சார்ந்து யோசிக்கும் போது பெண்களின் பலவீனம் என்று பட்டியல்படுத்தப்பட்டிருப்பவற்றை எப்படிப் பலமாக்குவது என்று திட்டமிடுதலும் அதற்காக  உழைத்தலும் நீண்ட காலத்தில் பெரிய பயன்களைத்தரும். பல நிகழ்வுகள் பலவீனம் என்று வடிவமைக்கப்பட்ட விசயங்களுக்குள்ளேயே மட்டும் நின்று கொண்டு சுழல்வதைத்தான் நான் அவதானித்திருக்கின்றேன்.

ஊடறு இந்த பலவீனங்களையெல்லாம் கடந்து பலம் பற்றிய சிந்தனைக்குள் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் நான் பிரார்த்தித்தேன். ஊடறுவுக்கும் அதற்கு உறுதுணையாக நிற்கும் தோழிகளுக்கும் அந்தக் கட்ஸ் இருக்கின்றது அவர்களால் எல்லாப் பலவீனங்களையும் மிக இலகுவாக எதிர்கொள்ளும் நேரிய திறன் இருக்கின்றது. அந்தத் திறன் பல்லாயிரம் பேருக்கு வெளிச்சமாக நின்று வழிகாட்டக் கூடியது. அதைத் திறமையாகக் கட்டமைக்கும் ஆளுமைகள்தான் இன்னும் தேவைப் படுகின்றார்கள். புதிய மாதவி போன்றவர்களின் கூர்மையான சிந்தனையும் வழிகாட்டலும் இந்தப் போக்கிற்கு நிறையவே துணை செய்யக் கூடும் என்று நான் நம்புகின்றேன். 

பெண்ணியம் பேசும் பலரின் எழுத்துக்களைப் படித்திருக்கின்றேன் அவற்றில் இன்னும் இடித்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விசயம்தான் பெண்ணும் இயற்கையும் சம்பந்தப்பட்டது. 

அநேகமாக பெண்ணைப் பற்றிய பல கவிதைகள் இது குறித்துப் பேசுகின்றன. அவற்றில் என்னை விழுந்து சிழுந்து சிரிக்க வைத்த கவிதை  பெண் காற்று. பெண் ஆகாயம், பெண் நிலம், பெண் ஆழக்கடல் பெண் அது இது என்று கடைசியில் பெண் இயற்கை என்று முடியும். பல பெண்கவிஞர்கள் இந்த விடயத்தினுள் அமிழ்ந்து எழுவார்கள். பெண்ணை இயற்கை என்று பேசும் கவிதைகளைப் படிக்கும் போது வருகின்ற சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடிவதில்லை. அப்படி என்னதான் சிரிப்பு வேண்டிக் கிடக்கிடக்கிறது? அதில் என்ன தப்பு இருக்கின்றது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது.  சிரிப்புக்கான காரணி பெண் இயற்கை சரி அதை ஏற்றுக் கொள்வோம். அவள் இயற்கைதானே. அதை மறுக்க முடியாது தானே. அப்படியென்றால் ஆண் செயற்கையா? ஜெமினி ஜெராக்ஸ் கடையில் எடுக்கப்பட்ட பிரதி போலும். ஏனெனில் ஆணுக்கு இயற்கை முத்திரை குத்தி இதுவரையும் ஒரு கவிதைக் குஞ்சையாவது நான் படித்திலன். சரி அதையெல்லாம் விடுவோம். சமயங்கள் ஆண் பெண் பற்றி என்ன சொல்கின்ற கருத்துக்கும் ஆண் பெண் குறித்த இயற்கையின் அடிப்படைத் தத்துவத்தையும் தேடிப்பார்த்தால். பெண்ணுக்கு முந்திய இயற்கை ஆண். ஆண் என்ற இயற்கையில் இருந்ததான் பெண் என்ற இயற்கை பிறக்கின்றது. பின்னர் முழு உலகுக்கும் ஆண் பெண் என்ற இயற்கைகளை பெண் என்ற இயற்கை பிரசவிக்கின்றது.  இனியாவது பெண்ணின் இயற்கை குறித்து யாராவது கவிதை எழுதும் போது ஆணையும் ஒரு வரியில் சேர்த்துக் கொள்ளுங்கள். நானெல்லாம் பாவம்...

காற்றில் கலந்து வந்த லாவன்யாவினதும் சுகன்யாவினதும் குரலினிமையை ரசித்தபடி நாங்கள் இருவரும் கதைபேசி காட்சி பார்த்து அரங்கிற்கும் காது கொடுத்தபடி சுற்றிக் கொண்டிருந்தோம். பாடலிற்குள்ள வலிமை அலைபாய்ந்திருந்த எல்லா மனதையும் அப்படியே கூலாக்கி ஒரு ரிலாக்ஸ் நிலைக்குக் கொண்டு வந்து விடும். அந்த இதமான கூலில் எவ்வளவு ஹொட்டான விசயத்தையும் டிஸ்கஸ் பண்ணலாம் என்று நர்மதா அல்லது ஓவியா சொன்னது எவ்வளவு யதார்த்தமானது. அவ்வளவு இதமான சுகமான கால நிலை. 

அது எவ்வளவு  நல்லபடியாகவே போய்க் கொண்டிருந்த நிகழ்வுக்கு மத்தியில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடல் காதுக்குள் சிறு பூச்சி புகுந்துவிட்டதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது. சொரசொரப்பான சொப்பின்ங் பைக்குள் கரப்பத்தான் புகுந்தமாதிரியும் அதை எடுத்துக் கொள்ளலாம். இத்தனைக்கும் அந்தக் கரப்பான் எப்படிப் புகுந்தது என்று தெரியாது. ஆனாலும் அந்தக் கரப்பான் புகுந்திருக்கக் கூடாது. நிகழ்ச்சியின் தலைமை அதை விரட்டியிருக்க வேண்டும் ஆயினும் அதுவும் நடக்கவில்லை... நான் குட்டியனின் முகத்தைப் பார்த்தேன் அவன் அலாதியாகச் சிரித்தான் ஆயினும் அவனுக்கு கரப்பான் சொப்பினுக்குள் புகுந்த செய்தி தெரியாதுதான்...

தொடரும் .............

No comments:

Post a Comment