Sunday, September 6, 2015

பெண்ணியச் சந்திப்பு – பகுதி 12 (இறுதிப் பகுதி).......................... ஊடறு + மலையகப் பெண்கள்

அவதான மற்றும் அனுபவக் குறிப்புத் தொடர்
-முஸ்டீன்-

நேரம் அதிகாலையைத் தொட்டுவிட்டது, இனிக் கொஞ்சம் தூங்கினால் நல்லது போன்று தோன்றியதும் கண்களை மூடியதுதான் தெரியும் அப்படியே தூக்கம் அரவணைத்துக் கொண்டது.  குட்டியன் மேலே ஏறிக் கூத்துப் போடத் தொடங்கியதும்தான் விடிந்து விட்டதே தெரிந்தது. ஆயினும் சூரியன் இன்னும் உதித்திருக்கவில்லை. இதமான குளிரில் இன்னும் கொஞ்சம் தூங்கினால் நன்றாகத்தானிருக்கும் ஆயினும் அது கை கூடக்கூடியதல்லவே. பக்கத்தில் ஷாமிலாவைக் காணவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் மிகவும் இயலாமையோடு சோர்ந்து போய் வந்தாள். இயற்கை அவளைச் சோதித்திருந்தது. இந்தச் சோதனைக்காலத்தில் கிள்ளிப் போட்ட தேயிலைக் கொழுந்து போல விரைவிலேயே வாடிவதங்கிப் போய்விடுவாள். சிலருக்கு அது பெரிய சமாச்சாரமே கிடையாது. ஆனால் சிலருக்கு மரண வேதனை. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுவிதமான உடலியல் இயல்பு அதற்கொப்பதான் எல்லாமே அமையும். இறைவன் ஏன் அப்படியொரு தன்மையை பெண்களுக்கு அளித்தான் என்பதற்கு விஞ்ஞான பூர்வமாகவும் சரி சமய ரீதியாகவும் சரி எனக்கு இன்னும் சரியான தெளிவு கிடைக்கவேயில்லை. அல்குர்ஆன் மாதவிடாய் என்பது ஒரு வலி, வேதனை, கஸ்டமானது, அதிலிருந்து அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள் என்று ஆலோசனை வழங்குகின்றது அதற்கப்பால் எந்த விளக்கத்தையும் காரணத்தையும் நமக்குச் சொல்லவில்லை.  ஆனாலும் அது இயல்பானது, இயற்கையானது வழமையானது மாற்ற முடியாதது எல்லோருக்கும் தெரிந்தது. அதைப் பற்றிக் கதைப்பதே ஒரு வெட்கங்கெட்ட நிகழ்வு போன்று பார்க்கும் சூழலும் இருக்கின்றது அது போல இது பற்றியெல்லாம் எழுதுவதுதான் பெண்ணியம் என்றும் இதைப்பற்றிக் கவிதைகளில் கொண்டுவந்தால் அவை பெண்ணியக் கவிதையென்றும் நினைத்துக் கொண்டு ஒரு கூட்டம் வாழும் சூழலும் இருக்கின்றது. எனது பார்வையில் இந்த இரு தரப்பாரும் சமமானவர்களே. இரண்டுமே மித மிஞ்சிய போக்கு. இயற்கையை இயற்கையாகவும் இயல்பாகவும் எடுத்துக் கொள்ளத் தெரியாதவர்கள். இதில் பேசுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை  ஆனாலும் பெண்கள் மீது ஒரு பரிதாபம் என்னையறியாமலேயே வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. 

இன்றைய முழுநாள் நிகழ்வையும் எப்படிச் சமாளிக்கப் போகின்றாளோ என்ற எண்ணமே என்னில் மேலோங்கியிருந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த சின்னஞ்சிறுசுகளின் வடலியடைப்பு நிகழ்வு இனிமையான அனுபவத்தைத் தர அன்றைய நிகழ்வுக்கு நண்பர் மயூரன் உட்பட பலர் வந்திருந்தார்கள். நாச்சியாதீவு பர்வீனும் வருவதற்கு முயற்சிப்பதாகச் சொன்னார் ஆனால் அவருக்கு அச்சந்தர்ப்பம் கிடைக்கவில்லை போலும். கலை நிகழ்வை முடித்துவிட்டு மாணவர்கள் பகல் வேளையாகும் போது யாழ்ப்பாணம் செல்வதாக இருந்தது. அவர்களுடன் ஓவியாவும், நர்மதாவும் இணைந்து கொண்டார்கள். அவ்ரகளை அங்கு வரவேற்று உபசரிக்க சரோஜா சிவச்சந்திரன் அம்மா ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இலங்கையர்கள் பற்றிய தப்பான அபிப்பிராயத்தை சில கசப்பான புரிதல்கள் மூலம் விதைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் கூடுதல் கரிசனை கொண்டு செயற்பட்டமையை மறக்க முடியாது. சில வேளைகளில் கோபமேலீட்டால் நாம் என்ன பேசுகின்றோம் என்பது சிலருக்குத் தெரிவதில்லை. அது அவர்களின் பலவீனம், அந்தப் பலவீனத்துக்காக அவர்களை வெறுத்து ஒதுக்க முடியாது. ஆனால் பக்குவமாக எடுத்துச் சொல்லலாம் என்பது எனது அவதானமும் நிலைப்பாடும். ஒவ்வொருவரையும் அவரவர் இயல்புகளோடு அங்கீகரிப்பது அல்லது ஏற்றுக் கொள்வதுதானே உண்மையான அன்புக்கும் நட்புக்கும் சிறந்தது.

அத்தனை வேதனையையும் வலியையும் தாங்கிக்கொண்டு இன்றைய நிகழ்வை எப்படியாவது வெற்றிகரமாக முடித்துவிட வேண்டும் என்பதிலேயே ஷாமிலா குறியாக இருந்தாள். அரங்கிற்குச் சென்ற போது எந்த மாறுதலையும் அவள் சின்னதாகக் கூட முகத்தில் காட்டவுமில்லை வெளிப்படுத்தவுமில்லை. வெகு இயல்பாகவே இருப்பதாக நடித்தாள். அந்த நடிப்பு அற்புதமானது. இரண்டாம் நாள் நிகழ்வு அனைவருக்குமானது ஆயினும் உள்ளே அமர்ந்து பார்க்கும் பாக்கியத்தை எனது மகன் தட்டிப்பறித்துக் கொண்டான். ஆயினும் வெளியே இருந்து செவிமடுக்கும் சந்தர்ப்பத்தையாவது தந்தானே என்று ஆறுதல் கொள்ள வேண்டியிருந்தது. 

லறீனா அப்துல் ஹக்கின் இனிமையான பாடல் என்னை உள்ளே வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது. பாடல் முடியும் வரை குட்டியனும் அமைதியாகத்தான் இருந்தான். அன்றுதான் தெரியும் லறீனாவுக்குப் பாடவும் வரும் என்ற விடயம். பின்னர் ஷாமிலாவின் பேச்சு. அவள் பேச ஆரம்பிக்கும் போதே மகன் சத்தம் போட்டான் பழையபடி வெளியில் நின்று செவிமடுக்கும் பணியை ஆரம்பித்தேன். எந்த்த தொய்வும் இல்லாமல் மழைபெய்து விட்டபின்னர் நீர்வீழ்ச்சியில் விழுந்து நொறுங்கிச் சிதறும் நீர்த்துளிகள் போல சொற்கள் தெளிவாக வந்து விழுந்து கொண்டிருந்தன. அவ்வளவு நேர்த்தியான முன்வைப்புக்காக ஷாமிலா இலங்கை வானொலிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவளைப் புடம்போட்ட தளம் அதுதான். அல்லது அந்தத் தளத்திற்குத்தான் அதிக பங்கிருக்கின்றது.

வெளியே யாழினி போட்டோ பிடித்துக் கொண்டிருந்தாள். மிகச் சுறுசுறுப்பாக
இயங்கிக் கொண்டிருக்கும் சின்னப் பெண். நிகழ்வின் பல்வேறு தேவைகளையும் தகவல்களையும் நிறைவாக அளிப்பதற்காக ஏற்பாட்டளர்களில் ஒரு நபர் என்ற எண்ணம் அவளை அப்படி இயங்கச் செய்திருக்க வேண்டும். இத்தனைபொறுப்புக்குள்ளும் போட்டோவும் எடுத்துக் கொள்கின்றாளே என்று நான்  கிண்டலடித்தபோது கூட மிக லாவகமாக புன்னகைத்து அதே தமாசுடன் பதில் தந்துவிட்டு இயல்பாகச் செயற்பட்டாள். இப்படி பலரை அங்கு அடையாளம் காண முடியுமாக இருந்தது. பலரை அன்றுதான் முதன்முதலாக நேரில் சந்திக்கின்றேன். இன்னும் சிலரை அன்றுதான் அறிமுகமாகிக் கொள்ளக் கிடைத்தது. எல்லோருடனும் நிறையக் கருத்துக்கள் பரிமாற வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே கிடைத்தது. நளினி அக்கா கம்பீரமாக எதையும் போட்டுடைக்கும் பண்பு கொண்டவர் என்பதை அன்றுதான் நேரில் அவதானிக்கக் கிடைத்தது. 

சில விடயங்களில் ஏற்படும் கருத்து முரண்பாடுகள் என்பது இல்பானது ஆனால் அதை எதிர்கொள்ளுதல் அல்லது எதிர்வாதத்தை முன்வைத்தல் என்பதில்தான் விடயமே தங்கியிருக்கின்றது. பல பெண்களுக்கு டக்கென்று உணர்ச்சிவசப்படும் அளவுக்கு, ஆளுமையை வளர்த்துக்கொள்ள முடியாமல் போனதால்தான் சென்சிட்டிவ் ஆன பல விடயங்கள் எதிர்மறை விளைவுகளைத் தந்துவிட்டுச் செல்கின்றன. 

ஷாமிலா வெளியே வந்த போது நிகழ்வுகளை உள்ளே சென்று பார்க்கலாமா என்று நினைக்கும் போதே அவள் 'கொஞ்சம் கஸ்டமாக இருக்கின்றது ரூமுக்குப் போனால் சற்று ஆறுதலாக இருக்கும்' என்றாள். நாம் பயணிக்க இருக்கும் ரயில்  வேறு நள்ளிரவை அன்மித்துத் தாமதமாகியே வரும். ஏனெனில் எமக்கான புகையிரதம் இரவு பதினொரு மணிக்குத்தான் ஹட்டன் நகரை வந்தடையும் அதுவரை  இருந்துதானாக வேண்டுமே என்று நினைக்கும் போது இன்னும் கொஞ்சம் யோசனையாக இருந்தது.  இரண்டு நாளும் முழுமையாக நிகழ்வில் கலந்து கொள்வதற்கு ஏற்றவிதத்தில்தான் ஆசனப்பதிவு ஒரு மாதத்துக்கு முன்னரே செய்யப்பட்டது ஆயினும் பதுளையில் இருந்து ஆறுமணிக்கே புறப்படும் எக்ஸ்பிரஸ் இவ்வளவு தாமதமாகும் என்ற விடயம் முன்னரே தெரியாமல் போய்விட்டது. இப்போது திடீரென்று ஏற்பட்ட இக்கட்டான நிலையில் எல்லாமே தடுமாற்றத்திற்குள்ளாகிவிட்டது. 

அடுத்து என்ன செய்வது என்ற யோசனைக்குத் தீர்வாக சரோஜா சிவச்சந்திரன் அம்மாதான் நல்லதொரு யோசனையை முன்வைத்தார். நள்ளிரவு வரைக் காத்திருந்து குளிரில் குழந்தையை அவஸ்தைக்குள்ளாக்குவதைவிட தங்களுடன் புறப்படுவது நல்லதாகப்படுவதாகச் சொன்னார். நிலைமையைப் பொறுத்து அவசர அவசரமாக எல்லோருக்கும் சொல்லிக் கொண்டு கிளம்பும் போது பலர் விடுபட்டுப் போனார்கள். ஆயினும் பின்னர் ஆறுதலாகக் கதைத்துக் கொள்ளலாம் என்ற திருப்தியுடன் கொழும்புக்குப் பயணப்பட்டோம். திட்டமிட்டபடி இரண்டாம்நாள் நிகழ்வில் முழுமையாகக் கலந்து கொள்ளக் கிடைக்கவில்லையே என்ற கவலை மனதில் குடிகொண்டது. ஆனாலும் தவிர்க்கவொனாத நிலையினை நினைத்து ஆறுதல்பட வேண்டியிருந்தது. பொதுவாக இப்போதுள்ள பலரைப் போல ஒரு நிகழ்வுக்கு வந்து தத்தமது உரைகளை முடித்துவிட்டு குட்பைய் சொல்லிவிட்டுச் செல்லும்  ரகமாக யாரும் புரிந்து கொள்ளக் கூடுமோ என்ற எண்ணம் ஒரு பக்கம் உதைத்துக் கொண்டிருந்தது. ஆயினும் அப்போதைய அவஸ்தையில் அது பெரிதாகத் தோற்றவில்லை. இருந்தாலும் வெளிப்படையாகச் சொல்லிவிட்டுக் கிளம்புவதைத்தான் சரியெனக் கண்டதால் ஒரு ஆறுதல்.

இந்தப் பெண்ணியச் சந்திப்பில் பெற்றுக் கொண்ட உறவுகள் ஒவ்வொருவர்க்கும் மிகவும் முக்கியமாதாகவும் பெறுமதியானதாகவும் அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஏனெனில் அத்தகையதொரு உறவுப்பரிமாறலைத்தான் நான் அவதனித்தேன். அது ஒவ்வொருவர்க்கும் மத்தியில் புதுமையான அன்பினைக் கொண்டு கட்டிப்போட்டதையும் அவதானித்தேன். அதில் போலி இல்லை. வெறுமனே போலியாகச் சிரித்துவிட்டுக் கடந்து செல்லும், சமகால இலக்கிய ஜாம்பவான்களாகத் தம்மைக் கருதிக் கொள்ளும் சிலரைப் போல இல்லை என்றுமட்டும் உறுதியாகத் தெரிந்தது.

உள்ளூர் அதிதிகளை எப்படியும் சந்தித்துக் கொள்ளலாம். அதற்கு நிறைய வழிமுறைகள் இருக்கவே செய்கின்றன. னால் வெளிநாட்டு அதிதிகளைப் பொருத்தமட்டில் மீண்டும் சந்தித்தல் அவ்வளவு சாத்தியமானதல்ல. அவர்கள் புறப்படுவதற்கு முன்னர் கொழும்பில் எமது வீட்டில் மீண்டும் சந்திக்கலாம் என்ற ஏற்பாடுகளோடு பயணப்படும் போது எதையோ இழந்து செல்கின்ற எண்ணம் பரவிக் கொண்டிருந்தது.

அந்தச் சந்திப்பை அர்த்தமுள்ளதாக்க என்ன செய்யலாம் என்ற எண்ணம் எனக்குள் ஓடத் தொடங்கியது. 
அவர்கள் நிச்சயம் என்னிடம் சில கேள்விகள் கேட்பார்கள்.

அவர்களிடம் இருந்து வெளிப்படும் அக்கேள்விகளில் மிக முக்கியமானது இறுதி யுத்தம் பற்றியதாகவே இருக்கும். வரலாற்று நிகழ்வுகளோடு ஒப்பிட்டு ஆதாரங்களோடு ஒவ்வொரு சம்பவத்தையும் தெளிவுபடுத்தினால் மட்டுமே அதை அவர்கள் விளங்கிக் கொள்வார்கள். ஜீரணிக்கக் கஷ்டமான அல்லது இதற்கு முதல் கேள்விப்பட்டிராத சங்கதிகளைத்தான் நான் அவர்களுக்குச் சொல்லப்போகின்றேன். அந்த நினைவுகளோடு அவர்களின் உணர்வுகளைத்தான் இறுதியில் வாசிக்கவேண்டியிருக்கும். அப்போது மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்திய பெண்கள் சந்திப்பின் பயனாய்க் கிடைத்த உறவுகளின் கனதி கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டியதொன்றாகவே தென்படும். 
அவர்களுக்கும் 
எனக்கும்.

-டொட் -


No comments:

Post a Comment