Monday, June 29, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 11............. ஊடறு + மலையகப் பெண்கள்

அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

ஷாமிலா வாசிக்கத் தொடங்கியபோதே நான் டைமரை ஒன் பண்ணி விட்டேன். முழுமையாக வாசித்து முடிக்கும் போது பதினெட்டு நிமிடங்கள் போய் இருந்தது. மொத்த நிமிடக் கணக்கைச் சொன்ன போது ஷாமிலா அலறியடித்துக் கொண்டு ஐயையோ அவங்க நமக்குத் தந்திருப்பது பதினைந்து நிமிடங்கள்தானே. ஒரு மாதத்துக்கு முதலே பதினைந்து நிமிடம் என்று அறிவுறுத்திய பின்னர் மூன்று நிமிடங்களை மேலதிகமாக எடுத்துக் கொள்வது எப்படி நியாயமாகும். என்று புலம்பிக் கொண்டிருக்கும் போதுதான்  அந்த ஐடியா தோன்றியது..

முன்கூட்டியே மூன்று நிமிடங்களை மேலதிகமாக எடுத்துக் கொள்வேன் என்று அறிவிப்புச் செய்து விட்டு கட்டுரையை வாசிக்கின்றேன். அப்போது பிரச்சினை இருக்காது. அல்லது இதைவிடக் கொஞ்சம் வேகமாக வாசித்தால் அவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்துவிடலாம். என்ன செய்ய என்று சாமிலா கேட்கும் போது முதலாவது அம்சத்தைத் தெரிவு செய் என்று சொன்னேன். வேகமாக வாசிப்பது சிலருக்குக் கிரகிப்பது கஸ்டமாக இருக்கலாம் அதனால் இயல்பாக வாசிப்பது நல்லது அல்லது கட்டுரையில் தேவையற்றவை எனக் கருதும் விடயங்களை நீக்கிவிடலாம் என்றேன். மிக ரத்திணச் சுருக்கமாகத்தான் விடயதானங்களைச் சொல்லியிருக்கின்றேன் என்று ஷாமிலா சொன்ன போது தரப்பட்ட நேரத்துக்குள் தனது பேச்சை முடிக்க நினைக்கும் அந்தப் பண்பு பற்றிய எண்ணவோட்டமே என்னை மேவி நின்றது. 

பலருக்கும் வரையறுக்கப்பட்ட நேரம் குறித்து எந்தவிதமான பொறுப்புணர்வும் இருப்பதில்லை. எந்தவொரு நிகழ்வுக்கும் இத்தனை நிமிடங்கள் என்று நேர வரையறை பொதுவாக இருக்கும். பேச்சாளர்களுக்கு தலைப்புக் கொடுக்கும் போதே நேரத்தின் அளவையும் கொடுத்துவிடுவதன் நோக்கமே எப்பேர்ப்பட்ட பிரபஞ்சத்தின் அளவு தலைப்பாயினும் குறிப்பிட்ட நேரத்துக்குள் விடயத்தைச் சொல்லி முடிக்க வேண்டும் என்பதற்காகவே. அதைவிடுத்து தரப்பட்ட நேரத்துக்குள் தனது பேச்சை முடிக்க முடியாது போனால் அவரெல்லாம் என்ன பெரிய பேச்சாளராக இருந்தும் என்ன...!!

சிலருக்கு நேரத்தைப் பற்றிக் கவலையே கிடையாது. தாம் என்ன தயார்படுத்தினோமோ அதைச் சொல்லிவிட்டுத்தான் அடுத்த வேலை, உங்கள் நேரம் முடிந்துவிட்டது என்று எத்தனை துண்டுகள் அனுப்பினாலும் அதை அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. அப்படிப்பட்டவர்களை எதிர்கொள்ள நேர்கையில்தான் மைக்கினுடைய சவுண்ட்டைக் கட் பண்ணி விடத் தோனும். சத்தம் இல்லாது வாயைச் சப்பிக் கொண்டிருந்தால் அவர்களாகவே போய் அமர்ந்து கொள்வார்கள். அப்படி சில இலக்கியக் கூட்டங்களில் நடந்துமிருக்கின்றது. இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் மட்டுமல்ல பேராசியர்கள் கூட இந்த விடயத்தில் அரசியல் மேடைப் பேச்சாளர்கள்போல அவ்வப்போது சில இடங்களில் மாறிப் போவதும் உண்டு. நல்லவேளை பெண்கள் சந்திப்பில் அவ்வாறான துரதிஷ்டங்கள் நிகழும் வாய்ப்புகள் கருக்கொள்ளும் போதே தலைமைதாங்கும் நபர் அதைப் பக்குவமாகக் கையாண்டதாக ஷாமிலா குறிப்பிட்டபோதுதான் நேரம் குறித்த அவளது கவலையின் உள்ளார்ந்த அவதானத்தைப் புரிந்து கொள்ள முடிமாக இருந்தது. அந்தக் காது கடிச்சான் குஞ்சுகளோடு சாமிலாவை ஒரு முறை ஒப்பீடு செய்து பார்த்தேன், என்னையறியாமலேயே சிரித்துவிட்டேன். 

ம்ம் ஷாமிலா, ரெண்டொரு நிமிடம் முன்னப் பின்னே ஆகுவதில் தப்பில்லை. ரெண்டொரு நிமிடம்தான், அதுவே நாலஞ்சி நிமிசங்களாக இருந்தால் தப்புதான்.

றஞ்சி இந்தவிடயத்தில் அதிக கவணம் செலுத்தியிருப்பார் போல. நேரத்துக்குள் நிகழ்வை நிறைவு செய்யாவிட்டால் மறுநாள் அரங்கில் உரையாளர்களும் கதிரைகளும் மட்டும்தான் அரங்கில் இருக்க வேண்டி நேரலாம். 

எல்லோரும் தூங்கியிருந்தார்கள். நேரம் இரண்டு மணியையும் தாண்டியிருந்தது. இதமான குளிர் போர்வைக்குள் சுருண்ட குட்டியனை அசையாமல் கட்டிப்போட்டிருந்தது. முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு  அன்றே சிலர் கிளம்பியிருந்தார்கள். ஆயினும் துரதிஷ்டவசமாக அவர்களால் அன்றைய காலநிலையை வெற்றிகொள்ள முடியாமல்போகவே அவர்களும் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே தங்குவதற்கு முடிவெடுத்திருந்தமை பாரியதோர் எதிர்பாராத நிருவாகச் சிக்கலைத் தோற்றுவித்திருந்ததையும் அதை வெற்றிகரமாக எதிர் கொள்வதற் காக றஞ்சி, சந்திரலேகா, மற்றும் கிங்ஸ்லி ஆகியோர் அத்தனை குழப்பங் களுக்குள்ளும் பம்பரமாக இயங்கிக் கொண்டிருந்ததையும், முகம் சுளிக்காமல் விருந்தினர்கள் திருப்தியுறும் வகையில் அவர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுப்பதற்காகக் பரிமாறிக் கொண்ட கருத்துக்களும் எனது காதிலும் விழுந்திருந்து. அப்போது அதன் கனதியை என்னால் உணர்வதற்கு வாய்ப்பிருக்கவில்லை. ஆனால் நித்திரை கொள்வதற்கு முன்னர் இந்நிகழ்வு மனத்திரையில் சிம்மாசனமிட்டு ரகளை பண்ணிக் கொண்டெ இருந்தது. 

இரவுக்கு ஒரு மகிமை இருக்கின்றது. பொதுவாக நித்திரைக்குச் செல்லும்போதுதான் இரவு தன் மகிமையை வெளிப்படுத்தும். அதாவது அன்றைய தினத்தில் வெகுவாக நம்மைப் பாதித்த சம்பத்தின் அல்லது பேச்சுக்களின் அல்லது நிகழ்வுகளின் சாரத்தை இரவு நமக்குள் தூவி விடும். அந்த நினைவலைகளில் பலர் மிதந்து மறைவார்கள், சிலரை நாம் மனதில் இருத்திப் பாராட்டுவோம், சிலரை வெறுத்து ஒதுக்கிவிடுவோம், சலருக்குச் சாபமும் கொடுப்போம் , சிலரை மட்டும் மனதார வாழத்துவோம். இரவு ஒருவனில் நிகழ்த்தும் சித்துவிளையாட்டு இது. றஞ்சி மற்றும் சந்திலேகா தோழர் கிங்ஸ்லி ஆகியோர் மீது மதிப்பும் மரியாதையும் அதிகரித்த மற்றுமோர் சந்தர்ப்பம் இது. எப்போதுமே இரவு தூங்கச் செல்லும் போது அன்றைய நிகழ்வுகள் குறித்து ஒரு முறை சுயவிசாரனை செய்து கொள்ளும்படி இஸ்லாமும் வலியுறுத்துவதால் எப்போதும் அதில் கூடுல் அக்கறை செலுத்துவேன். 

யாருடைய மனமேனும் நோகும்படி நான் நடந்து கொண்டேனா, இன்றைய பொழுதில் நான் பிரயோகித்த வார்த்தைகள் எத்தகையைவை, அவை யாருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்குமா என்று மீட்டிப் பார்க்கத் தோன்றாத மனிதர்கள் தமது மனசாட்சியைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று இந்தப் பெண்ணியச் சந்திப்புக்காக வந்து கலந்து கொண்டவர்களில் சிலரின் செயற்பாடுகள்தான் சற்றுக் கவலையை ஏற்படுத்தியிருந்தது. இப்படி ஒரு சுயவிசாரணையைச் செய்து கொள்ளும்போதே அவரவர்க்குத் தெரியும் அவரவர் விட்ட பிழைகள் அல்லது எல்லாமே. சரி தவறு உட்பட.

நிகழ்வுகள் வெற்றிபெறுதல் என்பதற்குப் பின்னால் எத்தனை பாரிய உழைப்பிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அங்கு யாருமில்லை. ஏனெனில் எல்லோரும் ஏதோவொருவிதத்தில் ஏதாவதொரு நிகழ்வை ஏற்பாடு செய்து அதின் பின்னால் நின்று உழைத்தே இருப்பார்கள். ஆனாலும் சில பொழுதுகளில் பொதுப்புத்திக்கு அதெல்லாம் மறைபட்டுப் போவதுமுண்டு. யார் கையில் இதெல்லாம் உண்டு....

நேரம் அதிகாலையைத் தொட்டுவிட்டது, இனிக் கொஞ்சம் தூங்கினால் நல்லது போன்று தோன்றியது.

தொடரும்...

No comments:

Post a Comment