Sunday, May 24, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 06 ...................ஊடறு + மலையகப் பெண்கள்


அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

அந்தக் கரப்பான் பூச்சி மேட்டர்கள் குறித்து நான் எதுவும் எழுதவில்லை. குறிப்பாக முஸ்டீன் எழுத முடியாது அதற்கு ஆயிரத்தெட்டுக் காரணிகள் உண்டு. காரணத்தைச் சொல்லாவிட்டால் மண்டையே வெடித்துவிடும்  என்று உணர்பவர்கள் (கலந்துகொள்ளாதவர்கள் ஊடறுவின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் நாள் நிகழ்வுகளை ஒருமுறை அமைதியாக இருந்து செவிமடுங்கள், பெரும்பாலும் அனைத்து நிகழ்வுகளும்  ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அந்த நேரத்தில் ரெக்கோடரை ஓப் பண்ணாமல் வைத்திருந்தால் நீங்கள் லக்கி) அது சின்னப் பூச்சிதான் மோர்ட்டீன் ஸ்பிரேயை எடுத்து ஒரு பிரஸ் பண்ணி இருக்கவேண்டிய றஞ்சி  அதைச் செய்யாமல் அப்போதுதான் வெளியே வந்தார். கூடவே யோகியும். 

யோகி மலேசியாவில் இருந்து இந்த நிகழ்வுக்காக வந்திருந்தார். நாம் நினைப்பது போல சப்பை மூக்கும் புதைந்த கண்களும் கொண்ட மலாயச் சாடை கொண்ட பெண்ணல்ல. ஒரு தென்னிந்தியத் தோற்றம் கொண்ட முகச்சாயல். மலேசியத் தழிலை காது குளிரக் கேட்க வேண்டும் என்ற ஆசை எனக்கு எப்போதும் இருக்கின்றது. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை இந்திய ஜாடைத் தமிழ் ஒருபோதும் சாத்தியமாக்கியதில்லை. யோகி மலேசியாவில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதாக நிகழ்ச்சி நிரலில் பார்த்த ஞாபகம், யோகி வந்த வேகத்தைப் பார்த்தபோது காலையில் ஷாமிலா சொன்னவைகள்தான் ஞாபகத்துக்கு வந்தன. 

காலையில் எழுந்ததும் ஷாமிலாவுக்கு கட்டாயம் டீ குடிக்க வேண்டும். அது போலவேதான் மாலையிலும். எனக்கு அப்படியல்ல டீ ஒரு மேட்டரே கிடையாது. காலையில் எழும்பியதும் ஒரு பெரிய கிளாஸில் தண்ணீர் அருந்த வேண்டும். நாள் முழுதும் குறைந்தது ஆறு லீட்டர் தண்ணீராவது குடிப்பேன். இரவு படுக்கும் போதும் அப்படித்தான் இடையில் கண்விழித்தால் ஒரு ஐந்நூறு மில்லியை இறக்கிவிட்டுத்தான் அடுத்த வேலை. நிறைய நோய்களில் இருந்து என்னை இப்போதும் பாதுகாப்பதில் தண்ணீர்தான் அதிக செல்வாக்குச் செலுத்துகின்றுது. தூங்கும் முன்னர் தூங்கி எழுந்த பின்னர் சாப்பிட முன்னர் குளிக்க முன்னர் இரண்டிரண்டு தம்ளர் நீர் அருந்திப் பாருங்கள் நல்ல பயனைத் தரும். யான் பெற்ற இன்பம் பெறுக அனைவரும்.


காலையிலேயே ஷாமிலா குட்டியனோடு சென்று டீ குடித்துவிட்டு நடந்த விடயங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். ரஜிணிக்கு கட்டாயம் காலையில் டீ வேண்டும். அது போல யோகிக்கும் டீ வேண்டும். மற்றவர்களுக்கு காலையில் டீ விருப்பம். இங்குள்ள அளவான டீகப் யோகிக்கு போதவில்லை போலும். இலங்கைல இருக்கும் சின்னக் கப் தனக்குப் போதாது என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டு ஒரு கப் கோப்பி, ஒரு கப் டீ இரண்டையும் குடித்துவிட்டுத்தான் யோகியால் நிம்மதிச் பெருமூச்சு விட முடிந்ததாம். சட்டென அந்த ஞாபகம் வரவே வெளியே வந்த யோகியிடம் நகைச் சுவையாகக் கேட்டேன் என்ன டீ குடிக்கவா போறீங்க என்று? ஒரு சிரிப்புத்தான் பதிலாக வந்தது. அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை ஆனால் சமையல் கட்டுப் பக்கம் போவது மட்டும் தெரிந்தது. 

உள்ளே அரங்கிற்குள் இன்னும் கரப்பான் பூச்சியின் கொசுறுச் சப்தம்தான் கேட்டுக் கொண்டிருந்தது. சில பிரச்சினைகளைப் பேசும் போது நம்மிடம் தெளிவு இருக்க வேண்டும். அந்தத் தெளிவு இல்லாத போது நாம் அமைதியாக இருந்துவிட வேண்டும். ஒரு பிரச்சினை பூதாகரமாகின்றதென்றால் அதற்கான அடிப்படைக் காரணிகளில் இருந்து முழுமையாகன தெளிவு கிடைத்தால் மட்டுமே அதற்குத் தீர்வுகாணும் விதத்தில் ஏதாவது சொல்ல முடியும். அதைவிட்டு விட்டு கேள்விப்பட்ட விடயங்களை வைத்துக் கொண்டு சீரியசான கலந்துரையாடலுக்குச் செல்வதும் ஒன்று சும்மா டீ குடிக்கும் போது நொறுக்குத் தீனிகளைக் கொறித்துக் கொண்டே கதையாடல் செய்வதும் ஒன்று.

 நேரம் வீணாகக் கழியக் கூடாது. சும்மா இருக்கும் போது பேசும் மேட்டர்களை பொதுத்தளத்தில் வாதத்துக்குட்படுத்துவது அவ்வளவு ஆரோக்கியமாகத் தெரியவில்லை. அல்லது நிகழ்ச்சி நிரலில் அதை உள்ளடக்கியிருக்கலாம் அப்பிரச்சினைகள் குறித்து நல்லதொரு ஆய்வைச் சமர்ப்பித்திருக்கலாம். அதிலிருந்து கேள்வி பதிலை நோக்கி நகர்ந்திருந்தால் உப்புச் சப்பில்லாத கேள்விகளும் பிறந்திருக்காது உணர்ச்சிவசப்பட்ட கலந்துரையாடலும் வந்து நேரத்தை வீணடித்திருக்காது. அல்லது சரோஜா சிவச்சந்திரனின் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்ற தலைப்பை இந்த விடயங்கள்பால் திருப்பியிருக்கலாம்.

 சமகால புதுவடிவ வன்முறைகள் சமூகவெளி, சமூகவலைத்தளங்கள், இணையவெளி, மற்றும் இன்னபிற என்று போயிருந்தால் கதையே வேறு. ஆனால் ஆண்களையும் வைத்து இந்தத் தலைப்பில் ஆய்வு சமர்ப்பித்திருக்க வேண்டும். ஒரு முழு நாளும் பேசுவதற்கு அதில் விசயமிருக்கு. பெண்களுக்கெதிரான எழுத்து வன்முறை என்பது இப்போது கட்டாயம் பேசப்பட்டேயாக வேண்டும். எதிர்காலத்தில் அதைக் கணக்கிலெடுத்தால் நல்லது என்று ஊடறுவுக்குப் பரிந்துரைக்கின்றேன். றஞ்சி கவனித்திற் கொள்வாராக.

எனக்கும் குட்டியனுக்கும் கம்பனி கொடுக்க வெளியே தம்பி பாரதியும் இருந்தார். அவரைப் பார்த்து நேற்று மாலையே குட்டியன் ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டான். அதனால் இன்று காலை பாரதியுடன் அவன் மீண்டும் ஒன்றித்துப் போவதில் சிக்கல் இருக்கவில்லை. சரோஜா சிவச்சந்திரனின் மகன்தான் பாரதி. அதிக ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பையன். கையில் கெனொன் 7டி கெமரா இருந்தது. ஒரு திரைப்படமே எடுக்க முடியுமான நல்ல வகைக் கெமரா அது. அந்தக் கெமராதான் பாரதியின் தரத்தை எனக்குக் காட்டித் தந்தது. சில குறும்படச் செற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அவர் சொன்னார். அது அவரது பொழுது போக்கு மட்டுமே. ஆனால் அவருடைய கல்வி தொழிநுட்பவியல் சார்ந்ததாக இருந்தது. கொஞ்ச நேரம் எந்த இடையூறும் இல்லாமல் இருவரும் கதைத்துக் கொண்டிருந்தோம். இதற்கு முதல் நீண்ட காலம் பழகிய உறவின் கனதி இருந்தது.  ஒரு பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டுமோ அப்படி தரமிக்க பிள்ளையாக பாரதியை வளர்த்து விட்டிருக்கின்றார் சரோஜா அம்மா. அவனிடமிருந்த பணிவும், மென்மையும், அமைதியும் நிதானமும் மிகவும் பெருமதியானவை. பேராசிரியர் சிவச்சந்திரனுக்கும் சரோஜா சிவச்சந்திரனுக்கும் பெயர் எடுத்துக் கொடுக்கும்படியான நல்லபிள்ளையாக அவன் நிச்சயம் எதிர்காலத்தில் மிளிர்வான் என்று நான் திடமாக நம்புகின்றேன். அவ்வளவு விரைவாக யாருடனும் அவன் அண்டமாட்டான். ஆனால் குட்டியனோடு பாரதி கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

குட்டியனை நிறைய போட்டடோவும் வீடியோவும் எடுப்பதிலேயே பாரதியின் அதிக நேரம் கழிந்தது. அப்போதுதான் றஞ்சியும் யோகியும் திரும்பி வந்தார்கள். யோகியைப் பார்த்தால் இரண்டு கப் டீ குடித்திருந்த மாதிரி தெரிந்தது. ஆனாலும் நான் அது குறித்துக் கேட்கவில்லை. சிலருக்கு நகைச் சுவை அலர்ஜி. ஆனால் யோகியைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. நல்ல ஜொலி டைப் போன்று தெரிந்தது. எதையும் வெளிப்படையாகவே எடுத்துக் கொள்ளும் தன்மையுடைய நபர் என்றும் எனது அவதானிப்புக்குத் தெரிந்தது. அவர்கள் இருவரும் குட்டியனோடு போட்டோ எடுக்குமாறு கேட்டேன்.

மிக மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்கள். ஒரு காலத்தில் குட்டியன் மலேசியாவுக்கோ அல்லது சுவிஸூக்கோ சென்றால் ஞாபகார்த்தமாக அவர்களுக்குப் பரிசளிக்க இந்த போட்டோ  உதவக் கூடும். அவர்கள் இருவரோடும் அவனும் வெகு இயல்பாக இருந்து போஸ் கொடுத்தான் அதை பாரதித் தம்பி கிளிக்கிக் கொண்டார்.

ஒரு சின்ன மழை பெய்து காலநிலை இதமாக இருந்தது. ஏலவே இருந்த குளிருக்கு மழைக்குளிர் இன்னும் உரம் சேர்த்தது. உள்ளே நுளைந்த கரப்பான் வெளியேறி இருக்க வேண்டும். பழையபடி நிகழ்ச்சி நிரல்படி ஏனைய அம்சங்கள் இடம்பெறத் தொடங்கியிருக்க வேண்டும். உள்ளே சுமுகமாக ஒரு குரல் ஒளித்துக் கொண்டிருந்தது. 

இன்றைய தினத்தில் முக்கியமான சிலரைச் சந்திக்கக் கிடைத்ததுதான் பெறுமதியான விடயமாக இருந்தது. குறிப்பாக லறீனா அப்துல் ஹக், ஜெஸீமா ஹமீட் போன்றவர்கள். உள்ளூரில் இருந்தாலும் தூரத்திலேயே இருக்கும் உறவு. அது கூட ஒரு துன்பம்தான். லறீனாவுக்குக் கொடுக்கவேண்டும் என்று நீண்ட நாள் காத்திருந்த எனது சிறுகதைத் தொகுதியான ஹராங்குட்டியை நிகழ்வின் ஆரம்பத்திலேயே கொடுத்த போதுதான் டக்கென்று ஒரு விடயம் பொறி தட்டியது. அட்டைப்படத்தில் இருந்த துப்பாக்கிதான் அந்த ஞாபகத்தையே கொண்டு வந்து சேர்த்தது.

எப்படியும் அவர்கள் வந்திருப்பார்கள். அவர்கள் வராமல் இந்த நாட்டில் ஒரு நிகழ்வு நடந்துவிடுமா என்ன! அவர்களை அடையாளப்படுத்திக் கொள்வது இங்கு அவ்வளவு கஷ்டமாக இருக்காது. பார்வையால்  அலசிக் கொண்டிருக்கும் போதே கண்ணில் பட்ட ஒருவர் சந்தேகத்தையும் சேர்த்தே விதைத்தார். நிச்சயமாக அவர் அவர்களில் ஒருவாராகத்தான் இருக்க வேண்டும்...

தொடரும்.............

No comments:

Post a Comment