Friday, June 5, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 08 ..... ஊடறு + மலையகப் பெண்கள்


அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

மலையகத்தில் இருக்கும் கொய்யாமரங்கள் வித்தியாசமானவை. பெரிதாக வளராது, ஆனால் நிறையக் காய்க்கும், பாடசாலைக் காலத்தில் கல்விச் சுற்றுலா வென்றிருந்த போது நோட்டன் பிரிஜ் பகுதியில் ஒரு கொய்யாக் காடே மஞ்சல் நிற மின்குமிழ் பொருத்தப்பட்டது போல அவ்வளவு அளகாகக் காட்சியளித்தது. அந்த மஞ்சல் அழகைக் கொஞ்ச நேரம்தான் ரசிக்கக் கிடைத்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது போல அந்த மஞ்சல் மொத்தமாக இல்லாமலேயே போயிற்று. எங்கள் மாணவர் படை உள்ளே நுளைந்து வெளியேறியது மட்டும்தான் தெரிந்தது. அங்கு முதலில் நுளைந்து ஒரு மரத்தை மொட்டையடித்துவிட்டு அட்டைகளின் நடமாட்டத்தைக் கண்டு கிடைத்தவரைக்கும் போதும் என்று உடனடியாக வெளயேறியவன் நான்தான். அப்போதும் இரண்டு அட்டைகள் டவுசருக்குள்ளேயே நுளைந்து வசதியாக இரத்தம் குடித்தக் கொண்டிருந்தன. அதுதான் நான் வாங்கிய முதலாவது அட்டைக்கடி. என்னை முழுமையாக அச்சுறுத்திவிட்ட கடி. அன்று ஏற்பட்ட அட்டைப்பயம் இன்றுவரை விட்டபாடில்லை. அவ்வளவு இரத்தம் குடித்திருந்தது. 

ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பின்புறமாக இருந்த ஒற்றைக் கொய்யாப்பழத்தை பார்த்து அதைச் சுவைக்க முடீயவில்லையே என்று பெருமூச்சுவிடத்தான் முடிந்தது. கைக்கெட்டும் தூரத்தில் இல்லாத எதையும் பார்த்துப் பெருமூச்சு விடுவது மனித இயல்புதானே. 

வெளியே கெக்கிராவ ஸஹானா மற்றும் சுலைஹா ஆகயோரின் குடும்பத்தவர்கள் அமர்ந்திருந்தார் கள். அங்கிருந்த சின்னஞ்சிறுசுகளை மழைக்குளிர் வாட்டிக் கொண்டிருந் தது. குட்டியன் அவர்களோடும் கொஞ்ச நேரம் ஐக்கியமாகி விளையா டிக் கொண்டிருந்தான். அவன் மட்டும் கிஞ்சிற்றும் குளிரைப் பொருட் படுத்தவில்லை. 

இந்த நிகழ்வில் எனது கவனத்தை மற்றுமோர் அம்சம் அங்கு சமுகமளித்திருந்த ஆண்கள்தான். ஒரு பெண்ணியச் சந்திப்புக்கு தாம் சார்ந்த பெண்களை அழைத்துக் கொண்டு வந்துவிட்டுவிட்டு வெளியே அவர்கள் உலாத்திக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் ஜெஸீமாவின் கணவர் கலீல்  அவர்களும் எங்களோடு இணைந்து கொண்டார். அவரோடும் கொஞ்ச நேரம் மலையகத்தின் கல்விப் போக்குகள் குறித்து கதைத்துக் கொண்டிருந்தேன். தோழர் கிங்ஸ்லி அவர் குறித்து நிறையவே தகவல்களை வழங்கியிருந்தார். அதன் பேரில் அதிகரித்த மதிப்பு அவர் மீது இருந்தது. தமது மனைவியரை அழைத்துவந்து விட்டு அவர்கள் பேசுவதைக் கேட்டு இன்புற்று, அவர்கள் நிகழ்வுக்குத் தயாராவதற்கு உச்சபட்ச உதவிகளயும் அர்ப்பணிப்புக்களோடு செய்து அப்பெண்களை இன்னும் உயர்ந்த இடத்திற்குக்கொண்டு செல்வதற்கு அவர்கள் நல்கும் ஒத்தாசைகளை அப்பெண்கள்தான் பதிவு செய்ய வேண்டும். ஒரு பெண்ணுக்கு நல்ல தந்தையும் நல்ல கணவனும் அமைவதைப்போல வேறு பேறு எதுவும் கிடையாது. எல்லா ஆண்களும் தமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய மிகக் காத்திரமான கேள்வி நான் எனது மனைவிக்கு நல்ல கணவனாக இருக்கின்றேனா என்பதுதான். ஒரு நல்ல கணவனால் நிச்சயமாக எப்பேர்ப்பட்ட குணமுடைய பெண்ணையும் மாற்ற முடியும் என்பது எனது கணிப்பு. 

பெண்ணியச் செயற்பாடுகளில் அதிகம் ஈடுபாட்டோடும் நற்பெயரோடும் பாடுபடும் பலருக்கு அவர்களின் வாழ்க்கைத்துணை எத்தகைய உந்துதலை அளிக்கின்றார் என்பதற்காகவேனும் அவர்கள் ஓர் அமர்வைச் செய்ய வேண்டும். நற்பெயரை இழந்து ஒழுக்கங்கெட்டு தடம்புரண்ட பலர் பெண்ணியம் என்ற கோசத்தை தமது இருப்புக்காகவும் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் பாவிக்கின்ற தளமாகக் கொண்டு செயற்படுவதையும் எச்சரிக்கையோடு பதிவு செய்ய வேண்டியிருக்கின்றது. அது எழுத்தானாலும் சரி, தனிப்பட்ட அல்லது பொது வாழ்வானாலும் சரி. தனிப்பட்ட வாழ்வில் ஜெயித்தவர்களால்தான் இதய சுத்தியோடும் திடகாத்திரத்தோடும் பொது வாழ்வில் ஏனைய பெண்களின் மேம்பாட்டுக்காகக் குரல் கொடுக்க முடிவயும் அந்தச் செயற்பாடு நேர்மையானதாக இருக்கும் அவர்கள் சொல்லும் ஆணாதிக்கத்திற்கு வலுவானதொரு அர்த்தம் இருக்கும். தனிப்பட்ட வாழ்வில் தோற்றவர்கள் தமது ஆற்றாமையையும் வேதனைகளையும் ஆத்திரங்களையும் ஆணாதிக்கம் என்ற அஸ்திரமாக மாற்றுவதிலேயே குறியாக இருப்பார்கள் யாரையாவது நோக்கி அதை எய்து கொண்டிருப்பதிலேயே திருப்தி காண்பார்கள். இத்தகைய செயற்பாட்டளர்களைத்தான் என்போன்றவர்கள் சல்லிக் காசுக்கும் கணக்கெடுப்பதில்லை. மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது அவர்களைப்பற்றிக் கவலையும் கிடையாது. 

இந்தப் பெண்ணியச் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்களின் கருத்துக்களை இந்தப் பரப்பில் அறிந்து கொள்ள ஆவல். பார்ப்போம் எத்தனை பேர் அதைச் செய்கின்றார்கள் என்று. ஏனெனில் என்னைப் பொருத்தமட்டில் சும்மா உறவும் வெறும் நட்பும் வேலைக்காகாதவை. பாதையோரத்தில் தாமாக முளைத்து எந்த இலக்குமற்று இருக்கும் செடிகளுக்கு ஒப்பானது. எதிர்காலத்தில் யாருடைய கவனத்தையும் ஈர்க்காமலேயே அவை மடிந்து போய்விடும். ஊடறுவும் அந் இணைப்பில் உள்ளவர்களும் அப்படி ஆகிவிடக்கூடாது. ஏனெனில் அவர்களின் செயற்பாட்டுத்தளம் அத்தகையது. 

நிகழ்வுகளில் பெரும்பகுதி முடிந்திருந்தது. ஓவியாவும் நர்மதாவும் வெளியே சென்று மலையகத்தை ஒரு பார்வை பார்த்துவரலாமா என்று கேட்டார்கள். அவர்களின் விருப்பத்தை ஏற்பாட்டாளர்களிடம் முன்வைத்தேன். அதுதானே முறை. அவர்களும் ஒரு வாகனத்தை அதற்காக ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனால் அந்த வாகனச் சாரதியுடன் எதுவும் நாம் கதைக்கவில்லை. பயணத்தில் ஓவியா மற்றும் நர்மதாவுடன் மதுரைக்காரி ரஜணியும் இணைந்து கொண்டார். அந்தப் பயணத்தில்தான் ஓரளவு காத்திரமான கருத்துப் பரிமாற்றங்களைச் செய்துகொள்ளமுடியுமாக இருந்தது. மலையகம் குறித்த எனது தேடல் மற்றும் அந்த மக்களின் வாழ்வின் பின்னால் ஒரு கோர அரக்கனாக நின்று மிரட்டிக் கொண்டிருக்கும் அரசியல் மற்றும் சமகால வாழ்வியல் முன்னேற்றங்கள் என்று பலதையும் பேச முடிந்தது. 

ரஜணி எதையும் ஆழமாக அவதானிக்கக் கூடியவர் அதிர்ந்து பேசத் தெரியாதவர். ஆனால் வலுவான திடமான மனது கொண்ட எளிமையான ஓர்மைக்காரி. வழக்குரைஞராக இருப்பதாலோ என்னவோ அதிகம் கேள்வி கேட்கும் பண்பு இயல்பாகவே இருந்தது. சின்னச் சின்ன விசயங்களைக் கூடக் கேள்விகால் துளைத்தெடுத்து உண்மைகளை பாதுகாப்பாகக் கவணத்திற்கொள்ளும் பண்புடையவாராகவே எனக்குத் தெரிந்தார். தேவையற்ற பேச்சுக்கள் குறைவு. ஆளுமையின் வீச்செல்லையைத் தீர்மானிப்பது அவரவரது இயல்பான பேச்சும் அதில் தொனிக்கும் கருத்தாழமும்தான்.

நர்மதா தொழிநுட்பத் துறை சார்ந்தவர். அவரது கணவர்  எனக்கு மிகவும் பிடித்தமான திரைத்துறையைச் சேர்ந்தவர். அவரது கணவரின் கதையை யூ ரீ வி திருடி தாண்டவமாகப் பெயர் சூடி சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து வெளியிட்ட சோகக் கதையையும்  பகிர்ந்து கொண்ட போது எனக்கு மனதில் தோன்றியது ஒன்றேயொன்றுதான். விருது பெற்ற புகழ்மிக்க சாதனைக் கவிஞர்களே மற்றவர்களின் கவிதைகளைத் திருடும் போது, கருத்துச் செறிவைக் கொப்பியடிக்கும் போது திரைக்கதை எம்மாத்திரம்? படைப்பிலக்கியவாதிக்கு ஒரு போதும் சரக்குப் பஞ்சம் வருவதில்லை. திருட்டுக்களால் அவனது ஆளுமையை முடக்க முடியாது. அவனோ அவளோ புதிது புதிதாக துளிர்த்துக் கொண்டே இருப்பர். ஆனால் கொப்பியடிக்கும் கூட்டத்திற்கு அப்படியல்ல புதிதாக யாராவது எதையாவது படைக்கும் வரைக் காத்திருக்க வேண்டும். பலர் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் எழுதுவதில்லை ஏன்? அதெல்லாம் ரகசியம்.

அப்பிரதேசத்தில் பார்ப்பதற்கு தேயிலைத் தோட்டங்களையும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியலையும் தாண்டி எமக்கு இருந்தது ஒரேயொரு நீர்வீழ்ச்சி டெவோன்தான்...
தொடரும்....

No comments:

Post a Comment