Sunday, June 21, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 10 ..............ஊடறு + மலையகப் பெண்கள்

அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

ஓவியா மற்றும் நர்மதாவின் யாழ்ப்பாண விஜயம் குறித்த அறிவிப்பு உண்டுபன்னிய சலசலப்புக்கு நான் ஒரு பார்வையாளனாக மட்டுமே இருக்க முடிந்தது. ஓவியாவைப் பொருத்தமட்டில் இலங்கைக்கான விஜயம் என்பதே யாழ்ப்பாணம் மற்றும் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்குச் சென்று வருதல் என்பதாகவே இருந்தது.

யுத்த பூமி என்றால் அது வடக்குதான் என்ற மனோநிலையைத்தான்  பல வெளிநாட்டு அதிதிகளிடம் காண்கின்றேன் யுத்த பூமிக்கான விஜயம் என்றால் அது யாழ்ப்பாணத்திற்குப் போய் வரவேண்டும் என்பதாகவே இருக்கின்றது. ஆயினும் கிழக்கை யுத்தபூமியாகக் கருதி அங்கும் விஜயம் செய்யும் மனோநிலை எப்படி வெளிநாட்டு அதிதிகள் பலருக்கும் இல்லாமல் போனது என்பது எனக்கு இன்னும் புரியாத புதிர்தான். இறுதி யுத்தம் ஆரம்பித்ததே கிழக்கில் இருந்துதான்.

2006 ஜூலை இறுதியில்  மூதூரில் தொடங்கி 2008 மார்ச் வரை மிகப்பலமான யுத்தம் கிழக்கில் இடம்பெற்றது. கிழக்கில் 2008 ஏப்ரலில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது அதன்பின்னர் வடக்கு யுத்தம் சூடுபிடித்தது. 2008 மே தொடக்கம் 2009 மே வரை ஒரு வருட காலம் வடக்கில் இறுதி யுத்தம் இடம்பெற்றது. அரச படைகளுக்கு  கிழக்கை முழுமையாக மீட்டெடுக்க எடுத்த காலப்பிரிவிலும் பார்க்க வடக்கை மீட்க எடுத்த காலப்பிரிவு குறுகியதாகும். ஆன போதும் யுத்தம் என்றால் முள்ளிவாய்க்கால் அவலம் மட்டுமே எல்லோர் மனதிலும் பதிந்துவிட்டமை கிழக்கு மக்கள் பட்ட துன்பங்களை அப்படியே ஒதுக்கிவிட்டது போலத் தோன்றுகின்றது. எப்படிப்போனாலும் எங்கு நடந்தாலும் யுத்தம் என்பதன் விளைவுகள் எப்போதும் ஒரே மாதிரித்தான் இருக்கும் நாடு, தேசம், இனம், மொழி, நிறம், சமயம் கடந்து அதன் விளைவுகள் ஒன்றிலிருந்து ஒன்று மாறாதது. மனித அவலம் மட்டுமே இறுதி அறுவடை. எஞ்சி நிற்பது கண்ணீர் மட்டுமே.

இனிவரும் காலங்களில் இறுதி யுத்தம் பற்றி அறிய ஆவல் உள்ளவர்கள் மூதூர், வெருகல், மாவிலாறு, கொக்கட்டிச் சோலை, வவுனதீவு, வாகரை, தொப்பிகல, தீவுச்சேனை போன்ற பகுதிகளுக்கும் சென்று வாருங்கள் என்ற விண்ணப்பத்தை மட்டுமே என்னால் முன்வைக்க முடியும் அப்போதுதான் அவலத்தின் மொத்த வடிவத்தையும் பார்க்க முடியும்.

ஊடறு மற்றும் மலையகப் பெண்கள் இணைந்து நடாத்தும் இந்தச் சந்திப்பிலும் வந்திருக்கும் அதிதிகள் யுத்தப்பகுதிகளுக்கான விஜயம் என்றால் யாழ் விஜயம் என்ற அடிப்படையிலேயே ஏற்கனவே நிரற்படுத்தப்பட்ட நிகழ்சி பற்றியும் உரையாடலில் அறியக் கிடைத்தது. ஆனால் இங்கு எனக்குள் பல கேள்விச் சிக்கலைத் தோற்றுவித்தது என்னவென்றால் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளும் போது அந்நிகழ்வில் முழுமையாகக் கலந்து கொள்ளும் போதுதானே பிரச்சினைகள் குறித்த முழுமயான தெளிவு கிடைக்கும். அப்படியிருக்கும் போது இடையே அந்நிகழ்வில் இருந்து விலகி இன்னுமொரு நிகழ்ச்சி நிரல் போட்டுக் கொள்வது என்பது அந்நிகழ்வைப் புறக்கனிப்பது போன்றதுதானே இந்தக் கேள்வியை வெளிப்படையாகக் கேட்க எனக்குச் சங்கடமாக இருந்தது. இந்நிகழ்வுக்கென்று வந்துவிட்டு அதை அப்படியேபாதியில் விட்டுச் செல்லுதல் அவ்வளவு திருப்திகரமான ஒன்றாக எனக்குப்படவில்லை. நான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக இருந்திருந்தால் அதில் மிகவும் கறாராக இருந்திருப்பேன். இந்நிகழ்வுக்காகவே கொழும்பில் இருந்து வந்த எனது மனைவி அதில் முழுமையாகப் பங்கு பற்ற வேண்டும். மற்றவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதைத் தெளிவாக உள்வாங்கவும் வேண்டும் என்பதால்தான் ஆண்களுக்கு அனுமதியில்லாத முதல் நாளில் அவளையும் குட்டியனையும் கொஞ்ச நேரம் அங்கேயே விட்டுவிட்டு நான் வெளியே செல்ல முடிந்தது. இந்த இடத்தில் எந்தத்தீர்மானமும் எடுக்கக்கூடிய தீர்க்கமான நிலையில் உள்ள நபர் அல்ல நான். எல்லாத் தரப்பையும் சமநிலையில் பேணி அனைவரையும் ஏதோவோர் விதத்தில் திருப்திப்படுத்தும் வண்ணம் செயற்பட வேண்டிய அவசியம் இருந்தது. அதைப் புதிய மாதவி மிகத் தெளிவாக வெளிப்படையாக வெளிப்படுத்தினார்.

'எனக்கு ஓவியாவும் முக்கியம் ரஞ்சியும் முக்கியம், அந்த அடிப்படையில் நியாயத்தை மட்டும் என்னால் உள்வாங்க முடிகின்றது யாருக்கும் பாதிப்பில்லாமல் முடிவெடுக்க வேண்டியது நீங்கள்தான்'
ஆளையாள் குற்றம் சொல்லி அந்த இடத்தில் எந்தப் பிரயோசனமும் இருக்கப் போவதில்லை என்பதால் என்னால் முடிந்த உதவி அல்லது பங்களிப்பு என்ன என்பதை மட்டும் நான் வெளிப்படுத்தினேன். போக்குவரத்தில் எனது அனுபவத்தைப் பின்னணியாகக் கொண்டு யதார்த்தத்தை விளங்கப்படுத்தினேன். அந்த இடத்தில் வடக்கிற்கான விஜயம் என்பதன் மீது ஓவியா கொண்டிருந்த உறுதியை என்னால் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. அதன் அவசியத்தை என்னால் மிகத் தெளிவாக உணரவும் முடிந்தது. கொட்டகலயில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் பயணப்படுதல் என்பது அவ்வளவு எளிய போக்குவரத்து வசதிகளைக் கொண்ட பொறிமுறை கிடையாது. கொழும்பில் இருந்து என்றால் நினைத்தவுடன் பயணப்படலாம் அது ஒரு விசயமே கிடையாது. அவ்வளவு எளிது.

இந்த இடத்தில் புரிதல் மற்றும் ஒழுங்கு படுத்தல் பிரச்சினை இருந்தது போல, நட்பும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டே இருந்தது. இப்படி ஆயிரம் பிரச்சினைகள் இதைவிட வீரியமிக்கதாக வந்தாலும் அவர்களுக்கிடையில் ஒரு போதும் பிரிவு வரப்போவதில்லை. அப்படியொரு பிரிவுக்கு வித்திடும் பலம் அப்பிரச்சினைகளுக்குக் கிடையாது. அவ்வளவு பலமானதாக தன்னை நிரூபித்திருந்தது அவர்களின் நட்பு. கோபம் கூட செல்லமாகிப் போகும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் போது.

இந்த முரண்களையெல்லாம் உள்வாங்கியபடி அன்றைய இரவு மௌனமாகக் கரைந்து கொண்டிருக்கும் போதுதான் எனது அறைக்குள் நான் நுளைந்தேன். அங்கே குட்டியன் அப்போதுதான் உறங்கிப் போய் இருந்தான். ஷாமிலாவுக்கு தனது உரையை வாசித்துப் பார்க்க அவகாசமும் கிடைத்திருந்தது.
ஷாமிலா வாசிக்கத் தொடங்கியபோதே நான் டைமரை ஒன் பண்ணி விட்டேன். முழுமையாக வாசித்து முடிக்கும் போது பதினெட்டு நிமிடங்கள் போய் இருந்தது. மொத்த நிமிடக் கணக்கைச் சொன்ன போது ஷாமிலா அலறியடித்துக் கொண்டு ஐயையோ அவங்க நமக்குத் தந்திருப்பது பதினைந்து நிமிடங்கள்தானே. ஒரு மாதத்துக்கு முதலே பதினைந்து நிமிடம் என்று அறிவுறுத்திய பின்னர் மூன்று நிமிடங்களை மேலதிகமாக எடுத்துக் கொள்வது எப்படி நியாயமாகும். என்று புலம்பிக் கொண்டிருக்கும் போதுதான்  அந்த ஐடியா தோன்றியது..

தொடரும்...

No comments:

Post a Comment