Tuesday, June 16, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 09 ................. ஊடறு + மலையகப் பெண்கள்


அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

மாலையான போது ஓவியா, நர்மதா,ரஜிணி உள்ளிட்டவர்கள் வேனில் எனக்காகக் காத்திருந்தார்கள். தோழர் கிங்ஸ்லிதான் வாகன ஏற்பாடுகளைச் செய்திருந்தார் என்ற படியால் மலையகத்து வாகனச் சாரதிகளிடம் ஒன்றுக்குப் பத்துமுறை கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளும் வாடகைப்பணம் தொடர்பில் நான் எதுவும் பேசவில்லை. மேல்கொத்மலைத் திட்டம், தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டு வசதிகள் மற்றும் லயன் வீடுகள் உட்பட அவர்களின் வாழ்க்கை மேம்பாடு குறித்தெல்லாம் பேசிக்கொண்டே டெவோன் நீர்வீழ்ச்சியை அடைந்தோம். பார்வையை அவ்வளவாக அது ஈர்க்கவில்லை. மனதைக் கிரங்கடிக்கும் அழகும் அங்கில்லை ஆயினும் ஒரு நீர் வீழ்ச்சி மெல்லிய கோடு போல இருக்கின்றது. சில வேளை அதை மிக அருகாகச் சென்று அதன் சாரலில் நனையுமளவுக்கேனும் ஏதாவது வசதி வாய்ப்புக்கள் செய்யப்பட்டிருப்பின் அந்த இன்பமே தனிதான். மனதுக்கு நெருக்கமானதொன்றாக அதை உணரச் செய்ய அரசுக்கு அக்கறையில்லை போலும்.

இயற்கை அழகும் பசுமையும் எப்போதும் இறுகிய மனதைச் சற்றுத் தளர்த்தி விடுவதில் வெற்றிபெறக் கூடியவை. மலையகத்தில் தாரளாமாக அந்த அழகு கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் எனக்கு ஆச்சரியமான விடயம் இந்த அழகும் பசுமையும் ஏன் இங்குள்ள சாரதிகளின் மனதினைத் தளர்த்தி கொஞ்சமேனும் நியாயத்தையும் கருனையையும் விதைக்கவில்லை என்பதுதான். கொஞ்ச தூரம் அப்படியே சுற்றிவிட்டு வந்திறங்க சாரதி இரெண்டாயிரத்து ஐந்நூறு என்று ஒற்றைக்காலில் நின்றான். இந்தப் பிரச்சினை எழும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் கேட்ட தொகை மிகவும் அநியாயமானது. அதறற்காக அவனுடன் நான் சண்டை போட முடியாது. நர்மதாவும் ஓவியாவும் அதை எதிர்பார்க்கவில்லை அதிர்ந்து போனார்கள். 

டொலரில் கணக்குப் பார்த்து சிறிய தொகைதான் என்று பணத்தை அள்ளி இறைத்து இவர்களைக் கெடுத்து வைத்திருப்பது வெள்ளைக்காரன்தான். மிகப் பெரிய ஏமாளிகள் என்றால் அது வெள்ளைக்காரர்களாகத்தான் இருக்கும். கேட்கும் தொகையைக் கொடுத்துவிட்டு நடைபோட்டுக் கொண்டே இருப்பான். எனக்கு ஆசை இந்த வாகனச் சாரதிகள் எல்லாம் சைனாக் காரனிடம் மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான். இப்போது நாங்கள் போய் வந்த பயணத்திற்கு ஐநூறு ரூபாய்க்கு மேல் அம்பது சதமும் கொடுத்திருக்க மாட்டான். தெரியாத பாசை அவனுடன் மல்லுக்கட்ட இவர்களால் முடியாது. கொழும்பு பெட்டாஹ் மார்க்கட்டில் சைனாக்காரன் பன்னும் அட்டகாசங்களைக் கண்டுகண்டு சிரித்தே அலுத்துவிட்டது. 

ஒரு அக்கப்போரை முடித்து  அதிருப்தியுடன் ரெண்டாயிரம் ரூபாய் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. மீட்டர் டெக்சி சிஸ்டம் வந்தால் மட்டுமே இப்படிப்பட்ட ஆட்களுக்கு பாடம் புகட்ட முடியும். எரிபொருட்களின் விலையை அரசு எவ்வளவு குறைத்தாலும் அதன பயனை மக்கள் அனுபவிக்கக் கிடைப்பதில்லை இப்படிப்பட்ட நபர்களால்தான். மலையக மக்கள் கொண்டிருக்கும் அன்பிலும் பற்றிலும் ஓரளவு தாக்கம் செலுத்தும் வகையில் இந்தச் சாரதிகள் நடந்துகொள்வது மிகவும் வேதனையானது. வாழ்க்கைக் கஷ்டம் என்பதற்காக  கிடைக்கும் சந்தர்ப்பத்தில் மொத்தமாகப் பிடுங்கிக் கொள்ள நினைக்கும் மனோநிலை மிகவும் அபாயகரமானது. இப்படிப்பட்ட குணமுள்ளவர்கள் அரசியல் வாதியானால்தான் மக்களுக்குச் சாபக்கேடு ஆரம்பிக்கின்றது. அதைத்தான் மலையக அரசியல்வாதிகள் இன்றுவரையும் நிருபிக்கின்றார்கள். 

எல்லோரும் இரவுணக்காகச் சென்று கொண்டிருந்தார்கள். இந்திய விருந்தாளிகளுக்கு இடியப்பம் தேடிக் களைத்துப் போனோம். கொழும்பில் எத்தனை மனியானாலும் எப்பொதும் எல்லாம் கிடைக்கும். ஆனால் இங்கு அப்படியில்லை. எல்லாம் நேரத்திற்குத்தான். அடுத்தது உணவு முறைகளும் பெரிதும் மாற்றமானது. ஹோட்டல்களை வைத்துத்தான் அந்த முடிவுக்கு வந்தேன். அங்குள்ள மெனு அதைப் பறைசாற்றியது.

சாமிலாவைக் குட்டியன் வதைத்து எடுத்திருப்பான். வரவர அவனது எடை அதிகரித்துக் கொண்டே செல்வதால் அவனைத் தூக்கிச் சுமப்பது அவளுக்குச் சிரமமானது. சரோஜா அம்மாவுடனும் பாரதியுடனும் அவர்கள் வெளியே சென்றிருப்பது அந்தச் சிரமத்தை ஓரளவுக்குக் குறைத்துவிடும். 

முதல் நாள் நிகழ்வுகள் முழுமையாக நிறைவு பெற்றிருந்தது. சந்திரலேகாவின் முகத்திலும் ரஞ்சியின் முகத்திலும் தெரிந்த திருப்தி நிகழ்வு வெற்றிகரமானது என்று எடுத்துக்கொள்ள வைத்தது. இரவுணவுக்குப் பின்னர் எல்லோரும் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றோம். அன்றைய நிகழ்வுகள் குறித்தும் அதன் போக்குகள் குறித்தும் அலசிக் கொண்டார்கள் நான் ஒரு பார்வையாளனாக அவ்விடத்தில் அவர்களின் பேச்சையே அவதானித்துக் கொண்டிருந்தேன். அதற்கிடையில் குட்டியன் வந்து அட்டகாசம் பண்ணத் தொடங்கினான். அவன் எல்லோரிடத்தும் தாவிக் கொண்டிருந்தான். றஞ்சி சுவிஸ் சொக்கலட்டுகளும் இன்னும் சில இனிப்புகளும் கொண்டு வந்தார். குட்டியனுக்கு அதிலெல்லாம் பெரிதாக ஈர்ப்பு கிடையாது ஆனால் நான் லேசுமாசான ஆள் கிடையாது. சொக்கலட் என்றால் அப்படியொரு பிரியம். அது போலதான் இனிப்புப் பண்டங்கள். 

குட்டியனுக்கான சொக்கலட்டுகளை றஞ்சி அக்கா என்னிடம் பொறுப்பளிக்கும் சாமிலா விநோதமகப் பார்த்துச் சிரித்துக் கொண்டாள். பூனையிடம் பொரித்த மீனைப் பகிர்தளிக்கக் கொடுப்பது போன்றது அந்நிகழ்வு என்பதை றஞ்சி அறிந்திருக்க வாய்ப்பில்லை. எல்லாம் சிரிப்போடும் கலகலப்போடும் மாறிய போதுதான் நிலைமையை மாற்றிவிட்டது ஓவியா மற்றும் நர்மதாவின் யாழ்ப்பாண விஜயம் குறித்த அறிவிப்பு......

தொடரும்...

No comments:

Post a Comment